ஸோஷியல் வர்க் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆலோசகரான ஆரம்பக் காலகட்டத்தில், எப்படியோ நேரத்தைக் கண்டெடுத்து ஹாஸ்பைஸில் (Hospice அதாவது வலிநிவாரணி பராமரிப்பு / இறப்பு நிலை உதவி இடம்/ மருத்துவமனை) தொண்டு செய்து வந்தேன். மனம் உருகும். அவர்கள் துணிந்து எதிர்கொள்ளும் வெவ்வேறு போராட்டம் ஊக்குவிக்கும். வாழ்க்கையின் அத்தனை நிறங்களைப் பார்க்க முடிந்தத
இவர்களின் இந்த நிலையைப் பற்றி விரிவித்தது எலிசபெத் க்யூபுலர்- ராஸ் (Elisabeth Kübler-Ross) அவர்கள் எழுதிய “ஆன் டெத் அண்ட் டையிங்” (“On Death and Dying”) புத்தகம். மரணத்தின் தறுவாயில் இருப்பவரின் பகிருதல், நோயின் வலியை எதிர்கொள்ளும் விதத்தை, தவிக்கும் நபர்களின் அனுபவத்தைச் சித்திரித்து இருந்தார். ஸோஷியல் வர்க் முதுகலை பட்டப்படிப்பில் மெடிகல் ஸோஷியல் வர்க் பாடத்தில் படித்ததிலிருந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் என்னைத் தூண்டியது.
அன்றும் அதே ஆர்வத்துடன் போயிருந்தேன். நிறுவனத்தின் நுழைவாயிலிருந்த அந்தப் பெண்மணியை, “வாய மூடு. இங்க இரு” என்று அதட்டிய படி, அவள் என்ன என்று தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் முன் உள்ளிருந்து காவி வேட்டி ஜிப்பா அணிந்த இளைஞன் அவளது வாகனத்துக்கு அருகில் வந்தான். அவளைப் பார்த்து “காசு கட்டணமாம், உன்கிட்ட இருக்கும், கொடுத்து விடு, வா அப்பா” எனச் சொல்லிக் கொண்டு கார் கதவை மூடினான். அவளை அங்கேயே விட்டு விட்டு இருவரும் சென்று விட்டார்கள்.
வெட்கம், சஞ்சலங்கள் கலந்து அவள் முகம் சிவந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டவாறே அவளைக் கைதாங்கி உள்ளே அழைத்துச் சென்றேன். பல முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
சென்றவர்கள், கணவன் ரகு, மகன் ஆஷிஷ் என்றாள். தான் ஐம்பது வயதான சூரியகாந்தி, பேக்கரி நிறுவனம் நடத்துவதாகவும், பலருக்கு கற்றுத் தருவதாகவும் ஒரு சுருக்கமான அறிமுகம் செய்து கொண்டாள். உள்ளே நுழைந்ததும் அவளுடைய பையைத் துளவி, ஒரு துணியில் கட்டி வைத்திருந்த பணத்திலிருந்து சேர்வதற்கான தொகையைக் கட்டிவிட்டாள். ஒரு சிறு புன்னகை வந்து மறைந்தது.
நிறுவனத்தின் விதிகளின்படி ஊழியர்கள் அவளை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். தனி அரை. எல்லா அரைகளின் ஜன்னல்களும் தோட்டத்தைப் பார்க்கும் படியாகக் கட்டிடத்தின் அமைப்பு. வெட்டவெளியாக இருப்பதால் பல பறவைகள் அங்கே வரும். இதமான சூழலை உருவாக்கும்.
