கண்டராதித்தன்
இராஜாதித்தன் முன்கதை:
வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருந்த சோழ நாடு, இராட்டிரகூட, கங்க கூட்டணியுடன் போரிட்டது.
இப்போரில், சோழ இளவரசன் யுவராஜா இராஜாதித்தன் அகால மரணமடைந்து, சோழர்கள் பெரும் தோல்வியைத் தழுவினர்.
சோழவளநாடு சோகமுடைத்தது!
இனி வருவது காண்போம்.
இராஜாதித்தனின் மரணம் சோழப்படையை கட்டுக் குலைத்தது. குழப்பமடைந்த சோழப்படை, இரவோடு இரவாக, தஞ்சை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கியது. இராட்டிரகூட கிருஷ்ணன் வெற்றியால் கெலித்தான்.. களித்தான்.. குதூகலித்தான். “பூதுகா! உன்னால் தான் இந்த வெற்றி!” என்று அவனைப் பாராட்டினான். அவனுக்குப் பரிசுகள் பல அளித்தான்.
பராந்தகனால் இந்தப்பேரிடியைத் தாங்கமுடியவில்லை. தூண் போல உறுதியாக இருந்த யுவராஜா இராஜாதித்தசோழன் சாய்ந்தான். எதிர்காலச் சோழர் நிலைமை கேள்விக்குறியானது.
சோழநாட்டை விரிவாக்கும் கனவு நொறுங்கியது.
இராஜாதித்தனின் தம்பி – கண்டராதித்தன் சிவன்பால் பற்று கொண்டு – போர்களில் அதிகமாகப் பங்கு பெறாமலிருந்தான். அவன் தம்பி அரிஞ்சயன் போர்களில் பங்கு பெற்றிருந்தான். தக்கோலப்போரிலும் காயங்கள் பட்டு சாகசம் செய்து, வீரத்தை வெளிப்படுத்தியிருந்தான்.
பராந்தகன் தன் மகன்களை அழைத்தான். அத்துடன் கண்டராதித்தனின் புது மனைவி மழவர் மகள் செம்பியன் மாதேவியையும், அரிஞ்சயனின் மகன் சுந்தரனையும் அழைத்தான். பராந்தகன் பேசினான்: “இராஜாதித்தன் மரணம் நம்மை வேரோடு ஆட்டிவிட்டது. சோழர்களது எதிர்காலம் இருண்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது. நாட்டு நிலைமை என்ன? முதலில், தொண்டை நாட்டு நிலைமை என்ன?” -என்றான்.
அரிஞ்சயன்: “தந்தையே! அண்ணனின் மறைவினால் சிதறிய நம் சோழப்படை இப்பொழுது கட்டுப்பாட்டில் உள்ளது. தொண்டை மண்டலத்தை நாம் இழந்தாலும், கிருஷ்ணன் படைகள் தஞ்சை வர இயலாது தடுத்து விட்டோம். கிருஷ்ணனின் படைவீரர்கள் இன்னும் தொண்டை மண்டலத்தில் தங்கு தடையின்றி சுழன்று வருகின்றனர். ஆனால், தொண்டை மண்டலம் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆங்காங்கே இருக்கும் சிறு குறுநில மன்னர்கள் அந்தப்படைகளுக்கு இன்னல் விளைவித்து வருகிறார்கள். நமது வீரர்கள் மாறுவேடத்தில் அங்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி – அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணனின் சிறுபடையொன்று சோழ நாட்டைச் சுற்றி ராமேஸ்வரம் சென்றுள்ளது. அவன் படைகளின் பெரும் பகுதி மானியக்கேது திரும்பிவிட்டது”
“பாண்டிய நாட்டு நிலை?” என்றான் பராந்தகன்.
“நமது தோல்வியால் தினவெடுத்த வீரபாண்டியன் துளிர்த்து எழுந்துள்ளான். இராஜசிம்மன் மரணத்திற்குப் பின் வீரபாண்டியன் இப்பொழுது மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு ஆளுகிறான். தாங்கள் ஆணையிட்டால், வீரபாண்டியன் மீது படையெடுத்துச் செல்வோம்” – என்றான் அரிஞ்சயன்.
பராந்தகன் தலையசைத்தான்.
“அரிஞ்சயா! உன் வீரத்தின் மீது எனக்கு அவநம்பிக்கை என்றுமே இல்லை. ஆனால் இன்றைய நிலையில் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. எனது வாழ்வின் அந்திம காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு, இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதே உசிதம்” என்றான்.
அனைவர் கண்களும் சற்றுக் கலங்கியது.
கண்டராதித்தன் பேசினான் “தந்தையே, முதலில் நாம் நமது படைதனைச் சீராக்க வேண்டும். காத்திருக்கவேண்டும். மேலும் சில கோவில் திருப்பணிகள் காத்திருக்கின்றன. அவற்றைத் தாங்கள் செய்து அமைதியுறவேண்டும். சோழ எல்லைகளுக்குள் நாம் இன்று கூட்டுப்புழு போல இருக்கிறோம். காலம் கனியும் போது பட்டாம்பூச்சியாக பறப்போம். அகலக்கால் வைக்காது – சிறிது சிறிதாக சோழநாட்டைப் பேரராசாக்குவோம்.”- என்றான்.
