உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

EPIC OF GILGAMESH - EPIC POEM SUMMARY | Other Ancient Civilizations

 

 

கில்காமேஷுக்கு அவளைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது அவள் மது அரசி  சிதுரி  என்று. அவள்  தன் வழியை மறைக்கும் படி கதவைப் பூட்டுகிறாள் என்பதை அறிந்ததும் அவள் மீது எல்லையற்ற கோபம் வந்தது. 

” ஏ மது அரசி! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? நான் யார் என்று உனக்குத் தெரியவில்லையா? நான்தான் மகாபலசாலியான கில்காமேஷ் ! தேவர்களின் காளையைக் கொன்றவன்.  செடார் வனத்தின் காவல்காரனான ஹம்பாபா ராட்சசனை மாய்த்தவன். மலைப்பாதையில் சிங்கங்களைக் கொன்று குவித்தவன்.  நீ பூட்டிய கதவுகளைத் தூள் தூளாக உடைத்துச் செல்லும் வலிமை எனக்கு இருக்கிறது. அதைச் செயல் படுத்தட்டுமா?” என்று கோபத்தோடு கூறினான்.

அதைக் கேட்ட  சிதுரி ஆச்சரியத்தின் வசப்பட்டாள்.  வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து வாடிய முகத்துடன்  மிருகங்களின் தோலை  ஆடையாக அணிந்த அவனை கில்காமேஷ் என்று அவளால் முதலில் நம்ப முடியவில்லை. 

” நீயா கில்காமேஷ்? உன் முகத்தில் எப்போதும் தெரியும் வீரக்களையைக் காணோமே? ஏன் இப்படி காற்றைப் பிடிக்கத்  திரிபவன் போல வாடிய முகத்துடன் வந்திருக்கிறாய் ?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

“மது அரசி! என உள்ளத்தில் ஏக்கமும் நிராசையும் நிறைந்து இருக்கிறது. அதனால் நான் களையிழந்து இருக்கிறேன். அதற்குக் காரணம் என்  அருமைத் தம்பி ஆருயிர் நண்பன் என்  உயிருக்குயிரானவன்  எங்கிடு என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். சாவுத்தேவன் அவனை என்னிடமிருந்து பிரித்துவிட்டான். அவன் உடல் புழுத்துப் போகும் வரையில் அவனை விட மனமின்றி பேணிப்  பாதுகாத்தேன். ஆனால் அவனை என்னால் உயிர்ப்பிக்கமுடியவில்லை. அவனைப் போலச் சாவு என்னையும் விழுங்கி விடுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் சாவை வெற்றி கொள்ளும் மார்க்கத்தில் வந்து கொண்டிருக்கிறேன்! என்னைத் தடுக்காதே!” என்று கோபமும் கெஞ்சலும் இணைந்த குரலில் கூறினான் கில் காமேஷ். 

அவன் மீது பரிதாபம்  கொண்ட சிதுரி ” கில்காமேஷ்! எதற்காக வீணாக அலைகிறாய் ? நீ தேடுவதை உன்னால் அடையவே முடியாது. மனிதனாகப் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும். அதை மறந்துவிட்டு வாழ்க்கையை அனுபவி. நன்றாகக் குடி ! சந்தோஷப்படு! மனைவியைத் தழுவி இன்பம் தேடு! மனிதர்கள் இன்பமாக வாழத் தானே தேவர்கள் இரவைப் படைத்திருக்கிறார்கள். அதனை நீ முழுவதும் அனுபவி! சாவு வந்தால் அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்” என்று கூறினாள். 

கில்காமேஷ் மிகவும் ஆவேசமடைந்து, “மது அரசி!  ஏன் என்  முயற்சியைத் தடை செய்யும்படி அனைவரும் வற்புறுத்துகிறீர்கள்? நான் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. இப்போது நான்  மரணத்தை வென்ற உத்னபிஷ்டிம் என்ற மானுடனைத் தேடி அழைக்கிறேன். அவன் எனக்கு மரணத்தை வெல்லும் ரகசியத்தைச் சொல்லிக் கொடுப்பான்.  நீ என் பாதையில் குறுக்கே வராமல் அவன் இருக்கும் இடத்திற்கான வழியைக் காட்டு” என்று பாதி கோபத்துடனும் பாதி கெஞ்சலுமாகக் கேட்டான். 

