குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
தோட்டம் போடலாமா !
நீயும் நானும் சேர்ந்து –
தோட்டம் போடலாமா !
செடியும் கொடியும் வளர்த்து –
உற்சாகம் கொள்ளலாமா !
வாசலிலே ஒரு வேப்பமரம் –
கொல்லையிலே ஒரு வாழை !
இடம் இருந்தால் ஒரு தென்னை –
இருந்தால் அது போல் இல்லை !
பார்த்து பார்த்து பூச்செடிகள் –
தொட்டியில் வளர்ப்போமா !
மல்லிகை, முல்லை, ரோஜா-
மலர்ச் செடிகள் வைப்போமா !
அவரை, வெண்டை, கத்தரி –
என்று செடிகள் நடுவோமா !
காய்கறி அனைத்தும் வீட்டில் –
பயிரிட்டே சுவைப்போமா !
பாத்திகள் கட்டி கீரை –
இடையிடையே வைப்போமா !
காய்கனி காய்க்கும் போது – அவற்றை
அனைவர்க்கும் கொடுப்போமா !
நீயும் நானும் சேர்ந்து –
தோட்டம் போடலாமா !
செடியும் கொடியும் வளர்த்து –
உற்சாகம் கொள்ளலாமா !
வள்ளுவர் தாத்தா !
வள்ளுவர் என்ற நம் தாத்தா –
வழங்கியதென்ன சொல் பாப்பா ?
திருக்குறள் என்ற பேரமுதம் –
தினமும் பருகிட வா வா வா !
அகர முதல எழுத்தெல்லாம் –
ஆதிபகவன் முதற்கொண்டு –
ஆயிரத்திற்கு மேல் திருக்குறளாம் !
அனைத்தும் நம் தமிழ் முத்துக்களாம் !
ஒவ்வொரு நாளும் ஒரு குரளை –
நாமும் நன்கு படித்திடுவோம் !
பக்கத்திலேயே பால் பாயசம் –
இருக்கிறதென்றால் விடுவோமா ?
அறத்தின் வழியே வாழ்ந்திடுவோம் !
பொருளின் பெருமை புரிந்திடுவோம் !
இன்பம் சேர்த்தே இருந்திடுவோம் !
இனிமையளித்து உயர்ந்திடுவோம் !
தமிழே எனக்கு உயிர் மூச்சு !
தாயைப்போல் தமிழ் ஆயாச்சு !
திருக்குறளை நான் போற்றிடுவேன் !
பெருமையுடனே வாழ்ந்திடுவேன் !
வள்ளுவர் என்ற நம் தாத்தா –
வழங்கியதென்ன சொல் பாப்பா ?
திருக்குறள் என்ற பேரமுதம் –
தினமும் பருகிட வா வா வா !
பாடல் வரிகளை காணொலியில் வழங்கினால் நன்றாக இருக்கும். அது அதிக வேலை எனில் Video Descல் பாடல் வரிகள் இருந்தால் நன்று
LikeLike