பராந்தகன்: “சரியாகச் சொன்னாய் கண்டராதித்தா! அரிஞ்சயனும் போரில் காயமுற்றிருக்கிறான். அவனுடைய மகன் பராந்தகன். என் பெயர் கொண்டவன். – சுந்தரன் என்று அவனுக்குப் பெயர் பொருத்தமானதே! நல்ல வீரனாக இருக்கிறான். அவனை இந்தப் பாண்டியர்களைக் கவனித்து, அவர்கள் மேலும் துள்ளாமல் பார்த்துக் கொள்ளச் செய்யவேண்டும்” – என்றான்.
பராந்தகன், மேலும் : “உடனே நாம் கண்டராதித்தனுக்கு யுவராஜாப்பட்டம் கட்ட வேண்டும். அரிஞ்சயா! நீ தான் கண்டராதித்தனைக் கண்ணும் கருத்தாக்கப் பாதுகாக்க வேண்டும்.” என்றான்.
பிறகு, பராந்தகன் கண்டராதித்தன், அவனது மனைவி செம்பியன் மாதேவி இருவரையும் அழைத்தான். அந்தரங்க அறையில் மூவரும் சந்தித்தனர்.
பராந்தகன்: “கண்டராதித்தா! நீ ஒருநாள் சோழ மன்னனாகாகக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிவபக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் இருவரும் கூட அதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். காலம் செய்த கொடுமை தானோ – காலன் இராஜாதித்தனைக் கவர்ந்தான். சிவன் சித்தம் இப்படியிருக்குமானால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றான்.
“தந்தையே! இறைவன் திருவுள்ளத்தை யாரே அறிய இயலும்? இந்த மழவர் மகள் இன்னும் பிள்ளை பெறவில்லை. வாரிசும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் அரசுப்பணியை விடச் சிவன் பணியே உகந்ததாக நினைக்கிறோம். ஆகவே எனக்குப் பட்டம் கட்டுவதை விட மாவீரன் தம்பி அரிஞ்சயனையே யுவராஜாவாகச் செய்வது உத்தமம்” என்றான்.
செம்பியன் மாதேவியும் “தந்தையே அவ்வண்ணமே செய்யுமாறு நானும் கோருகிறேன்” என்றாள்.
பராந்தகன் கண்ணில் ஒரு துளி திரண்டது.
“கண்டராதித்தா! மாதேவி! உங்கள் இருவரது மனங்கள் பொன் போன்றது. நீங்கள் சொல்வதற்கு நான் ஒப்பினாலும் அது நடவாது. அரிஞ்சயனிடம் நான் தனியாகப் பேசினேன். அண்ணனிருக்க தான் அரசனாவது ஒருநாளும் நடவாது என்று அடித்துச் சொல்லிவிட்டான். உன் தம்பி ஒரு தங்கக் கம்பி”, என்றான்.
கண்டராதித்தன், மாதேவி இருவரும் நெகிழ்ந்தனர்.
பராந்தகன் தொடர்ந்தான்:
“ஆனால் ஒன்று சொல்வேன். குடந்தை ஜோதிடர் நமது குடும்ப ஆஸ்தான ஜோதிடர். அவர் உன் ஜாதகத்தைப் பார்த்து – சிவநெறியுடனும், மன்னராகவும் இருப்பாய் என்றார். ராஜாதித்தன் உயிரோடு இருக்கும் போதே அவர் இப்படிச் சொன்னபோது, எனக்கு அவரிடம் கோபம் தான் வந்தது. இப்பொழுது அது உண்மையாக நடக்க உள்ளது. மேலும் உனக்கொரு மகன் பிறப்பான். அந்த மாதேவியின் மகனும் பின்னாளில் சோழ நாட்டை ஆளுவான் என்றார் அந்த சோதிடர்.”
இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.பராந்தகன் தொடர்ந்தான்.
“ஒரே ஒரு வேண்டுகோள். நீ அரசனான பின் உன் மகன் சிறுவனாக இருந்தால், அரிஞ்சயனை யுவராஜனாக்கி, உன் மகன் பெரியவனாகும் வரை பொறுத்திருந்து அவனை மன்னனாக்கவேண்டும். ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை இல்லாமல் போனால், அரிஞ்சயனுக்குப் பிறகு அவன் வாரிசுகள் சோழ ராஜ்யத்தை ஆள வேண்டும். மாதேவி, இளையவள் நீ! நீ தான் இதை செயலாற்ற வேண்டும். நமது சோழநாட்டுக்கு நாம் இதைச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்” – என்றான்.
“இது எங்கள் தலையாய கடமை” என்றாள் மாதேவி. கண்டராதித்தன் ஆமோதித்தான்.
கண்டராதித்தன் யுவராஜாவானான்.
விரைவில், பராந்தகன் பரலோகமெய்தினான்.
குடந்தை ஜோதிடரின் வாக்கு பலித்தது.
கி பி 950: கண்டராதித்தன் மன்னனானான்.
மாதேவிக்கு மகனும் பிறந்தான்.
கண்டராதித்தன், பராந்தகன் ஆணையிட்டபடி அரிஞ்சயனுக்கு யுவராஜா பட்டம் கட்டினான்.
சிவஞான கண்டராதித்தர் தில்லைப்பதியில் எழுந்தருளிய நடராசப் பெருமானிடத்தும், திருவாரூர்த் தியாகேசப் பெருமானிடத்தும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான்.
பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்தான்.
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அது இப்போது கண்டிராச்சியம் என வழங்குகிறது.
பராந்தகன் வென்று இழந்த பாண்டிய நாட்டை வெல்வது தன் கடமையாக கண்டராதித்தன் நினைத்தான்।
கி பி 953- சோழப் பாண்டியப் போர் சேவூரில் நடந்தது.
சேவூர்ப்போரில், வீரபாண்டியன் படைகள் வெற்றி பெற்றன.
வீரபாண்டியன் ‘சோழன் தலை கொண்ட கோவீரப்பாண்டியன்’ என்று கல்வெட்டுகளில் பொறித்தான். சோழன் தலையை வெட்டிக் கால்பந்தாக உருட்டி விளையாடியதாக வீரபாண்டியன் பெருமை கொண்டான். அந்த சோழன் யார் என்பது குறித்து விபரம் அறியப்படாததால் சரித்திர ஆய்வாளர்களுடன் நாமும் சேர்ந்து குழம்பி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். அது பராந்தகனோ? கண்டராதித்தனோ? அரிஞ்சயனோ? எந்த சோழன் என்று கல்வெட்டுகள் எதுவும் குறிப்பிடப்படாமையால் ஒரு வேளை மற்ற இளவரசரகளில் ஒருவனோ’?
எதுவாயினும், சோழர்கள் இந்தத் தோல்வியையும், ‘தலை போன விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு (சுந்தர சோழன் மகன்) அன்று பதினொரு வயது. ஆவேசப்பட்டுவிட்டான். ‘இதே சேவூரில், இதே பாண்டியனின் தலையை வெட்டி தஞ்சைக்குக் கொண்டு வந்து கோட்டையின் நடுவேன்’ என்று அந்தச் சிறுவன் சபதமிட்டான். அந்தப் பிஞ்சு வயதில் இப்படி ஒரு வீரமா? அல்லது வீரமென்ற பெயரில் அப்படி ஒரு கொலைவெறியா? காலம் பதில் சொல்லும்.
கண்டராதித்தனின் முதல் மனைவி வீரநாராயணி முன்பே இறந்து விட்டார் என்பது முன்பே கூறினோம். இரண்டாம் மனைவி – இள மனைவி – மழவ நாட்டின் இளவரசி செம்பியன் மாதேவி- மகாராணி ஆனாள். இவள் தன் வாழ்நாளில் ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியில் சோழ நாட்டு வளர்ச்சியைப் பார்த்திருந்தார்.
பட்டத்திற்கு வந்த பின் ஒரு பிள்ளை பிறந்தது. மதுராந்தகன் என்று பெயரிட்டனர். இவள் சிறந்த சிவபக்தர். கோனேரிராஜபுரம் (திருநல்லம்) திருவக்கரை முதலிய சிவாலயங் களுக்குத் திருப்பணி புரிந்தாள். சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் இவள் `மாதேவடிகள்` என்ற சிறப்புப்பெயர் பெற்றாள்.
கண்டராதித்தரன் தமிழில் புலமை பெற்றிருந்தான். தில்லைப் பெருமானைப்பாடிய திரு விசைப்பாப் பதிகம் ஒன்று.
957: ஏழு வருடம் அரசனாக இருந்து, தமிழ் வளர்த்து, சிவப்பணி செய்து, சோழ நாடு மேலும் சுருங்காமல் காத்து ஆண்ட கண்டராதித்தன் மரணம் அடைந்தான். ‘மேற்கெழுந்திய தேவர்’ என்று கல்வெட்டுகள் கூறுகிறது. கடைசி நாட்களில் அவன் கங்க நாட்டு மைசூர் பகுதியில் இருந்தான் என்று அறியப்படுகிறது. செம்பியன் மாதேவி தம் புதல்வனைக் காக்கும் கடமையை மேற் கொண்டு, தாமும் உடன்கட்டை ஏறாது, உயிருடன் வாழ்ந்தாள். வாழ்ந்தது மட்டுமல்லாமல், பயண தலைமுறை சோழ அரசர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே திகழ்ந்தாள்.
சோழ வரலாற்றில், கண்டராதித்தன் ஒரு துளியானாலும், அவன் ஆற்றிய பணியை சரித்திரம் மறக்காமல் பேசுகிறது. சிறு துளி பெருவெள்ளமாகும் நாள் தொலைவில் இல்லை. சரித்திரம், இனி வரும் கதைகளைச் சொல்லவும் துடிக்கிறது.
(தொடரும்)