பிறவிப் பெருங்கடலைப் போன்ற சாவுக்கடலைக் கடப்பதற்கு உதவக்கூடிய படகின் முக்கிய பகுதியை கோபத்தில் உடைத்த கில்காமேஷ் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நின்றான்.
சாவை வென்ற உத்னபிஷ்டிம் என்ற அதிசய மனிதனைக் கண்டுபிடித்து அவனிடமிருந்து அந்த ரகசியத்தைப் பெறவேண்டும் என்ற வெறியில் காடு மலை மேடு பள்ளம் கடந்து பலருடன் போராடி சிங்கங்களைக் கொன்று உடல் தளர்ந்து மனம் தளராமல் வந்த கில்காமேஷ் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் மயங்கி நின்றான்.
கில் காமேஷின் பெருமைகளை அறிந்த சாவுக்கடலின் படகோட்டி அவனுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“படகோட்டியே! என தவறுக்கு வருந்துகிறேன். நான் எப்படியாவது சாவுக்கடலைக் கடந்து உத்னபிஷ்டிம் அவர்களைச் சந்திக்கவேண்டும். அதற்கு உடைந்த இந்த இப்படகைச் சரி செய்ய வேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?, சொல்!” என்று வேண்டி நின்றான்.
“கில்காமேஷ் அவர்களே ! உங்கள் பெருமை அறிந்தவன் நான். படகின் சர்ப்பங்கள் நிறைந்த பகுதியை உடைத்து விட்டீர்கள்! அந்தப் பகுதிதான் சாவுக் கடலையும் அதற்குப் பின்னால் உள்ள சாவு ஆற்றையும் அதில் உள்ள மிருகங்களையும் கடந்து செல்ல உதவும். முதலில் நாம் படகைச் சரி செய்யவேண்டும். அது கடினமான காரியமாக இருந்தாலும் முடியாத காரியம் இல்லை. அதற்கு நீங்கள் ஒரு காரியம் செய்யவேண்டும் “
“படகோட்டியே! இப்போதுதான் எனக்கு உயிர் வந்தது போல இருக்கிறது. எதையும் செய்ய வல்லவன் நான். நான் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் சொல்லு” என்றான்.
“அந்த சர்ப்பப் பகுதியை உருவாக்க நூற்றிருபது கழிகள் தேவை. நீங்கள் காட்டிற்குச் சென்று அறுபது முழ நீளமுள்ள கழிகளை வெட்டி எடுத்து வாருங்கள். அவற்றை ஒன்றோடொன்று சேரும்படி பிடுமின் என்ற பசை பூசவேண்டும். அவற்றைப் படகுடன் இணைக்க துளைகள் போடவேண்டும். நீங்கள் கழிகளைக் கொண்டுவாறுங்கள். அதுவரை படகு கவிழ்ந்துவிடாமல் இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் படகோட்டி.
மெய் வருத்தம் பாராத கில்காமேஷ் காட்டின் உட்பகுதிக்குச் சென்றான். அறுபது அடி நீள நூற்றிருபது கழிகளை வெட்டினான். படகோட்டி கூறியது போல அவற்றிக்கு இடையே இடைவெளி தெரியாமல் இருக்க பிடுமின் தடவினான். குறுக்கு விட்டங்கள் அடித்து படகோட்டியிடம் கொடுத்தான். பின்னர் இருவருமாக சேர்ந்து இரவு பக்கம் பாராமல் உடைந்து போன படகைச் செப்பனிட்டார்கள்.பிறகு அதைக் கடலில் மிதக்கவிட்டார்கள். படகு பழைய நிலைக்கு வந்தது குறித்து இருவருக்கும் மிகழ்ச்சி.
தனது இலட்சியத்தை அடைய சாவுக்கடலை மிக வேகமாகக் கடந்தான். சாதாரணமாக நாற்பத்தைந்து நாட்கள் ஆகும் அந்தப் பயணத்தை மூன்றே நாட்களில் இருவரும் கடந்தார்கள். பிறகு சாவு நீர் ஆற்றிற்கு வந்தார்கள். அதுதான் கில் காமேஷின் லட்சியத்தை அடைவதில் இருக்கும் கடைசித் தடை. அதைக் கடாக்கும் வழியை படகோட்டி கூறினான்.
” இதோ வந்து விட்டது சாவு ஆறு. இப்போது நீங்கள் கொண்டுவந்த கழிகளை உபயோகிக்கவேண்டும். ஒவ்வொன்றாக கழிகளை எடுத்து நீங்கள் படகைத் தள்ளுங்கள். நான் படகைச் சரியான அபாதையில் செலுத்துகிறேன். உங்கள் கை நீரில் படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். பட்டால் சாவு இங்கேயே நிகழ்ந்துவிடும். கழிகள் மளக் மளக் என்று சில வினாடிகளில் முறிந்துவிடும். உடனே அடுத்த கழியை எடுத்துத் துழாவ வேண்டும். இப்படி நூற்றிருபது கழிகளையும் உபயோகப் படுத்தவேண்டும். வாருங்கள் புறப்படுவோம்” என்றான் படகோட்டி.
