வினோத் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் தரையில் அந்த போஸ்ட் கார்டு இருந்தது .
யாராக இருக்கும் ?
“ எனது மகள் வயிற்று பேரனுக்கு இரண்டு வயது முடிவடைகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு பெயர் சூட்டு விழா. கட்டாயம் வந்து இருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு – இளநகை ( தாத்தா)
அவ்வண்ணமே கோரும் – கருகுமணி ( அம்மா )
விலாசம்: 12, முதல் அவின்யூ, வளசரவாக்கம், சென்னை.
பிகு: உங்கள் நண்பர்களிடம் சொல்லவும்
வினோத்துக்கு தலை கால் புரியவில்லை
மனதில் உடனே ஃப்ளாஷ்பாக் மூன்று வருடங்கள் பின்னோக்கி ஓடியது.
தாழையூத்து ஒரு அழகிய செழுமையான பசுமை நிறைந்த கிராமம்.
என்ன ஒரு வீம்பு ? என்ன ஒரு வறட்டு ஜம்பம் ?
அந்த கருகுமணிக்குதான்
அழகு என்றால் அந்த மாதிரி அழகு .
நாலு பேரை பைத்தியமாக்கினாள்.
“நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ….”
“அய்ய மெல்ல நட மெல்ல நட மேனி ….”
“ நடையா இது நடையா ஒரு நாடகம் …..”
“ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ……”
இந்த பாடல்கள் பள்ளிக்கூட காலத்தில் மிக்க பிரபலம்.
எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னதான் அழகான பொண்ணுங்க இருந்தாலும், “தேவதை” “கனவு கன்னி” வகை முத்திரை பதிச்சு ஒருத்திதான் இருப்பாள். இதோட maths equation மத்திரம் புரிபடவே படாது. இன்றைய அளவில் பயங்கர வளர்ச்சி பெற்ற விஞ்ஞானத்தாலும் சால்வ் செய்ய முடியாத ரிடில் இது.
அந்த ஒன்னே ஒன்னு “ கனவு கன்னி தேவதை “ எங்க பள்ளிக்கு பக்கத்திலேயே உள்ள “ பெண்கள் மட்டும்” பள்ளியில் படித்தாள். பெயர் “கருகுமணி”. பெயருக்கு பொறுத்தமான நிறம் ஆனாலும் அழகு அழகு அப்படி ஒரு அழகு.
“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற பிரபலமான பாடல் வெளியாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே ,அந்த வரிகள்தான் நாலு விடலை பசங்க , அந்த பொண்ணை சைக்கிள் ஓட்டிக் கொண்டே ஸைட் அடிச்சு கொண்டே,பாடிய வரிகள். கவிபேரரசு வைரமுத்துவும் தன் சொந்த அனுபவத்தில்தான் அந்த வரிகளை எழுதி இருக்க வேண்டும்
வினோத் ,சாரதி , ஜோசஃப் , அலிகான் நாலு பேரும் நெருங்கிய நண்பர்கள்.
சாதி சமய வேறுபாடுகள் நெருங்கிய நட்பை நெருங்க முடியாதுங்கறத்துக்கு இவர்கள் ஒரு உதாரணம். அவரவர்கள் பண்டிகையை நாலு குடும்பமுமே சேர்ந்து கொண்டாடுவார்கள் . முதல் நாலு ராங்க் இந்த நாலு பேருக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும் .
நாலு பேரும் கருகுமணியை விரட்டி விரட்டி சுற்றி சுற்றி காதலித்தார்கள்.கருகுமணி மறவர் குலத்தை சேர்ந்தவள்.வீட்டில் கட்டுப்பாடுகள் மிக அதிகம்.
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதே பெரிய விஷயம்.அவள் அப்பா செல்லம் . அவருக்கு தன் பொண்ணு தப்பு செய்ய மாட்டாள்னு அசாத்திய நம்பிக்கை.
அந்த நாலு பேரும் தங்கள் காதலை அவளிடம் சொல்ல முடிவு எடுத்தார்கள் .
அவள் யாரை பிடித்திருக்கு என்று சொன்னவுடன் மற்ற மூவரும் விலகி விட வேண்டியது என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர் .
அவள் கல்லூளி மங்கியாச்சே ! அவ்வளவு சுலபமா சொல்லிடுவாளா?
ஒரு மாசம் இழுத்தடித்து “ எனக்கு உங்கள்லே ஒருத்தரை பிடிக்கும்.தெகிரியம் இருந்தா நாலு பேரும் சேர்ந்து வந்து என் அப்பாவிடம் சொல்லுங்க. நான் அப்போ யாரை பிடிச்சிருக்குன்னு சொல்றேன் . மத்த மூணு பேரும் உண்மையான நண்பர்களாக இருந்தால் விலகி விடனும்” .
