ஜெய் பீம் – நீதிக்கான நம்பிக்கை
நீதிபதி கே சந்துரு பணி நிறைவு செய்த தேதி மார்ச் 8, 2013. ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நீதி பெற்றுத் தந்தவர், பின்னியக்காள் எனும் பெண் பூசாரியின் உரிமையை நிலை நாட்டியவர், உலகப் பெண்கள் தினத்தன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றது தற்செயல் ஒற்றுமை. எங்கள் வங்கி ஊழியர் தொழிற்சங்க சார்பான வழக்குகளில் பேருதவி புரிந்தவர், நெருக்கமாக அறிந்தவர் என்ற முறையில் எண்பதுகளின் இறுதியில், எந்த விசாரணையும் இன்றி நாளேட்டில் நிர்வாகத்தின் விளம்பரம் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரது வழக்கை எடுத்துக் கொள்ள அவரைப் போய்ப் பார்த்தோம். வாய்ப்பே இல்லை, பலவீனமான வழக்கு என்று சொன்ன தோழர் சந்துருவை, மறுநாள் மாலை பார்க்கச் சென்றபோது, ஒற்றை வாக்கியத்தில் அந்தப் பணி நீக்கத்திற்குத் தடை உத்தரவு பெற்றிருந்தார் அவர்.
அன்று காலையில் நாளேடுகளில் வந்த ஒரு செய்தியை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார் அவர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரச்சனை ஒன்றிற்குப் பதில் அளித்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, இது குறித்துப் புதிய வெளியுறவுத் துறை செயலாளர் உங்களுக்குத் தெரிவிப்பார் என்று சொல்லவும் தான், ஏ பி வெங்கடேஸ்வரன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விஷயமே வெளியே தெரியவந்தது.
‘என்ன வழக்கு, சந்துரு?’ என்று கேட்ட நீதிபதியிடம், ‘ஒரு வித்தியாசமான காலத்தில் நாம் வாழ்கிறோம்…வெளியுறவுச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் நீக்கப்படுகிறார், ஒரு பள்ளி ஆசிரியை பத்திரிகை விளம்பரம் மூலம் நீக்கப்படுகிறார்’. அவ்வளவு தான், ஸ்டே கிடைத்துவிட்டது.
மிகுந்த புத்திக்கூர்மையும், எளிய மக்கள் பால் அர்ப்பணிப்பும், அநீதிக்கு எதிரான கடுமையான அறச்சீற்றமும், ஓயாத தேடலும், உழைப்பும் மிக்க வழக்கறிஞராக, பின்னர் நீதிபதியாகத் திகழ்ந்த அவரது முக்கியமான வழக்கின் மீது புனையப்பட்ட செம்மையான திரைக்கதை இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம், கடந்த பல ஆண்டுகளில் பெரிதும் பேசப்படும் முக்கிய படைப்பாக வந்திருக்கிறது.
சாதாரண மக்கள் தங்கள் கஷ்ட நஷ்டங்களோடு வாழ்வதையே இயல்பாகக் கருதிப் போய்க் கொண்டிருப்பவர்கள். அதில் இடி விழும்போது, தீப்பற்றிக் கொள்ளும் போது திண்டாடிப் போகிறார்கள். எத்தனை அடியுதைகளும் அவர்களை அசைப்பதில்லை. கொஞ்சம் காசுக்கு எத்தனை பாடும் எடுக்கிறவர்கள், எத்தனை பெரிய காசு கிடைக்கும்போதும் சமரசம் செய்து கொள்ள மறுத்துத் திடமாக நின்று நீதிக்காகப் போராடவும் செய்கிறார்கள். அதிகார வர்க்கம், ஆதிக்க மனப்பான்மை இந்த எளிய மக்களின் போராட்டங்களைக் கால் தூசுக்குக் கூட மதிக்காமல் அவர்களை இன்னும் கொடூரமாக ஒடுக்கப் பார்க்கும் வேளையில், நியாயங்களுக்காக உரக்கக் குரல் கொடுக்கும் மனிதர்கள் மற்றும் சீருடைக்கு உள்ளே சீரழிந்துவிடாத இதயமுள்ளவர்கள் தலையீடு செய்யும்போது ஒரு சின்ன வெளிச்சம் தட்டுப்படுகிறது. நீதி வழங்கப்பட்டு விடுகிறது. எல்லாம் சிதைந்து போன ஓர் ஏழையின் குடிசையில் அது ஒரு மிகப் பெரிய நம்பிக்கை ஒளி.
