“என்னங்க, நம்ம பொண்ணு ஆசைப்பட்டுட்டா, நாமதான் உடனடியா பெங்களூரு வரை போய், அந்தப் பையனோட அப்பா, அம்மாவைப் பார்த்துவிட்டு வரணும், “ இதை மூன்றாம் முறை சொன்னாள்விமலா தன கணவர் சந்திரசேகரிடம்.
“ம்….. திரும்பித் திரும்பி இதே பாட்ட பாடாத, போலாம்.. பெங்களூரு ரயில் டிக்கட் கிடைப்பது என்ன அவ்வளவு லேசுன்னு நினைச்சயா ? அது ரொம்ப கஷ்டம்… என்னால பஸ் பிடிச்செல்லாம் போக முடியாது , ஆமாம் சொல்லிட்டேன்….. “ என்றார் சந்திரசேகர்.
“சரிங்க…. நான் ஞாபகப்படுத்தினேன் அவ்வளவுதான்…”. என்றாள் விமலா.
ஒரே மகள் பூரணி, செல்லமாக வளர்க்கப்பட்டவள். எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. அவள் பெங்களூரில் ஐ.பி.எம் இல் வேலை பார்க்கிறாள். அவள், அவளோடு வேலை பார்க்கும் நரேந்திரனைக் காதலிப்பதாக இவர்களுக்கு மறைக்காமல் தெரியப்படுத்தி இருந்தாள். இவர்களையும் பெங்களூரு வரை வந்து அவன் பெற்றோர்களை வந்து மீட் பண்ணும்படி ரெண்டு முறை ஃபோனில் ஏற்கனவே சொல்லி இருந்தாள்.
அன்றிலிருந்து விமலாவுக்கு ஒரே பரபரப்பு. சந்திரசேகர் மிகவும் நிதானம். அதனால்தான் விமலா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.
ஒரு வழியாக அடுத்த வாரம் சனிக்கிழமை காலை சதாப்தியில் டிக்கட் புக் செய்து விட்டார். விமலாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பூரணி ஆசைப்பட்டு விட்டாள். அவர்களும் நல்ல வசதியானவர்கள்தான். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நரேந்திரன் தான் மூத்தவன். சின்னவன் அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கிறான். நரேந்திரனின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகின்றனர். அப்பாவிற்கு இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீசும், அம்மாவிற்கு நான்கு வருடங்கள் சர்வீஸ் இருப்பதாக பூரணி முன்பே தெரிவித்திருந்தாள். சந்திரசேகர் வாட்சப்பில் அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்.
விமலா, “இன்னும் ரெண்டு நாட்கள்தான் இருக்கு, ஏதாவது நல்ல ஸ்வீட் செய்து கொண்டு போகணும்னு” சொல்லி, தன் கணவரையும் உட்காரவிடாமல், ஏதாவது வாங்கி வரச் சொல்லி வெளியில் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
சனிக்கிழமையும் வந்தது. ஊபர் புக் பண்ணி, சென்ட்ரல் வந்து சேர்ந்தார்கள். ட்ரெயினில் ஏறி உட்கார்ந்ததுமே, விமலா தொண தொணவென்று பேச ஆரம்பித்தாள். ஏங்க, …. என்னதான் காதல் கல்யாணம் என்றாலும் நாம பெண்ணைப் பெற்றவர்கள். நகை, நட்டு, பணம்னு நிறைய எதிர்பார்ப்பாங்களோ,! இருக்காது, நம்ம பூரணியும் நல்ல படிச்சு, கை நிறைய சம்பாதிக்கறா, இந்த காலத்தில யாரும் அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்க… …. இப்படி விடாமல் பேசிக் கொண்டே போனாள் விமலா.
