வெடிப்போசை – ந பானுமதி

Where were you on 9/11' is code for so much more

சுவற்றில் தொங்கிய இரும்பு வளையங்களில் கைகளும் கால்களும் பிணைக்கப்படிருந்தன. முழு உடலிலும் இரும்பு அங்கி இறுக்கமாகப் போர்த்தப்பட்டிருந்தது. உடலின் ஒரு பகுதியையும் அசைக்க முடியவில்லை. முகத்தில் அவ்வப்போது தீக்கதிர்கள் போல் சுடும் ஒளிக்கதிர்கள் பீய்ச்சப்பட்டன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக ‘கே’ இந்த நிலையில் இருக்கிறாள்.

’கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்று கூவ நினைத்தாலும் கழுத்தைப் பற்றியுள்ள கவசம் மூச்சு விடுவதைக்கூட கடினமாக்கியுள்ளது.
‘இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு விசாரணையுமின்றி இரகசியமாகக் கொன்று விடுவார்களோ? என் தேசம், என் அதிபர் எங்கே போய்விட்டார்கள்? அவர்கள் என்னைக் கை விட்டு விடுவார்களா என்ன? நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்தத் தூதரகத்தின் உள்ளே சிறை வைக்கப்பட்டிருந்த ‘ஏ’ யை எப்படிக் காப்பாற்றி என் நாட்டிற்குத் தப்புவித்தேன். கொரில்லா தாக்குதலில் இரு காவலர்களைக் கொன்று, மூவரை வேதிப் பொருளால் மயக்கமடையவைத்து, அந்த முட்டாள் ‘ஏ’ யை என்னை நம்ப வைத்து எத்தனை துணிகரமாக என்னுடைய 22 வயதில் செய்திருக்கிறேன். என் ஸ்விஸ் கணக்கில் இதற்காக மில்லியன் டாலர்கள் கொடுத்த அதிபருக்கு நான் இப்படி மாட்டிக் கொண்டிருப்பது தெரியாதா என்ன?’

இருவர் உள்ளே நுழைவதை வாசனை வித்தியாசத்தால் கே உணர்ந்தாள். அவள் கைகால் விலங்குகள் கழட்டப்பட்டன. இரும்புக் கவசமும் அகற்றப்பட்டது. சரிந்து விழுந்த அவளை முரட்டுத்தனமாக தூக்கி நிறுத்தி அவள் இடையில் கை போட்டான் ஒருவன். அவள் மேலங்கியை நீக்கி கைகளை உள்ளே செலுத்தினான் மற்றொருவன். கொஞ்சம் பலம், கொஞ்சம் பலமிருந்தால் கேயால் அவர்களின் மர்ம ஸ்தானத்தில் அடித்து கீழே தள்ள முடியும். அதற்குள் அவளைக் கீழே கிடத்தி தரை உரச உரச இழுத்துச் சென்றார்கள் அவர்கள்.

‘சரியான குதிரடா இது. எத்தன முரட்டுத் தனத்துக்கும் அசரல பாரேன். இத ஒரு நா பதம் பாத்துரணும்’ அவர்கள் கிளுகிளுத்துப் பேசிக் கொண்டே அவளை ஒரு இருட்டறையில் அடைத்தார்கள்.

அவள் சிறுமியாய் இருந்த போதே இருட்டிற்கெல்லாம் பயந்ததில்லை. ஐந்து வயதில் அவள் செய்த தவறுக்காக அவள் அப்பா அவளை இரவு இருட்டில் நாய்க் கொட்டிலில் அடைத்துவிட்டார். அவள் பயப்படவில்லை, அழவில்லை. பத்து வயதில் அவள் மனதை அந்த நாட்டு அதிபரின் புகைப்படம் கவர்ந்தது. அழகான, விரைப்பான இராணுவ உடை, இரு மருங்கிலும் தொங்கும் துப்பாக்கிகள், குழந்தை முகம், அவர் அவளது ஹீரோவானார். அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டாள்; நாட்டை இவரை விட யாரால் மேம்படுத்த முடியும் என அவள் நம்பிப் பேசத் தொடங்கிய போது அவளுக்கு வயது பதினைந்து. அவள் உல்லாசங்களைத் தேடவில்லை, பொழுது போக்கு எதுவும் அவளை வசீகரிக்கவில்லை. தான் அவரால் கௌரவிக்கப்படவேண்டுமென்ற ஒரே சிந்தனையைத் தவிர வேறொன்றில்லை.