கில் காமேஷ் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டான். நூற்றிருபது கழிகளையும் ஜாக்கிரதையாக உபயோகித்தான். கடைசிக் கழியை உபயோகித்த பின்னரும் இன்னும் கொஞ்ச தூரம் செல்லவேண்டும் என்றிருந்தது. கில் காமேஷ் தன் மிருகத் தோலைக் கழற்றி அதையே வேக வேகமாக வீசிக் காற்றை வரவழைத்துப் படகைச் செலுத்தினான். படகோட்டி கில்காமேஷின் வீடா முயற்சியைப் பார்த்து ஆச்சரியத்தின் வசப்பட்டான்.
கரையை அடைந்ததும் படகோட்டி கில்காமேஷைத் தன் எஜமான் உத்னபிஷ்டிம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
தூரத்தின் தன் படகோட்டியுடன் மற்றொரு புதியவன் வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் உத்னபிஷ்டிம். படகு நாடுக கழி இல்லாமல் தாறு மாறாக வரும்போதே அவன் சந்தேகப்பட்டது சரியாயிற்று. கில் காமேஷைப் பார்த்து, “யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.
” நான்தான் கில்காமேஷ் ! ஊருக் நகரின் மன்னன். அனு என்ற கடவுளின் பராமரிப்பில் வாழும் மாவீரன் நான்!” என்று தயக்கமின்றி வந்தது அவன் பதில்.
” வீரன் என்றால் ஏன் இப்படி மிருகத்தின் ஆடையை ஊடுத்தியிருக்கிறாய்? ஏன் உன் முகம் உலர்ந்து போயிருக்கிறது? ஏன் இப்படி காற்றைப் பிடிக்கத் திரிபவன் போல் இந்த அமானுஷ்யப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
” உண்மைதான். நான் உலகில் யாரும் செய்ய இயலாத கடுமையான பயணத்தை மேற்கொண்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். பனியும் வெப்பமும் என்னைத் தாக்கின. எனக்கு வேண்டியவர்களும் மற்றவர்களும் என்னை இந்த ஆபத்தான பயணத்திற்குப் போகவேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் எனக்கு ஒரு முக்கியக் கடமை ஒன்று இருக்கிறது. என ஆருயிர் நண்பன் எங்கிடுவை சாவுத் தேவன் என்னிடமிருந்து பிரித்துவிட்டான். எனக்காக உயிரையே கொடுத்தவன் அவன். எனது வலது கரம் அவன். தேவ உலகத்துக் காளையை நான் வெற்றி கொள்ள உதவியவன். செடார் காட்டு ஹம்பாபாவை நான் முறியடிக்க எனக்கு வழிகாட்டியாக இருந்தவன். இன்னும் எண்ணற்ற போர்களில் எனக்குத் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டவன். அப்படிப்பட்ட அவன் உயிரைச் சாவுத்தேவன் எடுத்துச் சென்றதை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. அவன் இறப்பதற்கு முன் என்னிடம் கூறியதை என்னால் மறக்கவே முடியாது. ” நண்பா! எனக்கு நேர்ந்த இந்த சாவு என்ற கொடுமை உனக்கு நேரக் கூடாது. எல்வோரையும் வென்ற நீ அந்த சாவுத் தேவனையும் வெல்லவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவனை உயிர்ப்பிக்க என்னால் ஆன மட்டும் முயற்சி செய்தேன். அவன் உடல் புழுத்துப் போக்கும்வரை அவனைக் கட்டிக் கொண்டே இருந்தேன். ஆனால் அவனை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
என நண்பனுக்கு நேர்ந்த கதி எனக்கும் வந்துவிடுமே என்ற மரண பயம் எனக்கும் வந்தது. அதனால்தான் சாவை வெற்றி கொண்ட உங்களைத் தேடி வந்தேன். பல விதமான கஷ்டங்களைத் தாண்டி உங்களிடத்தில் வந்திருக்கிறேன். எண்ணற்ற மலைகள் காடுகள் கடல்கள் நதிகள் எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். இருள் சூழ்ந்த பிரதேசத்தில் திக்குத் தெரியாமல் நடந்து வந்தேன். மது அரசியின் வீட்டிற்கு வரும் முன்னரே என ஆடைகள் கிழிந்து விட்டன. தூக்கத்தின் இன்பம் கூட என்னை விட்டுப் பொய் விட்டது. கொடிய விலங்குகளை எல்லாம் வேட்டையாடி அவற்றின் தோலையே ஆடையாக உடுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு காட்டு மிருகம் போல நான் மாறிவிட்டேன். சாவுக் கடலையும் சாவு ஆற்றையும் உங்கள் படகுக்காரன் உதவியால் தாண்டி வந்தேன்.
ஓ உத்னபிஷ்டிம்! என தகப்பனே ! நீங்கள் கடவுளர்களின் அருள் பெற்றவர்! . இறப்பை வென்ற மாவீரர்! நான் தங்களிடம் வாழ்வு சாவு பற்றிய ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எப்போதும் வாழ்வது என்கிற நித்தியத்தை எப்படி அடைவது என்பதை நீங்கள்தான் எனக்குச் சொல்லித் தரவேண்டும்! நானும் தங்களைப்போல அமரனாக இருக்க விரும்புகிறேன்! தயவு செய்து எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லிக் கொடுங்கள்!” என்று நெஞ்சுருக வேண்டி நின்றான் கில்காமேஷ் !
உத்னபிஷ்டிம் கில்காமேஷை உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு கனிவு தெரிந்தது. கில்காமேஷின் தோள்களில் கையைவைத்து பேசத்தொடங்கினார்!
(தொடரும்)