திரை ரசனை வாழ்க்கை 10 – எஸ் வி வேணுகோபாலன்

Server Sundaram (1964)

சர்வர் சுந்தரம்: தனித்துவ முத்திரை

நாகேஷ் எனும் அபாரமான திரைக்கலைஞர் மிகவும் புகழ் பெற்றிருந்தவர் என்றாலும், அவரது அசாத்திய திறமைக்கு ஏற்ற அளவில் இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்று ஓர் உள்ளுணர்வு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அவரது படங்கள் சிலவற்றை நினைத்த மாத்திரத்தில் இந்த உணர்வு இன்னும் தீப்பற்றி எரியும். அன்பே வா, தேன்மழை, உலகம் சுற்றும் வாலிபன், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை….இதெல்லாம் பார்க்கும் போது கூட அல்ல, நம்மவர் படத்தை அசை போட ஆரம்பித்தால், நாள் கணக்கில் உடன் வாழ ஆரம்பித்து விடுவார் நாகேஷ். உள்ளபடியே மகத்தான நடிகர் அவர்.

சர்வர் சுந்தரம், கே பாலச்சந்தரின் ஆக்கங்களில் அருமையான படைப்பு. ஒரு புத்திசாலியான இயக்குநர் என்று பேசப்படுபவர் அவர். இந்தப் படத்தின் திரைக்கதை அவரது; இயக்கம், புகழ் பெற்ற இரட்டையர் கிருஷ்ணன் பஞ்சு. அண்மையில் ஒரு வித்தியாசமான நேர்காணலில், டி எம் கிருஷ்ணா, ரசிக அனுபவத்தைச் சிறப்பாக விவரிக்கையில், புனைவு தான் என்றாலும் ஒரு திரைப்படக் காட்சியில் நீங்கள் அழுவது இல்லையா, அப்படி ஒரு கலைஞனாக உங்களை என்னென்ன உணர்வுகளுக்கு உட்படுத்த வேண்டுமோ அந்தந்த உணர்வுகளுக்கு ஆட்படுத்த முடியும் என்று சொல்லி இருப்பார்.

கேபியின் திரைக்கதை மட்டுமல்ல அவரது வசனத்திற்கும் அந்த சக்தி உண்டு. இந்தப் படம் அந்த வரிசையில் அபாரமான எல்லைகளைத் தொட்டுத் திரும்பிய ஒன்று. ஆனால் நாகேஷ்,இந்தக் காட்சிப்படுத்தல், வசனங்களின் துணை, இசை இவற்றுக்கும் அப்பால் தமது உடல் மொழியை அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றித் திக்கு முக்காட வைக்கும் இடங்கள் எண்ணற்றவை.

அம்மைத் தழும்புகள் மலிந்த சுவாரசியமற்ற முகத்தின் நிமித்தம் சுந்தரம், தனது திரையுலகக் கனவுகளை எரித்துக் கொள்ளும் கண்ணீர்த் துளிகள் அல்ல, பின்னர், நெருங்கிய நண்பனின் உதவியால் அடிக்கும் லாட்டரி பரிசு நுழைவில் திரை நட்சத்திரமாக மின்னித் தமது தாயை இழக்கும் தருணத்தில் அல்ல…சட்டென்று சட்டையை மாற்றிக் கொண்டு சர்வர் உலகத்திற்குத் திரும்பும் எதார்த்தப் புறம்பான சித்தரிப்பில் வெடிக்கும் தழுதழுப்பில் அல்ல, இடையே இல்லையென்றாகி விடும் காதலில் அல்ல, ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முன் பாதியில் நாகேஷ் நடிப்பு இப்போது நினைத்தாலும் பிரமிக்க வைப்பது.

தன்னிடம் இருக்கும் 5 பைசாவுக்கு சோடாவோ, வாழைப்பழமோ கூடக் கிடைக்காது நடக்கத் தொடங்குகிறான் சுந்தரம். தன்னைத் துரத்தும் பசியைத் துரத்தும் சுந்தரத்தின் பாதையில் உருளும் ஒற்றை ஐந்து பைசா நாணயம், தன்னிடம் உண்மையிலேயே காசு இல்லை என்று பின்னர் ஓட்டல் முதலாளியிடம் அவன் சொல்லும் நாணயம், இரண்டுக்கும் இடையே அவன் தன்னிடம் இருப்பதாக உணரும் 15 நயா பைசாவின் நினைப்பில் அவனடையும் பரவசமும், அந்த ஓட்டல் நாற்காலியை அவன் முழுவதும் நிறைத்து அமரத் துடிக்கும் துடிப்பும், சர்வரோடு நிகழ்த்தும் உரையாடலும் ஒரு காவியம். சுந்தரத்தின் ஏழ்மையை மறந்து பார்க்க முடியாத காட்சி. எல்லோருக்கும் எல்லாம் சாத்தியமுள்ள உலகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ஏதும் இல்லாமை ஒரு கசப்பான நகைச்சுவை. அதன் உருவகம் சுந்தரம்.