அவள் ஒரு நாள் வீட்டிற்குத் திரும்பவில்லை. அதி இரகசியமான அந்தப் பாசறையில் சேர்ந்தாள். அவள் குடும்பத்தினரை அவள் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு அரை மணி நேரம் சந்தித்தாள். இவள் பயிற்சியில் முன்னேற முன்னேற அவள் குடும்பம் பணத்தில் முன்னேறி வந்தது. அவள் குடும்பம் முன்னரே செல்வ வளமிக்க ஒன்றுதான்; ஆனால், இப்போதோ அதிபரின் கடைக்கண் பார்வை விழுந்து விட்ட ஒன்று.

பால் வெள்ளை நிறத்தில் சிறிது குங்குமப் பூ தூவிய நிறம் அவளுக்கு. அளவான பெண் அழகுகள். ஐந்து மொழிகளில் சரளமாக எழுத, பேச கற்றுவிக்கப்பட்டாள். அது மட்டுமா, ஐந்து கடவுச் சீட்டுகள். அயல் நாட்டு உளவுத் துறையை ஏமாற்ற, ஒரு சாதரணப் பயணியைப் போல சில உல்லாசப் பயணங்கள். ஆனால், அவள் சாதிக்கப் பிறந்தவள். அதிபரின் கரங்களை வலுப்படுத்தப் பிறந்தவள். அவரது வாழ் நாள் கொள்கை, பிரிந்துள்ள தேசத்தின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே நாடாகச் செய்து அதை அவரே வழி நடத்த வேண்டுமென்பதுதான். அதில் அவள் துணை நின்றாள், இன்னமும் நிற்பாள்.

‘ஆனால், ஏன் என் நாட்டின் காவலர்கள் என்னை விடுவிக்க வரவில்லை இன்னமும்? அன்று ‘எஸ்’ சொன்னானே- அதிபரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய முதல் போராளி அவள் தானென்று. அவள் செய்கைகளை வீடியோவாக எடுத்து மற்றப் போராளிகளுக்கு படிக்கும் பாடமென அவர் செய்திருப்பதெல்லாம் எப்பேர்ப்பட்ட கௌரவம்?’

முதன் முதலில் ‘சயனைடு’ குப்பியைக் கழுத்தில் அணிந்த போது அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது. அவள் போராளி, அரசின் விசுவாசி, அவள் இராணுவ இரகசியப் பயிற்சி பெற்றவள், பல மொழிகள் தெரிந்தவள், தான் பிறந்த பூமி இனியும் இரண்டாக இருக்க அவள் விட மாட்டாள், அது அதிபர் சொல்வதைப் போல ஒன்றுபடும், அந்த நாளின் அணிவகுப்பில் அவள் முக்கியத் தலைமையேற்று தேசியக் கொடி ஏந்தி நடப்பாள். குண்டு துளைக்காத மேடையிலிருந்து அதிபர் துள்ளிக் குதித்து கீழிறங்கி அவளது வலது கரம் பற்றி மேல் தூக்கிக் காட்டி உடன் சில அடிகள் நடந்து வருவார். ஆனால், ஏன் இன்னமும் அவளை விடுவிக்க வரவில்லை அவள் தேசம்? காவல் மிக அதிகமாக இருக்கிறதோ?

இதெல்லாம் ஒரு காவலா? அவள் ‘எஸ்’ஸுடன் சென்ற அந்த ‘எக்ஸ்’ ஹேங்கர். பாலைவனம் என்றே சொல்ல வேண்டும் அந்த இடத்தை. அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு வந்து விட்டார்கள். மிகக் குறைவாக உணவும், நீரும் தரப்பட்டன. மொத்தமாக மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் இருவருமாக அந்த ‘எக்ஸ்’ ஹேங்கருக்குச் செல்ல வேண்டும்; யார் கண்ணிலும் சிக்காமல் பழுது பார்க்கப்பட்டு, தயாராக உள்ள அந்தப் பயணிகளின் விமானத்தின் உள்ளே சென்று பயணியர் இருக்கைகளின் மேலே உள்ள ‘லக்கேஜ் பெட்டி’ யின் மேல் வளைவில் கண்களுக்கும், கைகளுக்கும் புலப்படாத வகையில் வெடிகுண்டினைப் பதுக்கி வைத்து விட்டு சுவடே தெரியாமல் அந்த இடத்திலிருந்து தனித்தனியாக அவர்கள் ஒரு தங்கு விடுதியில் இரவுப் புலரியைக் கழிக்க வேண்டும். மறு நாள் விமானப் பயணிகளாக மற்றொரு நாட்டிற்குப் பறந்து விட வேண்டும். இவர்கள் குண்டு வைத்த விமானம் விழுந்து நொறுங்கி, அவலச் செய்தியாகி அதை மக்கள் மறந்து போகும் போது தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும்.

