எதிர் வீட்டு ஜன்னல் – எஸ்.கௌரிசங்கர்

North-South Love Story: This Punjabi-Tamil Couple Converted Each Other

தன் வீட்டு பால்கனிக்கு வந்து பேப்பர் படிக்க அமர்ந்த பசுபதியை, திடீரென்று “டடக் டக்” என்ற பெரும் சப்தம் உலுக்கியது. அதிர்ந்து போன பசுபதி எழுந்து திரும்பிப் பார்த்த போது, எதிர் வீட்டு ஜன்னலில் இருந்த பழைய ஏ.சி. தன் சிறிது நேர தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு, புத்துயிர் பெற்று நடுங்கிக் கொண்டே ஓட ஆரம்பித்திருந்தது தெரிந்தது. பசுபதி கோபத்துடன் பேப்பரை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, நேராக சமையல் அறைக்குள் நுழைந்தார்.

“வர வர எல்லாம் மோசமாகிகிட்டு வருது” என்று பெரிய குரலில் கத்தினார்

வாணலியில் ஏதோ தாளித்துக் கொண்டிருந்த பார்வதி மெதுவாகத் திரும்பி, “எண்ணையிலே போட்ட கடுகைப் போல, எதுக்கு இப்போ வெடிக்கிறீங்க? என்ன ஆச்சு காலை வேளையிலே?” என்றாள்.

“காலை வேளையா இப்போ? மணி பதிணொண்ணு ஆச்சு?”

“அதுக்கு என்ன இப்போ? சமையல் இன்னும் அரை மணியிலே ஆயிடும். நீங்க போய் முதல்லே குளிங்க. ரிடயர் ஆனதிலேருந்து நீங்கதான் மோசமாகிகிட்டு வரீங்க. எல்லாம் லேட்”

“நான் அதைச் சொல்லலை”. அடுப்பை அணைத்து விட்டு பார்வதி திரும்பி அவரை “வேறு என்ன?” என்ற பாவனையில் பார்க்க, “பதினோரு மணி ஆயிடுச்சு. எதிர்வீட்டு ஏ.சி. இன்னும் ஓடிகிட்டு இருக்கு. இன்னுமா தூங்கிகிட்டு இருப்பாங்க மனுஷங்க?” என்றார் பசுபதி.

“ப்பூ! இவ்வளவுதானா? நான் பயந்தே போயிட்டேன்!” என்று சொல்லித் தன்னைத் தளர்த்திக் கொண்ட பார்வதி, “சின்னஞ் சிறுசுங்க. கல்யாணம் ஆகி அஞ்சு ஆறு மாசம்தான் ஆகுது. இன்னிக்கி ஞாயித்துக்கிழமை. அப்படித்தான் இருக்கும். அந்தப் பொண்ணு ஏதோ ஐ.டி. கம்பெனியிலே ராத்திரியிலே வேலை பார்க்குதாம். லேட்டா வந்திருக்கும். அதான் தூங்கிகிட்டு இருக்கும். இதையெல்லாம் பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க?” என்றாள்.

“இருந்தாலும் மத்தியானம் பதினோரு மணி வரைக்குமா தூங்குவாங்க?” என்றவரை அடக்கி, “போங்க! வேறே வேலை எதுவும் இல்லைன்னா இந்தப் பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சுக் கொடுங்க, வாங்க” என்றாள் பார்வதி.

“வேண்டாம்! நான் குளிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு பசுபதி அங்கிருந்து நழுவினார்.

ஒரு மணி நேரம் கழித்து, அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு, பசுபதி போய் வாசற் கதவைத் திறந்தார். அங்கே எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தாள். முழங்கால் வரையில் ஒரு இறுகிய நீல நிற ஜீன்ஸ் கால் சட்டையும் மேலே “இட்’ஸ் டைம் டு செலிபரேட்” என்று வெள்ளை எழுத்தில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட கருப்பு நிற ‘டீ’ ஷர்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் ப்ளாஸ்டிக் ஸ்லிப்பர். கலைந்து விரிந்து நெற்றியில் விழுந்த தலைமுடியும் கண்களில் முக்கால் தூக்கமுமாக நின்றாள். பசுபதியின் வாய் திறந்து பற்கள் தெரிய வலிந்து ஒரு புன்னகையைச் செய்ய, வலது கை மடித்துக் கட்டிய லுங்கியை முழங்காலுக்கு கீழே தானாகத் தளர்த்தி விட்டது.

“ஆண்ட்டி இல்லையா?” என்றாள் வந்தவள்.