மருத்துவ பரிசோதனை நடந்தது. சூரியகாந்தி புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். அதன் பயன் குறைந்தது, உயிரோடு இருக்கப் போவது நாலைந்து மாதமே என்றதும் எந்த சிகிச்சையும் வேண்டாம் என முடிவு செய்தாள். வலியைத் தாங்க முடியாமல் அழுதாள். அவளுடைய உடல்நிலையில் அவளைக் கவனித்துக் கொள்ளக் கணவன் ரகுவிற்கோ மகன் ஆஷிஷிற்கோ பிடிக்கவில்லை என்பதால் இங்குச் சேர்ந்தாள். இந்த இருப்பிடமும் சூரியகாந்தி தானே தேடியது. 1980களில் இப்போது போல அல்ல, இதுபோன்ற நிர்வாகம் ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன.
சூரியகாந்தியின் மெடிக்கல் ஸோஷியல் வர்கராக என்னை நியமிக்கப் பட்டது. தொடங்கினேன். ஒவ்வொருவருக்கும் இவ்வாறே. எங்களுடன் ஆன்காலஜிஸ்ட், ந்யூட்ரிஷனிஸ்ட், ஆன்மீக ஆய்வாளர், ஃபிஸியோதெரபிஸ்ட் எனக் கைகோர்த்து ஹோலிஸ்ட்டிக்காக அந்த நபருக்கு ஏற்ப ஒரு அணியாக (டீம்) பார்த்துக் கொள்வோம்.
உளவியல் சம்பந்தப்பட்ட பல வேதனைகளைச் சுமந்து வந்தவர் தான் சூரியகாந்தியும். தானாகத் தேடி, வந்து சேர்ந்திருந்தாலும் சூரியகாந்தி இங்கு இருப்பது தனக்கு வேதனை அளிக்கிறது என்றாள். அங்கே பலருக்கு இவ்வாறு தோன்றுவது சகஜம். காரணம், தான் புறக்கணிக்கப் பட்டதாகத் தோன்றுவதுதான். இதனால் மனம் துடிதுடிக்க, உடல் நலனை மேலும் பாதிக்கும். பாதித்தது. சூரியகாந்தி உடல்நிலை சரிந்தது. அடுத்த ஸெஷன் பல நாட்களுக்கு பிறகே நடந்தது. உடல் நிலையில் பல மேடு பள்ளங்கள் இருப்பதால் ஸெஷன்கள் கணித்து வைத்தது போலப் போகாது. அப்படித்தான் நடந்தது.
வாழும் காலம் பாதிக்கப்பட்ட நிலை வேறு. சூரியகாந்தி நிலைமையைச் சிறிதளவாவது சமாதானம் செய்யப் புதிதாக வகித்தேன். அதனால் தான் இந்த புறக்கணிக்கப்பட்ட நினைப்பைப் பற்றி ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.
சூரியகாந்தி இங்குச் சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள “வேறுபடியாக இருந்திருந்தால்?” என்ற கற்பனைச் சூழலை ஸெஷன்களில் ஆராய்ந்தோம். புறக்கணிப்பு இவளுடைய உடல் நலன் சரிய ஆரம்பித்ததுமே தொடங்கியது. அதை இப்போது உணர்ந்தாள். ரகு, ஆஷிஷ் கொண்ட கோபம் சூழலை மேலும் ஆக்கிரமித்து கடினமாக்கி இருந்திருந்தது. விளைவு? வீட்டில் கவனிப்பார் இல்லாமல் போனது. இப்போதும் ஆஷிஷை கைப்பேசியில் பலமுறை அழைத்தாள். அவனும் ரகுவும் தொந்தரவு செய்யாதே என்று பேச்சைத் துண்டித்து விட்டார்கள்..
ஒரு விதத்தில் மறைமுகமாக இந்தத் தோரணை உதவியது.
இங்கே முன்பின் தெரியாதவர்கள் அன்பு காட்டுவது முதலில் சூரியகாந்தியை வாட்டியது. மனம் ஆறவில்லை. ஒப்பிட்டுப் பார்க்க, யதார்த்தம் வென்றது. இங்கே அரவணைப்பும், கவனிப்பும் மனதைச் சமாதானம் படுத்தியது. ஏற்றுக்கொண்டாள்!
