மூலம் : கே.சரஸ்வதி அம்மா [ 1919—1975 ]
ஆங்கிலம் : ஜே.தேவிகா
தமிழில் : தி.இரா.மீனா
இரவுத் தோழமை
தன் மகளின் வரதட்சணைக்கான பதினைந்து ரூபாயை பிச்சை கேட்டுக் கொண்டு, அந்தப் பெண்மணி எங்களிடமும் வந்தாள். முகப்பு பகுதியில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் கதையளந்து கொண்டும் ,சிரித்துக் கொண்டுமிருந்தோம். வெற்றிலை, பாக்கு நிரம்பிய தட்டை எங்கள் முன்னால் வைத்து கை கூப்பியபடி சொன்னாள்,“ இது இந்த ஏழைப் பெண்ணின் கன்னித் தன்மை கழிவதற்காக. தயவு செய்து உதவி செய்யுங்கள். அடிக்கடி இங்கு வந்து கொண்டிருந்த ஹனுமான் பண்டாரத்தின் சகோதரி நான்.”
“உன்னைப் பார்த்தவுடன் ஹனுமானின் ஞாபகம் வருகிறது. என்ன ஒற்றுமை!” எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு குறும்புக்காரியான பெண்மணி, சொன்னாள்.
தன் அழகற்ற தன்மை கேலியாக்கப்படுவதை அந்த ஏழைப் பெண்மணி அறியவில்லை. அதற்கு பதிலாக ஆதரவற்றவர்களிடம் நாங்கள் காட்டும் கருணைக்காக எங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கினாள்.
நேரடித் தேர்வில் பங்கேற்றிருக்கும் ஒரு மாணவியைப் போல அவளிடம் நாங்கள் பேச, அவள் எங்களுக்கு விரிவான பதில்களைத் தந்தாள்.
அந்தப் பெண்ணிற்கு பதினேழு வயது ; மாப்பிள்ளைக்கு நாற்பத்தி ஐந்து வயது. இது அவனுடைய மூன்றாவது திருமணம். மற்ற இரண்டு பெண்களும் அவனை விட்டுப் போய்விட்டார்கள். அப்படியான சில பெண்களால் அமைதியாகவும் ,சாதுவாகவும் வாழ முடியாது.
எப்படியானாலும், இது நல்ல இடம். அவன் ஒரு தொழிற்சாலையில்–பேட்டரியில் வேலை பார்க்கிறான்— தினக் கூலி வாங்கும் சாதாரணத் தொழிலாளியில்லை. வாரச் சம்பளம் வாங்கும் அதிகாரி.
மிகவும் குறும்புகாரியான இன்னொரு பெண்மணி—“பேட்டரியில் வேலை பார்க்கிறான் !அவன் ஒரு கதாநாயகனாக இருக்க வேண்டும்! பெண் மிகவும் அதிர்ஷ்டமானவள் ! “ என்று சொன்னாள்.
“அதிர்ஷ்டமா?ஆமாம் !அவள் அதிர்ஷ்டக்காரி ! திறமையால் இல்லை, அவளுடைய நல்ல மனதால். நீங்கள் பெரிய தவம் செய்து இருந்தால்தான் உங்களுக்கு மிக நல்லவர் கிடைப்பார் இல்லையா ?
