கிராமத்துத் தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் சென்று நான் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தபோது தொலைவில் ஓர் அழகான கனவினைப்போலத் தங்களுடைய தங்கரதம் தோன்றியது; யார் இந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று நான் வியந்தேன்.
எனது எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, எனது கொடுமை நிறைந்த நாட்கள் முடிவடைந்துவிட்டன என எண்ணிக்கொண்டேன்; கேளாமலேயே யாசகம் (பிச்சை) கொடுக்கப்படுவதற்காகவும், செல்வங்கள் புழுதியில் எல்லாப்பக்கங்களிலும் வாரி இறைக்கப்படுவதற்காகவும் நான் காத்திருந்தேன்.
தங்கள் ரதம் நான் இருந்த இடத்தருகில் வந்துநின்றது. தங்கள் பார்வை என்மீது விழுந்தது; தாங்கள் ஒரு புன்னகையுடன் கீழிறங்கி வந்தீர்கள். என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்னிடம் ஒருவழியாக வந்துவிட்டதென எண்ணினேன். தாங்கள் திடீரென்று தங்கள் வலதுகரத்தை என்னிடம் நீட்டியவாறு, “எனக்கு அளிப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?” என்று கேட்டீர்கள்.
ஆ, இதுவென்ன ஒரு யாசகனிடம் வந்து தாங்கள் கரம்நீட்டி யாசகம் கேட்பது ஒரு அரசனுக்குரிய கேலிசெய்யும் விளையாட்டா? நான் குழப்பத்திலாழ்ந்து எதையும் முடிவெடுக்க இயலாமல் நின்றேன்; பின்பு மெல்ல எனது பையிலிருந்து இருந்ததிலேயே மிகவும் சிறிய ஒரு சோள (தானிய)மணியை எடுத்துத் தங்களுக்குக் கொடுத்தேன்.
ஆனால் அந்நாளின் முடிவில் நான் எனது பையைத் தரையில் கவிழ்த்தபோது, அந்தச்சிறு குவியலில் தங்கத்தாலான ஒரு சிறு தானியமணியைக் கண்டபோது மிகவும் வியப்பிலாழ்ந்தேன். என்னிடமிருந்த அனைத்தையுமே தங்களுக்குக் கொடுத்திருக்க எனக்கு மனமிருந்திருக்கலாமே என எண்ணியபடி மிகுந்த துயரத்துடன் அழலானேன்.
(தாகூரின் கீதாஞ்சலி – பாடல் – 50)
0000000
ராகவன் தான் படித்துக்கொண்டிருந்த தாகூரின் கவிதைகள் புத்தகத்தை மூடிவைத்து யோசனையில் ஆழ்ந்தான். நேற்றைய சம்பவங்கள் எண்ணத்தில் வலம்வந்தன.
0000000
“நீங்கள் இன்னும் கிளம்பலையா? இதோ பூமாலைகூட வந்தாச்சு, கிளம்ப வேண்டியதுதான்,” ராஜியின் அதிகாரக்குரல் வாசலிலிருந்து கேட்டது.
ராகவனுக்குக் கிடைத்த பிரமோஷனுக்காக கோவிலில் அம்பாளுக்கும் சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ரநாமம் என எல்லா ஏற்பாடும் பண்ணியிருந்தாள் ராஜி. ராகவனின் வேலை, கூடச் செல்வதுதான்.
கதவை இழுத்துப் பூட்டினான். டிரைவர் பவ்யமாகக் கார்க்கதவைத் திறந்துவிட, ராகவன், ராஜி, அம்மா, அப்பா எல்லாரும் ஹாண்டா சிடியில் ஏறிக்கொண்டார்கள். கார் கோவிலை நோக்கி விரைந்தது.
“இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பப்படாதா? சரியா பத்து மணிக்கு அபிஷேகம் ஆரம்பிச்சுடலாம் என்று சாஸ்திரிகள் சொல்லியிருந்தார்,” அம்மா முணுமுணுத்தார்.
காலை நேர டிராஃபிக் நெரிசலில் புகுந்து புறப்பட்டுக் கார் ஒருவழியாகப் பத்தேகாலுக்கு கோவில் வாசலில் வந்து நின்றது.
“எனக்கு பதினொன்றரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதற்குள் முடிந்தால் தேவலை,” என்றான் ராகவன். “ஸ்வாமி கிட்ட கண்டிஷன் போடாதே ராகவா,” என்றார் அப்பா.
அவர் குரலில் கொஞ்சம் எரிச்சல் இருப்பதாக ராகவனுக்குத் தோன்றியது. அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாது. அவர் அரசாங்கப் பதவியில் ஜி. எம். ஆக இருந்து ரிடையரானவர். கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயரெடுத்தவர்.
காரை, வழக்கம்போல சில பிச்சைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். “ஆமாம், இது ஒரு தொல்லை, எப்பப் பார்த்தாலும்,” என்றபடி, ஒருவழியாகச் சில சில்லறைகளை அவர்களின் பாத்திரங்களில் போட்டுவிட்டு மாமியாரின் கையை இழுத்துப் பற்றிக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றாள் ராஜி. அவளுடைய அவசரம் அவளுக்கு!
“ஷ், ஷ்” என்ற டிரைவரின் குரலைக்கேட்டுத் திரும்பினார் அப்பா. ஒரு சொறிநாய் வழியில் படுத்திருந்தது; எலும்பெல்லாம் துருத்திக்கொண்டிருந்த உடலில் தோல் முழுக்கப் புண்களாகி, ஈக்கள் மொய்த்த வண்ணமிருந்தன. டிரைவர் அதனை விரட்ட முயன்று கொண்டிருந்தான். பரிதாபமாகக் கண்களால் இவர்களைப் பார்த்தது. எழுந்திருக்கக் கூட முடியவில்லை.
அப்பா விறுவிறுவெனச் சென்று பக்கத்திலிருந்த கடையிலிருந்து ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கிவந்தார்.
“ராகவா, உன் கையாலே அதுக்குக் கொடு,” என்ற கட்டளை வேறு. கீழ்ப்படிந்தான் ராகவன். நன்றி நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்தபடியே அதனைத் தின்றபடி, மிகுந்த சிரமத்துடன் புண்ணான வாலையும் ஆட்டியது நாய். ராகவனுக்கு அவன் அப்பாவைப் போலவே இளகிய மனம். கண்கள் லேசாகப் பனித்தன.
“இப்பவே லேட் ஆயிடுத்து,” என மாமனாருக்குக் கேட்காமல் முணுமுணுத்தாள் ராஜி.
வீட்டுக்குப் போனப்புறம் “மிருகங்களின் நண்பர்கள்” அமைப்புக்குப் ஃபோன் செய்யவேண்டும் என்று மகனிடம் சொன்னார்.
சிறிது தொலைவில் நின்றுகொண்டிருந்த அம்மாவிடம், “உங்களோட அபிஷேகப் பலன் உன் பிள்ளைக்குக் கிடைச்சாச்சு,” என்று சீரியசாக, அமைதியாகக் கூறிவிட்டு அனைவரும் பின்தொடர, கோவிலுக்குள் சென்றார் அப்பா.
0000000
பின் வீட்டுக்கு வந்து,’ மிருகங்களின் நண்பர்கள்,’ அமைப்புக்கு ஃபோன் செய்தது, அவர்கள் வந்து அந்த நாயை சிகித்சைக்காக எடுத்துச் சென்றது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தான் ராகவன். கண்கள் கலங்கின.
அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு திருமந்திரப்பாடல் நினைவுக்கு வந்தது:
படமாடக் கோயில் பகவற்கொன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கது ஆமே
கோயிலில் உள்ள இறைவனுக்குச் செய்யும் பூசை அவனுடைய அடியார்களுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான அவன் தொண்டர்களுக்கு (வாயில்லாப் பிராணிகளுக்கு) எதேனும் உபகாரம் செய்தால் அது இறைவனுக்கே பூசை செய்ததாகும்.
என்ன சொல்ல வந்தேன் என வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பீர்களல்லவா?
0000000