காசு இல்லாமல் சாப்பிட்டால் பைசாவுக்கு 10 வாளி தண்ணீர் இறைக்கணும் என்ற முன் தகவலால், தன்னிடம் இல்லை என்றாகிவிட்ட 14 பைசாவுக்கு அவனாகவே எங்கே கிணறு, எங்கே வாளி என்று கேட்கும் இடத்தில் தனது சொந்த இடத்திற்கு மீள்கிறான் ஏதுமற்றவன். அவனது பரவசம் சட்டென்று இறங்கி, சுயபரிதாபம் கவ்விக் கொள்கிறது அவனை. மிகச் சில நிமிடங்கள் நீடிக்கும் அவனுக்கும் முதலாளிக்குமான உரையாடல் காட்சியில் நாகேஷ் விவரிப்புக்கு அப்பாற்பட்ட சித்தரிப்பில் சுந்தரம் பாத்திரத்தை எங்கோ உயர்த்தி நிறுத்தி இருப்பார்.

தான் சர்வர் என்பதைத் தாயிடம் மறைத்தது நண்பனால் வெளிப்பட்ட பின்னான காட்சியில் எஸ் என் லட்சுமியும், நாகேஷும் வழங்கி இருக்கும் நடிப்பு படத்தின் இன்னுமொரு காவியத் தலம்.

Server Sundaram - Nagesh cracks joke with girls - YouTube தற்செயலாகச் சுற்றுலாத் தலத்தில் நாயகி கே ஆர் விஜயாவின் அன்புக்குப் பாத்திரமாகி விடும் சுந்தரம், தனது வெகுளித் தனத்தை அவள் ரசிப்பதாகச் சொல்லும், (ஐ லைக் யுவர் இன்னொசென்ஸ்) ஆங்கிலச் சொல்லின் பொருள் அறியாமல், இது கூட அறியாத வெகுளியாக இருக்கோமே என்று சொல்லிக் கொள்ளும் இடம் உள்பட படத்தில் நிறைய இடங்கள் உண்டு சொல்ல.

சுந்தரம் தனது சட்டைப்பையில் போடும் நாணயம் நழுவிப் போவது போலவே, ஓட்டல் முதலாளி மகளின் நேசத்தைக் காதலாக நினைத்து நிரப்பிக் கொள்ள, அதுவும் நழுவிப் போகிற இடத்தில் அந்த இழப்பைப் பொறுக்க மாட்டாதவனாகத் துடிக்கிறான். யாராலும் விரும்பப் படாதவனாகத் தன்னை உணர்ந்து தவித்த ஒருவன், தன்னை நேசிக்கும் மனிதர்கள் தன்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது உணரும் வறுமை இந்தப் படத்தில் மறைபொருளாக அமைந்திருக்கிறது.

திரைப்பட வாய்ப்பு கிடைக்காது என்று அவமதிப்புக்கு உட்படுத்தபடும் இடத்தில் மனநலம் பாதிப்புற்றவனாக அவர்களை அரட்டியுருட்டி மிரட்டும் இடத்தில், அது நடிப்பு என்றதும் திரையுலக ஆட்கள் அசந்து போகின்றனர். எந்த வாழ்க்கைக்கு அத்தனை அவதிப்பட்டோமோ அதற்கான பொருள் ஒன்றுமில்லையோ என எண்ணுமிடத்திற்கு வாழ்க்கைச் சூழல் அவனைக் கொண்டு சேர்க்கிறது. எதையும் தொலைக்காதவனாக இருக்க ஒரே வழி, எதையும் இருப்பில் கொள்ளாதவனாக இருப்பது தான் என்கிற வேதாந்தியாக அவனைக் கொண்டு நிறுத்துகிறார் கேபி. அந்த இடத்தை அவர் கொஞ்சம் கடந்திருந்தால், படத்தை இன்னும் மகத்தான இடத்திற்கு அவரால் உயர்த்தி இருக்க முடியும். இருக்கட்டும்.

