
வேண்டாமென்ற மணவிழாவிற்கு
திருமண பரிசாய்
கன்னத்து தோளோடு
உரிந்தது இரண்டடி
அலங்கார மேடையில்
சத்தமாய் அழுதது மௌனம்
திட்டிக் கொண்டே இருக்கிறார் அப்பா
என் சுயம் கேளாது
வெடிப்புற்ற உதடுகளுக்கு
முத்தம் துப்பியபடி
அழுகையை சுவைத்தது கைக்குட்டை
தயாராகிக் கொண்டிருந்தார்கள்
எல்லாரும்
என் கனவுகளை நறுக்கிக்கொண்டே
தென்படவில்லை இதுவரை
அவரவர் கண்களுக்கு
எனக்குள் மாய்ந்து போயிருந்த
நட்சத்திர பூ ஒன்றை
ஊடலில் கழுத்துகளில் குதித்தபடி
கொத்திக் கொண்டிருந்தன
மணச்சேர்க்கையின் மாலைகள்
வெள்ளையும் சிவப்புமாய்
மேடிட்ட மனக்கோட்டையில்
நழுவியும் கழுவியும்
இரக்கமற்று மறைந்தது
அவன் மேலூறிய அன்பு
சரிந்த பேரன்பிற்காய்
கிழியாமல் வாதிட்டது கண்கள்
அப்பாவின் திசை சாய்ந்து
மலைப்பாம்பை ஒத்து நெழிந்து
கொண்டிருந்தேன்
என் முன் தனல் அதனினும் நான்
கட்டப்பட்டது என் கைகளும் மௌனமும்
நிகழ்வதை துழாவிக் கொண்டிருக்கையில்
உடலும் ஏகியது மஞ்சள் முடிச்சு
அவிழ்ந்திருந்தது என் சரீரம்
என் ஒழுங்கிலிருந்து
விருப்பக் கிளையொடித்து
வேறொரு அறைக்கு
குடிபுகுத்தினார்கள்
இரவெல்லாம் ஏங்கிக்
கொண்டிருந்த வெள்ளந்தியாய்
அழைத்தேன் அப்பாவை
உரிந்த கன்னத்து தோளுக்கு
கசிய கசிய காதல் ஊட்டி
“சீக்கிரம் உறங்கி
நாளைக்கு பள்ளி செல்
என்றபடியே
பள்ளியறை புகுந்தார் அப்பா
அம்மாவின் அறை பழகிக்கொண்டிருந்தது
அம்மாவை
போலொரு அம்மாவிற்கு