சந்திரசேகருக்கு சலிப்பாக வந்தது. “கொஞ்ச நேரம் பேசாம வாயேன். என்ன கேட்டாலும் முடிஞ்சா செய்யப் போறோம்… நாம இப்பப் போறது, அதுக்காக இல்ல, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள், நல்ல குணமுள்ளவர்களா, நம்ம பூரணியை அன்பா நடத்துவாங்களா என்பதை தெரிந்து கொள்ளத்தான். கண்டோன்மெண்டில் இறங்கனும். அதுவரை வாயை மூடிக் கொண்டு வா…” என்று சற்றே உரத்த குரலில் சொல்லவே, விமலாவிற்கு சப்பென்றாகி விட்டது.
ம்…. பழைய நினைவுகளை அவள் மனம் அசை போட்டது. அவள் கல்லூரியில் மேல் படிப்பு முடித்துவிட்டு , எல்.ஐ.சி யில் நல்ல வேலை கிடைத்தவுடன் அவள் உடனே வேலையில் சேர சென்னைக்கு கிளம்பினாள். அவள் அப்பா அவளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். அவள் பிறந்து வளர்ந்தது திருச்சியில். வேலைக்காக சென்னை சென்று ஹாஸ்டலில் தங்கினாள். மவுன்ட் ரோட் வரை பஸ்சில் போய் வருவாள். அப்போதுதான் அவளுக்கு நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அவன் இவள் ஆபீசிற்கு மும்பையிலிருந்து மாற்றல் வாங்கி வந்து சேர்ந்தான்.
எல்லோருடனும் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகக் கூடியவன். அவனைப் பார்த்தால், பார்த்த உடனே பிடித்துப் போய் விடும். அப்படி ஒரு முகராசி. இவன் நல்லவன், யாரையும் ஏமாற்ற மாட்டான், என்பது மாதிரி…. விமலாவிற்கு அவனைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.
இருவரும் ஒரே டிபார்ட்மெண்டில் வேலை செய்தனர். ஒரே ரேங்கும் கூட. நல்ல நட்பும், புரிதலும் சிறிது சிறிதாக காதலாய் மாறியது. ஆறு மாதங்கள் சென்னையில் வேலை செய்யும்போது நாராயணனின் நட்பும், காதலும் அவளை திக்குமுக்காட வைத்தது.
அப்போதுதான் ஒரு நாள் திடீரென்று அவள் அப்பா ஃபோன் செய்து அவளை திருச்சி வரச் சொன்னார். நாராயணனிடம், அவள் மூன்று நாட்கள் திருச்சி வரை சென்று வருவதாக சொன்னாள் அவள் திருச்சி போய் இறங்கிய அன்றே பெண் பார்க்கும் படலம். அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். பையன் எம்.பி.ஏ. படித்து விட்டு மும்பையில் வேலை செய்வதாக சொன்னார்கள்.
பையனும் விமலாவிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு ஓகே சொன்னான். உடனே அவன் பெற்றோர்கள் பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொண்டு ஒரே மாதத்தில் திருமணத்தை நிச்சயித்தார்கள். விமலாவால் தன பெற்றோரிடம் மறுத்து ஏதும் பேச முடியவில்லை. மெளனமாக எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தாள். அவள் காதலையும் அவள் அப்பாவிடம் சொல்ல முடியாது, ஏனென்றால், நாராயணன் வேறு ஜாதி.
நிச்சயம் தன காதல் கைகூடாது என்று தெரிந்தவுடன் அவளுக்கு திருமணத்திற்கு சம்மதம் தருவதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. அப்படித்தான் அவளுக்கு சந்திரசேகருடன் திருமணம் நடந்தது. அது நடந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டது. பூரணிக்கு வயது இப்போது இருபத்து ஐந்து. அவளுக்காவது இந்த காதல் திருமணம் கை கூடவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள் விமலா.