அந்த ‘ஹேங்கரை’ அடைவதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. நிலவற்ற வானம், மிக வெளிச்சமாகத் தெரிந்த நட்சத்திரங்கள். காற்று குவித்து வைத்திருந்த மணல் குன்றுகள். சப்பாத்திக் கள்ளிகள் மேலே தீஞ்சுடர்களென ஆடிய பூக்கள். எங்கிருந்தோ ஊளையிடும் ஒரு கிழட்டு நரியின் குரல். மணல் தடத்தில் மறைந்து மறைந்து வெளிப்பட்ட ஓனாய் காலடிகள்.

விண்மீன்களின் துணை ஒளி மட்டும் கொண்டு அவர்கள் பதுங்கிப் பதுங்கி அந்த ‘ஹேங்கரை’ அடைந்து விட்டார்கள். அது பின் பகுதி. அடுத்து ஒரு விமானம் அங்கே வரப்போகிறது என்பதற்காக விரியத் திறந்திருந்த கதவு ஏதோ ஒரு ஆணையின் பேரில் மூடப்பட்டது. நம்மைப் பிடித்துவிட்டார்கள் எனத்தான் இவர்கள் நினைத்தார்கள். ஆனால், மனிதன் நுழைந்து வெளியேறும் கதவிற்குள்ளான சிறு கதவு சாத்தப்படாமல் இருந்தது. உள்ளே நுழைந்து அந்த அலுமினியப் பறவையைப் பார்த்த மாத்திரத்தில் இவர்களுக்குத் தான் எத்தனை பரவசம்! ஏறும் ஏணி இல்லாமல் நின்றிருந்தது அது. தூதரக மதிலில் தொற்றி ஏறிய அவளுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. அவள் ஏறி அந்த ‘எஸ்’ ஸையும் ஏற்றி விட்டாள். குண்டினைப் பொதிந்தாயிற்று. வெளியில் வருகையில் விடியலோ என்ற அளவில் மணல் துகள்கள் மின்னின. அவர்கள் விடுதியில் தங்கியதும், வேறொரு நாட்டிற்குச் சென்றதும் சாதாரண சாகசங்கள்.

இவர்களின் பாதிப் பயணத்தில் வெடி குண்டிருந்த விமானம் 139 பயணிகளோடு, 20 விமானப் பணியாளர்கள் மற்றும் ஓட்டிகளோடு நடு வானில் 30000 அடியில் தீக்கோளமென வெடித்துச் சிதறியதை மற்ற பயணிகள் போலவே இவர்களும் செய்தியென, தீவிரவாதமெனக் கேட்டுக் கொண்டார்கள். உலக நாடுகள், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் எதிரி நாட்டில் நடை பெற இருந்த உலக விளையாட்டுப் போட்டிகளை நிறுத்தச் சொல்லி கோரிக்கைகள் வைத்தன. இதைச் சான்றெனக் கொண்டு தன் சகோதர நாடு உலகின் முன் கௌரவம் இழந்து நிற்கிறதென்றும், இரண்டையும் இணைத்து தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் நாள் நெருங்குகிறது என்றும் அதிபர் அளித்த பேட்டியை இவர்கள் ஷாம்பெய்ன்னுடன் கொண்டாடினார்கள். இனி இவர்கள் தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்பலாம்; இனி வாழ் நாள் முழுதும் அரசின் ஆதரவும், பொருள் உதவியும், பெரும் பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தில் விரும்பினால் இணையலாம்.

நாடு திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்த போது இவர்களது கடவுச் சீட்டு பொய் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். சயனைட் சாப்பிட்டதில் ‘எஸ்’ உடனடியாக இறந்து விட, இவளைக் காப்பாற்றி விட்டார்கள்.

