மூலம் : ஆஷிதா [ Ashita 1956—2019 ]
தமிழில் : தி.இரா.மீனா
அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்
என் அம்மா என்னிடம் சொன்னது போன்ற அதிகமான பொய்களைஉலகில் யாரும் சொல்லியிருக்க முடியாது. அதை உணர்ந்த நிலை எனக்குள் நிரந்தர ஜுவாலையாய்…
பூஜை அறையில் ஒளிரும் விளக்கின் முன்னால் உட்கார்ந்து கொண்டுஅம்மா இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறாள். கதவருகில் நான் உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, அவள் முகம் தெளிவாகத் தெரிகிறது…
அவள் முன் நெற்றியில் விபூதி, மூக்கில் நழுவிக் கொண்டிருக்கிற கண்ணாடி, படிக்கும் போது மிக மென்மையாக அசையும் அவள் உதடுகள்.
இந்த வயதான காலத்தில் அம்மாவே ஞாபகங்களின் மடிப்பில் மிகப் பெரிய சுருக்கம் போலத் தெரிகிறாள். உடைந்த நகமுடைய அவளுடைய ஆள்காட்டி விரல், புத்தக வரிகளினூடே மிக மெதுவாக நகர்கிறது.
உலகத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததுமான செயல்கள் என்று நான் எதிர்கொண்ட முதல் பொய்யென்பது அந்த விரலின் நுனியிலிருந்து பிறந்ததுதான்.
ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, மூலை கடையில் இருந்த அகமது இக்கா எனக்கு எலுமிச்சை மிட்டாய் தந்தார். அம்மா அதை என் கையிலிருந்து பிடுங்கி, மண்ணில் வீசியெறிந்தாள். “அகமது இக்கா — அந்த ஆள் உனக்கு யார்? வழிப்போக்கர்கள் எதைத் தந்தாலும் வாங்கிக் கொள்கிறாயே ! அப்பா வீட்டுக்கு வரட்டும் ,பார் !” என்று கத்தினாள். முற்றத்தில் பரவிக் கிடந்த எலுமிச்சை மிட்டாய்களை ஒவ்வொன்றாகத் தள்ளிக் கொண்டு எறும்புகள் நகர்ந்தன.
வழிப்போக்கர்களால் தரப்படும் எலுமிச்சை மிட்டாய் போன்றவைகள் ஒருவர் வாழ்க்கையில் தரும் மகிழ்வுகளை மிகப் பின்னாளில்தான் வலியோடு உணர்ந்தேன். ஆனால் அகமது இக்கா கூட ஒரு வழிப்போக்கராகக் கருதப்பட்டது சிறிதும் நியாயமில்லாததுதான்.
என்னிடம் ஓர் இனிமையான வார்த்தை பேசவோ அல்லது அன்பாகப் பார்க்கவோ முடியாமல், தன் வாராந்தர வருகைகளின் போது முழு வீட்டையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிற மனிதர்தான் என் அப்பா!
பள்ளியிலிருந்து திரும்பும் போது, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, வழுக்கைத் தலையை வரண்ட கைகளால் தடவிக் கொண்டு பார்க்கும் பார்வை. இரவு உணவிற்குப் பிறகு தொண்டையைச் செருமி, மிகப் பெரிதாக காரி உமிழும் செயல். வேலைக்காரர்களிடம் கோபமான உறுமல். வார நாட்களில் நான் செய்த தப்புகளுக்காக மொத்தமாக விசில் ஒலியோடு கூடிய தன் சாட்டை கம்பைச் சுழற்றுபவர்– இதுதான் அப்பா.
