அத்தனை விளையாட்டுப் பொருட்களையும்
நிராகரித்துவிட்டு
தவழ்ந்து வந்து
அடம்பண்ணுகிறாள் பாப்பா
கையிலிருக்கும் புத்தகம்தான் வேண்டுமென்று
வராத அழுகை அழுதும்
செல்லச் சிணுங்கல்களுமாய்
கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் வேறு
பாப்பாவை அரட்டவும்
குறும்புசெய்து சிரிக்கவும்
உப்பு மூட்டை ஏறவும்
“அம்மா வஞ்சிட்டா” எனப்
புகாரளிக்கவுமாய்
இடையிடையே வந்துபோகிறான் மித்திரன்
‘விளம்பர இடைவேளைகளில்’
“வெங்காயம் கூட வெட்டித் தருவதில்லை”
“பாப்பாவையாவது பாத்துக்கோங்களேன்”
“சம உரிமை பற்றி பேச்சு மட்டும்தானா”
சமையலறையிலிருந்து கிழத்தி…
தெரியாத வார்த்தைகளை
கவிதைகளில் எழுதியிருக்கிறார்
மௌனன் யாத்திரிகா
அடிக்கடி அகராதி புரட்டவேண்டியுள்ளது
மீண்டுமொரு விளம்பர இடைவேளையில்
காகிதம் எடுத்துவந்து
கப்பல் செய்துதரக் கேட்கிறான் மித்திரன்
கவிதை படித்தலும்கூட
எளிதான காரியமாயில்லை.
எங்கிருந்து படைப்பது?
காட்சிகள் கண்முன்னால் அழகாக விரிகின்றன கவிஞரின் தெளிவான சொற்களில்! – இராய செல்லப்பா
LikeLike
மகிழ்ச்சி ஐயா. உங்களின் பாராட்டு இன்னும் தொடர்ந்து எழுத உற்சாகம் கொள்ளவைக்கிறது. தொடர்ந்து பயணிப்போம்…
LikeLike