அதனால்தானே எல்லோருக்கும் பொறாமை. எங்கள் உறவினர்கள் யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. அவரைக் கலைத்து விடக் கூட முயற்சி செய்கிறார்கள்! பிரசவத்தின் போது நான் செத்துத்தான் பிழைத்தேன் ! நான் இறந்த பிறகு இறுதிக் கடன்களைச் செய்ய இவள் ஒருத்திதான் இருக்கிறாள் ! இவளை யார் கையிலாவது பிடித்துக் கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாக முடியும்.! ”
இதைச் சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி கண்ணைத் துடைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சினாள். மற்றொரு உரையாடலை ஆரம்பிக்கப் போகிறாள் என்பதை நாங்கள் ஊகித்தோம். எங்கள் எல்லோரையும் சிறிதுஅமைதிப்படுத்தி விட்டு, பின்பு அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் அவள் திட்டம். “ பணம் கேட்டு பிச்சை எடுக்கவேண்டியது என் விதிதானே? ஹனுமான் பண்டாரம் உயிரோடிருந்தால், தன்மருமகளின் திருமணத்தை ஆடம்பரமாகவும், ஆரவாரமாகவும் நடத்தியிருக்க மாட்டாரா ? இந்தப் பெண் ,அவருக்கு மிகவும் பிடித்தமானவள். அவள் கால் தரையில் படக்கூட அவர் விட்டதில்லை.அவள் குழந்தையாக இருக்கும் போது, ஹனுமான் முகத்தை அணிவித்தால் இவள் அவரைப் போலவே ஆடுவாள் ,பாடுவாள் ! அதனால்தான் அவருக்கு அவளை மிகவும் பிடிக்கும் –- உண்மையில் அவள் அவருடைய வடிவம்தான் .”
“அவள் உண்மையாக அப்படியிருந்தால், அந்த நாற்பத்தி ஐந்து வயது மனிதன் பெரிய மனதுடையவன்தான். அவள் ஹனுமானைப் போல இருக்க வேண்டும்”, அந்தக் குறும்புக்காரப் பெண் குறுக்கிட்டாள்
ஒரு பெண்ணின் திருமணத்திற்கான செலவு பதினைந்து ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகைதானே ?இந்தச் சமுதாயத்தில் மக்கள் பெருக்கமும், வறுமையும் அதிகரிக்க, நாம் பங்களிக்கவில்லையெனில் அது பாவமல்லவா? நீங்கள் கன்னியாக இறக்க நேர்ந்தால், உங்கள் ஆத்மா நரகத்தில் அலையும். ஏதாவது பணம் கொடுத்தாக வேண்டும்.
இப்படிச் சொல்லி, நான் ஏழைப் பெண்ணின் கன்னி கழிவதற்காக எட்டணாவை வசூலித்தேன்.“ நேரம் கிடைக்கும் போது வந்து எனக்கு செய்தி செல்லுங்கள்.” முன்பணமாக நான் எட்டணா கொடுத்து விட்டதால் செய்தி சூடு ஆறி விடாமல் எனக்குக் கிடைக்க வேண்டுமல்லவா?
அதற்குப் பிறகு என் சிநேகிதியின் வீட்டில் அம்மா,மகள் இருவரையும் பார்த்தேன். அவர்கள் அந்த வீட்டில் வேலை செய்பவர்கள். மணப்பெண் அவ்வளவு அழகியில்லையெனினும், ஒரு விதக் கவர்ச்சியிருந்தது.
பதினேழு வயது இளம் பெண். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏன் என்னைப் பார்க்க வரவில்லை என்று கேட்டதற்கு , அவன் பேட்டரியில் ’நெய்த்’ பார்த்ததால் வரமுடியவில்லை என்று பெண்ணின் அம்மா பதில் சொன்னாள்.
“ நெய்த்?,அவர் நெசவு வேலை செய்பவரா ?அவர் பாக்டரியில் வேலை பார்ப்பதாகச் சொன்னீர்களே?” என்று என் சிநேகிதி கேட்டாள்.
நெய்த் என்றால் மலையாளத்தில் நெசவு என்பதால் அவள் அப்படி அர்த்தம் செய்து கொண்டு கேட்டாள்.
“அவர் இன்னமும் அங்குதானிருக்கிறார். கடந்த வாரம் நைட்டியூட்டி பார்த்தார்.அவர் பகலில் வீட்டில் இருந்ததால் நான் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது சட்டம் — அந்தக் காலனின் சட்டம்!” புதுப்பெண் இப்படி விளக்கினாள்.