இந்த தெளிவு பிறந்ததுமே மனதை வருடியதைப் பகிரத் தொடங்கினாள். ஆஷிஷ் இப்போது தான் ஏதோ வேலை என்ற பெயரில் சம்பாத்தியம். ஆன்மீகம் தான் இஷ்டம் என்று ஏதோ ஒரு ஆசிரமத்தில் வேலை செய்கிறானாம். போன மாதம் அவன் சாரு என்ற பெண்ணை அழைத்து வந்து வீட்டில் அவனுடன் இருப்பாள் என அறிவித்தான். ரகு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தான். சில மணிநேரம் கழித்து அவனே “மாடர்ன் டைம்ஸ்” எனச் சொல்லி விட்டது தனக்கு வியப்பளித்தது என்றாள். தன் கருத்தைக் கேட்காதது துன்பம் தந்தது என்றாள்.
இதையே மையமாக வைத்து மேலும் உரையாடினோம். இந்நாள்வழியில் பிள்ளைக்குச் சலுகைகள் குவித்து வைத்ததை வர்ணித்தாள். பள்ளிக்குச் செல்ல மறுக்கும்போதோ, நண்பர்களைச் சண்டையில் காயப் படுத்தும்போதோ சூரியகாந்தி எப்போதும் அவன் பக்கம் பேசி சமாளித்து விடுவாள்.
பள்ளியில் பலவிதமான சேட்டை செய்வானாம். ஆசிரியர் அழைக்கும் போதெல்லாம் “குழந்தை தானே அப்படித் தானே செய்வார்கள்” என்று அவன் முன்னேயே சொல்வதால் சேட்டை அதிகரித்து, ஆசிரியரையும் அவமதிக்க ஆரம்பித்தான். இதை ஆண்பிள்ளை தைரியத்தின் அடையாளம் என சூரியகாந்தி எடை போட்டு, ஊக்குவித்தாள். பள்ளி முதல்வர் பலமுறை அழைத்து, ஆஷிஷை மனநல நிபுணரை ஆலோசிக்க வலியுறுத்தினார். தங்களுடைய ஒரே குழந்தை. அவனுக்கு எப்படி பிரச்சினை இருக்க நேரிடும் என்று ரகு, சூரியகாந்தி நகைத்து, எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் விட்டு விட்டார்கள்.
இந்த சமயத்தில் சூரியகாந்தி பேக்கரி தொடங்கினாள். ரகு எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க மாட்டான். ஆறு மாதம் வேலை பிறகு நீண்ட இடைவெளி விட்டு விடுவான்.
நாளடைவில் பள்ளியிலிருந்து புகார்கள் அதிகரித்தன. வகுப்பில் ஆஷிஷ் புத்தகத்தில் கிறுக்கி, மற்றவரின் பொருட்களை ஒளித்து, உடைத்து விடுகிறான் என்று. பெற்றோரிடம் சொன்னால் ஆசிரியர்களுடன் விவாதித்து ஆஷிஷ் பக்கமே பேசினார்கள். ஆசிரியர்கள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். ஆஷிஷுக்கு படிப்பில் நாட்டம் குறைய, நடத்தை பிரச்சினைகள் அதிகரிக்க, அவனைப் பள்ளியிலிருந்து விலகச் சொல்லி விட்டார்கள். ரகு சூரியகாந்தி அவ்வாறு செய்தார்கள். எந்த பள்ளியிலும் சேர்க்க முயலவில்லை. செல்லம், சலுகை அதிகரித்தபடியே வளர்ந்தான். அக்கம்பக்கத்தில் சில்லறை வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கியதால் அவனுக்குப் பிரச்சினையே இல்லை என்று முடிவானது.
