(அமரர் பாக்கியம் ராமஸ்வாமி மன்னிக்க)
நான் ஆணையிட்டால் டடடாங் அது நடந்து விட்டால் டடடாங் இந்த ஏழைகள் வேதனை பட மாட்டார்’ என்று இரு கைகளையும் தூக்கிக்கொண்டு சீதேக் கிழவி வீட்டில் இல்லாத சந்தோஷத்தில் விசில் அடித்தவாரே நுழைந்தார் நமது நாயகன் அப்புசாமி. கொட்டாயில் போன வாரம் போட்ட எங்க வீட்டுப் பிள்ளை இன்னமும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி சினிமா பார்க்க சீதேக் கிழவி காசு தருவதில்லை. ‘கண் கெட்டுப் போய் விடும்’ என்ற பாவலா. பா மு கழகத்தின் அக்கவுண்டஸ் பார்த்துப் பார்த்து அவள் தான் பூதக்கண்ணாடி போட்டு உள்ளாள். பொழுது போக வேண்டுமே! அப்போது தான் அவருக்கு இரண்டு நாள் முன்னாடி பார்க்கில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
இரண்டு நாள் முன்னாடி கீழே ரசகுண்டுவைப் பார்க்க போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாமி கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னொரு மாமியிடம் ‘அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை பண்ணுகிறார்கள். புருஷனோ ஜெயிலில் செய்யாத குற்றத்திற்காக! இவள் வயிற்றிலோ குழந்தை வேறு. பாவம்’ என்று கூறிக் கொண்டிருந்தாள். இவருக்கு பக்கென்று ஆனது. இது என்னதிது! அவளைக் காப்பாற்ற யாராவது முன் வந்தார்களா இல்லையா என்ற கவலையுடன் அந்த மாமியிடம் ஓடிப் போய் விசாரித்தார். அவர்கள் இருவரும் நக்கலாக முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு ‘யாருக்குத் தெரியும்! அடுத்தவாரம் டிவி பார்த்தால் தெரியும்!’ என்ற போதுதான் இவருக்கு உரைத்தது அவர்கள் இருவரும் டிவி சீரியல் கதை பேசுகிறார்கள் என்று. ஆத்திரத்துடன் இரண்டு உதடுகளையும் கடித்துக்கொண்டே (பல் இல்லாத குறையால்) வீடு வந்து சேர்ந்தார். அப்போது ஒரு ஐநா சபை தீர்மானம் போட்டார். அதை செயல் படுத்த ஆரம்பித்தார்.
‘காலையில் சந்தித்தேன் கண்களில் அன்புத்தேன்
நெற்றியில் சந்திரன்தான் நெஞ்சிலே பாய்கிறதே’ என்று சீதேயின் பின்னாடியே சென்று பாடினார். ‘சீத்தே இன்று நீ எவ்ளோ அழகாக இருக்கிறாய் தெரியுமா? உங்களோட இந்த பெரிய பொட்டு, அளவான அழகான புன்னகை, இந்த மேல் தூக்கிய சிறிய கொண்டை, நடயா இந்த நடையா என்ற ஒயில்’ என்று பின்னாடியே சென்றார்.
‘என்ன வேண்டும் ஏன் இந்த பசப்பு’ என்று சிடுத்து அதட்டிக் கேட்டாள் தர்மபத்தினி.
‘சீதே ஒரு ஐநூறு ரூபாய் கொடென் சினிமா பார்க்க’ என்று அஸ்த்ரம் எய்தினார். ‘ஐநூறு என்று கேட்டால் இருநூறாவது தேறும் என்ற நப்பாசை’ அவளா மசிவாள்! கிடையாது!
‘என்ன ஐநூறா! பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது! எவ்வளவு செலவு! பா மு கழகத்தின் தேர்தல் வேறு வருகிறது’ என்று பொட்டை சரி பண்ணிக் கொண்டே சொன்னாள்.
‘எனக்கு போர் அடிக்கறது. எத்தனை நாழிதான் பீமா ரசகுண்டுவுடன் தெருவில் கோலிக் குண்டு விளையாடுவது! பணம் கொடு சினிமாவுக்குப் போகணும்’ என்று சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடித்தார்.
‘முடியாதுன்னா முடியாதுதான்’ என்று சீதேயும் உறுதியுடன் நின்றாள்.
திடுமென்று நேற்று பார்க் சம்பவம் நினைவிற்கு வரவே ‘அப்படியானால் ஒரு டிவி வாங்கிப் போடு. நீயும் செய்தி வாசிக்கலாம் சாரி பார்க்கலாம், நானும் சிறிது பொழுது போக்கிக் கொள்வேன்’ என்றார். பாவம் அவருக்குத் தெரியாதது டிவி பார்ப்பது என்பது பொழுதைக் கொல்வதாகும் என்று. ஆனால் அதிசயமாக சீதேக்கு இது நல்ல யோசனையாகப் பட்டது. சரியாக அப்போது தீபாவளியும் வரவே அதற்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. வாழ்க்கையில் முதன் முதலாக ஹஸ்பண்ட் பேச்சைக் கேட்க முடிவு செய்தாள் பா மு கழக பிரெஸிடெண்ட்.
