அமரர் பாக்கியம் ராமசாமி அவர்கள் மன்னிக்க !
பீட்ஸா எப்போது இந்தியாவில் இறக்குமதி ஆச்சுன்னு தெரியாது. ஆனால் குழைந்தைகள் டாக்டரைப் பார்த்து விட்டு வரும்போது என் பெண் (அவளுக்கு அப் டு டேட் ஆக எல்லாம் தெரியும்) ‘அம்மா பீட்ஸா வாங்கிக் குடும்மா’ என்றாள்.
எனக்கு அப்போது ஆட்டோ எல்லாம் ஏறத் தெரியாது. நடக்கும் களைப்பு. வெயில் வேறு. அவள் சொன்ன பீட்ஸா பேரைக் கேட்டதே இல்லை. இத்தனை எரிச்சலில் ‘பிட்சாவும் கிடையாது, பிசாசும் கிடையாது நட வேகமாக’ என்று பையனையும் பெண்ணையும் இழுத்தேன்.
ஆகா பிடிவாதத்தில் அப்படியே பாட்டியை உரித்து வைத்தவளாயிற்றே, விடுவாளா! திரும்பவும் பிசாசைப் பிடித்தாள். வேறு வழி இன்றி, இதற்குத் தனியாக உணவகம் இருப்பது தெரியாமல் (இன்று நான் யுட்யூப் பார்த்து பிரட் பீட்ஸா பண்ணுகிறேன் அது வேறு கதை) எப்போதும் போல ஒரு சிறிய ஹோட்டலுக்குப் போய் பீட்ஸா ஆர்டர் பண்ணினேன். ஊத்தப்பம் போல ஒன்று வந்தது. அவனுக்கும் அது புதிது போல. சாப்பிட்ட எங்கள் மூவருக்கும் அது பிடிக்காமல் போனது. என் பையன் வெளியில் வந்து பெண்ணிடம் ‘இனி நம்ம டிக்க்ஷனரியில் பீ,ட்,ஸா என்ற வார்த்தைகளே கிடையாது’ என்றான்.
இப்படி எங்கள் வாழ்க்கையில் விளையாடிய பீட்ஸா அப்புசாமிக்கும் கனவில் வந்தது. முக்கோண முக்கோணமாக அப்படியே இழுக்க இழுக்க இன்பம் தரும் பீட்ஸாவை பண்ணித்தரும்படியோ, வாங்கித்தரும்படியோ சீதாக்கீழவியைக் கேட்டதற்கு ‘போறும் ஹெல்த்தியா சாலட் பண்ணித்தருகிறேன் மதில் சுவரில் பீமா, ரசகுண்டுவுடன் உட்கார்ந்து கொண்டு ஓர் இரண்டு மணி நேரம் போல சாப்பிடுங்கள்’ என்று சொல்லி விட்டாள்.
ஹெல்த்தியா, அளவாக சாப்பிட்டுக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கும் சீதாக் கீழவியைப் பார்த்தும் அப்புசாமிக்கு பீட்ஸாவின் மேலுள்ள மோகம் சிறிதும் குறையவில்லை. ராத்திரி தூக்கத்தில் குடமிளகாய், வெங்காயம், தக்காளி, சோளம் கண்களில் நடனமாடின. இனியும் பொறுக்க முடியாது, பொங்கி எழ வேண்டும், காலையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பீம சபதம் இட்ட பிறகுதான் அவரால் சிறிது தூங்க முடிந்தது.