“பார்வதி! உன்னை கூப்பிடறாங்க பாரு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனார் பசுபதி.

“யாரு?” என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்த பார்வதி, நின்றவளைப் பார்த்து புன்னகைத்து “வாம்மா!” என்று உள்ளே அழைத்தாள். அவள் உள்ளே வராமலேயே “ஆண்ட்டி! ஒரு பாக்கெட் பால் இருக்குமா? டீ போட வேணும்” என்று கொஞ்சம் கெஞ்சலாகச் கேட்டாள்.

“இருக்கும்மா, தரேன். வேணும்னா டீயாவே போட்டுத் தரட்டுமா?”

“இல்லை ஆண்ட்டி! டீத்தூள், சுகர் எல்லாம் இருக்கு. பால் மட்டும்தான் வேணும். நேத்து அவனை இரண்டு பாக்கெட் பால் வாங்கி வைக்கச் சொன்னேன். மறந்திட்டு வந்து தூங்கிகிட்டு இருக்கான்”

“பரவாயில்லைம்மா! இரு தரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து ஃப்ரிட்ஜ்லிருந்து ஒரு பால் பாக்கெட் எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள் பார்வதி. அவள் வரும் வழியில் எதிரே போய் மறித்து நின்று கொண்ட பசுபதி, “அந்தப் பொண்ணு நம்ம ஊர் தானா?” என்று கேட்டார்.

“ஆமாம்! தமிழ்லே பேசிச்சே! கவனிக்கலையா நீங்க?”

“நீ கவனிச்சியா? அந்தப் பொண்ணு கழுத்திலே தாலியே இல்லை”

“இல்லாட்டி என்ன? தாலியைக் கட்டித் தொங்க விட்டுக்கிறது எல்லாம் எங்களோடே முடிஞ்சு போச்சு. இப்போ அதெல்லாம் ஃபாஷன் இல்லை”

“நெத்தியிலே, வகிட்டிலே குங்குமப் பொட்டு கூட இல்லை”

“தூங்கி எழுந்து வந்த பொண்ணுக்கு அதெல்லாம் எப்படிங்க இருக்கும்? அழிஞ்சு போயிருக்கும்””

“அது சரி! கால்லே மெட்டியும் இல்லை, பார்த்தியா?”

“இருங்க! அப்போ ஒரு நிமிசத்திலே நீங்க அந்தப் பொண்ணை தலையிலேருந்து கால் வரைக்கும் கவனமா உத்து பார்த்திருக்கீங்க போல. எவ்வளவு நாளா இந்தப் பழக்கம்?”

“ஐய்யய்யோ! அதெல்லாம் இல்லை பாரு! எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கு”

“என்ன சந்தேகம்?”

“ஆ…..அது உறுதியா தெரிஞ்ச அப்புறம் சொல்றேன்.”

“அப்புறம் நீங்க என்ன சொல்றது? நானே தெரிஞ்சுக்கிறேன்” என்றவள், “பொம்பளைங்க விஷயம்னா அப்படி ஒரு ஆர்வம்! போங்க பேசாம!” என்று கொஞ்சம் கடுமையாகச் சொல்லவே, பசுபதி வாயைக் கையால் பொத்தி ஜாடை செய்து கொண்டே மெதுவாக விலகினார்.

இரண்டு நாள் கழித்து, கோவிலுக்கு போய் விட்டு வந்த பசுபதி, பார்வதி தம்பதியினர் லிஃப்ட்டில் மேலே வந்த போது, லிஃப்ட் கதவு திறந்தவுடன் எதிரே ஒரு இளம் வயது வாலிபன் நின்றிருந்தான். நல்ல உயரம். நல்ல சிவப்பு. களையான முகத்தில் குறுந்தாடி வைத்திருந்தான். இவர்களைப் பார்த்ததும் ஒரு அரை சிரிப்பு சிரித்து விட்டு, அவசரமாக லிஃப்டில் நுழைந்து கதவை மூடிக் கொண்டான். பார்வதி உடனே பசுபதி பக்கம் திரும்பி, “இவந்தான் எதிர் வீடு! அந்தப் பொண்ணோட புருஷன்” என்றாள்.

“அப்படியா? நிறைய தடவை லிஃப்ட்லே பார்த்திருக்கேன். பேசினதில்லை”.

பசுபதி வீட்டைத் திறக்க, பார்வதி உள்ளே நுழைந்து கொண்டே “அவன் யார் கூடவும் பேசறதில்லையாம். கீழ் வீட்டு அம்மா சொன்னாங்க. ஒருவேளை ஊமையோ?” என்றாள்.