அப்புறமென்ன டிவி வந்தாச்சு. அப்புசாமிக்கு ஒரே குஷி. பீமா, ரசகுண்டுவை வரச் சொல்லி (சீதேயிடம் பர்மிஷன் வாங்கித்தான், இல்லாவிடில் வீடு இரண்டு பட்டு விடும்) படம் பார்க்க உட்கார்ந்தார். ‘கேடிவி போடு தாத்தா’ என்று பீமாவும், ‘ஊஹூம் சன் டிவி தான் பெஸ்ட்’ என்று ரசகுண்டுவும் சொல்ல அப்புசாமி இருக்கிற இரண்டு முடியைப் பிய்த்துக்கொண்டார். கடைசியில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து ‘காலையில் சன் டிவி, மதியமே கேடிவி, மாலையில் ஸ்டார் விஜய், நடு நடுவே விஜய், ஜெயா’ (மாலையில் சந்தித்தேன் ட்டூயூனில்) என்று பாரபட்சமில்லாமல் பாட்டு படித்தார்.
பொக்கைவாய்ப் பல்லைத் தேய்த்தாரோ இல்லையோ காபிக்குக் கூட நிக்காமல் டிவி வாய் திறந்தார். ஒரே சந்தோஷம்தான். பீமாவும், ரசகுண்டுவும் தம் பங்கிற்கு சின்ன பாக்கெட் பொரி கடலை வாங்கி வந்து தாத்தா வீட்டு நிலமையை எட்டிப் பார்த்தனர். தாத்தாவை டிவி முன்னாடி பார்த்து குதூகலித்து உள்ளே நுழைந்தனர். தாத்தா தட்டு தடுமாறி சானலை மாற்றுவதை வேடிக்கைப் பார்த்தனர்.
காலையில் சன் டிவியில் ராசி பலன் சொல்லப்பட்டது. தாத்தா ஜாதகத்திற்கு இன்று இராஜயோகம்தான் என்றார் ஆஸ்தான ஜோசியர். ஆமாம் அதிசயமாக கேட்காமலேயே சீதே காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். பாவம் அவருக்குத் தெரியாதது அது வேலைக்காரிக்கு கலந்தது, ஆறியதால் இவருக்கு அடித்தது யோகம் என்று. கேடிவியில் ராமராஜன் மாட்டைத் தொரத்தினான்.
திடீரென்று சுந்தரிக்கு அம்மா இவள் அல்லவே என்று யோசிக்கும்போதுதான் தெரிந்தது சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு ரிமோடில் தட்டி விட்டோம் என்று. சுந்தரியின் கணவன் கார்த்திக்கு இன்னொரு பெண்டாட்டி என்றால் பாக்கியலக்ஷ்மியின் புருஷன் கோபி பழைய காதலியை மறக்கவில்லை. பாவம் இந்த வயசான காலத்தில் இவருக்குப் புரியாத ஒன்று அதெப்படி ஒரே வீட்டில் இருந்து கொண்டே ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லை அவருடைய பெயரையும் சொல்வதில்லை என்று. ‘கண்ணம்மா என் காதலி’ என்ற பாரதிக்கு கண்ணம்மா எப்படி எதிரி ஆனாள்! தூக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது, தேன்மொழியின் தங்கை தமிழ் மணியின் கல்யாணம் இனிதே நிறைவேறியது. எல்லாம் மங்களம்தான். கொஞ்ச நாளிலேயே இவருக்கு அலுப்பு தட்டியது. இதென்னதிது மாமியார் மருமகளை திட்டுவதும், மருமகள் மாமியாருக்கு சாபம் இடுவதும் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது டிவி என்பது ஒரு சாபக்கேடு என்று. நல்ல மருத்துவம், பாடுக்குப் பாட்டு, பட்டிமன்றம் என்றெல்லாம் இருந்தாலும் ‘டிவி நம்மை அடிமைப்படுத்துகிறது, இதன் வலையில் சிக்கக் கூடாது, வெளியில் பீமா ரசகுண்டுவுடன் கோலிக் குண்டு விளையாடுவது உடம்பிற்கு எவ்வளவு நல்லது’ என்று நினைத்தார்.
ரிமோட்டை சீதேக் கையில் திணித்து விட்டு ‘விடுதலை விடுதலை டிவியிலிருந்தும் டிவி சீரியலிருந்தும் இன்றிலிருந்து விடுதலை’ என்று வெளிக்காற்றை ஆனந்தமாக சுவாஸித்தார் சுப்ரீம் ஸ்டார் அப்புசாமி.