இது சரியா பட்டாலும் , நாலு பேரும் மண்டை குழம்பி “ யாராக இருக்கும் “ என்று யோசித்து யோசித்து மூன்றாம் பிறை கமல் மாதிரி ஆகி விட்டார்கள் .
விடை தெரிந்தால் மூவருக்கு தூக்கம் போய் விடும். விடை தெரியலைன்னா , “ யாரு யாரு அந்த அதிர்ஷ்டசாலின்னு மனசு குழம்பி நெருங்கிய நட்பு சுக்கு நூறாக சிதறி விட வாய்ப்புகள் அதிகம்”.
அலிகான்தான் முதல் ஸ்டெப் எடுத்தான் “ ஒரு பொண்ணு நமக்கு சவால் விடறா. வெக்கமா இல்லை. வாங்கடா “ ன்னு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கருகுமணி வீட்டுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் .
கருகுமணி அவர்கள் வாசல் கேட்டுக்குள் நுழைவதை பார்த்து விட்டு பதட்டத்துடன் வெளியே ஓடி வந்து “ சும்மா விளையாட்டுக்கு சொன்னா இப்படியா திடு திப்னு வருவீங்க. அப்பாரு பாக்கறத்துக்குள்ளே அப்படியே திரும்பி போயிடுங்க “ ன்னு கை கூப்பி கெஞ்சினாள்.
உடனே மத்த மூணு பேரும் சத்தம் போடாமல் நகர்ந்து நழுவ பார்த்தார்கள்.
அலிகான் உடனே ருத்ர தாண்டவம் ஆடி விட்டான்.
“ இந்தப் பொண்ணு என்னடான்னா நம்மளை உசுப்பி விட்டுட்டு இப்ப பால் மாறரா.என்னமா சவால் விட்டா? நீங்க என்னடான்னா பம்மறீங்க பதுங்கறீங்க. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியாம நாம இங்கிருந்து நகர கூடாது.உங்கப்பாரை கூப்பிடுடி.”ன்னு பெரிசா கத்தினான்.
அதற்கு பின் நடந்த அசிங்கங்களை சுருக்கமாக சொல்லி விடுவது நல்லது. கருகுமணியின் அப்பா கருகுமணியை அடிச்சு நிமித்தி விட்டார். நாலு பேரும் அவரை தடுக்க போய் அவர்களும் வாங்கி கட்டி கொண்டார்கள்.அலிகான் ஆத்திரத்தில் பெரியவரை அடிக்க போக, கருகுமணி கண்ணாலேயே வேண்டாம் என்று கெஞ்சியதால் ஓங்கின கையை நிறுத்தி விட்டு மொத்தமாக எல்லா அடியையும் தானே வாங்கி கொண்டான்.
அதற்குள் சேதி போய் மத்த அப்பா அம்மாக்களும் வர ஊரே அல்லோல கல்லோல பட்டு விட்டது .
கருகுமணி படிப்பு நிறுத்தியாச்சு. அவமானம் தாங்க முடியாமல் நாலு பேரையும் சென்னைக்கு படிக்க அனுப்பியாகி விட்டது.
வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தாலும் அலிகான் தவிர மற்ற மூன்று நண்பர்களும் சென்னையில் வாரம் ஒரு முறை சந்தித்து
அந்த வார நடப்புகளை பரிமாறி கொள்வார்கள்.
அலிகான் எங்கே போனான் எங்கு தங்கி இருக்கிறான் என்று தெரியவே இல்லை.
ஒரு மாதத்தில் இடி மாதிரி ஒரு ப்ரோடோடைப் கடுதாசு அவங்க அவங்க வீட்டிலிருந்து மூவருக்கும் வந்தது. “கருகுமணி கர்ப்பமா இருக்காளாம். கேட்டால் யாருன்னு சொல்ல மாட்டேங்கறாளாம். நல்ல வேளை நீங்க எல்லாம் தப்பிச்சுட்டீங்க. அதனால் ஒட்டு மொத்த குடும்பமும் வேறு ஊருக்கு போயிட்டாங்க. அலிகான் உங்களோடயும் இல்லை இங்கேயும் இல்ல அப்ப அவன்தான் காரணமா இருக்கனும்.அவன் சங்காத்தமே வேண்டாம்னு ஒதுங்கிடுங்க”
உடனே மூனு பேரும் ஒருமித்தமாக
“ இப்பதானே தெரியறது அலிகானோட உண்மை சொருபம். அதான் அன்னிக்கு அப்படி ஆட்டம் போட்டான். நாம வேண்டாம் வேண்டாம்னு அவ்வளவு சொல்லியும் நம்ம எல்லாரையும் இதுல இழுத்து விட்டு நம்ம குடும்ப கௌரவத்தையே நாசம் பண்ணிட்டான்டா.அவ மேல விழுந்த அடியையும் தான் வாங்கின்டான்.”
