ஆவலாதிக் கவிதைகள்
1. சுயத்தால் நேர்ந்த
பாதிப்புகளின் பட்டியல் நீட்டி
தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால்
விளாசித் தள்ளியது
சோதனைகளின் சஞ்சலங்களால்
தூங்காமல் தவித்து
சிவந்த விழிகளுடன்
மறுநாளைத் துவங்கியபோது
முகமன் கூறிச் சிரிக்கிறது
என்ன செய்ய…
2. அந்த நாளின் ஆவலாதிகளை
மனைவியிடம் ஒப்புவித்துக்கொண்டே
அமைதிப்படுத்தியிருந்த
தொலைக்காட்சியை வெறித்திருந்தேன்
ஆறிக்கிடந்தது இரவு உணவு
3. இருவரும் பழகத் துவங்கிய
ஆரம்ப நாட்களில்
முன்னாள் நண்பர்களைப் பற்றி
புகார் வாசித்துக் கொண்டிருந்தோம்
இப்போது
அவனைப் பற்றிய புகாரைத்தான்
நீங்கள் வாசித்து கொண்டிருக்கிறீர்கள்
4. விழுந்த போதெல்லாம்
காயப்பட்டு காயப்பட்டு
சிதிலமானது.
தடுமாறாமல் இருக்க
கற்றுத் தேர்ந்த போது
சுயமிழந்திருந்தது நட்பு