“ஆ! எல்லாரும் நம்மைப் போல ஓட்டை வாயா இருப்பாங்களா?” என்று பசுபதி பதில் சொல்லி விட்டு, பார்வதியின் கோபப் பார்வைக்குப் பயந்து அவசரமாக உள்ளே ஓடினார்.

ஒரு வாரம் சென்றிருக்கும். மாலை வேளையில் வாசல் அழைப்பு மணி அடிக்கவே, பார்வதி போய்க் கதவைத் திறந்தாள். எதிர் வீட்டுப் பெண் இன்று சுடிதாரில் நின்றிருந்தாள். அவள் கையில் ஒரு பால் பாக்கெட் இருந்தது. அதை நீட்டி “தாங்கஸ் ஆண்ட்டி! உங்ககிட்டே பால் வாங்கினது மறந்தே போச்சு! இன்னிக்குத்தான் ஞாபகம் வந்துச்சு. அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு…….” என்றாள்.

பால் பாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்ட பார்வதி, “இருக்கட்டும்மா! ஏன் வெளியே நிக்கிறே? உள்ளே வாயேன்” என்று அழைத்தாள். அந்தப் பெண் சிறிது யோசித்து விட்டு தயங்கிக் கொண்டே உள்ளே வந்தாள். ஹாலில் இருந்த சோபாவில் பசுபதி அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு மெதுவாக சோபாவின் ஓரமாக அமர்ந்தாள். பார்வதி அவள் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

“உன் பேர் என்னம்மா?”

“அபிராமி”

“சொந்த ஊர்?”

“கோயம்புத்தூர்”

“கோயம்புத்தூர்லே எங்கே?”

“ஆர். ஏஸ். புரம்”

“எங்க அண்ணன் கூட கோயமுத்தூர்லேதான் இருக்காரு. சரவணம்பட்டி. நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க போல! கீழ் வீட்டு அம்மா சொன்னாங்க” என்றாள் பார்வதி.

அவள் அதற்கு பதில் சொல்லாமல் லேசாக ஒரு புன்முறுவல் மட்டும் செய்தாள்.

“உங்க வீட்டுக்காரரையும் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் பேச மாட்டேங்கிறாரு. ரொம்ப கூச்ச சுபாவம் போல”

“அவனுக்குத் தமிழ் தெரியாது ஆண்ட்டி. பஞ்சாப்காரன்”

“அவன்”, “பஞ்சாப்காரன்” என்ற வார்த்தைகள் பார்வதிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தன. அதை மறைத்துக் கொண்டு, “காதல் கல்யாணமா?” என்றாள் சிரித்துக் கொண்டே.

வந்தவள் இந்தப் பேச்சை விரும்பாதவள் போல அதற்கு பதில் சொல்லாமல், “இது உங்க சொந்த ஃப்ளாட்டா ஆண்ட்டி?’ என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.

“ஆமாம்! வாங்கி ஏழு வருஷம் ஆச்சு. எங்க பையன் அமெரிக்காவிலே பாஸ்டன்லே இருக்கான். அவன் வாங்கினது” என்று முகத்தில் பெருமை பூரிக்கச் சொன்னாள் பார்வதி. தொடர்ந்து, “எனக்கு சொந்த ஊர் மதுரை. இவருக்கு தஞ்சாவூர். எங்களுக்கு கல்யாணம் ஆகி முப்பத்தெட்டு வருஷம் ஆச்சு. ஒரே பையன். இவரு எக்ஸைஸ் டிபார்ட்மெண்ட்லே இன்ஸ்பெக்டரா வேலை பார்த்தாரு. பல ஊர்கள்லே இருந்திருக்கோம். கோயமுத்தூர்லே கூட இரண்டு வருஷம் இருந்தோம். கடைசியா இங்கே சென்னையிலே வந்து அவரு ரிடயர் ஆனப்புறம் இந்த வீட்டை வாங்கிட்டு செட்டில் ஆயிட்டோம்” என்று விவரமாக சொல்லி முடித்தாள்.

‘இதையெல்லாம் இப்போது யார் கேட்டார்கள்?’ என்ற பாவனையில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண், சட்டென்று, “சரி! ஆண்ட்டி! நான் வரேன். நேரமாயிடுச்சு. இன்னிக்கி நைட் டுயூட்டி. நான் கிளம்பணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினாள். “இரும்மா! குங்குமம் தரேன்” என்று பார்வதி சொன்னதைக் கூடக் கேட்காமல் அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றாள்.

இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்த பசுபதி பார்வதியிடம், “கேட்டியா? “அவன்” “பஞ்சாப்காரன்”. புருஷனுக்கு மரியாதையைப் பார்த்தியா? எங்க அம்மா “சிதம்பரம்”ன்னு எங்க அப்பா பெயரைக் கூடச் சொல்ல மாட்டாங்க”

“ம்….உங்க மருமகள் நம்ம பையனை, ‘சுந்தர்ர்ர்…’ ன்னு பெயரைச் சொல்லித்தான் கூப்பிடறா. அதுக்கு என்ன சொல்றீங்க? இந்த காலத்திலே எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான்! புருஷனை வாடா, போடான்னுதான் கூப்பிடறாங்க.”

“அது சரிதான்! நீ பரவாயில்லை. ஏதோ இதுவரையிலும் ‘வாங்க, போங்க’ ன்னு என்னை கூப்பிட்டுகிட்டு இருக்கியே!”

“கல்யாணம் ஆன புதுசிலே நீங்க கூடத்தான் உங்களை “டார்லிங்” ன்னு கூப்பிடணும்னு சொல்லிகிட்டே இருந்தீங்க. இப்போ வேணா அப்படி கூப்பிடட்டுமா?”

பசுபதி ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு, “கூப்பிடு! ஆனா ரகசியமா கூப்பிடு. யாராவது கேட்டா ஏதாவது நினைச்சிக்கப் போறாங்க” என்றார் வெட்கத்துடன்.

“என்ன, இரண்டு கிழமும் துள்ளி விளையாடுதுன்னு நினைச்சுப்பாங்க. அவ்வளவுதானே!” என்று சொல்லி விட்டு பார்வதி சிரித்துக் கொண்டே உள்ளே போனாள்.

அடுத்த சனிக்கிழமை இரவு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எதிர் வீட்டிலிருந்து உரத்த குரலில் இருவர் சண்டையிடும் வார்த்தைகள் காதில் விழுந்தன. “யூ பிட்ச்” என்று அவன் பெரிதாகக் கத்த, பதிலுக்கு “யூ ஸ்கௌண்ட்ரல்! யூ சீட்டட் மீ” என்று அவள் அவன் குரலுக்கு மேலே கத்த, அந்த வீட்டில் ஒரே ரகளையாக இருந்ததாகத் தோன்றியது. கெட்ட வார்த்தைகள் வரிசையாக சீறி விழுந்தன. கைகலப்பில் போய் முடிந்து விடுமோ என்று பசுபதி பயந்தார். கையில் பிய்த்து எடுத்த சப்பாத்தியை தட்டில் திரும்ப வைத்து விட்டு எழுந்து, “நான் வேணாப் போய் என்னன்னு பார்த்துட்டு வரட்டுமா?” என்றார். “சும்மா இருங்க! புருஷன் பொண்டாட்டிக்குள்ளே நடக்கிற சண்டையிலே நீங்க எப்படி குறுக்கே போவீங்க? பேசாம சாப்பிடுங்க” என்று பார்வதி அதட்டவே உட்கார்ந்து மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்.

சண்டை இரவு வெகு நேரம் நீடித்தது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி என்று எல்லா மொழிகளிலும் வசவு வார்த்தைகள் அங்கே கரை புரண்டு ஓடியது காதில் விழுந்தது. இரவு பதினோரு மணி அளவில், வாசற் கதவு திறந்து “படார்” என்று சாத்தப்படும் சப்தம் கேட்டது. பிறகு பூரண அமைதி நிலவத் தொடங்கியது.

மறுநாள் காலை பதினோரு மணிக்கு வழக்கம் போல பேப்பர் படிக்க பசுபதி பால்கனிக்கு வந்து எதிர் வீட்டைப் பார்த்த போது, ஜன்னலில் இருந்த ஏ.சி. கழட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார். அவசரமாக சமையல் அறைக்கு விரைந்த பசுபதி, பார்வதியிடம் “பாரு! எதிர் வீட்டு ஜன்னல்லே இருந்த ஏ.சி. யைக் கழட்டிட்டாங்க பார்த்தியா?” என்றார்.

“ஆமாம்! அந்தப் பொண்ணு அவனோட சண்டை போட்டுகிட்டு, ராத்திரியே பொட்டியைத் தூக்கிகிட்டு தன்னோட சிநேகிதி வீட்டுக்குப் போயிடுச்சாம். அந்த ஏ.சி.யை அந்தப் பொண்ணுதான் வாடகைக்கு வாங்கி வைச்சிருந்துதாம். அதான் காலையிலே முதல் வேலையா அதை கழட்டி எடுத்துகிட்டு போயிடுச்சாம்”

“இதெல்லாம் யார் சொன்னாங்க?’