ஃப்லாஷ்பாக்கிலிருந்து வெளியே வந்தவுடன் , வினோத் மற்ற இருவரையும் கான்டாக்ட் செய்து அந்த விழாவுக்கு செல்வது என்று முடிவு எடுத்தார்கள்.
ஆனாலும் ரெண்டு விஷயம் அவர்களுக்கு புரியவில்லை. ரெண்டு வருஷமா ஏன் பேர் வைக்கல;வினோத்துக்கு மத்திரம் ஏன் பத்திரிகை அனுப்பனும்.
“குழந்தைக்கு அப்பா யாருங்கற” க்யூரியாசிடியே அவர்கள் அந்த விழாவுக்கு சென்ற முதல் காரணம்.
மனதுக்குள் “ திரும்பவும் செகண்ட் டோஸ் ஆளை வெச்சு அடிப்பாரோ”ங்கற பயமும் இருந்தது .
அரை மணி முன்னதாகவே சென்று விட்டார்கள்.கருகுமணிதான் அவர்களை வரவேற்றாள்.அழகு இன்னமும் கூடியிருந்தது. மூவரின் மனதிலும் “ சே இந்த அழகை கோட்டை விட்டு விட்டோமே”ன்னு தோணியது.
“நீங்க எல்லாம் எம்மேல ரொம்ப கோபமா இருப்பீங்க, வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.பழசை மறந்துட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி “
மூவரும் சேர்ந்தார்போல் “ அதெல்லாம் நாங்க அப்பவே மறந்துட்டோம்”னு அப்பட்டமான பொய் சொன்னார்கள்.
“ அலிகானோட எங்களுக்கு காண்டாக்டே இல்லை. அதான் அவன் வரல்லை.”
“ பரவாயில்லை.வர வேண்டியவங்க வந்துட்டீங்களே.அது போறும் எனக்கு .”
சரியாக ஆறு மணிக்கு கருகுமணியின் அப்பா ஹாலுக்குள் நுழைந்தார்.எதுவுமே நடக்காதது போல சரளமாக அன்னியோன்யமாக பேசினார்.
அலிகானை பற்றி ஒரு கேள்வி இல்லை.
குழந்தையும் இன்னும் கண்ணில் காட்டவில்லை.
“பாவம். எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் தந்தை பேர் சொல்ல முடியாத குழந்தையை வளர்ப்பதற்கு. ஒரு வேளை நாங்கள் எப்படியாவது தேடி அழைத்து வந்து விடுவோம்கிற நம்பிக்கையா இருக்கும்.நாம்பளும் கொஞ்சம் சீரியஸா முயற்சி செஞ்சிருக்கலாம்.கடன்காரன் இப்படி பண்ணிட்டானே” என்று மூவரும் மனதுக்குள் நினைத்து முடிக்கவில்லை,அலிகான் குழந்தையின் கையை பிடித்து கொண்டு ஹாலில் நுழைந்தான்.
“ வாங்க மாப்பிள்ளை . நல்ல நேரம் போயிட போறது. குழந்தை காதில பேர் சொல்லலுங்க. கருகுமணிதான் உங்க எல்லார் முன்னிலையிலும் பேர் வெக்கனும்னு ஆசைப்பட்டாள்.இப்போதான் தோதா நேரம் கிடைச்சது.”
“ அப்பா நான் இந்த மூனு சீட்டில இவங்க மூனு பேரு எழுதி இருக்கேன்.எங்கள் பழைய நட்புக்கு அடையாளமா , குழந்தை எந்த சீட்டு எடுக்கறானோ அந்த சீட்டுல இருக்கிற பேர் உடைய நண்பன் குழந்தை காதில பேர் ஓதட்டும்.எல்லோர் காதிலும் விழற மாதிரி”
“ கருகுமணி உன் இஷ்டம் போல செய். உங்க மூனு பேருக்கும் சம்மதம்தானே?.
மூவரும் அசடு வழிய சிரித்தார்கள்.
கருகுமணிதான் குழந்தை எடுத்த சீட்டை பிரித்து படித்தாள் “ வினோத்”
அலிகான் குழந்தையை வினோத் மடியில் உட்கார வைத்து வினோத் காதில் ரகசியமாக என்ன பேர்
ஓத வேண்டும் என்று சொன்னான் .
வினோத் முகம் வெளுத்து தயங்கினான்.மற்ற ரெண்டு பேரும்
“கங்கிராட்ஸ். நம்ம நட்புக்கு அடையாளமா பேர் வைடா.”
குழந்தை காதில் “ வினோத்கான்” என்று ஓதினான்.
மனித நேயத்திற்கு மதம் ஒரு தடையே இல்லை .