தேன்நிலவுக் காலத்தில் புதுப்பெண் தன் கணவனுக்குக் — காலன் என்று பெயரிடுவது ! எனக்கு வேடிக்கையாக இருந்தது.
ஆனால் அவள் அடுத்துச் சொன்ன விஷயங்கள் என் புன்னகையை மறைத்து விட்டது. சொல்வதற்கு வேதனையான விஷயங்கள் அவளிடம்இருந்தன. பேச்சில் அடக்கமோ, வார்த்தைகளில் மென்மையோ இல்லை.
தேன்நிலவும்,அதன் சிருங்காரமும் கவிஞனின் வெற்றுக் கற்பனைதான் என்று நினைக்குமளவிற்கு அவள் பேச்சு இருந்தது.தன் கணவனைப் பற்றிப் பேசும் போது அவளிடம் ஆசை,வெறுப்பு என்று எந்த உணர்வுமில்லை. தன்னை இந்த உறவிற்குள் தள்ளிய அந்தத்’ திருட்டு முதியவளிடம்’ தான் அவளுக்கு ஆறாத கோபம். எல்லா இடங்களிலும் அலைந்து, திரிந்து பிச்சையெடுத்த அந்தப் பதினைந்து ரூபாயை மட்டும் அவள் அவனுக்குத் தரவில்லை. அரிசி குத்தி அவள் சேர்த்து வைத்திருந்த பதினைந்து ரூபாயையும் அவன் எடுத்துக் கொண்டு விட்டான்.“
அவள் எனக்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வாள்.அவளுக்கு நல்லதாக நான் ஏதாவது வாங்கித் தருவேன், ” என்று சொல்லியிருந்தான்.
கல்யாணத்திற்குப் பிறகு அவள் அந்தப் பேச்சை எடுக்க முயற்சித்தாள். ஆனால் அவன் “ஓ, நாட்டியமாடுபவள் போல அலங்கரித்துக் கொண்டு நேரத்தைப் போக்க ஆசைப்படுகிறாயா ?” என்று தலைமுடியைப் பிடித்திழுத்து அவளை அடக்கி விட்டான். அதற்குப் பிறகு அவள் எதுவுமே கேட்கவில்லை. வாரத்திற்கு ஒரு முறை அவளுக்கு ஓரளவு பணம் கொடுப்பான்,அவள் அதையும் சில சமயங்களில் அவனது மற்ற
மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.
ஆனால் பெண்ணின் விருப்பு ,வெறுப்புகள் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள்?அம்மா அவளை வற்புறுத்தினாள்.அவனுடைய அத்தைகளில் ஒருத்தி அவளை சாதுர்யமாகச் சிக்க வைத்து விட்டாள். அவர்களை ஆழமான குழியில் தள்ளுவதே அவள் திட்டம் ;கடுமையாக உழைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை அவர்கள் சாப்பிடுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மகள் பேசிய போது அம்மா மௌனமாக இருந்தாள். இந்தஅசட்டுப் பெண்ணிற்கு என்ன தெரியும்? என்பதுதான் அவளுடைய பாவனை. நானும் ,சிநேகிதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். அம்மாவின் கண்களில் ,அந்தச் சம்பந்தத்தைத் தடுத்து நிறுத்த முயன்றவர்கள் வில்லன்களாகத் தெரிந்தார்கள்; மகளுக்கோ அவர்கள் காவலர்கள்.
“பாவம் அவள்! என் பங்கும் இதிலிருக்கிறதே என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கிறது. ஹனுமான் பண்டாரத்தின் மருமகள் கல்யாணத்திற்கு எப்படி உதவி செய்யாமலிருக்க முடியும?” அவர்கள் போன பிறகு நான் கேட்டேன்.
