இராஜாதித்தன் முடிவு
இராஜாதித்தன் முன்கதை:
சோழன் பராந்தகன், பாண்டியப் போர்க்களம் கண்டு வெற்றியுடன் இருக்கையில், வடதிசை அரசுகள் எதிரிகளாகிறது. பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் அந்த பகைகளைத் தடுக்கத் திட்டமிடுகிறான். பகை மேகங்கள் கருக்கத் தொடங்குகிறது. பராந்தகன் இளவரசர்களுடன் போர்த்திட்டம் குறித்து அளவளாவுகிறான். இனி நாம் தொடர்வோம்.
பராந்தகன் தொடர்ந்து பேசினான் :“இராஜாதித்தா! திருக்கோவலூரில் வைதும்பராயன் தங்கி இருக்கிறான். அவன் பல ஆண்டுகளாகவே நமக்குச் செலுத்த வேண்டிய திறைப் பணம் செலுத்தவில்லை. நீ திருக்கோவலூர் அருகே சென்று பாடி வீடு அமைத்துத் தங்கி இரு. அங்கிருந்தே வைதும்பன் மீது ஒரு கண் வைத்திரு. அங்குத் தங்கி இருக்கும்போது, சும்மாயிராமல் சிவன் கோயில் ஒன்றைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய். நீ அங்கே தங்கியிருப்பது, கோயில் திருப்பணிக்காக என்று காண்பவர்கள் நினைக்க வேண்டும். ஆனால், உன் கண்ணும் கருத்தும் கங்க நாட்டினின்றும் இராட்டிரகூடத்திலிருந்ததும் ஏதாவது செய்தி வருகிறதா என்று காண்பதிலும், வைதும்பனின் மனப்பாங்கை ஆராய்வதிலும் இருக்க வேண்டும். உடனே படைகளுடன் புறப்பட்டு விடு” என்று கட்டளையிட்டார் பராந்தகர்.
“மகிழ்ச்சி தந்தையே! அவ்வண்ணமே செய்வோம்”- என்று இராஜாதித்தன் புறப்பட்டான். புறப்படு முன், வீரமாதேவியை அரண்மணையில் உப்பரிகையில் சந்தித்தான்.
“வீரம்மா! மான்ய கேட நகரில் நான் வீரநடை போட்டு, கிருஷ்ணனை சிறைபிடித்து, உன்னையும் உன் கணவர் கோவிந்த வல்லவரையரையும் அரியணையில் அமர்த்தி, மீண்டும் என் கரங்களால் முடிசூட்டுவேன். அதைச் செய்யாமல், நான் சோழ நாட்டு மண்ணை மீண்டும் மிதிக்க மாட்டேன். இது திண்ணம். இது உறுதி. இது சத்தியம். என் போக்கை யார் தடுத்தாலும் தயங்கமாட்டேன்” -என்று உணர்ச்சிவசப்பட்டு வீர சபதம் செய்ததைக் கேட்டும் இராஜாதித்தன் விழிகளில் வீசிய ஒளியைக் கண்டும், வீரமாதேவி, உடலில் ரோமாஞ்சலி ஏற்பட மெய்மறந்து நின்றாள்.
“அண்ணா! இராஷ்டிரக்கூடப்படையை அவ்வளவு எளிதாக எடை போடலாகாது. ஐந்து வருடமுன் நடந்ததை மறந்துவிட்டாயா? அப்போது என் கணவர் கோவிந்தருடன் நானும் தஞ்சை வந்து தஞ்சமாகி நான்கு ஆண்டுகளாயிருந்தது. இராட்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் நோய்வாய்ப்பட்ட நேரத்தில், என் கணவர் கோவிந்தன் – பராந்தகனிடம் “மாமா! இது நல்ல சமயம். எனக்கு உதவுங்கள்” – என்று வேண்டினான். சோழர் படையுடன் அவர் புறப்பட்டு, இராட்டிரகூடப் பேரரசைத் தாக்கப் புறப்பட்டார். அண்ணா, நீ சோழ எல்லையைக் காக்கும் பணியிலிருந்ததால், இந்தப்படையெடுப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. பூதகன் – இராட்டிரகூடக் கூட்டுப் படைகள் சோழப்படையை வென்றன. இவர் தஞ்சைக்கு மீண்டும் வந்து சேர்ந்தார். மூன்றாம் கிருஷ்ணன் சோழனைப் பழி தீர்க்க நாளை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், பெரும் படையையும் சேர்க்கத்தொடங்கினான்.”- என்றாள். அவளது பெருமூச்சு அவளது கண்ணீரைச் சூடாக்கியது.
இராஜாதித்தன் சொன்னான்: “வீரம்மா! நீ வீணே கவலைப்படுகிறாய். நாமும் படையைப் பெருக்கியுள்ளோம். எனக்கு விடை கொடு “ என்றான்.