மிகச் சிறந்த திரைக்கதை, அருமையான வசனங்கள், பஞ்சமற்ற நகைச்சுவை, சிறப்பான பின்னணி இசை, சிறப்பான பாடல்கள், நெகிழ வைக்கும் நடிப்பு என்று அமைந்திருக்கும் படம் சர்வர் சுந்தரம்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் இந்தப் படத்திற்கான பின்னணி இசையில் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் உழைப்பெல்லாம் நிறைந்திருந்தது என்று சொல்லப்படுகிறது. கவிஞர் வாலியின் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல் டி எம் சவுந்திரராஜன் – எல் ஆர் ஈஸ்வரியின் எழிலான குரல்களில் எல்லாக் காலத்திற்குமான பாடலாக இருப்பது, பத்தே நிமிடங்களில் எம் எஸ் வி மெட்டமைத்ததாம்! ‘சிலையெடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’, ‘தத்தை நெஞ்சம்’ இரண்டும் பி சுசீலாவின் தேனிசைக்குரலில் இனிப்பவை. இரண்டாவது சொன்ன பாட்டில், கொஞ்சும் அந்த தத்தை, புகழ் பெற்ற பலகுரல் கலைஞர் சதன் ! பிபி ஸ்ரீனிவாஸ் – பி சுசீலா இணைகுரல்களில் ‘போகப் போகத் தெரியும்’ ஓர் அழகான காதல் கவிதை. இந்தப் பாடல்கள் எல்லாம் கவிஞர் கண்ணதாசன் படைத்தவை.

Server Sundaram - Nagesh-Manorama first film - YouTube

எஸ் வி ரங்காராவ், மனோரமா, ஐ எஸ் ஆர் புடை சூழ நாகேஷ் நடிக்கப் போய் இறங்கும் அதிரடிக் காட்சி அதகளம். அப்பாவிக் கணவன் படக்காட்சியில் அடிக்கும் காற்றும், பெய்யும் மழையும் படம் பார்ப்போர் மீதும் அடிக்கும், பெய்யும். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு சிரமங்களை, அதிசயங்களை, உழைப்பை சர்வர் சுந்தரம் படத்தில் அற்புதமாகக் கொண்டு வந்திருந்தனர்.

என்னதான் உயர்ந்தாலும், கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதுதான் படத்தின் தத்துவம் என்று மேற்கோள் காட்ட, நடிகரின் மாளிகையில் சர்வர் உடை எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். அவரது அசத்தல் நடிப்பைப் பார்த்து, நாகேஷின் சொந்த வாழ்க்கையைப் பேசிய படம் தானோ என்று கூட சில விமர்சகர்கள் எழுதி இருக்கின்றனர்.

மேஜர் சுந்தரராஜன் எதிரே, சட்டைப்பை ஓட்டையின் வழியே தனது வாழ்க்கையின் பாதையைத் தேடும் நாகேஷின் கண்களை ஒருபோதும் மறக்க முடியாது. விம்மித் தணியும் அவரது குரல், வெயிலும் மழையுமாய் அழுதும் சிரித்தும் வெளிப்படும் அவர் முகம், தமிழ்த்திரையில் தனித்துவ முத்திரை.

8 responses to “திரை ரசனை வாழ்க்கை 10 – எஸ் வி வேணுகோபாலன்

  1. மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர், சர்வர் சுந்தரத்தை போல் அவர் நடித்த எதிர்நீச்சல்,பச்சைவிளக்கு,நூற்றுக்கு நூறு,நீர்க்குமிழி,இதயக்கமலம் போன்ற படங்கள் தனிமுத்திரையோடு வெளிவந்தன,தமிழ்த் திரை உலகம் உள்ளவரை அவர் நடிப்பு எடுத்துக்காட்டாக பின்தொடரப்படும்,அவர் புகழ் ஓங்குக

    Like

  2. . அந்த இடத்தை அவர் கொஞ்சம் கடந்திருந்தால், படத்தை இன்னும் மகத்தான இடத்திற்கு அவரால் உயர்த்தி இருக்க முடியும். இருக்கட்டும்….

    இதுதான் முத்தாய்ப்பு ஆனால் எப்படி என்று புரியவில்லை.

    Like

  3. Great review. Perhaps when the film was released, several decades back, such a review might not have been written. I connected to every scene that you described in your own flowery style. Keep going.

    Like

  4. சர்வர் சுந்தரம் படம் அந்தக் காலத்தில் மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் ரசித்து ரசித்துப் பார்த்த படம் ‌ மீண்டும் அந்த நினைவுகளை மீட்டுக் கொணர்ந்து விட்டீர்கள்.. பாராட்டுக்கள்

    Like

  5. A legend. ,நகைச்சுவையிலும் சரி நடிப்பிலும் தனி இடம் பெற்றவர் அழகாக தொகுத்திருக்கிறீர்கள்.
    நம்மவர் படத்தில் மகள் இறந்த உடன் ஊசி போட்டது தெரியாமல் அதை திரும்ப கேட்கும் கட்டத்தில் உச்சத்தை தொட்டு விடுவார்.

    Like

  6. நல்ல சிறந்த ஆய்வு. நாகேஷ் தமிழ் திரையுலகின் மாபெரும் கலைஞன், சொத்து. ஒவ்வொரு கதாபாதிறதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.