அப்பா தன் கடுமையை லேசாகத் தளர்த்திக் கொள்ளும் ஒரே ஆள் அம்மாவின் நெருங்கிய உறவான செல்லம்மா அக்காதான். அம்மா, விபூதிச் சாம்பலின் மணமென்றால், செல்லம்மா அக்கா கொழுந்து மல்லிகையின் வாசம், ஒட்டிக் கொள்ளும் மாயச் சிரிப்பு. அவள் சிரிக்கத் தொடங்குவதற்கு முன்பே மார்புகள் குலுங்கும், கன்னத்து தனிக் குழி இன்னும் ஆழமாகும், மூக்குத்தி மின்னிப் பளபளக்கும். செல்லம்மா அக்கா ஒரு முறை கூட எங்கள் வீட்டிற்கு வந்ததாக எனக்கு நினைவேயில்லை.
இருப்பினும், நான் அவளுடைய நிரந்தர இருப்பை உணர்ந்திருக்கிறேன்-
அம்மாவின் சாபங்கள், அப்பாவின் வழக்கத்தை மீறிய அமைதிப் பொழுதுகள், ஒரு முறை அப்பாவின் சட்டைப் பாக்கெட்டில் நான் பார்த்த மல்லிகை மொட்டு என்று. எனக்கு செல்லம்மா அக்காவைப் பிடிக்கும்.
ஆனால்,சில சமயங்களில் அம்மா அப்பாவிடையே நடக்கும் விவாதங்கள் சூடாகும் போது, நான் படுக்கை அல்லது மேஜைக்கு அடியில் ஒளிந்து கொண்டு செல்லம்மா அக்கா செத்துவிட வேண்டும் என்று விருப்பம் இல்லாமலே பிரார்த்தனை செய்வேன். அவள் செத்தும் போனாள்.
செல்லம்மா அக்கா தற்கொலை செய்து கொண்டாள். அம்மா இனிமேல் அழுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது என்று நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். சாவு வீட்டிற்குப் போவதற்காக என்னிடமிருந்த ஒரு நல்ல கவுனை அணிந்து கொண்டேன். “ ஜனங்கள் என்ன நினைப்பார்கள்?” என்று
சொல்லி அம்மா சாயம் போன ஒரு கவுனைத் அணியச் சொன்னாள்.
முரண்பாடான எண்ணங்கள் எனக்குள் எழ , அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாவை வெறித்தேன். சாம்பலைப் போல அவள் முகம் புரிந்து கொள்ள முடியாமல் வெளிறிக் கிடந்தது.
அது இலையுதிர் காலம். நான் நடக்கும் போது காய்ந்த சருகுகளை உதைத்தவாறு நடந்தேன். “நாம் அங்கு போன பிறகு சிரிக்கவோ , விளையாடவோ கூடாது.அவர்கள் எல்லோரும் துக்கத்தில் இருப்பார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.இங்குமங்கும் அலையாமல் அமைதியாக நீ உட்கார்ந்திருக்க வேண்டும்,” என்று மெல்லிய குரலில் அம்மா எச்சரித்தாள்.
“செல்லம்மா அக்கா செத்துப் போனதில் உனக்கு சந்தோஷம்தானே அம்மா?” நான் கேட்டேன். அம்மா தடுமாறினாள்.அவள் தன்னையே மறந்தது மாதிரித் தெரிந்தாள்.எங்கள் இரண்டு பேருக்கும் சிறிது முன்னால் போய்க் கொண்டிருந்த அப்பா நின்று,திரும்பிப் பார்த்தார். அவர் முகம் இருண்டு கிடந்தது. ஒரு குறி போல ,அம்மா தன் வேஷ்டியின் ஒரு முனையை எடுத்துக் கொண்டு கண்ணீரை வரவழைத்து, மூக்கை பலமாக உறிஞ்சினாள். நான் வியந்து போனேன்.அம்மா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நடந்த போது ஆழமான கன்னக் குழி உடைய ஒருவர் கேலியாகச் சிரிப்பது போலிருந்தது.
வீட்டிற்குத் திரும்பும் போது நான் வேகமாக அம்மாவின் பின்னால் ஓடினேன்.“அம்மா , நான் பெரியவளான பிறகு எனக்குப் பிடித்த மாதிரியெல்லாம் பொய்கள் சொல்லலாமா ?’ என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டே விட்டேன்.