அவள் இப்போது செய்யக்கூடுவதென்ன? தலையை மோதி உடைத்துக் கொள்ளலாம் என்றால் பாரா இருந்து கொண்டே இருக்கிறது. உடைகளைக் கிழித்து தொங்கி விடலாமென்றால் ஒரு கொக்கி கூட இல்லை. இவர்கள் எப்படியும் தன் தாய் நாட்டை அறிந்து விட்டார்கள். ஆனால், குற்றத்தை நிரூபிக்க சாட்சிகள் வேண்டும். அவள் முகம் எந்த சி சி டி வி காட்சியிலும் பதிவாகவில்லை. அவளுக்கு வெடி குண்டு தந்தவர்களை அவளது அரசாங்கம் இந்நேரம் கொன்றிருக்கும். அவள் இவர்களது விசாரணையில் எந்தப் பதிலும் சொல்ல மாட்டாள். அவளது அதிபர் அவளைக் கை விடமாட்டார். அவள் விரைவில் ஒரு சுதந்திரப் பறவையாகி விடுவாள். பூங்கொத்துக்களும், மாலைகளும், பாராட்டுக்களும் அவளுக்காக அவள் தாய் நாட்டில் காத்திருக்கின்றன.

அவள் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடத்தப்பட்டாள். ஒருக்கால் பெண் என்பதாலோ? அவளின் இளமை இங்கேயும் அவளுக்காகப் பரிகிறதோ? அவள், தான் தன் நாட்டை அளவிற்கதிகமாய் நேசிப்பதாகச் சொன்னாள்; பல்வேறு நாடுகளில் அற வழியில் அதற்காகச் செயல்படுவதாகவும், மாற்றுக் கடவுச் சீட்டுக்கள் கூட அதற்காகத்தானெனவும் சொன்னாள். அவள் ‘வெடி குண்டையெல்லாம்’ பார்த்ததேயில்லை; ஆம் அவளுக்கு அந்த மற்றொருவர் யாரெனத் தெரியாது. மறு நாள் அவளுக்கு நீதி மன்றத்தில் ஒரு நாற்காலி கொடுத்தார்கள் இரு காணொலிகள் ஒன்றன் பின் ஒன்றாக. முதலாவதில், அவளது தாய் நாட்டின் அதிபர் ‘அவள் தங்கள் குடிமையில் இல்லை; எந்தப் பதிவேட்டிலும் அவள் பெயரில்லை; அவள் பெற்றோர் என்று குறிப்பிடும் நபர்கள் ‘இவள் பொய் சொல்கிறாள், எங்களுக்கு பெண் குழந்தையே கிடையாது’ என்று சொல்கிறார்கள்’ என்று பேசியிருந்தார். இவள் முக பாவங்களை நீதி மன்றம் இரகசியமாகப் படம் எடுத்துக் கொண்டிருந்தது.

அடுத்த காணொலியில் உறவை வெடி குண்டு விபத்தில் பறி கொடுத்த மனிதர்கள் கதறிய காட்சிகள். அதிலும், புதிய மலர் போன்ற இரு குழந்தைகளையும் இழந்த அந்தப் பெற்றோர் கதறியது இவளை வன்மையாகப் பாதித்தது. கைகளில் விளக்குகளோடும், மலர்களோடும், கண்ணீரோடும் மனிதர்கள் அஞ்சலி செலுத்தியதும், கதறியதும், ஆவேசப்பட்டதும், ‘தூக்கிலிடு கேயை’ என்ற பதாகைகளும், ‘பழிக்குப் பழி’ என்ற கூப்பாடுகளும், தன் அதிபரே தான் அந்த நாட்டவளில்லை எனச் சொன்னதும் அவளுக்கு மரண அடியாக இருந்தது. வானில் சிதறுண்டு, அடையாளமற்றுக் கருகிய மனித உறவுகளின் உணர்வுகள் அவளை வெடியோசையுடன் தாக்கின.
‘நான் தான் செய்தேன்; என்னைத் தூக்கிலிடுங்கள்’ எனக் கதறினாள் அவள்.

நீதிபதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுக்குக் கடுங்காவல் தனி ஆயுள் என சுருக்கமாகச் சொன்னார். அத்தனை உயிர்களை எளிதாகக் கொன்ற அவளைக் குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி வாழ் நாள் முழுதும் அவள் தண்டனை பெற வேண்டும் என்பது அவர் தீர்ப்பு. அவள் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்கையில் சத்தமில்லா துப்பாக்கியிலிருந்து குண்டு அவளை நோக்கிச் சீறி வந்தது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.