941-948: பராந்தகன் கணக்கில் இப்பொழுது கங்க, இராட்டிரக்கூட நாடுகள் முதன்மை பகைவர்களானர். சுற்றிவரும் பகை. இராஜாதித்தன் திருநாவலூரில் (இன்றைய திருநாம நல்லூர்) படையுடனிருந்ததான். அவனது படைத்தலைவன் வெள்ளங்குமரன் அருகில் முடியூரின் படையுடன் இருந்தான். பராந்தகன் இந்தப்படைகளின் எண்ணிக்கையை இரட்டித்தான். இராஜாதித்தன் தம்பி அரிஞ்சயனும் படையுடன் அருகில் அமர்த்தப்பட்டான்.
942: அரிஞ்சயனின் வீர மகன் சுந்தர சோழன் 20 வயது அடைந்திருந்தான். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியிருந்தது. அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். ‘ஆதித்திய கரிகாலன்’ என்று பெயரிட்டனர். பகைகள் புகைந்து கொண்டிருந்தது. பராந்தகன் சோழக்கூட்டணியை வலுப்படுத்த-கொடும்பாளூர் இளவரசனுக்குச் சோழ இளவரசி அநுபமாவை மணம் புரிந்து கொடுத்தான்.
949; கடைசியில் போர் வந்தே விட்டது.
தக்கோலம் – அரக்கோணத்துக்கு ஆறு கல் தொலைவில் இருக்கும் ஊர்.
இராட்டிடகூட சேனை, கங்க சேனை, மற்றும் வைதும்ப, வாண சேனைகள் கடல்போல தொண்டைநாட்டின் வட எல்லைக்கு அருகில் வந்தது. இராட்டிரகூடர்களின் படைகள் வட பெண்ணை ஆற்றைக் கடந்து நேரே காஞ்சிபுரத்தை நோக்கி வந்தன. அவர்களைத் தடுத்து நிறுத்த அரிஞ்சயனும் கொடும்பாளூர் இளவரசனும் படைகளுடன் செல்லும்பொழுது, கங்க நாட்டுப் பூதுகன் பின்புறமாக வந்து சுற்றி வளைத்தான். இராஜாதித்தன் சோழப்பெரும் படையுடன் தடுத்துப் போர் புரிந்தான். தக்கோலம் என்ற இடத்தில் எதிரிகள் கைகலந்தனர்.
கீழ்த் திசையில் செங்கதிரோனின் ஒளி மெல்லப் படரத் தொடங்கும்போது தக்கோலம் அருகே கடல் போன்று வந்த இரட்டர் படைகளைச் சோழ நாட்டுப் படைகள் தடுத்து நிறுத்தின. வீரர்களும், வீரர்களும் மோதினர். கேடயமும் கேடயமும் உராய்ந்தன. வேலோடு வேல் பொறி பறக்கப் பாய்ந்தன. கங்க நாட்டுப் பூதுகன் திறமையான திட்டமொன்றைத் தயாரித்திருந்தான். இரட்டர்களுடன் போர் நடந்து கொண்டிருக்கும் போது போர்க்களத்தை இருபுறமிருந்தும் தாக்கும் திட்டமிட்டிருந்தான். காஞ்சியை வைதும்பன் தலைமையில் படைகள் தாக்குவதென்பதும், பூதூகன் தக்கோலப் போர்க்களத்தில் மேற்குத் திசையில் பக்கவாட்டில் பாய்வது என்பதும் திட்டம்.
தக்கோலப் போர்க்களம் மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது. வெள்ளங்குமரனும், அரிஞ்சயனும் தனது போர்த் திறமைகள் எல்லாம் புலப்படுத்திப் போரிட்டும் சோழர் படைகள் ஆயிரக்கணக்கில் மாண்டன. ஆனால், ஒவ்வொரு சோழ வீரனும் எதிரிப் படையினர் இருவரையாவது மாய்த்து விட்டுத்தான் உயிரிழந்தனர். அரிஞ்சயனும் போரில் காயப்பட்டான் – எனினும் காயங்களுடன் தளராது போர் செய்தான். எதிரி படையின் எண்ணிக்கை சோழப்படையினரின் எண்ணிக்கையைப் போல் மும்மடங்காக இருக்கக் கூடுமென்று அன்று மாலை போர் முடிந்த பிறகு அரிஞ்சயனும் வெள்ளங்குமரனும் மதிப்பிட்டனர்.