சட்டென்று நினைவுலகத்துக்கு வந்தாள் விமலா. வண்டி கிருஷ்ணராஜபுரம் தாண்டி விட்டது. இருவரும் கண்டோன்மெண்டில் இறங்கத் தயாரானார்கள். அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஸ்டேஷன் வரவே, இருவரும் இறங்கி பூரணியைத் தொடர்பு கொண்டார்கள். அவளும் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர்களை வரச் சொன்னாள்.இருவரும் வெளியே வந்தனர். பூரணி டொம்லூரில் ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் எடுத்து தங்கியிருந்தாள். ஒரு மாதம் முன்புதான் கார் வாங்கியிருந்தாள். இருவரும் காரில் ஏறி டொம்லூர் வந்து சேர்ந்தனர். பூரணிதான் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா, இப்போது மணி 11 ஆகிறது. நாம போய் குளிச்சு ரெடியாகி, பக்கத்துல இருக்கற ஹோட்டல் போய் லஞ்ச் சாப்பிட்டு விட்டு மதியம் மூணு மணிக்கு நரேன் வீட்டுக்கு நான் உங்கள் கூட்டிட்டு போறேன். ஏற்கனவே நான் அவர்களிடம் இதைப் பத்தி சொல்லிவிட்டேன் “ என்றாள்.
விமலாவிற்கு ஆச்சர்யம். ஒரே பெண் என்று இவளை நாம் பொத்தி பொத்தி வளர்த்தோமே, இப்போ இவ என்னடான்னா பெரிய மனுஷி ஆகி என்னமா முடிவெடுக்கறா என்று நினைத்தாள்.
பூரணி காரைப் பார்க் செய்துவிட்டு, லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு அழைத்துக் கொண்டு போனாள். அழகான, நேர்த்தியாக, வசதியாகக் கட்டப்பட்ட சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். மிக அழகாக வைத்திருந்தாள் பூரணி. சந்திரசேகருக்கும் நம்ப முடியவில்லை. இவளை சிறிய பெண் என்று நினைத்தோமே, எவ்வளவு, இண்டிபென்டென்ட்டா, பொறுப்பா இருக்கா என்று ஆச்சர்யப்பட்டார்.
இருவரும் சீக்கிரமே குளித்துவிட்டு ரெடியாகினர். பூரணி சிறிது நேரம் கழித்து கிளம்பலாம் என்றாள். எல்லோரும் சிறிது நேரம் பேசிவிட்டு, ஒரு மணிக்குக் கிளம்பினர். விமலா அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டிய எல்லாவற்றையும் மறுபடியும் செக் பண்ணி ஒரு பையில் அழகாக எடுத்து வைத்தாள். மூவரும் கிளம்பி அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். நிதானமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினர். அவர்கள் திப்பசந்திராவில் இருப்பதாக பூரணி சொன்னாள்.
பெங்களூரு ட்ராஃபிக்கில் பூரணி மிக லாவகமாய் கார் ஊட்டியதை பார்த்து விமலா வியந்து போனாள். அவளுக்கு பெருமையாக இருந்தது.
மிகச் சரியாக 2.55 க்கு பூரணி திப்பசந்திராவில் அவர்கள் வீட்டிற்கு முன் காரை பார்க் செய்துவிடு காலிங் பெல்லை அழுத்தினாள் பூரணி.
இவர்களும் மெதுவாக பூரணி பின் சென்றார்கள்.கதவு உடனே திறந்தது. “வாங்க, வாங்க உங்களுக்காகத்தான் வெயிட் பண்றோம் என்ற கணீர் குரலில் நரேனின் அப்பா இவர்களை வரவேற்றார்.
எஸ் அங்கிள்… என்று சிரித்தவாறே பூரணி அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அந்தக் குரலைக் கேட்டவுடன் விமலாவிற்கு தூக்கிவாரிப் போட்டது. ஆம்… யாரை மறக்க முடியாமல் மனதிற்குள் வைத்துப் பூட்டியிருந்தாளோ, அவரின் குரல்….. ஆம்.. நாராயணன்…. ஆவலுடன் ஆறே மாதங்கள் பழகிய நாராயணன்….. அவன் மகனா இந்த நரேந்திரன்…… விமலா அப்படியே சிலையாகி ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
“
Nice story. highly improbable ,but some kind of miracle that everyone hopes for but are shy to admit.
LikeLike