ஆஷிஷ் சாருவுடன் லிவ்-இன் தொடங்கியதும் கண்டிக்க மிகவும் தாமதமாகி விட்டது எனச் சூரியகாந்தி வருந்தினாள். சாரு வெளிப்படையாகச் சூரியகாந்தியைப் பார்த்துக் கொள்ள இயலாது எனச் சொல்லி விட்டாள். ஆஷிஷ் இதை ஏற்றது தாயின் தவிப்பைத் தூண்டியது. தன்னை உதறிவிட்டானே!
இவற்றை நாங்கள் ஆராய, அதைப் பற்றிப் பேசப் பேச, தவிப்பைப் பகிர, மன குமறலைக் கொட்டித் தீர்த்தாள். கண்ணாடி முன் நின்று தன்னிடமே பேசுவதைப் போல அமைத்ததில் பயன்பெற்றாள் சூரியகாந்தி. இந்த நிலையில் தன்னுடைய தவறுகளை உணர்ந்தாள்.
ஆம், இந்த கட்டத்தைத் தாண்டிப் போவது தேவையாக இருந்தது. மனத்தைச் சமாதானம் செய்வது எப்படி என்ற தேடல் ஆரம்பமானது. இதைப் பற்றி நுணுக்கமாகச் சிந்தனை செய்யச் செய்தேன். சூரியகாந்தி உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு ஸெஷன்கள் மீண்டும் துவங்கிய போது இங்கிருந்தே தொடங்கினோம்.
இடைவெளி விட்டதின் பலன் கிடைத்தது. சூரியகாந்தி மகன் படித்த பள்ளி ஆசிரியைகளிடம் தான் அன்றைய தினத்தில் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாள். பள்ளி முதல்வர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் கடிதம் எழுதினாள். மனம் தொட்டுவிட்டாள் என்று விவரித்து அவர்களிடமிருந்து பாசம் ததும்பும் பதில்கள் வந்தது. தவற்றை உணர்ந்து, ஒரு பிராயச்சித்தமும் செய்யப் போக, மனம் லேசாகுவதை உணர்ந்தாள். மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கியது என்றாள்.
இதுவரை, மகனைப் பொக்கிஷம் போலப் பார்த்துக் கொண்டு, அவனுக்காக யோசித்துச் செய்ததில் விளைவுகள் என்னென்ன என்று ஆஷிஷ் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். ரகு பேக்கரி பிஸினஸ் இப்போதாவது கவனிப்பாரா அல்ல கவனிக்காமல் இருந்து விடுவாரோ என அஞ்சினாள். கண்ணீர் பொங்கியது.
காரணம் இருந்தது. இங்குச் சேருவதற்கு முன்னால் வீட்டின் அத்தனை வரவு செலவுகளையும் சூரியகாந்தி தனியாகக் கவனித்துக் கொண்டாள். ஒரு விதத்தில் இவளுடைய பிஸினஸ் மூலமாக மட்டுமே சம்பாத்தியம். ஆண்பிள்ளைகள் இருவருமே வீட்டிலும் சரி பிஸினஸிலும் எந்த விதமான ஒத்தாசையும் செய்ததில்லை. சூரியகாந்தி ஆண்களை வேலை வாங்கக்கூடாது என்று தானே பார்த்துக் கொண்டாள். இப்போது வருந்தினாள்.
தான் மட்டுமே எல்லா பொறுப்பையும், முடிவுகளையும் சுமந்து சென்றதில், இப்போது எப்படி இருக்குமோ என நினைத்து, ஏதேதோ எண்ணங்கள் தோன்றப் பயந்தாள்.
அதன் விளைவாக, ஒரு நாள் நான் நிறுவனத்தை அடைந்ததும் செவிலியர் ஓடிவந்து சூரியகாந்தி எதுவும் உண்ணாமல் அடம்பிடித்து வருகிறாள் எனப் பதட்டத்துடன் சொன்னதும், விரைந்தேன். தான் செய்த தவறுகளின் விளைவாக ஆஷிஷ் கஷ்டப் படுவானே என்ற குற்ற உணர்வு தன்னை குடைவதால் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாள் சூரியகாந்தி.