மறுநாள் ரசகுண்டுவைக் கடைக்கு அனுப்பி பீட்ஸா விலையைக் கேட்டு வரச் சொன்னார். 400 என்று எழுதி வாங்கி வந்த துண்டு காகிதத்தை திருப்பித்திருப்பிப் பார்த்து ஒரு சைபர் தவறாக கூடுதலாக எழுதி விட்டானோ என்று நப்பாசைப் பட்டார். 400 ரூபாய்க்கு எங்கே போவது! வெத்திலை பாக்கு வாங்க 4 ரூபாய் இருக்கிறது. இதை எப்படி நூறு மடங்கு ஆக்குவது! வீட்டைச் சுற்றி வந்ததில் பின்னாடி ரூமில் இருந்த பழைய பேப்பர், பால் கவர் கண்ணைக் கவர்ந்தது. இதை இப்போதைக்கு சீதேக் கிழவி பார்க்க மாட்டாள் என்ற தைரியமான முடிவுடன் எடைக்குப் போட்டதில் 150 ரூபாய் தேறியது.
மிச்சம் 250 க்கு மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தார். நெற்றியில் கையால் தேய்த்தபோது மோதிரம் உறுத்தியது. பாவம் மாமனார் ஆசையாக டைமன்ட் பதிச்ச மோதிரம் போட்டார். வாழ்க அவர் குலம் (சீதையைத் தவிர்த்து). இது இவர் விரலில் இருந்ததை விட அடகுக் கடைக்காரனிடம் தான் அதிக நாள் இருக்கிறது. கல்யாண மோதிரம் ஆகவே சீதேக் கிழவி மீட்டு எடுத்து விடுவாள். பீமாவிடம் கொடுத்து அடகுக் கடைக்குப் போகச் சொன்னார். எப்படியாவது 250 ரூபாய் வாங்கி வரச் சொன்னார். அடகுக் கடைக்காரன் அழுது கொண்டே 200 ரூபாய் தந்தான். அவனுக்குத் தெரியும் இது அவனிடம் தங்காது என்று. ஒரு நப்பாசைதான்.
இன்னும் 50 ரூபாய்க்கு என்ன செய்வது என்று பரோட்டா கடைக்காரன் மாதிரி கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ரசகுண்டுவை விட்டு கடைக்காரனிடமே தள்ளுபடி கேட்கலாமா, அல்லது ரசகுண்டுவை கோயில் வாசலில் உட்காரச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ரசகுண்டு மூச்சிறைக்க ஓடி வந்து ‘தாத்தோவ், ஒரு நல்ல செய்தி’ என்று மூச்சு வாங்கினான். ‘சொல்லுடா செல்லம், 50 ரூபாய் கிடைத்ததா’ என்று பொக்கைவாயைப் பிளந்தார். ‘இல்லை தாத்தா’ என்றவுடன் காற்றுப் போன டயர் மாதிரி சோர்ந்து போனார். ‘பின் என்னடா நல்ல செய்தி!’ என்று அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டே வினவினார். அவனும் பெரு மூச்சு விட்டுக் கொண்டே ’தாத்தோவ் இன்று பீட்ஸா பிறந்த தினமாம். ஆதலால் ஒரு பீட்ஸா வாங்கினால் ஒன்று இலவசம் அல்லது ஒரு பீட்ஸாவிற்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி’ என்று அறிவித்திருக்கிறார்கள் என்று வயற்றில் பாலை வார்த்தான். அவனைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றினார் அப்புசாமி. ‘இன்று நீதான் அப்பா சாமி, சாமியப்பா’ என்று கொஞ்சி மகிழ்ந்தார்.