சிதுரி அவனிடம் இரக்கம் கொண்டு ” கில்காமேஷ்!   சூரியதேவனைத் தவிர வேறு யாரும் இந்தச் சாவுக்  கடலைக் கடந்து  சென்றதில்லை.  கடலுக்கு அப்பால்   சாவு என்னும் ஆறு ஒன்றும்  இருக்கிறது.  அதில் பயங்கர  முதலைகளும் திமிங்கலங்களும் இருக்கின்றன.  இந்த இரண்டையும் கடக்க ஒரே ஒருவன்தான் உனக்கு உதவ முடியும் . அவன்தான்  உத்னபிஷ்டிமின் படகுக்காரன்.  அவன் சரப்பமுகத்துடன் ஒரு படகை வைத்திருப்பான். அவன் உதவிசெய்தால்தான்  அந்தப்   படகு மூலம்  சாவுக்  கடலையும் சாவு ஆற்றையும் கடக்க முடியும். அவன் உதவாவிட்டால் உனக்கு வேறு வழியே இல்லை. நீ திரும்ப உன் நாட்டிற்குச் செல்லவேண்டியதுதான்”  என்று கூறினாள்.

கில்காமேஷ் அவளுக்கு நன்றி கூறிவிட்டு மிகுந்த வைராக்கியத்துடன் தன் கோடாலியையும் வாளையும் எடுத்துக்கொண்டு கடலை ஒட்டிய காட்டின் ஊடே சென்றான். அடர்ந்த காடாக இருந்ததால் பல இடங்களில் ஊர்ந்தே போக வேண்டியிருந்தது.  சில காதங்கள் கடந்தபிறகு கடற்கரையில் அந்தப்  படகையும் படகுக்காரனையும் கண்டான். 

ஒரு மனிதன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த படகுக்காரன் ஆச்சரியத்தில் மூழ்கினான். உத்னபிஷ்டிம் தவிர வேறு யாரும் வர இயலா இந்த இடத்திற்கு வந்த இவன் யாராக இருக்கும் என்று ஒரு கணம் யோசித்தான். அவன் யாராக இருந்தாலும் சரி,  அவன் வருவதற்குள் படகைக் கிளப்பிவிட வேண்டியதுதான்  என்று தீர்மானித்துப் படகைச் செலுத்த ஆரம்பித்தான். 

அதனால் கோபம் கொண்ட கில்காமேஷ் பாய்ந்து ஓடிவந்து தன் கோடாலியால் படகை ஓங்கி அடித்தான். படகின் சரப்பமுகம் உடைந்து நொறுங்கியது. படகுக்காரன்  என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். ‘தானும் கடலைக் கடக்கவிடாமல் செய்துவிட்டானே இந்த வீரன்! இவன் சாதாரண மனிதனாக இருக்கமுடியாது’   என்று யோசித்து அவனிடமே வினவினான் அந்தப் படகுக்காரன் . 

” என் பெயர் கில்காமேஷ்” என்று அவன் சொன்னதுமே படகுக்காரனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.  மிகுந்த மரியாதையுடன், ” ஐயா!  நீங்கள் மாவீரர் கில்காமேஷ் என்பதை என்னால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை. தங்கள் முகமும் உடலும் அந்த அளவிற்கு வாடிப்  போயிருக்கிறது.தாங்கள் ஏன் இந்த சாவுக்  கடலுக்கு வந்தீர்கள்”: என்று வினவினான். 

கில்காமேஷ் தன் நண்பன் எங்கிடுவின் கதையைக் கூறி  தான் இவ்வளவு இடர்பாடுகளையும் கடந்துவந்தது   உத்னபிஷ்டிம் அவர்களைக் கண்டு சாகாமல் வாழ்வது எப்படி என்ற ரகசியத்தைக் கற்றுக் கொள்ளத்தான் . அது தான் தன்  வாழ்வின் லட்சியம் என்றும்  கூறினான். 

” உங்களை அவரிடம் அழைத்துச் செல்ல இயலாமல் நீங்களே செய்து விட்டீர்களே” என்று கூறினான் அந்தப் படகுக்காரன். 

 “என்ன சொல்கிறாய்?” என்று கோபாவேசத்துடன் கேட்டான் கில்காமேஷ். 

“தாங்கள் ஆத்திரத்தில்  இந்தப்படகின் சர்ப்பமுகத்தை உடைத்துவிட்டீர்கள். அது இல்லாமல் இந்தச் சாவுக்  கடலையும் அதன் பின்னால் இருக்கும் சாவு நதியையும் கடக்க முடியாது” என்றான் அந்தப் படகுக்காரன். 

என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் கில்காமேஷ்!

(தொடரும்) 

 

 

 

One response to “உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

  1. கில்காமேஷுடன் நாங்களும் ஆர்வத்துடனும் திகைப்புடனும் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! சுவாரஸ்யமாகப் போகிறது இந்தத் தொடர்கதை !

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.