அம்மாவின் முகம், அவளுடைய விபூதி அணிந்த முன்நெற்றி உட்பட்ட இடங்களில் மல்லிகையை லேசாக முகர்ந்தது போல கோப வரிகள் வெளிப்பட்டன.
“ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை! ஏன் உன் வாயில் அபத்தமான கேள்விகளே வருகின்றன? கெட்ட குழந்தைகளுக்குத்தான் கெட்ட எண்ணங்கள் வரும்.ஒவ்வொரு கெட்ட எண்ணத்திற்கும் கடவுள் உன்னைக் கண்டிப்பாகத் தண்டிப்பார்,” அம்மா சொன்னாள். யாரோ ஒருவருடைய சிரிப்பின் எச்சம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. நான் வெட்கத்தில் தலை குனிந்தேன்.
தன் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க அம்மா என்னை வெட்கமாக உணரச் செய்தாள் என்று நான் இப்போது உணர்கிறேன். நான் குற்ற உணர்வுடனிருக்க என்னிடம் காரணமிருந்தது. நான் உருவாக்கிக் கொள்ள முயன்ற என் ரகசிய உலகில் ,அம்மாவிடமிருந்து சிலவற்றை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தேன். அம்மாவின் உலகில் செய்யக் கூடியவை,செய்யக் கூடாதவை, ஒழுங்கு முறை , அறிவுரைகள் எனப் பல கட்டுப்பாடுகளிருந்தன. என் சிநேகிதிகளின் வீடுகள், செல்லம்மா அக்காவின் சிரிப்பு,வயல்களிலும், தென்னந் தோப்புகளிலும் வேலை செய்தவர்களுடன் நெருக்கம் என்று நான் கண்டு பிடித்த உலகம் வித்தியாசமாக இருந்தது.
அது வறுமையைச் சொல்லும் நவீனமில்லாத உலகம். ஆனால் நிச்சயமாக ஒரு சுதந்திர உலகம். ஒரு மகிழ்ச்சியான உலகம்.
ஓர் உண்மைக்கும்,பொய்க்கும் வித்தியாசமறியாத குழப்பமான ஒரு குழந்தையாகவே நானிருந்தேன். இருப்பினும் வலி தருகிற உண்மைகளை விட அழகான வண்ணம் கொண்ட பொய்களையே விரும்பினேன்.தண்ணீர் அதன் இயற்கை தன்மையிலிருப்பது போல. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் நான் என் ரகசிய உலகிற்குள்ளேயே அலைந்து கொண்டு இருந்தேன். அம்மாவின் சட்டங்களை உடைத்து ,நிகரற்ற சந்தோஷத்தை அனுபவித்தேன்.வேலைக்காரர்களோடு சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டு அவர்களின் எனாமல் தட்டில் சாப்பிடுவது; அறுவடைக் காலங்களில்
செல்லம்மா அக்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு வயல்களை வளைய வருவது ; காதில் விழுகிற வேலைக்காரர்களின் கெட்ட வார்த்தைகளை மனனம் செய்வது என்று. தடை செய்யப்பட்ட மகிழ்ச்சிகளை அதிகம் அனுபவித்ததால் என் தைரியமும் அதிகமானது.
