வெளி வட்டங்கள் என்ற எஸ்.எம்.ஏ.ராம் நாவல் 1979ஆம் ஆண்டில் வெளிவந்தது.
ராமின் இந்த நாவலும், அசோகமித்திரனின் ஆகாயத் தாமரை என்ற நாவலும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கும்போது அதில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை ஞாபகம் படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒரு முறை சொல்லி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்..
சுகன்யா என்ற முக்கியமான கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு இந்த நாவலை ராம் புனைந்திருக்கிறார். சுகன்யா தான் சந்திக்கிற மனிதர்கள்தான் இந்த நாவல். சுகன்யா வழியாக இந்த நாவல் எடுத்துச் செல்லப்படுகிறது. உண்மையாய் ராம்தான் இந்த நாவலை சுகன்யா மூலம் நடத்திச் செல்கிறார் என்று சொல்லலாம்.
முதல்ல நாவலை ஆரம்பிக்கும்போது சுகன்யா மூலமாக ராம் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்க வேண்டும்.
சுகன்யா மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறபோது, பூஜை அறையில் கிணுகிணுவென்று ஒரு மெல்லிய மணிச் சத்தம் கேட்டது. இந்த சத்தம் அப்பாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற ஒரு காலப்பிரமாணத்தின் கணக்கான இடை வெளியோடு அவ்வப்போது விட்டு விட்டுஎழுப்பப்படுகிற ஏதோவொரு பாரம்பரிய சங்கேதம் என்று மட்டும் அனுமானித்துக் கொண்டாள்.
நாவல் ஆரம்பத்திலேயே சுகன்யா எப்படிப்பட்டவள் என்பதைக் கொண்டு வருகிறார்.
நாவலின் ஆரம்பம் சுகன்யா, முடிக்கும்போது சுகன்யா. இப்படி நாவல் ஒற்றைப் பரிமாணத்துடன் ஆரம்பம் முடிவு கொண்டுள்ளது.
இந்த நாவல் அலுவலகம், வீடு என்று விவரித்துக்கொண்டு போகிறது. அலுவலகத்தில் அவள் அடிக்கடி சந்திப்பது இந்திரா, வல்கர் வெங்கடாச்சாரி, ஸ்டோர் கீப்பர் ரகுராமன், மானேஜர்.
சுகன்யா யார்? தன்னையே கேள்வி கேட்கிற பெண். எல்லாவற்றுக்கும் எதாவது அர்த்தம் கண்டுபிடிக்கிற பெண். இந்த நாவல் 70களின் இறுதியில் வெளிவந்துள்ளது. 70களில் இளைஞர்களிடம் காணப்பட்ட சில குணாம்சங்கள் இந்த நாவலில் தெரிய வருகிறது.
முழுதாக நாத்திகமாக மாறாமல் கடவுள் மீதும், சம்பிரதாயங்கள் மீதும் அவநம்பிக்கைக் கொள்கிற போக்கு.
அலுவலகம் வீடு என்று இரண்டு இடங்களில்தான் இந்தக் கதை நடைபெறுகிறது. அலுவலகத்தில் சுகன்யா சந்திக்கிற மனிதர்களைப் பற்றி இந்தக் கதை சொல்லப் படுகிறது.
மானேஜர் அறைக்குச் சென்றாள் சுகன்யா. மானேஜர் சுற்றிச் சுற்றி எதையோ அலுவலகல் சம்பந்தமாகப் பேசினார். சுகன்யா மானேஜர் அறையிலிருந்து விடுபடும் சமயத்தில் திரும்பவும் கூப்பிட்டு, “ஒண்ணுமில்லே சுகன்யா..உங்கப்பா மகா வைதீகி..அவரோடா பொண்ணா இருந்துண்டு, நீ இப்படித் தோள் வரைக்கும் தெரியற மாதிரி கையே இல்லாத ரவிக்கை போடறது பொருத்தமாய் படலே…சரி, நீ போம்மா” என்றார் மானேஜர்.
மானேஜரை நினைத்துச் சிரித்தாள் சுகன்யா. மேலே மின்விசிறி ஓய்வே இன்றி ஒரே வட்டத்தில் ஆவேசமாய் சுற்றிக் கொண்டிருந்தது. எந்த லட்சியத்தைப் பிடிக்க இந்த ஆவேசம்? என்று கேட்டுக் கொண்டாள். இதுதான் சுகன்யா. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி இது மாதிரி நினைத்துக் கொண்டிருப்பாள். இந்த நாவல் முழுவதும் இப்படி சுகந்தா நினைப்பதைத் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார் ராம்.
அவள் கல்யாணத்தைப் பற்றிப் பேசும்போது சுகன்யா, ஒரு சராசரித் தாம்பத்திய வாழ்க்கையைப் பத்தி ஒரு இளம் பெண்ணுக்கு எழகின்ற எல்லா மாமூல் கற்பனைகளும் அவளுக்கு மட்டும் ஏனோ அருவருப்பாக இருக்கிறதாகச் சொல்கிறாள்.