இந்த நம்பிக்கையைப் பன்மடங்கு பெருக்கும் நோக்கில் தயாரித்து வெளியாகியுள்ள படத்தின் வெம்மை ஜனநாயக சிந்தனையும், அறவுணர்வும் உள்ள யாரையும் கொண்டாடவே சொல்லும்.
நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த ராஜாக்கண்ணு, திரைக்கதையில் இருளர் சமூக மனிதராக்கப் பட்டிருக்கிறார். வில்லியர் வாழ்க்கை, பாம்பு பிடித்தல், விஷ முறிப்பு மருத்துவம், குல வழிபாடு, சடங்கு, சாங்கியங்கள், பிழைப்புக்காகப் புலம்பெயர் கொத்தடிமை வாழ்க்கை யாவும் அசாத்திய இயல்போட்டமாகத் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. காதல் மனைவியோடு எப்போதும் இணை சேரத்துடிக்கும் இளைஞன் தான், பெண் குழந்தை படிப்புக்காக, அடுத்து மனைவி பெற்றெடுக்கவுள்ள மகவுக்காக செங்கல் சூளையில் வேலை தேடிக்கொண்டு எல்லோரையும் பிரிந்து செல்லவும் தயாராகிறான். ஆனால், காலம் அவர்கள் எல்லோரது திசைகளையும் குழப்பிப் பிய்த்துப் போட்டுக் குதறிச் சின்னாபின்னம் ஆக்கிவிடுகிறது.
பாம்பு பிடித்து உதவி செய்ய வந்தவன் மீதே நகைத்திருட்டுக் குற்றம் சுமத்தப்பட, அவனுக்காக அவனுடைய மனைவி, தம்பி, அக்காள் எல்லோரையும் வேட்டையாடுகிறது காவல் துறை. ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்குகிறது. அத்து மீறிப் பெண்களை இராத் தங்க வைத்து சொல்ல நாக்கூசும் கொடுமைகளுக்கு உட்படுத்துகிறது. ராஜாக்கண்ணு பிடிபட்டதும், அவன் தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க வன்முறை சித்திரவதைகள் செய்கிறது.
பிறகு அவனும் மற்ற சொந்தக்காரர்கள் இருவரும் தப்பியோடி விட்டதாகக் கதை தயாரித்து, அவர்கள் குடியிருப்புக்குள் போய்ச் சொல்லி, ‘மரியாதையாக சரண்டர் ஆகச்சொல்லு’ என்று மிரட்டவும் செய்கிறது அதிகாரத் திமிர்.
காணாமல் போன கணவனைத் தேடும் செங்கேணிக்காக, வழக்கறிஞர் சந்துரு நடத்தும் போராட்டம், அதிகாரவர்க்கத்தின் போலி சான்றுகள், பொய் சாட்சிகள் எல்லாவற்றையும் உடைத்து நியாயம் நிலை நாட்டுவதற்கான ஓயாத வேதனை பொழுதுகள், இவற்றின் முடிவில் மழைச் சாரலாக நீதி கிடைப்பதில் நிறைவு பெறுகிறது படம். காவல் துறை உயரதிகாரி – ஐ ஜி அளவில் பொறுப்பு வகிப்பவர், மனசாட்சியைத் தொட்டு நியாயத்தின் பக்கம் நிற்பதும், மனித உரிமைக்கான வழக்குகளுக்குக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லும் வக்கீலும் புனைவல்ல, உண்மை நிகழ்வின் அசல் பிரதிபலிப்பு.
‘காசு இல்லாதவங்கள பாம்பு கடிச்சா, உதவி செய்ய மாட்டீங்களா’ என்று செங்கேணிக்கு சமாதானம் சொல்கிறார், சந்துரு, தனக்குக் கொடுக்க காசு இல்லையே என்று சொல்லும் அவளிடம். அவளோ, ‘அந்த போலீஸ்காரங்கள பாம்பு கடிச்சாக் கூட காப்பாற்றுவேன்’ என்று பதில் சொல்கிறாள்.
எப்போதும் சிரித்த முகமும், கேலியும் கிண்டலும், விடுகதை புதிர் போடவும், பெரிய தனக்காரர்கள் முன் பவ்வியமாக நிற்க வழிவழியாகப் பழகிப் போன உடல்மொழியும், உன்னைக் கல்லு ஊட்டுக்காரி ஆக்கிடுவேன் என்ற ஆர்வமிக்க வாக்குறுதியுமாக ராஜாக்கண்ணு பாத்திரத்தில் அசத்துகிறார் மணிகண்டன். செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் அசாத்திய நடிப்பை வழங்கி இருக்கிறார். பப்ளிக் பிராசிகியூட்டராக குரு சோமசுந்தரம், அட்வகேட் ஜெனரலாக ராவ் ரமேஷ் மிக நேர்த்தியாகத் தோன்றுகிறார்கள். எழுத்தாளர் பவா செல்லதுரை, பேராசிரியர் இரா காளீஸ்வரன் இருவரும் களப்போராளிகளாக வருகின்றனர்.
நீதியைத் தவிர வேறு ஒன்றுக்குத் தலைவணங்காத சந்துரு அவர்களைத் திரையில் அபாரமாகக் கொணர்ந்திருக்கும் சூர்யா மிகுந்த பாராட்டுக்குரியவர். நாயக பிம்பம் பற்றிய கவலை இல்லாது, கதையை, கதை மாந்தர்களை முன்னிறுத்தி இருக்கும் அவரது பங்களிப்பு நடிகராக அவரது வாழ்க்கைப்பாதையில் முக்கிய மைல் கல். சிறப்பான பங்களிப்பு. வெறும் நடிப்புக்காக அன்றி, இந்தக் கதை பேசும் விளிம்புநிலை மனிதர்களுக்கான உண்மையான அக்கறையோடு படத் தயாரிப்பாளராகவும் சூர்யா-ஜோதிகா பாராட்டுக்குரியவர்கள் ஆகின்றனர்.
ஐஜி பெருமாள்சாமியாக பிரகாஷ் ராஜ், கம்பீரமான நடிப்பை, உடல் மொழியை, பார்வைக் குறிப்புகளை வழங்கி இருக்கிறார். பொய்யான வழக்குகளில் சிக்கவைக்கப்படுவது குறித்து இருளர்குடியில் பலரும் சொல்கையில் ஒரு சிறுவனின் கதை கேட்கையில் அவர் வெளிப்படுத்தும் அதிர்ச்சி உள்பட குறிப்பிடவேண்டியது.
படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை மிக முக்கியமாகப் பேச வேண்டிய பங்களிப்பு. சேன் ரோல்டன் இசையில் பாடல்களும் முக்கியமானவை. ‘தலை கோதும்’ என்ற அழகான பாடலை ராஜூ முருகனும், ‘மண்ணிலே ஈரமுண்டு’ உள்ளிட்ட மற்ற பாடல்கள் (பவர் பாடல் மட்டும் எழுதிப் பாடி இருப்பவர் அறிவு) எல்லாம் யுகபாரதியும் சிறப்பாக எழுதியுள்ளனர். எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. ஒண்டுக்குடிசையில் ஏதுமற்றவர்களின் இயல்பான தாம்பத்திய வாழ்க்கைக்குக் கூட, மழையில் தகர்ந்து விழும் தடுப்புச் சுவர் அனுமதி மறுத்துவிடுவதை, வயலில் எலிகள் பிடிப்பதை, காவல் துறை ஒடுக்குமுறைகளை எல்லாம் பார்வையாளரை மிகுந்த சலனத்திற்கு உட்படுத்தும் வண்ணம் இயங்கியிருக்கிறது கேமிரா.
நீதி மன்ற விசாரணை காட்சிகள் தமிழ்த் திரையில் எத்தனையோ பத்தாண்டுகளாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவை. உண்மையான கோர்ட் ரூம் அனுபவத்தை ஜெய் பீம் வழங்குகிறது. நீதிபதிகள் வருகை, நுழைவு, வெளியேறுதல், சாட்சிக்கூண்டு உள்பட நுட்பமாக உண்மைத் தன்மையோடு காட்டப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கம் எனும் மகத்தான களப்பணி குறித்த முதல் காத்திரமான பதிவைச் செய்துள்ளது ஜெய் பீம். பட்டா படி என்பது தான் அதில் முக்கியமான கற்பித்தல்.
கொடுமைகளைப் பேசும் கதையில் இயல்பான நகைச்சுவையாக, அரசு வக்கீல் தாமதமாக நுழைவது, காவல் துறை அதிகாரியின் மனைவி ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, பையனை டியூஷன் போக வர ஜீப் அனுப்பச் சொல்லி அழைப்பது, சாட்சிகளைப் பொய் சொல்லப் பழக்குவது போன்றவற்றை இடித்துக் காட்டுகிறது படம்.
இடதுசாரிகள் இயக்கத்தின் விடாப்பிடியான முழக்கமும், துணிவுமிக்க போராட்டங்களும், எளிய மக்களுக்கான அவர்கள் அர்ப்பணிப்பும் படத்தில் அழகாக சொல்லப்படுகிறது. பள்ளிகளில் மாறுவேடப் போட்டியில் அம்பேத்கர் ஏன் இடம் பெறுவதில்லை என்று பள்ளி ஆண்டுவிழாவில் வக்கீல் சந்துரு எழுப்பும் கேள்வி, ஜெய் பீம் வாசகத்தின் அடிநாதமாக நீதிக்கான போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது.
‘இருளர்னா பாம்பு பிடிப்பானா இந்தப் பையன்’ என்ற அதிகாரியின் கேள்விக்கு, ‘பாம்பு பிடிக்க வேணாம்னு படிக்கத்தான் அய்யா சர்டிபிகேட் கேட்கிறோம்’ என்ற குரலுக்கும், ‘தலைக்கு ஒரு கேஸ் தான் போடணும்னு ஏதாவது இருக்கா, இவனுங்க மேல எத்தனை கேஸ் வேணும்னாலும் போட்டுக்கோ’ என்று சொல்லும் அதிகார வர்க்கத்தின் குரலுக்கும் இடையே இருக்கும் முரண் தான் பேசப்பட வேண்டியது. நிறைவுக் காட்சியில் ராஜாக்கண்ணுவின் மகள் சிறுமி அல்லி, வக்கீல் வீட்டில் நாளேட்டைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து படிக்கிறாள். ஒட்டுமொத்த படைப்புக்காக இயக்குநர் த செ ஞானவேல் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
உண்மையின் பக்கம் உறுதியாக நின்று போராடும் நம்பிக்கையைப் படம் பேசுகிறது. ஆதிக்க சக்திகளை அம்பலப்படுத்துகிறது. நெடிய போராட்டம் தான் என்றாலும், ‘நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம் நீதி நாட்டுவோம்’ என்று சமூகத்திற்குச் சொல்கிறது. ஒட்டுமொத்த கவனத்தையும் இந்த வலுவான திரைக்கதையும், செம்மையான வசனங்களும், காட்சி மொழியும் அதனால் தான் ஈர்க்கிறது. எந்தத் திசை திருப்பும் விமர்சனங்களையும் அதனால் தான் கடந்து நின்று தொடர்ந்து பேசவும் செய்கிறது.
( மனதை வருடிய படங்கள் உண்டு. நெகிழ வைத்த படங்கள் உண்டு. இது மனதை உருக்கும் படம். ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய திரைப்படம் – இதை அழகாக வரிகளில் படம் பிடித்த வேணுகோபாலுக்கு அனந்த கோடி நன்றி! – ஆசிரியர் ,குவிகம் )
Some politicians trying to get chief advertisement for getting vote from their community people those are lifting to highlights in power by criticising the filim
LikeLike
Sema sir,this the real film
LikeLike
அற்புதமான படத்திற்கு அற்புதமான விமர்சனம் 👌
வத்ஸலா
LikeLike