கரன் – இராமன் :
முன்கதை:
பரசுராமன், இராமனைப் பார்த்து: ‘இராமா! என்னிடம் இருக்கும் இந்த வில் மகாவிஷ்ணு அளித்தது. நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இதை வளைத்து நாணேற்றுவாயா?”- என்று சவால் விடுகிறார்.
இராமன் அந்த வில்லை எடுத்து நாணேற்றி, கணை செலுத்த, அது பரசுராமர் தவத்தை எல்லாம் வாரியெடுத்தது. பரசுராமன், இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.
இராமன் வருணனிடம் அந்த வில்லை சேமிக்கக் கொடுத்தான்.
இந்தச் சிறு நிகழ்வை அனைவரும் மறந்திருப்பர். இருவர் அதை மறக்கவில்லை. அது இராமனும், வருணனும்.
பின் கதை:
ஆரண்ய காண்டத்தில், சூர்ப்பனகை இராமனிடம் தன் காதலைக் கோரித் துடிக்கிறாள். இலக்குவனால் மூக்கறுபடுகிறாள். காட்டின் மன்னனான அரக்கன் கரனிடம் முறையிடுகிறாள். கரன் தன் பெரும் படையுடன் இராமனைத் தாக்க வருகிறான்.
இராமன் சீதையைக் குகை ஒன்றில் வைத்து, இலக்குவனை அவளுக்குப் பாதுகாப்பாக வைத்தான். அந்தப் பெரும் படைக்கு முன், இராமன் தனியனாக வில் பிடித்து சிங்கம் போல நின்றான். இந்த யுத்தத்தைக் காண – வானத்தில் தேவர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் இராமனின் வெற்றியை நம்பியிருந்தனர். ‘இந்தப் பெரும் படைக்கு முன் ஒரு தனிமனிதன் என்ன செய்ய முடியும்’ என்று தேவர்கள் சற்றே சந்தேகப்பட்டனர். ‘சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும்’ என்பதை மறந்தனர் போலும்.
போர் சமமாக நடந்து கொண்டிருந்தது.
கம்பர் சொல்கிறார்:
“கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்;
வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான்;
உள்ளம் உலைவுற்று, அமரர் ஓடினார் ஒளித்தார்;
வெள் எயிறு இதழ்ப் பிறழ, வீரனும் வெகுண்டான்.”
அதாவது, கற்ற வித்தையால், வஞ்சம் நிறைந்த மாயப்போர் செய்த கரன் இராமன் உருவை அம்பு மழையால் மறைத்தான். அதைக் கண்ட தேவர்கள் ஓடி ஒளிந்தனர். உதட்டைக் கடித்த இராமன் கோபங்கொண்டான் .
கம்பர் சொல்கிறார்:
‘முடிப்பென் இன்று, ஒரு மொய் கணையால்’ எனா,
தொடுத்து நின்று, உயர் தோள் உற வாங்கினான்;
பிடித்த திண் சிலை, பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட, கடிது இற்றதே’
இராமன் “நான் இப்பொழுது விடுக்கும் இந்த ஓர் அம்பினாலே – இந்தக் கரனை முடிப்பேன்” என்று மனதில் கருதினான். ஓர் அம்பை வில்லில் பூட்டி நாணை தோளையளாவும்படி வலுவாக இழுத்தான். ‘நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வர். ஆனால், தெய்வம் ஒன்று நினைக்க நடந்தது வேறு ஒன்று’ என்பது எவ்வளவு விசித்திரம்! இராமன் கையிலிருந்த வலிய வில்லானது – அகன்ற வானத்திலுண்டாகும் இடி முழக்கம் போன்ற ஓசையுண்டாகுமாறு விரைவிலே ஒடிந்தது.
கம்பர் இப்பொழுது வானில் இருந்த தேவர்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். இராமனின் வெற்றியைப் புகழ்ந்து பேசிக்கொண்டே யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் – இராமன் வில் ஒடிந்தது கண்டு நடுக்கமுற்றார்கள். அவர்கள் நடுங்கினதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இராமனுக்கு அருகில் வேறொரு வில் இல்லை. இது அவர்கள் அச்சத்தை உச்சத்திற்குச் கொண்டு சென்றது.
“இனி அரக்கன் வெற்றி கொள்வானோ? அய்யோ, எமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே. இனி இந்த அரக்கர்களால் நாம் படும் துயர் தொடருமே” – என்று கலங்கினர்.
களத்தில் – இராமன் தனது வில் முறிந்து, தான் தனியாக இருப்பது பற்றி மனத்தில் கருதவில்லை. தனது நீண்ட கையை பின் புறம் செல்லுமாறு நீட்டினான். வானத்தில் இருந்து புலம்பிக்கொண்டிருந்த தேவர்களில் வருண தேவனும் ஒருவன். இராமன் கைநீட்டியது கண்டவுடன் – புரிந்து கொண்டான். நம்மைத்தான் இராமன் குறிக்கிறான் என்று உணர்ந்தான். பரசுராமனின் வில்லை இராமன் தன்னிடம் கொடுத்து ‘இந்த வில்லை பாதுகாப்பாய்’ என்றது அவன் நினைவுக்கு வந்தது. அதைத்தான் இராமன் கேட்கிறான் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘காட்டில் மழை’ போல விரைந்து (வருணன் தான் மழைக்கு அதிபதி ஆயிற்றே) இராமன் கையில் அந்த வில்லைச் சேர்ப்பித்தான்.
பிறகு, காட்சிகள் எதிர்பார்த்தபடி நடந்தது. இராமன் கரனது தேரை அழித்தான். அவனது வலக்கரத்தை வெட்டினான். பின்னர் கழுத்தை வெட்டிக் கொன்றான். அதைக் கம்பர் எழுதும்போது உவமிக்கிறார்.
‘வலக்கரத்தைப்போல கழுத்தறுபட்டது’ என்றார். அதேசமயம் இராவணனது ‘வலக்கரத்தைப் போன்ற கரனின் கழுத்தறுபட்டது’ என்று இரண்டையும் இணைத்துப் பின்னிக் கவி புனைகிறார்.
யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!