இரண்டு பக்கமும் வயல்கள், புறம்போக்கு நிலங்கள் – நடுவே வளைந்து வளைந்து கருநாகம் போல் செல்லும் நேஷனல் ஹைவே எப்போதும் டீசல் வண்டிகளால் நிறைந்திருக்கும்! மத்திய அரசின் ஆணைப்படி, இன்னும் இரண்டு வண்டிகள் செல்லத்தக்கவாறு, அந்தத் தார் சாலையை அகலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. பயணத்தைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் முடிக்கவும், மாநிலங்களுக்கிடையே வர்த்தகம் பெருகவும் இது உதவும் என்று அரசு நம்பியதால் இந்த முடிவு எடுக்கப்ப்பட்டது!
இரண்டு முக்கியமான டவுன்களுக்கிடையே அமைந்திருந்தது புராதனமான அந்த சிவா விஷ்ணு கோயில். விரிவாக்கப்படும் தார் சாலையிலிருந்து நூறு அடிக்குள் இருந்த அந்தக் கோயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. சாலையை அகலப் படுத்த, அந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
இரண்டு டவுன் மற்றும் சுற்றியிருந்த பத்துப் பனிரெண்டு கிராமங்களின் வழிபாட்டுத் தலம்; பல தலைமுறைகள், பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் பெருமாளையும் சிவனையும் விட்டுவிட மனமில்லாத மக்கள் கோயிலை இடிப்பதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிராமத்துப் பெரிசுகளும், மற்ற பக்தர்களும் தார் சாலையில் அமர்ந்து ஒரு நாள் அமைதிப் போராட்டம் நடத்தினர். அளவெடுப்பது, மட்டம் பார்ப்பது என வேலை செய்ய வந்த பொது மராமத்து அரசு ஊழியர்களைத் திருப்பி அனுப்பினர். அரசுக்கு செய்தி எட்டியது.
கோயிலுக்கு எதிரில், சாலையின் மறு பக்கத்தில் ஒரு கிமீ தூரத்திற்குப் புறம்போக்கு நிலம் கிடந்தது. அதில் கொஞ்சம் ‘நீர்நிலை’ புறம்போக்கு, மீதி ‘பாதை’ புறம்போக்கு. கோயிலை இடிக்காமல், சாலையைக் கொஞ்சம் வளைத்து, இந்தப் புறம்போக்கு நிலத்தில் அமைக்கலாம் என்று கலெக்டர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இருந்தாலும் சில அரசியல் கட்சிகள், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தன. “நீர் நிலைப் புறம்போக்கு, தள்ளியிருக்கும் விளை நிலம் இவற்றுக்குக் கேடு விளைவிக்கும் போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும். அதனால், இந்த நிலத்தில் சாலை போடக் கூடாது” – எல்லா எதிர்க் கட்சிகளும் கொடி பிடித்து, பெரிய போராட்டத்தை நடத்தின. மாநிலத்தின் ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தை மிக விரிவான செய்திகளாக்கின.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான இந்த சாலை வழித் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவதுதான் நல்லது என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசு, அரசியல், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என எல்லோரும் ஆளுக்கொரு கருத்து சொல்ல, விஷயம் இடியாப்பச் சிக்கலாக மாறியது!
இதற்கென சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப் பட்டார்.
”பாட்டன், முப்பாட்டனெல்லாம் வணங்கிய பெருமாளுங்க. இந்தக் கோயில்தான் எங்க கொலதெய்வங்க. இத்த இடிச்சீங்கன்னா, எங்க பரம்பரைக்கே கெடுதல் வருமுங்க. கோயில வுட்டுட்டு, கொஞ்சம் தள்ளி, பொறம்போக்கு நிலத்துலெ ரோட்ட போட்டுக்கங்க அய்யா, புண்ணியமாப் போவும்” – ஊர் மக்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தது.
“ரெண்டு மைல் தள்ளி, கிராமத்து எல்லையில் இருக்கிற அனாதீனம் என்னும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்துல இதே கோயிலை, எல்லா ஆகம விதிகளோட கட்டிக் கொடுத்திடச் சொல்றேன்” என்று அரசு உறுதிமொழி கொடுத்தாலும், பழமையான கோயிலை இடிப்பதில் ஏதேனும் கேடு வருமோ என அஞ்சினர் கிராம மக்கள்.
“இது ஆளும் கட்சியின் சூழ்ச்சி. எல்லா விளை நிலங்களிலேயும் தொழிற்சாலை, தார் சாலை என்று போட்டு, விவசாயத்தை அழிப்பதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்” என்று பெரிய அளவில், செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எதிர்த்தனர்.
மாதா மாதம் அரசும், எதிர்க் கட்சிகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் என எல்லோருடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், எந்த முடிவும் இல்லாமல் தோல்வியில் முடிந்தன.
ஒரு வருடத்தில் சிவன், விஷ்ணு கோயில் இடம் மாறியது. ‘எங்கும் சாமி இருக்கிறான்’ என்று நம்பும் கூட்டம் ஒன்று மக்களிடையே பேசி, பொறுமையும் நம்பிக்கையும் கொடுத்தது. நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி, முன்னின்று ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் கோயிலை நிர்மாணித்து, பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தார். ஒரு நல்ல நாளில், கோயில் கும்பாபிஷேகமும் நடந்தது. எதிர்ப்பு ஏதுமின்றி, சிவனும், பெருமாளும் புதிய கோயிலில் அருள்பாலிக்கத் தொடங்கினர்!
அரசின் திட்டப்படி, சாலை விரிவுபடுத்தப் பட்டது. புறம்போக்கு நிலம் காப்பாற்றப் பட்டது.
நான்கு வழி புதிய சாலை வந்ததினால், போக்குவரத்தும் அதிகமாகி, சாலையின் இருபுறமும் , கடை கண்ணிகளும் பெருகின. வியாபாரமும் வளமும் சேர்ந்தன. இடையில் இருந்த ‘டோல்’ கேட்டின் வருமானம் கணிசமாகப் பெருகியது.
முன்பு கோயில் இருந்த இடத்திற்கு எதிர்ப் பக்கத்தில், சாலை போட மறுக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தில், பல வண்ணக் கொடிகளுடன், வீட்டு மனைகள் விற்பனைக்கு தயாராயின. ஞாயிறு தோறும் பேருந்துகளில் மக்கள் வந்து, மனைகளைப் பார்வையிடத் தொடங்கியிருந்தனர்.
புராதனக் கோயிலுக்கு அருகில், நல்ல நிலத்தடி நீருடன், நேஷனல் ஹை வே க்கு மிக அருகில் என வீட்டு மனைகள் விற்பனைக்குத் தயாராகின.
Current situations and human psychology is well captured. Congrats to the author
LikeLike