என் இளம்பிராய பருவத்தின் மாலைப் பொழுது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. இப்போது அம்மா உட்கார்ந்திருக்கிற அந்த விளக்கின் முன்னால் நான் உட்கார்ந்து கொண்டு பிரார்த்தனையினூடே, கடவுளுக்குப் பயப்படாமல், பத்து தடவைகளுக்கும் மேலாக ’வேசி’ என்ற வார்த்தையைச் சொல்லியிருக்கி றேன். பல இரவுகள் தூக்கமின்றி, நகங்களைக் கடித்தபடி, கெட்ட எண்ணங்களுக்காக ஒரு கெட்ட குழந்தைக்குக் கடவுள் சேர்த்து வைத்திருக்கும் தண்டனைகளை நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்திலிருக்கிறது.ஒரு வழியாகத் தூங்கும் போது, கனவுகளில் விசில் ஒலியெழுப்பும் சாட்டை ஒலி கேட்கும், மிகக் கடுமையான கனவுகளில் தண்டனை தரும் கடவுளாக அப்பாவின் முகம் தெரியும்.
ஒருநாள், அப்பா வயலிலிருந்து தூக்கி வரப்பட்டார். வாதம் ஒரு பக்கத்தைத்
தாக்கி விட்டது.அதே நாளில் எனக்குள்ளிருந்த தண்டனை தரும் கடவுள் ஆதரவற்று, முடங்கிய பொய்யாக மறைந்து போனார்.பல வருடங்களுக்குப் பிறகு என் திருமணத்திற்கு முன்னால்,அப்பா செத்துப் போனார்.
சுற்றி வைக்கப்பட்ட நகையின் ஒளியாய், அம்மா இன்னொரு பொய்யை எனக்குத் திருமணப் பரிசாகத் தந்தாள்.வழக்கத்திற்கு மாறாகத் திருமண நாளில் அம்மா என் அறைக்கு வந்தாள். எந்த மணப்பெண்ணையும் போல நான் எழுந்து நின்றேன்,மனதில் கடலளவு எதிர்பார்ப்புகளும் ,பதட்டமான உணர்வுகளுமாக.ஆராய்வது போல என்னைப் பார்த்தாள். பார்வையில் தெரிந்த கவலை என்னை ஆச்சர்யப்படுத்தியது.என் தோளில் கை வைத்தபடி “கனவு காண்பவளாக இனிமேலும் நீ இருக்க முடியாது. விரைவில் நீ புது வீட்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறாய். வீட்டு நிர்வாகம் என்பது விளையாட்டான காரியமில்லை,”சொல்லி விட்டு ஒரு கணம் தயங்கினாள். பின் “ஆணின் மனதில் இடம் பெறுவதற்கு அது ஒன்றுதான் வழி. மறந்து விடாதே .” என்றாள்.
நான் மறந்து விடவில்லை.என் கணவர் நல்ல படிப்பாளி; நாகரிகமானவர்;
இலக்கிய ஆர்வமுண்டு; செய்தித்தாள்களை நான்கைந்து முறை படிப்பார்,
நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை உடையவர். மாவரைப்பது, துணி துவைப்பது ,பாத்திரம் தேய்ப்பது என்று அம்மாவின் வழிகாட்டுதல்களைத் தவறாமல் நான் பின்பற்றினேன். விரும்பியே என் ரகசிய உலகின் கனவுகளைக் கைவிட்டேன். வருடங்கள் கடந்து போக, குழந்தைகளின் அறையிலிருந்து கணவரின் படுக்கை அறை, பின்பு அங்கிருந்து சமையலறை ,மீண்டும் குழந்தைகள் அறை என்று என் இருப்பின் எல்லைகளை முறைப்படுத்தி கணவனின் மனதில் இடம் பெறும் தேடலில் என் பயணம் தொடர்ந்தது. ஆனால் ஒரு நாள் மாலை என் கணவனின் படுக்கை அறைக்குள் சமையல் அறையின் அழுக்கோடும், மணத்தோடும் நுழைந்த போது , வாளிப்பான,சதைப்பற்றான தோற்றத்திற்கு மட்டுமே அலைபவர் என்று புரிந்து கொண்டேன்.
நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்,என் நேர்மையின் மீது யாரோ காரிஉமிழ்ந்தது போல உணர்ந்தேன்.எனக்குள் இருந்த கடலளவு எதிர்பார்ப்புகள்—எப்போது என்னிடமிருந்து மறைந்தன ? ஆணின் மனதில் இடம் பெற ஒரேஒ ரு வழிதான் இருக்கிறது—கடைசியாக நான் உண்மையை உணர்ந்தேன்,
என் அம்மா எனக்கு சொல்லத் தவறிய உண்மை, அவள் என்னிடம் சொன்ன அந்த பொய்யின் தீவிரத்தில் நான் உணர்ந்த உண்மை.
இப்படித்தான் நான் என் அம்மா, பாட்டி அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து முடித்த மற்ற பெண்களின் மொழியில் நான் தேர்ந்தேன் ; மௌனம் என்னும் மொழி. சுய மறுப்பு என்னும் பழக்கம், மறுப்புகளும் ,முரண்பாடுகளும் இருப்பினும் எப்போதாவது பேச்சில் அதன் வெளிப்பாடு என்று. எனக்கு வயதான போது, உறவினர்களும், அக்கம் பக்கத்தவர்களும் நான் அம்மாவைப் போலிருப்பதாகச் சொன்னார்கள்.அவர்கள் கவனிப்பின் உண்மை, கண்ணாடி முன்னால் நிற்கும் போது என்னை திடுக்கிடச் செய்யும். சின்ன ,அற்பமான பொய்கள் தமக்குள் ஒன்றாகி, படிப்படியாக என்னை ஒரு மாபெரும் பொய்யளாக்கி விட்டது.
இராமாயணத்தின் வரிகள் என் காதுகளுக்குள் தவழ்கின்றன. அம்மாவின் வாசிக்கும் ஒலியில் ஏதோ முக்கியத்துவம் புகுந்து விட்டதாகத் தெர்கிறது– அல்லது அது என் கற்பனையா?அவள் கண்ணாடியைக் கழற்றி விட்டு புத்தகத்தை மூடுகிறாள். திடீரென்று படுக்கை அறையின் கதவு திறக்கிறது.
என்னுடைய எட்டு வயதுப் பெண் பட்டுப் புடவையைக் கட்டியிருக்கிறாள், இடுப்பில் பொம்மைக்குழந்தை .“அம்மா, இங்கே பாரேன், நான் அப்படியே உன்னைப் போலவே இருக்கிறேன் அல்லவா ?” சிரித்தபடி கேட்கிறாள்.
என் இதயம் சுற்றுகிறது.அம்மா திருப்தியான சிரிப்போடு அறையை விட்டுவெளியே வந்து, என்னைப் பார்த்து உட்கார்கிறாள்.பிறகு, கவனமாக, கடந்த சில நாட்களாகத் தன்னை எரிச்சல் படுத்திக் கொண்டிருக்கிற கேள்வியை இயல்பான ஆர்வத்தோடு, தினமும் விசாரிக்கும் தொனியில் “ஏன் பாபு உன்னுடன் வரவில்லை? அவனிடமிருந்து கடிதமும் இல்லை.
நீங்கள் இரண்டு பேரும்… நீ….?” ஒரு கணம் பிடிபட்ட மௌனம்.
நான் மிக இயல்பாக “ எதுவும் இல்லை அம்மா. நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம்.ரொம்ப சந்தோஷமாக.” நானும் உலகிலேயே மிக அதிகமாக அம்மாவிடம் பொய் சொல்பவளாகியிருக்கிறேன்.
———————————————————-
மலையாள இலக்கிய உலகில் சிறுகதை,கவிதை ,நாவல்,மொழிபெயர்ப்பு என்று பல்துறை பங்களிப்பு கொண்ட ஆஷிதா கேரள சாகித்ய அகாதெமி, பத்மராஜன், லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். மழை மேகங்கள், விஸ்மயா சின்னங்கள், அபூர்ண அவிராமங்கள், மயில் பீலி ஸ்பரிசம் ஆகியவை அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.
அற்புதமான கதை
வத்ஸலா
LikeLike