மழைத் துளிகள்!

இரண்டு நாள் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடாக ஆகியது. அண்ணா சாலை, சி.பி.ராமசாமி சாலை, நூறடி சாலை, ஜி.என்.செட்டி சாலை எல்லாம் அந்தப் பெயர்களுடைய சிறு நதிகளாக, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. சில இடங்களில் பிளாஸ்டிக் படகுகள் மனிதர்களையும், பொருட்களையும் (இதில் உணவுப் பொட்டலங்களும் அடக்கம்) ஏற்றிச் சென்றது. இரண்டு நாட்களுக்கு சென்னை, வெனீஸ் நகரமானது!
வழக்கம்போல் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஏரியின் நடுவில் பாதி மூழ்கிய நிலையில் நின்றுகொண்டிருந்தன. அடுக்கு மேல் அடுக்காகப் போடப்பட்ட பெரிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறிய தெருக்களில் மழைநீர் தேங்க, எங்கும் வெள்ளக்காடு. ஏரிகள், குளங்கள், கடல் என வெளியேறுவதற்கு வழியின்றி, மழைநீர் ஊருக்குள் இடம் தேடி, தெருக்களிலும், சாலைகளிலும் புகுந்தன! 2015 ஆம் ஆண்டு வெள்ளத்திலிருந்து நாம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை, கற்றுக்கொள்ளவும் போவதில்லை!
மேகம் கருத்தவுடன் அம்மாவின் முதல் கவனம் வெளியில் காயும் துணிகளும், வடகம், வற்றல் போன்றவையும்தான் – வானத்தைப் பார்த்து முன்னெச்சரிக்கையாக, மழைக்காலத்தை எதிர்கொண்டவர்கள் – குடைகள், உடைகள், மெழுகுவர்த்திகள், விளக்குகள், மண்ணெண்ணை (இன்வெர்டர், ஜெனெரேட்டர் எல்லாம் அதிகம் புழங்காத காலம்) என தயார் நிலையில் வீடு இருக்கும். ஒரு வீட்டிற்கே இவ்வளவு முன்னேற்பாடு என்றால், ஒரு பெரிய நகரத்திற்கு எவ்வளவு கவனமும், முன்னெச்சரிக்கையும் தேவை?
மின்சாரமின்றி, இரண்டு நாட்கள் வீட்டில் முடங்கிய போது அசை போட்ட சில நினைவுகள்…..



சிதம்பரம் வீட்டில் நான்கு தாழ்வாரங்கள் – நடுவில் முற்றம். மழை பெய்யும்போது, ஓட்டுக் கூரையில் வழிந்து, முற்றத்தின் நான்கு பக்கமும் வெள்ளிக் கம்பிகளாய் நீர் விழுவது – நீள் மணிகள் கோர்த்த திரைகளைப் போல – பார்க்கப் பரவசமாய் இருக்கும். அந்தக் கால சிமெண்ட் அல்லது ரெடாக்ஸைட் தரை, மழையில் ஈரித்துக் குளிர்ந்திருக்கும் – வழுக்காமல் இருக்கவும், தாழ்வாரத்தில் படுக்கவும் சணல் மணத்துடன், ‘சாக்கு’கள் (அரிசி வரும் சாக்குப் பைகள், பிரிக்கப் பட்டவை) விரிக்கப்படும். அவை தரும் கதகதப்பும், நிம்மதியான தூக்கமும் இன்றைய மெத்தைகளில் கிடைக்காது. பிரிக்கப்பட்ட இரண்டு, மூன்று சாக்குப் பைகளை இணைத்துத் தைத்து ஒரு பெரிய திரை (‘படுதா’ என்பார்கள்) – தாழ்வார ஓரங்களில் தொங்க விடப்படும் – சாரல் அடிக்காமல் இருக்கவும், ஓரளவிற்குக் குளிரைத் தடுக்கவும்!