மூன்று பேரும் ‘வட்ட வட்ட பீட்ஸா, வண்ண வண்ண பீட்ஸா, தின்னத் தின்ன ஆசை, தெவிட்டாத தோசை, எடுத்து எடுத்து சாப்பிடலாம், எட்டு முக்கோண தோசை, இழுத்து இழுத்து சாப்பிடலாம் எல்லோருக்கும் பிடித்த தோசை’ என்று குதித்து குதித்து பாடிக்கொண்டே பீட்ஸா சென்டர் சென்றனர். ‘ம் பீட்ஸா நல்ல மணம்’ என்று சொல்லிக் கொண்டே நீள் சோபாவில் உட்கார்ந்தனர். வெயிட்டர் பீட்ஸாவை விட நீளமான மெனு கார்டை தூக்கி வந்து இவர்கள் முன் அலட்சியமாக வைத்தான். இங்கு மாவாட்டற வேலை கிடையாது. மைதா மாவைத்தான் ரப்பர் மாதிரி இழுக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். படிக்கணும் என்ற காரணத்தினால் தான் பள்ளிக்கூடமே போகாது இருந்த இவர்கள் இந்த புத்தகத்தை (மெனு கார்டைத்தான்) புரட்டக் கூட இயலாமல், ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளாமல், ‘இன்றைய ஸ்பெஷல் என்ன’ என்று சப்தமாக கேட்டு தங்களது பொருளாதாரத் தன்மையை நிலை நாட்டினார்கள். வெயிட்டர் சொன்ன மார்கரீட்டாவும், டீலக்ஸூம் புரியாமல் அடை தோசை மாதிரி ஆர்டர் கொடுத்தார்கள். டீச்சர் சொன்னது ஒரு துளி மண்டையில் புகுந்த விதத்தில் வெயிட்டர் வேகமாக புக்கைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். இன்னும் சிறிது நேரம் அங்கே நின்று இருந்தால் வேலையை விட்டே ஓடியிருப்பான்.
மூன்று பேரும் பாட்டுப் பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்த வேளையில் வெயிட்டர் பயந்து கொண்டே இன்னுமொரு ஆபரும் கொடுத்தார் விருப்பப்பட்டால் உங்கள் பீட்ஸாவை நீங்களே டாப் அப் பண்ணிக்கொள்ளலாம் என்று. அவ்ளோதான் வெண்கலக் கடையில் யானைகள் புகுந்தன. சீசைப் போட்டு அடித்தளமே தெரியாமல் செய்து விட்டனர். வெங்காயம் தக்காளி கூடை காலி. பன்னீரையும், கார்னையும் தாராளமயமாக்கினர். ஆயிற்று இதோ வெயிட்டர் ஹனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த மாதிரி பீட்ஸாவை கோக்குடன் எடுத்து வந்தான். கைகளால் தொடையைத் தடவிக்கொண்டே முதலில் ஆசையுடன் பார்த்தனர், முகர்ந்தனர், அனுபவித்தனர். ஐம் புலன்களும் வேலை செய்தன. ‘நம்ப முடியவில்லை இல்லை, இல்லை இல்லை இருக்கு’ என்று ஆர்ப்பரித்தனர்.
மெதுவே பீட்ஸாவைத் தொட்டனர். கண்டவர் விண்டிலர் என்ற மாதிரி அதை விள்ளத் தெரியாமல் விஷ்ணுவின் அடி எது முடி எது என்று குழம்பினர். ஒரு வழியாகக் கையில் எடுத்து வாயில் வைத்தால் ஒரு நூல் கைக்கும் வாய்க்கும் பந்தல் போட்டது. பன்னீரும், கார்ன்னும் அவர்களைக் கிறங்கடித்தன. ‘ஒ இதுவல்லவோ சொர்கம்’ என்று சுலபமாக மேல் உலகத்தை அடைந்தனர். ‘பிறவிப் பெருங்குடல் நீந்துவர் நீந்தார் பீட்ஸாவை சாப்பிடாதவர்’ என்று புதிய குறளை பழைய குரலில் பாடினர். இன்று சீதேக் கிழவியின் தீய்ந்த உலக வரைபடம் மாதிரியான மார்க்கண்டேயனான தோசையிலிருந்து விடுதலை விடுதலை என்று சுதந்திரக் காற்றை அனுபவித்துக் கொண்டே வெளியில் வந்தனர். ஆனால் அவர்கள் அறியாத ஒன்று சீதேக் குமரி இன்று சர்ப்ரைசாக வீட்டில் பீட்ஸா ஆர்டர் கொடுத்திருக்கிறாள் என்று!