பத்து மோதிரம் பாய்
ரொம்ப வருஷமா மனதை உறுத்திக்கிட்டே இருக்கிற விஷயம். இப்ப கூட சொல்லாம போனா நான் செஞ்ச திருட்டுத் தனம் உலகுக்கே தெரியாம போயிடுமே என்ற உறுத்தல்தான். என் மனசுக்குள்ள இவ்வளவு நாளா அடச்சு வைத்திருந்த ரகசியத்தை இப்ப உடைத்து விட எண்ணினேன். இவன் இப்படித்தான் பீடிகை போடுவான், கடைசியில உப்பு சப்பே இருக்காது என தள்ளாம மேல படிங்க. காரமா இருக்கும்.
திருச்சியில் P U C முடிச்ச பின்னர் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில B. SC (chemistry) க்கு அப்பளிகேஷன் போட்டுவிட்டு காத்துக் கிடந்தேன். என் மார்க்குக்கு ஆள் அனுப்பி கூப்பிடாட்டியும் ஒரு கார்டில் என் நலத்தை விசாரித்து கூப்பிடுவார்கள் என்று எதிர் பார்த்திருந்தேன். ஒரு தகவலும் இல்லை. சரி, ஒரு எட்டு போய் பார்த்து விடலாம் என இரயிலைப் பிடிச்சு கல்லூரிக்கு சென்றேன். வாசலில் வரவேற்பே சரியில்லை. ஆபிஸ் ரூம் அடைவதற்குள் ஏகப்பட்ட தடங்கல். அங்கு ‘ நீ இதுக்கெலாம் இங்க சரிப்பட்டு வர மாட்ட, வேற இடம் பாரு தம்பி’ என்று சொல்லி விட்டார்கள். அப்பதான் எனக்கும் ஞானம் வந்தது. முன்னோர்கள் எல்லாம் தெரியாமையா St’ Joseph’s for slaves என சொல்லி இருப்பாங்க, நாம் என்ன அடிமையா என எண்ணி திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். பாவம் என் நண்பர் சுந்தர்தான் என்னோடு சேர்ந்து படிக்கும் பாக்கியத்தை இழந்தார்.
அடுத்த வாய்ப்பை அப்பொழுது இரண்டாவது இடத்தில் இருந்த ஜமால் முகமது கல்லூரிக்கு அளிக்க எண்ணி அங்கு சென்றேன். Jamal for jolly என்ற அடை பெயர் வேறு என்னை கூவி அழைத்தது. கல்லூரிக்குச் சென்றேன். எந்த தடங்கலும் இல்லாமல் ஆபிஸ் உள்ளே சென்றேன். சுற்றும் மற்றும் பார்த்து என்னை விட பார்க்க பாவமாக இருந்த ஒருவரிடம் சென்று கல்லூரியில் சேரும் என் விருப்பத்தை கூறினேன்.
அவர் ‘ என்னப்பா இப்ப வர்ர. அட்மிஷன் எல்லாம் முடிஞ்சிருச்சே. சரி உன் அப்ளிகேஷன் நம்பரைக் கொடு. வாய்ப்பிருந்தா சொல்றேன். பிரின்ஸ்பலை பார்’ என்றார்.
நான் தயங்கி ‘ சார் நான் இங்க அப்ளிகேஷன் போடலை” என்றேன்.
நல்ல வேளை அவர் கைக்கு எட்டும் தூரத்தில் டேபில் வெயிட் இல்லை. ஆனால் முகத்தில் கடுமையை காட்டி ‘ போ தம்பி, போயி அடுத்த வருஷம் அப்ளிகேஷன் போட்டுட்டு வா, பார்க்கலாம்’ என்றார்.
கதைகளில் படிக்கும் ‘மனமுடைந்து’ என்ற வார்த்தையின் அர்த்தம் அப் பொழுதுதான் தெரிந்தது. மனம் நிஜமாக உடைய வில்லை. ஆனால் உடைந்தது போன்ற உணர்வுடன் திருச்சி ஜங்ஷன் இரயில் நிலையம் வந்தமர்ந்தேன்.
அருகே ஒரு பெரியவர். கதை கேட்பதில் ஆர்வம் அதிகம் போலும் துருவி துருவி கேட்டார். நானும் அவர் மூலம் ஏதாவது ஒரு சிறு துரும்பாவது கிடைக்காதா என என் கதையைக் கூறினேன். இறுதியில் அவர் திமிங்கலம் நாளொன்றுக்கு 3 டன் உணவு சாப்பிடும், எறும்புக்கு சிறு துளி போதும். இரண்டுக்கும் படியளிக்கும் இறைவன் உனக்கும் ஏதாவது செய்வானப்பா என கூறி அவசரமாக இரயிலை நோக்கி சென்றார்.
அவர் என்ன சொல்லி சென்றார் என புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பொழுது என் நண்பன் பரிமளம் அங்கு வந்தான்.
அவன் நேஷனல் கல்லூரியில் சேர்ந்ததை கூறி அங்கு போய் பார்க்கலாம் என்றான். ‘ கிட்டாதாயின் வெட்டென மற’ என ஔவை சொன்னதை நான் மறந்தேன். ஜமால் மீதான என் மோகத்தை கூறினேன். ‘உடனே நீ போய் கல்லூரியில் பத்து மோதிரம் …..பாயைப் பார் அவர் ரொம்ப பேருக்கு சீட் வாங்கித் தராறாம்’எனக் கூறினான்.
இங்கு பாயைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும். அப்பொழுதே சற்று வயதானவர். இப்பொழுது சொர்க்கத்தில்தான் இருப்பார் என்னைப் போல எத்துனை பேரை பட்டதாரிகளாக்கி இருப்பார். அவர் மனசு கஷ்டப் பட கூடாதென்றுதான் அவர் பெயரைச் சொல்ல வில்லை.
கல்லூரி ஆரம்பித்த நாட்களில் நுழைந்த பாய் ஓரிரு ஆண்டுகளில் அதிகார மையத்தின் அருகே வந்து விட்டார். தொழில் என்னவோ பிரின்ஸ்பல் பியூன், ஆனால் HOD களே அவருக்கு சலாம் வைத்து சற்று ஒதுங்கிச் செல்வார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக் கொண்டார். யாரோ இடது கையில் மோதிரம் போட்டால் ராசி இல்லையெனக் கூறக் கேட்டு அவைகளை கழற்றி விரலுக்கு இரண்டாக வலது கையில் போட்டுக் கொண்டார். அவர் வலது கையை தூக்கி பேசும் மேனரிஸத்தை சிவாஜி கூட ஒரு படத்தில் காப்பியடித்திருப்பார். வெள்ளை சட்டை, வெள்ளை கைலி. எங்குள்ளார் என அவரைக் காட்டிக் கொடுக்கும் அவரது சென்ட். அந்த வாசனைதான் பிரின்ஸ்பலுக்கு பிடிக்குமாம்.
ஒருவழியாக அன்றே அவரைப் பார்த்து கண்களில் நீர் வராமல் என் கதையை சொல்லி முடித்தேன். அதிகார தோரனையில் ஆரம்பித்த பாய் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்து எனக்கு ஆறுதல் சொல்லளானார். எனக்கு சீட் கிடைத்த திருப்தி. இரண்டு கண்டிஷன்கள் போட்டார். முதல் கண்டிஷன் ஒரு வாரம் பிரின்ஸ்பல் கண்களில் படும்படி தினசரி காலை வந்து நிற்க வேண்டும். இளகிய மனசு காரரின் அனுதாபத்தை பெற என பின்னர் தெரிந்தது. அது ஈசி. நமக்கு வேறென்ன வேலை. இரண்டாவது கண்டிஷன் ஒரு இருபது ரூபாய் வரை செலவாகும் என்பதாகும்.( வருடம் 1968)
அப்பாவிடம் எப்படி சொல்வது, எப்படி கேட்பது. கேட்டேன். “ ஒழுங்கா படிச்சிருந்தா இந்த கஷ்டம் இல்லையே” என்றார். சரிதான். “P U C வச்சுக்கிட்டு எவன் வேலை கொடுப்பான்” என்றார் இதுவும் சரிதான். அடுத்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்து “ என்ன செய்றது, ஊர்ல இருந்த மாடுகளை மேய்க்க ஆள் கிடைக்காம கொடுத்தாச்சு” என்ற அப்பாவின் பஞ்ச் எனக்கு தேவையானதுதான்.
அடுத்த நாள் காலை பாய் வருவதற்கு முன் அவர் அமரும் இடத்தில் நான் நின்றேன்.
என்னிடத்தில் ஒரு அப்ளிகேஷன் கொடுத்து எழுதி வாங்கி தன் பையில் வைத்துக் கொண்டார். மறக்காமல் அப்ளிகேஷன் நம்பரை எழுதி வைத்துக் கொள்ள சொன்னார். நான் மனப்பாடம் செய்து கொண்டேன்.
தினசரி பிரின்ஸ்பல் வரும்பொழுது சலாம் வைக்கச் சொன்னார். அதையும் செய்தேன். வாக்குத் தவறாத பாய் ஒரு வாரம் கழித்து என்னிடம் “ நான உன்னை உள்ளே அனுப்பப் போகிறேன். நீ பிரின்ஸ்பலிடம் , எனக்கு இங்க படிக்க ஆசை என்று மட்டும் சொல். உன் நம்பர் கேட்பார், கொடு என்றார். அப்படியே நடந்தது. பிரின்ஸ்பல் தன் மேஜை மீதிருந்த ஒரு சிறு தாளில் என் நம்பரை எழுதி அட்மிட் என கையொப்பம் இட்டார். மணியடித்து பாயை அழைத்து அவர் கையில் கொடுத்தார்.
அடுத்து நடந்ததுதான் கிளைமேக்ஸ்.
பக்கத்தில் இருந்த ஆபிஸ் அறைக்குள் நுழைந்தார் பாய். சற்று அதிகார தொனியில் அங்கிருந்த பியூனிடம் அந்த நம்பருக்கான அப்ளிகேஷனை எடுத்து வர ஆணையிட்டார். ஆபிஸ் ரூம் தலை கீழானது. என் அப்ளிகேஷன் மட்டும் கிடைக்க வில்லை. அதுதான் பத்திரமாக பாயின் பாக்கெட்டில் இருந்ததே.
சில மணி நேரம் கழித்து அப்ளிகேஷன் குவியல்களைக்கிடையே நம் பாய் நுழைந்தார். வெற்றியோடு வெளி வரும் பொழுது அவர் கையில் என் அப்ளிகேஷன். “ ஒன்றுக்கும் லாயக்கில்லை என சத்தமிட்டுக் கொண்டே நான்கைந்து ரப்பர் ஸ்டாம்ப்களை அதன் மீது அவரே ஓங்கி ஓங்கி அடித்தார். மேனேஜரிடம் அதில் கையெழுத்து வாங்கினார்.
வெளியே திரும்பி யாரப்பா இந்த கேண்டிடேட், சீக்கிரம் பணத்தை போய் கட்டு என்றார்.