இதுபோன்ற பிடிவாதச் செயல்களால் நலன் பாதிப்பு நேருமே தவிர, எதையும் சரி செய்ய முடியாது. சூரியகாந்தியிடம் தன் மகன், கணவரின் நிலைமையை விலாவாரியாக விவரிக்கச் சொன்னேன். ஒவ்வொன்றுக்கும் “ஏன் அவ்வாறு? அதனால்? விளைவு”? சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றேன். அவ்வாறே வர்ணிக்க, அவளுடைய பங்கு எங்கே, எந்த அளவிற்கு இருந்தது என்றதை உணர்ந்தாள்.
தான் எதைத் தவிர்த்திருக்கலாம் என்றதை அறிந்து கொண்டாள். வேதனை வருத்தம் பொங்கியது. அதுவும் மேற்கொண்டு ஆராய அமைதியானது. ஏனெனில் இப்போது தான் சூரியகாந்தி ஏற்றுக் கொண்டாள் – தன் கைக்குள் இருப்பதை மட்டுமே செய்ய, ஆராய முடியும். ஆஷிஷ், ரகு என்ன செய்கிறார்கள் என்ற தகவல் எதுவும் இல்லை. அவர்கள் தொலைப்பேசியில் அழைக்கவும் இல்லை. பதட்டப் பட்டாள், தவித்தாள். உடல் நலனை மிகவும் பாதித்தது.
எங்களது நிறுவனத்தில், உடல் கவலைக்கிடமாக ஆகும்போது உற்றார் உறவினருக்குத் தகவல் சொல்வது வழக்கம். அதே போலச் சூரியகாந்தி நலன் பின் தங்க அவர்களுடன் தொடர்பு கொள்ள நாங்கள் முயல, அவர்கள் அங்கிருந்து வேறு எங்கோ சென்று விட்டார்கள் என்று தெரியவந்தது. புறக்கணிக்கப்பட்டாள். எங்களுடைய நிறுவனத்தின் எதிக்ஸ் குழு பக்குவமாக அவளிடம் எடுத்துச் சொன்னார்கள்.
எங்கோ இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை. மகனுக்கும் கணவருக்கும் எல்லாம் செய்ததால், பொறுப்பு இல்லாமல் இருந்தார்கள். தான் இங்குச் சேர்ந்து விட்டதால் இருவருக்கும் என்ன நேரும்? ஆழ்ந்த சிந்தனை செய்தாள். ஸெஷன்களில் பரிசீலனை செய்ய, புரிந்தது – அவர்களுக்குத் தானாக இயங்க இது வாய்ப்பாகும். வாழ்க்கையில் முதல்முறையாக தாங்களாகச் செய்வதால், இப்படி அப்படித்தான் இருக்கும். அதை வெற்றியாக ஆக்குவது அவர்கள் உழைப்பைப் பொருத்துதான். தான் கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்தாள்.
சூர்யகாந்தியை தன்னுடைய கண்ணோட்டம் மாறுவதைக் கவனிக்கச் சொன்னேன். எவ்வாறு ஸெஷன்களில் சிந்தனை செய்ததால் வாழ்வை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள். மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான தன்னுடைய குணங்களைப் பார்த்துச் சொல்லச் சொன்னேன்.
இவ்வாறு செய்யச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. எங்கள் டீம் மருத்துவர் அவள் உயிர் வாழ இன்னும் சில வாரங்களே என்று எச்சரிக்கை செய்தார். அதனால் அவளைத் தன்னை பற்றிக் குற்றச்சாட்டை மீறி, மற்ற குணாதிசயங்கள், ஆசைகளில் கவனம் செலுத்த வைத்தேன்.
தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அங்கே சூரியகாந்தி தனக்கு எத்தனை வலி இருந்தாலும் பார்ப்பவர்களை விசாரித்து ஒரு வணக்கம் வைப்பது அவள் பழக்கம். இதை இயல்பாகச் செய்ய மற்றவர்களும் அப்படிச் செய்வதைப் பார்த்து சந்தோஷம் பெற்றாள். தோட்டக்கார தாத்தா, “பெயருக்குப் பொருத்தமாக செய்யர!” என்றார்.
இங்கே வந்ததிலிருந்து சமையற்காரரை அழைத்துப் பல நுணுக்கங்களைச் சொல்லித் தந்ததில் ஒரு பந்தம் வளர்ந்தது. இதை இப்போது மனம் மகிழ்ந்து சொன்னாள். தன்னிடம் உள்ள பாசத்தைக் காட்ட இப்படி வெவ்வேறு விதமான வழிகள்.
தன்னிடம் இருந்த பணத்தை எவ்வாறு பங்கு போடுவது என்று தன் எண்ணத்தை நிறுவனத்தின் அதிகாரி, எங்கள் டீம் வழக்கறிஞரிடம் விவரித்தாள். தனது பிஸினஸ், சொத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட நினைத்தாள். வழக்கறிஞர் அது பிரச்சினையில் முடியும் என விளக்கம் அளிக்க ஒரு உயிலைத் தயார் செய்தாள்..
சூரியகாந்தி நிலைமை மோசமாக ஆனது. சுயநினைவை இழந்தாள். நிர்வாகம் அவள் குடும்பத்தினரை மறுபடி தேடினார்கள். ரகு, ஆஷிஷ் வந்தார்கள். நாங்கள் அவள் நிலைமையைத் தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள் என எடுத்துக் கொண்டோம்.
வந்ததும் பரபரப்பாக அவளுடைய அறை பற்றி விசாரிக்கத் தொடங்க அப்போது தான் அவர்களுக்குச் சூரியகாந்தி நிலை தெரியாது எனப் புரிந்தது. விவரத்தை விவரித்ததும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ரகு சலித்து “அடக் கடவுளே தாமதாகி விட்டது” என்றதும் ஆஷிஷ் ரகுவை பார்த்து, “நாள் நட்சத்திரம் பார்த்த, இப்போ?” என்றான். எங்கள் திகைப்பைப் பார்த்து விவரத்தைச் சொன்னார்கள். அவசரமாக அவளைப் பார்க்க வந்ததே பிஸினஸை தங்களது பெயரில் மாற்றிய காகிதத்தில் கையெழுத்து வாங்குவதற்கும் வங்கியில் உள்ள அவள் சேமிப்பை மாற்றி வைக்கவும். வெறுப்புப் பொங்க, “இப்போது பார்த்து என்ன பிரயோஜனம்?” சொல்லி, சென்று விட்டார்கள்.
திடீரென மரணத்தின் மடியில் நிரந்தரமாகச் சூரியகாந்தி தூங்கி விட்டாள். வீட்டினருக்குத் தெரிவித்தோம். வேண்டா வெறுப்பாக வருவதாகச் சொன்னதால் சூரியகாந்தியைக் குளிர் சாதன பெட்டியில் வைத்தோம். இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. கைவிட்டதாக எடுத்துக் கொண்டு சூரியகாந்தி விரும்பியபடி நிர்வாகமே சடங்குகளைச் செய்து முடித்தனர்.
பல நாட்களுக்குப் பிறகு, சாருவுடன் ஆஷிஷ் வந்தான். சூரியகாந்தி பொருட்களில் அவள் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொள்ள என்றார்கள். சூரியகாந்தி தன் விருப்பத்தை எழுத்திருந்ததைக் காண்பித்தோம். தாமதிக்காமல் வந்திருந்தால் பணம் கிடைத்திருக்கும் என இருவரும் கடும் வாக்கு வாதம் போட்டுக் கொண்டு சென்றார்கள். மனிதர்களின் ஆசையை என்னவென்று சொல்ல?
**********************************************************