தோட்டத்துச் செடி பேசும்! கேட்டதுண்டோ? மெதுமெதுவாய்த்
தும்பி திரியும் காலை
மௌனம் கலைத்தபடி.
மலர் சொல்லும்:
(தாழையாம் பூமுடிச்சு மெட்டு)
துளும்பும் தேன் சிந்திடாம
சுகந்தமணம் நழுவிடாம
மடல்குவிந்து மொட்டரும்பா
இருளகலக் காத்திருந்தேன்!
உதயமுற அருணன் வந்தான்
இதழ்விரிய முறுவல் பூத்தேன்!
அணைத்துசுக கிரணம் தந்தான்!
மலரெனவே குலுங்கி நின்றேன்!
கண்ணிற்கு விருந்தாவேன்!
கமழும் என் மணம் முகர்ந்தால்
உள்ளம் உவகை கொள்ளத்
துள்ளும் காதலும் அரும்பும்!
இசைபாடி அலையும் வண்டு
பசியாரத் தேன் கொடுப்பேன்!
மகரந்தம் கொண்டு தந்தே
பிஞ்சுவிட வகையும் செய்யும் !
சோலைச்செடி சொன்னது:
(வானில் முழு மதியைக்கண்டேன் மெட்டு)
கொத்துகொத்தா போகன்வில்லா,
குலைகுலையாச் சரக்கொன்றைப்பூ!
செந்தாழை புதரில் மலர்ந்தால்
தாமரையோ குளத்தில் தனியா!
ஒரேமண்ணில் உருவானாலும்
ஒன்று போல் மற்றது இல்லை
செடிக்குச்செடி இலைமலர் காய்
வகைவகையாம்! விதவிதமாம்!
தன்னொத்த செடி எனிலோ தம்
தனித்தன்மை கெடாதுபேணி
நிறம் மணம் குணம் மாறாமல்தான்
செடிமரபு காத்து நிற்கும்!
உண்பதுவோ கூளம் எனினும் நிலைமாற்றி வாசமுமேற்றி
மனங்கவரும் வண்ணமலராய்
வழிபடவே நானும் தருவேன்!
கழனியிலே நெல்லாவேன் வயக்
காட்டினிலே காய் கிழங்காவேன்!
கொல்லையிலே கடலை துவரை
பந்தலிலே அவரை புடலை
தோட்டத்தில் மா பலா வாழை, தோப்பிலோ இளநீர் நுங்காய்
பசிபோக்கும் நல்லுணவாவேன்!
சுவைகூட்டும் திரவிய(மு)மாவேன்.
செரிவுசெய்ய வெற்றிலை பாக்கு
ஜுரத்திற்கு சுக்கும் மிளகும்
கபத்திற்கு திப்பிலி கிராம்பென
பிணிதீர்க்கும் மருந்துமாவேன்!
உடுத்தும் உடைக்குப்பருத்தி
இருக்கக்குடில் படுக்கவோர் பாய்
இசைக்க வேய்ங்குழல் வீணை
ஒளிதரவிளக்கு அனைத்துமீவேன்!
மரம் சொன்னது:
(கந்தன் திருநீறணிந்தால் மெட்டு)
குருவி, மரங் கொத்தி, காக்கை
குயில் கிளி கீரி அணில்
குரங்கோணான் பாம்பெல்லாம் கூடிவாழும் மாமரமாவேன்.
உழைத்துக் களைத்து வந்தோர்
இளைப்பாற நிழல்தருவேன்
பசிதீரப் பழங் கொடுப்பேன்!
இசையமுதம் குயில் வழங்கும்!
தேடிவரும் அனைத்துயிர்க்கும்
உணவளித்து உதவி செய்வேன்
வேர்தேடும் எந்தன் உணவைத்
தாய்பூமி பரிந்தூட்டுவாள்!
காற்றுந்தான் மாசடைந்தால்
கரிவாயு நான் உட்கொண்டு
தூயதாய் மாற்றி விடுவேன்
சுகசுவாசம் நீவிர் பெறவே!
மென்மேலும் மரங்கள் நட்டால்
மேதினி செழிக்க வளர்ந்து
கார்மேகம் கூட்டி வந்தே
கணிசமாய் மழை தருவேன்!
வெட்டி விறகாக்குவாயோ, அன்றி
விக்கிரகந்தான் செய்வாயோ
உமக்கே நான் ஆட்செய்வேன்
இயற்கையென்னை வகுத்தபடி!
ஆறறிவு உள்ளவர் போல்
ஆய்ந்தறிதல் எமக்கு இல்லை!
இன்னா செய்தவர்க்கும்
இனியசெய்தல் எங்கள் பணி!
நான்:
(தாழையாம் பூமுடிச்சு மெட்டு)
மண் தோண்டித் தேடிடினும்
மாவும் பார்க்க இயலுமோ?
காய்கிழங்கு தானியத்தில்
எங்கிருந்து சேர்ந்ததது?
ஆண்டாண்டாய் பயிர் செய்து
டன்டன்னாய் விளைத்த பின்னும்
உழுதமண்ணும் குறைவதில்லை
விந்தையிலும் விந்தையே!
சிறுவிதையுள் மறைந்திருக்கும்
மெத்தப்பெரும் ஆலமரம்!
அத்துவைத மாயைதானோ
ஆண்டவனின் ஜாலமோ!
தான்வளர்ந்த கொடி விலக்கி
தனிநிற்கும் முதிர்கனிகள் முழுமைநிலை போதிக்கும்!
மோட்சமொன்றே யாசிக்கும்!
இயற்கையது வகுத்தநெறி
வழுவாப்புல் லுயிர்கள் கண்டும்
தான் வாழும் முறை மாற்றார்,
மரபணுவை மாற்றுகின்றார்!
மரமே தான் குரு என்றால்
மனிதர் மதியார் என்றே
இறைவனையே மரத்தடியில்
குருவெனவே அமர்த்தினரோ?
கொள்வாரும் இல்லாமல்
கொட்டித்தான் கிடக்கின்றது
மெய்ஞான போத மது
மௌனமாய் மரத்தடியில்!
– ராம்சு
தமிழ்சுவை அழகான ஒன்று.. நன்றி
LikeLike
தமிழ் சுவை ரசிக்கத்தக்க ஒன்று.. நன்றி
LikeLike