“திருடர்கள் ! ஹனுமானோடோ அல்லது பாலியோடோ அவர்களுக்கு எதுவுமில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் போய் இடத்திற்குத் தகுந்தபடி கதையளப்பார்கள். தங்களுக்குப் பிடித்தவர்கள் என்றால் மட்டும் மனிதர்கள் உதவி செய்வார்கள் .” என் சிநேகிதி சொன்னாள்.
“பாவம் அந்தப் பெண். ஒருவன் தன் தலைமுடியைப் பிடித்து இழுப்பதற்கு பணமும் கொடுக்க வேண்டியிருக்கிறது.” நான் இரக்கப்பட்டுச் சொன்னேன்.
“இல்லை, அப்படியில்லை. அவன் கெட்டிக்காரன். அதனால்தான் நகைகளுக்கான பணத்தை முன்னரே வாங்கிக் கொண்டு விட்டான் !
அந்தப் பணத்திற்குத் தங்கம் வாங்கி ,பிறகு அதை விற்றால் பாதிப்பணம்தான் கிடைக்கும். இந்த வழியில் இழப்பு எதுவும் கிடையாது.
தங்கள் மனைவியின் இயற்கை அழகை மட்டும் சில கணவர்கள் ரசிக்க விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும் ?”
“முட்டாள்தனமாகப் பேசாதே, இவ்வளவு மோசமான விஷயங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் ?” நான் கேட்டேன்.
“அவர்களில் ஒருவர் இறக்கும் வரை.” என் இரக்கத்தைக் கிண்டல் செய்வது போல சொல்லிவிட்டு சிநேகிதி தொடர்ந்தாள்.“ இந்த அழுகையும், வருத்தமும், குற்றம் சொல்வதும் ஒரு பழக்கமாக மாறும் வரை இது தொடரும். அதற்குப் பிறகு அவர்களால் இது இல்லாமல் வாழமுடியாது. குழந்தைகள் பிறக்கும் போது பார். அதற்கென்று தனியாக ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தேவைப்படுவார். அவையெல்லாம் மனிதனின் அறிவிற்கெட்டாத கடவுளின் செயல். இல்லையா ?அற்புதமான கடவுள் ! நாம் அறிய விரும்பும் ரகசியமே நம்மை அழித்து விடும் !
அவர்கள் கருவுற்றால் நமக்குப் பைத்தியம் பிடித்துவிடும் ; நாம் அவர்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டும், இல்லையா ? இந்த மனிதர்களைப் பொறுத்தவரை, பிரசவமென்பது கீழே இருக்கும் ஒரு பயனற்ற பொருளை குனிந்து எடுப்பது போன்றதுதான். கடுமையாகவேலை செய்பவர்களுக்கு இயல்பாகவே குழந்தை பிறப்பு மிகச் சுலபமாகி விடும் என்பதை நீ கேள்விப்பட்டிருக்க வேண்டும் ? கொஞ்சம் பொறுத்திரு, இருபது வருடங்கள்? –– அல்லது பதினைந்து வருடங்களில் — அந்த முதியவளைப் போல இவள் வெற்றிலைத் தட்டுடன் பிச்சை கேட்டு வருவதை நீ பார்ப்பாய் !”
நான் எதுவும் சொல்லவில்லை. என் சிநேகிதி மிக தாராளமாக பகிர்ந்து கொண்ட அறிவு விருந்தை ஏற்றுக் கொண்டேன்.
அதற்குப் பிறகு புதுப்பெண்ணை ஏறக்குறைய ஒரு வருடம் கழித்துத்தான் பார்த்தேன். ஒரு குழந்தையைக் தூக்கியபடி என் வீட்டிற்கு வந்தாள். சிவப்பான கொழுகொழு பெண் குழந்தை. இரண்டு மாதக் குழந்தை என்று அவள் சொன்னாலும் அது ஆறு மாதக் குழந்தை போல இருந்தது. வறுமையின் எந்தச் சாயலும் குழந்தையிடம் தெரியவில்லை.