போரேன்றால் அது போர். கடும் போர். எதிரிகள் தொகை பெரிதாக இருந்தாலும், சோழர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல், வீரசாகசம் செய்தார்கள். இராஜாதித்தனின் வீரம் எதிரிகளை நடுங்க வைத்தது – சோழப்படையை ஊக்குவித்தது. இராட்டிரகூடப் படைகள் சோர்வடைந்து, தளர்ந்தது. இராஜாதித்தன் சென்றவிடங்களெல்லாம் எதிரிகளின் தலைகள் பந்து போல உருண்டோடியன. மாலைக்குள் – வீரர்களின் தலைகள் மலையாகக் குவிந்தன. சோழ வெற்றி விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படலாயின. படைபலம் அதிகமாக இருந்தாலும், படைச் சேதம் இராட்டிரக் கூட்டணிக்கு மிக அதிகமாக இருந்தது. மூன்றாம் கிருஷ்ணன் – தோல்வியை ஒப்புக்கொண்டு, இராஜாதித்தனிடம் சமரசம் பேசலாம் என்று முடிவு செய்தான்.
கங்க மன்னன் பூதுகன் சொன்னான்: “மன்னா! இந்த இராஜாதித்தன் இருக்கும் வரை நாம் சோழரை வெல்வது அரிது. அவனை மட்டும் கொன்றுவிட்டால்- சோழர்கள் சிதறி ஓடுவர்” – என்றான்.
கிருஷ்ணன் “பூதுகா! கொக்கின் தலையில் வெண்ணை வைக்கச் சொல்லுகிறாய். ஆகிற காரியத்தைச் சொல்லு” என்றான்.
பூதுகன் “கிருஷ்ணா! எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. இன்று மாலை சூரியனஸ்தமித்த பிறகு, இராஜாதித்தன் தன் படை நிலமையைப் பார்க்க, தன் யானை மேல் செல்வான். அச்சமயம் அவனைத் தாக்கவேண்டும். நானும் என்னுடன் சில வீரர்களும், சோழ வீரர்களைப் போல மாறுவேடமிட்டு செல்வோம்” என்றான்.
கிருஷ்ணன் :”சரி.. செய்து பார். அது ஈடேறிவிட்டால் – சோழர் கதி அதோகதி. அது நடக்கவில்லை யென்றால் நாளை நான் இராஜாதித்தனுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்” – என்றான்.
மாலை வந்தது. அன்று யார் கழுத்தில், என்ன மாலையோ? இராஜாதித்தனுக்கு போர் வெற்றி தரும் ஆத்தி மாலையா? அல்லது இறுதி மாலையா?
பூதுகன் ஐந்து வீரர்களுடன் போர்க்களம் சென்றான். அவர்கள் சோழப் போர் வீரர்கள் போல மாறுவேடமிட்டிருந்தனர். சோழவீரர்கள் அங்கு விழுந்து கிடந்த காயமுற்ற சோழ வீரர்களைத் தூக்கிக் கோண்டு போயினர். அதை மேற்பார்வையயிட்டுக் கொண்டே, இராஜாதித்தன் யானையின் அம்பாரியில் வந்தான்.
‘இந்த இராட்டிரக்கடல் சேனை இன்று நடந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப்பின்.. நாளை ஓடிவிடவே வாய்ப்பு உள்ளது. அப்படி ஓடவில்லையென்றால் – நாளை அவர்களை நிர்மூலம் செய்து துரத்தி ‘மானிய கேடா’ வரையில் சென்று – ஆட்சியைக் கைப்பற்றி கோவிந்தனை அரசனாக்கி , வீரமாதேவியை மீண்டும் அங்கு மகாராணியாக்க வேண்டும்” – என்று எண்ணமிட்டான்.
அந்த இருட்டை பேய்களின் இராஜ்யமாக அடித்திருந்தது. காயப்பட்டு முனகிக்கொண்டிருந்த வீரர்கள் அந்த பயங்கரத்தை அதிகப்படுத்தியது. இராஜாதித்தன் வெற்றிப்பெருமிதத்துடன் யானை ஒன்றின் மீது அமர்ந்து போர்க்களத்தை வலம் வந்தான். உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் சோழ வீரர்களைத் தேடி அழைத்துச் செல்வது அவன் நோக்கமாக இருந்தது. பூதுகன் யானைக்கு வெகு அருகில் வந்தான். விஷ அம்புகளைப் பாய்ச்சினான். ஒரு அம்பு இராஜாதித்தன் மார்பைத் தைத்தது. சோழர்க் குலக்கொடி மண்ணிலே சாய்ந்தது! இராஜாதித்தன் யானைமேல் துஞ்சிய தேவரானான்! அந்த ஒரு நொடி, தமிழகத்தின் சரித்திரத்தை ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டது. பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவத் துடித்த சோழர் படை, தன் தலைவனை இழந்து, கண்ணீருடன், தோற்றோடினர்.
இனி தமிழக அரசியலில் என்ன ஆயிற்று? பொறுத்திருந்து பார்ப்போம்.