தன்னுடன் இருக்கும் அத்தையைப் பார்த்துக் கேட்கிறாள். ‘அத்தே, நீ ஒரு வாழ்க்கையை வாழ முடியாமப் போயிட்டதுக்காக இன்னிக்கு வருத்தப்படறே, நானோ எங்கே அப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டி வந்துடுமோன்னு வருத்தப்படறேன் – இல்லே, பயப்படறேன்.’
இந்த நாவல்களில் மூன்று ஆண்களைச் சந்திக்கிறாள். சிவகுரு, ரகுராமன், நந்தகுமார். இந்த மூன்று பேர்களில் நந்தகுமார் என்பவனிடம் தன் மனத்தைத் திறக்கிறாள்.
சிவகுரு நளினம் என்கிற பத்திரிகையில் பணி புரிபவன். அவன் இந்திராவின் அண்ணன். அந்தப் பத்திரிகையின் சார்பாக அவன் சுகன்யாவைப் பேட்டி எடுக்க வருகிறான். அவள் பேட்டி கொடுக்கவில்லை. ஆனால் அவள் ஆத்திரத்தோடு பேசுவதையெல்லாம் குறிப்பிட்டு அந்தப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறான்.
நந்தகுமார் இந்தப் பத்திரிகையில் வெளிவந்த பேட்டி மூலம்தான் அவளைச் சந்திக்கிறான்
சம்பிரதாயமாக சுகந்தியைப் பெண் பார்க்க அவள் அப்பா ஏற்பாடு செய்கிறார். அன்றுதான் அவள் நந்தகுமார் கூப்பிட்ட சேம்பரோட ஆண்டு விழா கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டு போய் விடுகிறாள்.
நந்தகுமாரை அவளுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவள் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.
அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு நாற்காலியில் அமர்ந்தபோது தன்னை ஒரு புது சுகன்யாவாய் உணர்ந்தாள். நந்தகுமார் வரிசையாக எல்லோருக்கும் மாலை அணிவித்துக் கொண்டு வந்தான். சுகன்யாவின் கழுத்திலும் ஒரு மாலை நழுவியபோது கழுத்துப் பட்டையில் பரவுகிற அந்தக் குளிர்ந்த குறுகுறுப்பில்அவள் மட்டும் முதன் முதலில் ஒரு பழக்கப்படாத பரவசத்தை அனுபவித்து உடம்பைச் .சிலிர்த்துக் கொண்டாள்
அவளுடைய தந்தை சாகிற சமயத்தில் அவளிடம் நந்தகுமாரைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்.இனிஷியல் போட்டுக்கற யுகத்திலே கோத்திரம் என்னத்துக்கு என்கிறார்.
ஒரு துக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது நாவலாசிரியர், ஜனனம், கல்யாணம், மரணம் எல்லாமே வெறும் சடங்குகள்தான், மந்திரம் சொல்ல வைக்கிற சடங்குகள் தான், மந்திரம் சொல்ல வைக்கிற சடங்குகள். அட்சதை தெளிக்கிற சடங்குகள், சிரித்தோ அல்லது அழுதோ புரிந்துகொள்ளப் படுகிற சடங்குகள் என்கிறார்.
சுகன்யாவின் அப்பா இறந்தபோது, துக்கம் விசாரிக்க நந்தகோபால் வரவே இல்லை. அவன் ஊருக்குப் போய்விட்டான். அவனைப் பற்றி தகவலே இல்லை.
தொடர்பே இல்லாத நந்தகுமார் போன் செய்கிறான் சுகன்யாவிற்கு. பல யுகங்களுக்குப் பின் மீண்டும் நிகழ்வதுபோல அவளுக்குத் தோன்றியது.
நந்தகோபாலைப் பார்க்க மயிலாப்பூரில் உள்ள அவன் இருக்குமிடத்திற்குப் போகிறாள் சுகன்யா.
ஊருக்குச் சென்றவுடன், உடம்பு சரியில்லாமல் படுத்துக்கொண்டதை அவன் குறிப்பிடுகிறான்.
‘சுகன்யா, வெறும் அறிவின் பலத்தில் மட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டுப் போயிட முடியும்னு நான் நம்பிண்டுருந்த நம்பிக்கை விழுந்ததுடுத்து என்கிறான் நந்தகோபால்.
சுகன்யா அவனுடன் பழகும்போது அவனுடைய மாற்றாகத்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளை அறியாமல் அவனிடம் அவளுக்கு ஓர் ஈர்ப்பிருந்தது.
நந்தகுமார் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். அவள் கல்யாணம் என்கிற சடங்கில் நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்கிறாள். இது திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படுகிற குழப்பம். அதைத் தெளிவாகக் கொண்டு போகிறார் ராம்.
கடைசியில் முடிக்கும்போது ராம் இப்படிக் கூறுகிறார். ‘தொடல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவை சடங்குகள் அல்ல.’
வெளிவட்டங்கள் என்ற அவருடைய முதல் நாவல் படித்து முடித்தபோது திருப்தியான உணர்வு ஏற்பட்டது.