குழந்தையின் கண்களிலும்,புருவங்களிலும் மை தீட்டப்பட்டிருந்தது. முன் நெற்றியில் கருப்புப் பொட்டு. சுருட்டை முடி அழுத்தி வாரப்பட்டிருந்தது. மெல்லிய பட்டாலான கவுன் அணிந்திருந்தது.விரும்பித தூக்கக் கூடிய அளவிற்கு அழகாக இருந்தது! ஆனால் தாய் சோர்ந்தும், கசங்கிய ஆடைகளோடும், கைகளில் புண்ணோடும் இருந்தாள்.
குழந்தையைத் தூக்க வேண்டுமென்ற என் ஆசை குறைந்தது. தான் பார்த்தும்,பார்த்தும் இருக்காத பொருட்களைப் பார்த்து குழந்தை சிரித்தது. அதன் வாயோரம் தாய்ப் பாலின் அடையாளமாய் வெளுத்த கோடோடிருந்தது. அன்பை விட ஆதங்கத்தையே நான் அதிகமாக உணர்ந்தேன். இப்போது அதிகமாகச் சுரக்கும் தாய்ப்பால் இன்னும் ஆறு மாதங்களில் வற்றிப் போய் விட குழந்தையின் வயிற்றுக்குப் போதிய உணவில்லாமல் போய்விடும். கருவுற்றிருக்கும் தாயின், வரண்ட மார்பை உறிஞ்சும் வற்றிய குழந்தையாகி விடும்.
பிறகு அடுத்த குழந்தையின் வரவு. அதுவும் முதல் குழந்தை பாணியில். அதற்குப் பிறகு,பத்து வருடங்களுக்குப் பின்னால், அந்தப் பெண் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு ,என் சிநேகிதி சொன்ன மாதிரி திருமணச் செலவிற்காக வெற்றிலைத் தட்டுடன் வந்து பிச்சை எடுப்பாள்.
பிறகு சில மாதங்களுக்குப் பிறகு – புதுப்பெண்— இந்தக் குழந்தை – ஒரு குழந்தையைக் தூக்கிக் கொண்டு வருவாள் ,அழுக்கான ஆடைகளோடு.
இது சம்பவமாக ,பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. சமூகத் தேவைகளுக்கான தன்மையை தீவிர நிலையில் சிந்திக்காதவர்கள் ; பொறுப்பற்ற வகையில் ,மூட நம்பிக்கைகளின் பின்புலத்தில், இடம் சார்ந்த பார்வையில்,இயந்திர ரீதியான தன்மையை மட்டும் அறிந்தவர்கள்…என் எண்ணங்கள் இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் “ இந்தக் குழந்தைக்கு நான் சில வாழைப்பழங்கள் வாங்க நீங்கள் எட்டுக் காசு கொடுத்தால் கடவுள் அருள் உங்களுக்குக் கிடைக்கும்,”என்று அவள் சொன்னாள்.
எட்டுக் காசிற்கான கடவுள் அருளை நான் பெற்றுக் கொண்டு, அவளிடம் குழந்தையின் தந்தையைப் பற்றி விசாரித்தேன்.
நான் கேள்விப்பட்டிருந்ததை விட பத்து மடங்கு மேலாக புகார்கள் அவளிடமிருந்து பொங்கி வந்தன. கடவுள் அவ்வாறான மனிதர்களை எப்படிப் படைக்கிறார் !அவனுக்குச் சுமைகளே அதிகம்.ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருக்கும் மனிதனிடம் என்ன இருக்கும்?அவன் வேதனை தருபவன், அவ்வளவே. சீக்கிரம் இறந்து விடுவானோ? இல்லை !
நரகத்திலிருந்து அவனாவது மீள்வானா? ஒரு போதும் இல்லை! ஒரு ஹோட்டலில் பாதிவிலைக்கு அவனுக்கு உணவு கிடைக்கிறது, அவனுக்கு மகிழ்ச்சி தரவும்,போதாக் குறைக்கு அவனை கவனித்துக் கொள்ளவும் மனைவி இருக்கிறாள்! ஒருவர் இதையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் இரவுகளில் கிடைக்கும் அடி சமாளிக்க இயலாதது. அதனால் ஆபத்தில் குரல் கொடுத்தால் கூட யாரும் எட்டிக் பார்க்க மாட்டார்கள்!