சுடுநீர், வறுத்த வேர்க்கடலை, சூடான ரஸம் சாதம், பொறித்த வடகம், சில சமயங்களில் சூடான பஜ்ஜி, டீ – மழைக்கேற்ற, ருசியான, ஆரோக்கியமான உணவு!
காகிதக் கப்பல் (கத்திக் கப்பலும் உண்டு – ஆனால் சீக்கிரமே தரைதட்டிக் கவிழ்ந்துவிடும்!) நீரோடு சென்று ஒரு கல்லில் முட்டி நிற்கும் அல்லது வேகமாக மிதந்து, கவிழ்ந்து மறைந்துவிடும்.
இன்று விதம் விதமாகக் குடைகள் – அந்நாளில் ’தாழங்குடை’ – பெரிய பனை மட்டையில் செயதது, இரண்டு பேர் தோள்கள் நனையாமல் மழையில் செல்லலாம்! – மடக்க முடியாது, அப்படியே திண்ணையில் வைத்துவிட்டால், நீர் வடிந்து, காய்ந்துவிடும்! வேகமான காற்றில், மேல்நோக்கி விரிந்து, கருப்பு ‘டிஷ்’ ஆண்டென்னா போலாகிவிடும் அபாயமில்லாதது! கவிழ்த்துப் போட்டு பரிசில் போல ஆற்றைக் கூடக் கடக்கலாம்!
‘ரெயின் கோட்டுகள்’ அரிது – மழையிலிருந்து காப்பாற்றி, வீட்டில் கழற்றும்போது அணிந்தவரை நனைத்துவிடும் அபாயமும் இல்லை!
மழைநீர் ஓடி, ஊருக்கு வெளியே ஓடைக்கரை வழியே பாலமான் ஆற்றில் கலந்து, வீராணம் ஏரிக்கோ, கடலுக்கோ சென்றுவிடும். அப்போதெல்லாம் அடுக்கு மாடிக்கட்டிடங்கள், ஏரிகளில் வீடுகள் போன்ற அபத்தங்கள் கிடையாது!
தி.நகரில் நாங்கள் இருந்த சைட் போர்ஷன் – மூன்று அறைகளிலும் மைசூர் ஓட்டுக் கூரை – வெளியில் பெய்யும் மழையில் பாதியளவு வீட்டினுள்ளும் ஒழுகும்! மாடிப்படிகளுக்குக் கீழே உள்ள நாலுக்கு இரண்டடி இடம்தான் காய்ந்திருக்கும்! போர்ஷனுக்கு அருகில் இருந்த வயதான மாமரம், காற்றி ஆடும்போதெல்லாம், அம்மாவை பயம் தொற்றிக்கொள்ளும் – மேலே விழுந்து, குழந்தைகளுக்கு ஏதாவதாகி விடுமோ என்ற பயம். பயத்தில் தூங்காமல் கழித்த பல மழை இரவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. விறகடுப்பு, ஸ்டவ், குமுட்டி இவற்றில் சமைத்த சூடான சாப்பாடு! பிசைந்து, கையில் கொடுக்கும் அம்மாவின் பாசத்திற்காக எத்தனை மழை நாட்களையும் சகித்துக்கொள்ளலாம்!
உணவைச் சேமித்து மேடான இடத்திற்கு வரிசையாய்ச் செல்லும் எறும்பும், தோகை விரித்தாடும் மயிலும், வானம் பார்த்து ஒலியெழுப்பும் எருமையும், அடுப்பங்கரையில் பதுங்கும் பூனையும், தாழ்வாகப் பறக்கும் பறவைகளும் மழை வருவதை நமக்குத் தெரிவிப்பது இன்றைய் வானிலை முன்னறிவுப்புகளின் முன்னோடிகள்!
சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு செண்ட் பாட்டில் கொடுத்தார். திறந்ததும், மழை பெய்யும்போது வரும் ‘மண்’ வாசனை அடித்தது! மிகவும் வியக்கத்தக்க வகையில், மழை கிளப்பிவிடும் அதே மண் வாசனை! அறிவியல் முன்னேற்றம் மழை பெய்யச்செய்யும் பாக்டீரியாவை (சூடோமோனாஸ் சிரஞ்சி) உருவாக்கி, செயற்கை மழையையே பெய்யச்செய்யும் போது, மண் வாசனை ஒன்றும் சிரமமானதல்ல – ஆனாலும், மழையின்றி, அது ஏற்படுத்தும் மண் வாசனையை சின்னக் குப்பியில் கொடுக்கும் அறிவியல் வியப்புதான்!
மழை அளவைக் கணக்கிட ‘மழை மானி’ உண்டு. ஒரு மில்லிமீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டர் நிலத்தில் பெய்யும் ஒரு லிட்டர் மழை நீரைக் குறிக்கும் – ஓர் ஊரில் பெய்யும் மழை அளவைக் கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு சதுர மீட்டரில் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்திய சென்னை மழை கிட்டத்தட்ட 200 மில்லிமீட்டர் என்றால் 200 லிட்டர்/சதுர மீட்டர் – இதை சென்னையின் பரப்பளவால் பெருக்கினால் வரும், குறிப்பிட்ட நேரத்தில் பெய்த மழையின் அளவு!
இந்தியாவின் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி, மெளசின்ரம் இடங்களில்தான் அதிக அளவு மழை பெய்கின்றது (சராசரி 11,450 முதல் 11,900 மிமீ வரை).
நம் சினிமாக்களில் பெரும்பாலும் மழை, சோகக் காட்சிகளிலும், வன்முறை காட்சிகளிலும், கதாநாயகி கற்பிழக்கும் காட்சிகளிலும் கொட்டித்தீர்க்கும்! சர்வர் சுந்தரம் படத்தில் ஸ்டூடியோவில் மழைக் காட்சி எடுப்பதைக் காட்டியிருப்பார்கள் – காற்றுக்குப் பெரிய ஃபேன், ஒருவர் காய்ந்த இலைகளையும், சிறகுகளையும் வீசியபடி இருப்பார், மேலே ஷவர் போல நீரைக் கொட்டுவார்கள் – மழையில் ஒரு பொம்மைக் குதிரையில் கதாநாயகன்! டிவி யில் காட்டப்படும் பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் ஒரு மழை எல்லாக் காட்சிகளிலும் தெரியும் – அது ஓட்டித் தேய்ந்த பழைய ரீல்களில் விழுந்த கீறல்கள் – நிஜ மழையல்ல!
மழை என்றவுடன் வான் சிறப்பு எழுதிய வள்ளுவன், சங்கப் பாடலகளில் மழை எனப் பல நினைவுகள். கவிஞர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது மழை.
“உன்னோடு பேசுகிறேன்……
விட்டு விட்டுப்
பெய்யும் மழைபோல்
உன் நினைவை
தொட்டு தொட்டுப் பார்க்கிறது மனது. – பார்கவி (நன்றி: Eluthu.com)
1979 அல்லது 80 – இரவு பதினோரு மணிக்கு, மழையில் மைலாப்பூர் நண்பர் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் முழுவதும் நனைந்துவிட்டேன் – இடுப்பு வரை தண்ணீர் – தட்டுத் தடுமாறி நடந்து (நீந்தி!) வந்து, பஸ் ஏறி தி.நகர் வந்து சேர்ந்தேன். மறு நாள் செய்தி: நான் நடந்து வந்த அதே நீர்த் தேக்கத்தில் ஒரு லைவ் மின்சார ஒயர் அறுந்து விழுந்து, ஒருவர் பலி! தப்பித்தேன்.
நாம் மழையைக் கொண்டாடுவோம் – அதற்குரிய மரியாதையைக் கொடுப்பதுடன், நாமும் பாதுகாப்பாக இருப்போம் – கொண்டாட உயிர் வேண்டுமல்லவா?
அருமையான நினைவுகள். சிறப்பான சொற்சித்திரம். வாழ்த்தும் பாராட்டும் அன்பும், டாக்டர்
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike