மங்கையர் உள்ளம்! பொங்கிடும் வெள்ளம்! – மீனாக்ஷி பாலகணேஷ்

          

அம்மா, இளவரசர் இன்று நமது வீட்டுவாசல் வழியாகச் செல்லப்போகிறார். நான் எப்படி எனது இன்றைய காலை வேலைகளைச் செய்ய முடியும்?

           என் தலையை எப்படிப் பின்னிக் கொள்வதென்று காட்டு; என்ன ஆடைகளை உடுத்திக் கொள்வதென்று கூறு!

           என்னை ஏன் வியப்போடு பார்க்கிறாய் அம்மா?

           அவர் ஒருமுறை கூட நான் நிற்கும்  ஜன்னலைத் தலைநிமிர்ந்து பார்க்கமாட்டார் என்று எனக்குத் தெரியும். கண்ணிமைக்கும் நேரத்தில் எனது காட்சியிலிருந்து அவர் விலகிச் சென்றுவிடுவார் என்றும் எனக்குத் தெரியும். தொலைவில் தேய்ந்தபடி அழுகையாக ஒலிக்கும் புல்லாங்குழலின் இசை மட்டுமே என்னை வந்தடையும்.

           ஆனால் இளவரசர் நமது வாசல் வழியாகச் செல்வார்; நானும் எனது அருமையான அணிமணிகளை அந்த நேரத்திற்காகவே புனைந்து கொள்வேன்.

           ஓ, அம்மா, இளவரசர் நம் வாசல் வழியாகச் சென்றுவிட்டார். காலைச்சூரியன் அவருடைய தேரிலிருந்து மின்னினான்.

           நான் எனது முகத்திரையை விலக்கினேன். எனது கழுத்திலிருந்த மாணிக்கப் பதக்கத்தைப் பிடுங்கியெடுத்து அவர் செல்லும் வழியில் வீசினேன்.

           என்னை ஏன் வியப்போடு பார்க்கிறாய், அம்மா?

           என்னுடைய பதக்கத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது எனக்குத்  தெரியும். அது அவருடைய தேர்ச்சக்கரங்களில் அரைபட்டுப் பொடியாகிப் புழுதியில் சிவப்புநிறத்தைப் பரப்பிக்கொண்டு சென்றது. என்னுடையது என்ன பரிசு, யாருக்காக என்று ஒருவருக்கும் தெரியாது.

           ஆனால், இளவரசர் நம் வாசல் வழியாகச் சென்றார்; நானும் எனது மார்பிலணிந்த அணிகலனை அவர்  சென்ற பாதை முன்பு வீசினேன்.

 (தாகூர்: தோட்டக்காரன்: பாடல்-7)

                                           00000

           காலந்தோறும் கவிதைகள்- கன்னிப்பெண்களின் ஆசைக்கனவுகளின் வெளிப்பாடுகள்! நிறைவேறாத ஆசைகள்; ஆனால் அந்த அழகனான இளவரசனைப் பார்ப்பதில், அவனுக்குத் தன் விலையுயர்ந்த அணிமணிகளைக் காணிக்கை தருவதில் தன் காதலுக்கு வடிகால் தேடும் இளமங்கை.

           வியப்போடு மகளைப் பார்க்கும் தாய் தனது இளமைப்பருவத்தையும் அப்போது நடந்த நிகழ்வுகளையும் எண்ணிப் பார்க்கிறாளோ என்று சிந்தித்தபோது நமது முத்தொள்ளாயிரப்பாடல் ஒன்று நினைவில் இடறியது.

           கொற்கையில் ஒரு தெருவில் பாண்டியன் உலா வருகிறான். ஒருபெண் அவனைக் கண்டு தொழுகிறாள்; காதலும் கொண்டுவிட்டாள். அதன் காரணமாகத் தோள்வளைகள் கழன்றுவிடும்படிக்கு மெலிந்தும் விட்டாளாம்! “கொற்கையிலுள்ள மக்களைக் காத்து நீதி செலுத்துபவன் அவனே இப்போது என்னுடைய இந்தக் கைவளை, தோள்வளை இவற்றோடு தோளின் அழகையும் திருடிக்கொண்டுவிட்டான். கள்வனும் காவலனும் ஒருவனே ஆக இருக்கும்போது யாரிடத்தில் நான் போய் முறையிடுவது?” என்று வருந்துகிறாள் அம்மங்கை!

           வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால்த்

           தொழுதேனைத் தோள்நலமும் கொண்டான்-  இமிழ்திரைக்

           கார்க்கடல்க் கொற்கையார் காவலனும் தானேயால்

           யார்க் கிடுகோ பூசல்.

                                            (முத்தொள்ளாயிரம்-36)

           நுட்பமான காதல் உணர்வுகளின் வண்ணச்சித்திரங்கள் சங்ககாலத்து முத்தொள்ளாயிரப் பாடல்கள்! (கி.பி. 2 – 5ம் நூற்றாண்டா அதற்கும் முன்பா?) இங்கும் தாகூரின் இளமங்கைபோல ஆண்மைமிக்க அழகனான அரசனிடம் உள்ளம் பறிகொடுத்த இளம்பெண். காதல் நிறைவேறாது என அறிந்தும் அவள் தவிக்கும் தவிப்பு…… பெண்ணுள்ளத்தின் மென்மையை அதில் முகையவிழும் மலராக மலரும் காதல் அனுபவத்தைச் சுவையாக எடுத்துக்கூறி அரசனின் நலத்தை ஏற்றிக்கூற புலவர் கையாண்ட உத்தியா? எப்படியானால் என்ன? 20-ம் நூற்றாண்டுக் கவிஞரான தாகூரும் பண்டைச் சங்கப்புலவரின் கருத்துப்போலவே தமது பாடலையும் அமைத்ததுதான் பேராச்சரியம்!

                                                     00000

           இளமைநலம் வாய்ந்த மங்கை நல்லாள். குன்றின் உச்சியில் உள்ள தனது வீட்டில் தன்னந்தனியளாக அமர்ந்து தறியில் நாள்முழுவதும் காணும் காட்சிகளை நெய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்கொரு சாபம் உண்டு. சாளரத்திற்கு முதுகைக்காட்டிய வண்ணம் அமர்ந்துள்ளவள் சாளரத்தின் வெளியேயான பரபரப்பான தெருவின் காட்சிகளை நேராகக் காணக்கூடாது. தெருவின் காட்சிகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு நிலைக்கண்ணாடி அவள் முன்பாக உள்ளது. அதில் மட்டுமே அவள் நிழலாக அந்தக் காட்சிகளைக் காணலாம்.

           ஒருநாள்….

           ஆண்மை நிறைந்த அழகனான ஒரு பிரபு கம்பீரமாகத் தன் குதிரைமீது ஆரோகணித்து அத்தெருவில் செல்கிறான். இவளுடைய சாளரத்தையும் கடந்து செல்பவனைக் கண்ணாடியில் கண்டவள் தன் உள்ளம் படபடக்க, நெய்வதனை நிறுத்திவிட்டுத் தன் நிலை மறந்து திரும்பிச் சாளரம் வழியே பார்க்கிறாள். அவ்வளவில் கண்ணாடி விரிசல் காண்கிறது.            தன்மீதான சாபம் பலித்துவிட்டது; தன் இறுதி வந்துவிட்டது என அறிந்தவள் தனது வீட்டை விட்டோடிச்சென்று நதிக்கரையை அடைகிறாள்; ஒரு படகில் தன் பெயரை எழுதி வைத்து, அதில் படுத்து ‘கேம்லாட்’ (Camelot) எனும் நகரை நோக்கி அப்படகில் மிதக்கிறாள். அரண்மனையை அடையுமுன் இறந்தும் விடுகிறாள். பிரபுக்களும் சீமாட்டிகளும் வந்து அவளைக் காண்கின்றனர். ஸர் லான்செலாட் (Sir Lancelot) என்பவன் (இவனைத்தான் அவள் தன் கண்ணாடியில் கண்டு அவனழகை ரசித்தது) ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்,’ என்கிறான். இறந்தபின் அவளுக்குக் கிட்டும் புகழாரம்!                                   

           இது லார்ட் டென்னிஸன் எனும் 19ம் நூற்றாண்டு ஆங்கிலேயக் கவிஞர் ‘ஷாலட்டின் மங்கைநல்லாள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள அருமையானதொரு கவிதை. நீண்டதொரு கவிதையின் சில பகுதிகளைக் கவிதையின் சுவைக்காகக் கொடுத்துள்ளேன்.

                                           ——————–

           The Lady of Shalott  (1842)        BY ALFRED, LORD TENNYSON

 

           Gazing where the lilies blow

           Round an island there below,

                     The island of Shalott.

           Four gray walls, and four gray towers,

           Overlook a space of flowers,

           And the silent isle imbowers

                     The Lady of Shalott.

           There she weaves by night and day

           A magic web with colours gay.

           She has heard a whisper say,

           A curse is on her if she stay

                        To look down to Camelot.

           She knows not what the curse may be,

           And so she weaveth steadily,

           And little other care hath she,

                      The Lady of Shalott.

                                ————–

           As he rode down to Camelot.

           From the bank and from the river

           He flash’d into the crystal mirror,

           “Tirra lirra,” by the river

                     Sang Sir Lancelot.

           She left the web, she left the loom,

           She made three paces thro’ the room,

           She saw the water-lily bloom,

           She saw the helmet and the plume,

                     She look’d down to Camelot.

           Out flew the web and floated wide;

           The mirror crack’d from side to side;

           “The curse is come upon me,” cried

                     The Lady of Shalott.

                                ——–

                     “Who is this? And what is here?”

                     And in the lighted palace near

                     Died the sound of royal cheer;

                     And they crossed themselves for fear,

                                All the Knights at Camelot;

                     But Lancelot mused a little space

                     He said, “She has a lovely face;

                     God in his mercy lend her grace,

                                The Lady of Shalott.”

           அருமையான இக்கவிதை வாழ்வில் சில கட்டங்களை உருவகிக்கிறது (Metaphor) என்பார்கள். நாம் இதை ஒரு கதையாகக் கண்டால், ஒரு அழகிய பெண்ணின் அற்பமான ஆசைக்கு அவள் கொடுக்கும் விலை இதுவா என அதிர்ந்துவிடுகிறோம். (வேறொரு சமயம் இதைப்பற்றி விவாதிக்கலாம்). இங்கு இதைக் கூறியது, ஆங்கிலக் கவிஞரும் ஒரு அழகான பெண்ணின், பெண்மைக்கே உரிய ஆசை நிராசையானதை விவரித்துள்ள இசைவை வியக்கத்தான்!

           பெண் உள்ளம் என்பது அழகானதொரு மலர். சின்னச்சின்ன ஆசைகளில் அது மெல்லமெல்ல மலரத் தொடங்குகின்றது. செடிகளில் பூக்கும் எல்லா மலர்களுமா பெண்கள் தலைகளிலும் ஆண்டவன் மார்பிலும், பூச்சாடிகளிலும் மிளிர்கின்றன? வாடி உதிர்பவை எத்தனை எத்தனை, பூச்சிகளால் துளைக்கப்படுபவை பல, இன்னும் மொட்டாகவே கருகி உதிர்பவை சில. உலகின் பல மூலைகளிலிருந்தும் பெண்ணுள்ளத்தின் மென்மையான ஒரு பக்கத்தை அவர்கள் உள்ளங்களில் பூக்கும் ஆசையால் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன இந்த அற்புதக் கவிதைகள்.

           சிந்திப்போம்; புரிந்து கொள்வோம். ரசிப்போம்; கருணையோடு கொண்டாடுவோம். இந்த மென்மையான உள்ளங்களைக் கவிஞர்கள் பெருமைப்படுத்தியதனைத்தான் இங்கு கண்டோம்!

                                     00000000000

          

 

One response to “மங்கையர் உள்ளம்! பொங்கிடும் வெள்ளம்! – மீனாக்ஷி பாலகணேஷ்

  1. மங்கையர் உள்ளத்தில் வெள்ளமாகப் பொங்கிடும் மென்மையான காதல் உணர்வானது, மொழி / இனம் / தேசம் மட்டுமன்றி, காலகட்டங்களிலும் மாற்றங்களற்றுப்
    பொங்கிப் பிரவகித்து வெளிப்படும் தன்மையை , மிகவும் பொருத்தமான கவிதைகளைத் தேர்வு செய்து விளக்கியிருக்கிறார்கள் திருமதி மீனாட்சி பாலகணேஷ் . எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.