“வேறே யாரு? கீழ் வீட்டு அம்மாதான்”

“என்னதான் புருஷனோட சண்டை போட்டாலும், கல்யாணம் ஆன பொண்ணு இப்படியா ராத்திரி பதினோரு மணிக்கு வீட்டை விட்டுப் போகும்?” என்றார் பசுபதி கவலையுடன்.

“அட! நீங்க ஒண்ணு! அவங்க கல்யாணம் கில்யாணம் ஒண்ணும் பண்ணிக்கலையாம். காதலிச்சாங்களாம். ஒரு ஆறு மாசம் சேர்ந்து வாழலாம், அப்புறம் புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தாங்களாம். இப்போ காதல் முறிஞ்சு போச்சு போல! அதான் எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று பதில் சொன்னாள் பார்வதி.

“நான் சந்தேகப்பட்டேன்னு சொன்னேனே அது இதுதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமே ஆயிருக்காதுன்னு சந்தேகப்பட்டேன். அது சரியாயிடுச்சு.”

“ஆமாங்க! நான் கூட இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லீங்க! கல்யாணத்துக்கு முன்னாலே சேர்ந்து வாழறது எல்லாம் சினிமாவிலேதான் நடக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நிஜமாவே நடக்குது. ஏதோ ஒரு சினிமாவிலே, ‘எங்க வீட்டு பொண்ணுங்களோடு பழகிப் பாருங்க! பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க’ ன்னு சொல்வாங்க. அது மாதிரி பழகிப் பார்த்திருக்காங்க. ஆனால் பிடிக்காம போயிடிடுச்சு. என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம். அந்தப் பொண்ணுக்கு ஏ.சி.மாதிரி புருஷனும் சும்மா ஆறு மாசத்துக்கு தற்காலிகமாக போயிடுச்சு”

“இதெல்லாம் தப்புன்னு அந்த காதல் ஜோடிக்குத் தெரிய வேணாம்?” என்றார் பசுபதி சற்று கோபத்துடன்.

“தப்பு, சரின்னு நாம எப்படிங்க சொல்ல முடியும்? காலம் மாறிகிட்டேதானே இருக்கு. நம்ம அப்பா அம்மா காலத்திலே தப்பா இருந்தது நமக்கு இப்போ சரின்னு தோணுதில்லை? அதே மாதிரிதான் நமக்கு தப்புங்கிறது நம்ம புள்ளைங்களுக்கு சரின்னு தோணும்.”

“என்ன இருந்தாலும் எனக்கு என்னவோ வருத்தமாத்தான் இருக்கு பார்வதி” என்றார் பசுபதி குரல் தழுதழுக்க.

“சரி விடுங்க! அவங்க எப்படியோ போகட்டும். நமக்கு எதுக்கு இந்த வீண் கவலை?” என்று சொல்லிக் கொண்டே, குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து இறக்கி வைத்தாள் பார்வதி.

இரண்டு நாள் கழித்து, வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே குளித்துவிட்டு, பால்கனியில் துண்டைக் காயப் போடப் போன பசுபதி, எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்து விட்டு, “பாரு! சீக்கிரம் இங்கே வந்து பாரு!” என்று கத்தினார்.

என்னவோ ஏதோ என்று அலறி அடித்துக் கொண்டு அங்கே வந்த பார்வதி, “என்னங்க! என்ன விஷயம்?” என்று கேட்டாள்

“கவனிச்சியா? எதிர் வீட்டு ஜன்னல்லே புதுசா ஏ.சி. போட்டிருக்காங்க.” என்றார் பசுபதி குழந்தை குதூகலத்துடன்.

பார்வதி கோபத்துடன், “நீங்க எதுக்கு எப்பப் பாரு அந்த எதிர் வீட்டு ஜன்னலையே கவனிச்சுகிட்டு இருக்கீங்க? வரவர உங்களுக்கு ஊர் வம்பு ஜாஸ்தியாயிடுச்சு! கிடந்து அலையிறீங்க. வாங்க உள்ளே!” என்று அதட்டிச் சொல்லி விட்டுத் திரும்பினாள்.

அதே சமயம் வாசல் அழைப்பு மணி அடித்தது.

“பாரு! சீக்கிரம் ஒரு பால் பாக்கட் எடுத்து தயாரா வை” என்று குறும்புச் சிரிப்புடன் சொன்னார் பசுபதி.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.