அவள் அம்மா இறந்த போது விடியும் வரை அவள் உடலின் அருகே தனியாகத்தான் இருந்தாள். அம்மா மூச்சு விடச் சிரமப்படுவதைப் பார்த்து விட்டு ,அவன் போய் விட்டான். ஒரு பொட்டு மனித நேயம் கூட அவனிடம் இல்லை! அவனிடம் அது இருந்திருந்தால்.. குழந்தையின் அழுகை கூட கரகரத்துப் போனதைப் பார்த்து ஒரு துண்டு ஆடை வாங்கித் தந்திருக்க மாட்டானா ?
ஒரு நல்ல விஷயம், கடவுள் ஏழையைக் கைவிடவில்லை. அவள் அணிந்திருக்கும் கவுனைப் பாருங்கள். அது ஜட்ஜ் கேசவன் வக்கீல் வீட்டில் தந்தது. அவர்களின் கருணையால்தான் தாயும், சேயும் பிழைக்க முடிந்தது.”
இது ’ஜட்ஜ் வக்கீல்’ என்றது ஒரு வர்ணனையை உள்ளடக்கியது. இறந்த ,நிகழ்,எதிர் காலங்களுக்கான பதவிகளை பெற்ற ஆசீர்வதிக்கப்பட்ட பெயருடைய இந்த பெருமையாளர் யார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை .ஜட்ஜாகப் பதவியுயர்வு பெற்ற ஒரு வக்கீல்,அல்லது ஜட்ஜாக இருந்து சட்ட ஆலோசகரானவர் என்று ஏதாவது ஒன்றில் அடங்கலாம். கடவுளோடு கோபம் கொள்கிற பெண்கள் எவ்வளவு வேகமாக அதிலிருந்து மாறி புகழத் தொடங்கி விடுகின்றனர் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. லட்சியங்கள், கொள்கைகள், ஒட்டுதல், விலகுதல் என்ற வகையான இயல்புகளில் நிலையான எண்ணமில்லாத இவர்கள் எந்த வகையான சூழலுக்கும் தயாராகி, தீவிர எதிர்ப்பின்றிப் போகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.
அவள் மேலும் பேசியது என் சிநேகிதியின் வார்த்தைகளை உறுதி செய்வதாக இருந்தது. புறப்படும் போது தன் கணவனைப் பற்றி அவள் சொன்னது :“கடவுள் இன்னும் ஒரு விஷயத்திற்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இந்தப் பெண் வளர்ந்து ,ஆளாகி ,கணவன் கிடைக்கும் வரை அவள் அப்பா உயிரோடிருக்க வேண்டும். அடியைத் தவிர நமக்கு வேறு எதுவும் கிடைக்காமல் போனாலும், இரவுகளில் உடன் தங்கியிருக்க உடைமைக்காரன் இருப்பானில்லையா ? என் அம்மா அடிக்கடி சொல்வதைப் போல , வீட்டில் ஆண் இல்லையென்றால் ,சுற்றியிருக்கும் மனிதர்கள் தனியாக இருக்கும் கூலி வேலை செய்யும் ஒரு பெண்ணை வாழ விட்டுவிடுவார்களா ?”
———————————————————————
பெண்ணிய எழுத்தாளரான கே.சரஸ்வதி அம்மா சிறுகதை ,நாவல் , நாடகம் ,கட்டுரைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. சோள மரங்கள், பொன் குடம், கலா மந்திரம் ஆகியவை அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.
Very well written story which conveys the reality of life of the poor class women. The translation is excellent which has helped us read and appreciate the original story. Thanks to both.
LikeLike