மூலம் : கே.ஏ.பீனா [ K.A.Beena ]
ஆங்கிலம் : ஆயிஷா சஷிதரன் [ Ayisha Sashidharan]
தமிழில் : தி.இரா.மீனா
ஆழ்துயில்
காலையில் நான் அவரைப் பார்த்த போது தெரிந்த அவருடைய அந்த வழக்கத்திற்கு மாறான தோரணை எனக்குள் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்திற்று. அன்று அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான நாற்காலிதோழமை கூடப் பக்கத்திலில்லை.
“என்ன ஆயிற்று அப்பா ?” செய்தித்தாளை வெறித்தபடி இருந்த அப்பாவின் வெளிப்படையான சங்கட நிலையைப் பார்த்து கேட்டேன். என் குரல் கேட்டு அவர் தலையை உயர்த்தினார்.
“லெனின் புதைக்கப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்பது குறித்தறிய அவர்கள் ஒரு வாக்களிப்பு நடத்தப் போகிறார்களாம். பெரும்பான்மை அவரைப் புதைப்பதை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்த மாதிரியான விஷயமெல்லாம் வாக்களிப்பில் முடிவு செய்யப்பட வேண்டியவையா?” அப்பா கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்லிய குரலில் சொன்னார்,
“நான் என் தோழரை ஒரு தடவை பார்க்க வேண்டும்.”
“என் தோழர் ? எந்தத் தோழர்?”
“தோழர் லெனின்,” அது போதுமானது என்பது போல சொன்னார்.
“ஒரு தடவை என் வணக்கத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதுவரை நடைபெறாத ஒரு நீண்ட கால ஆசை அது. எந்த வகையிலாவது சோவியத் யூனியனுக்கு பிரதிநியாகப் போகிற அளவிற்கு நான் பெரிய தலைவனில்லை. அவரைச் சந்தித்தவர்கள், பேசியவர்கள்,அவரைப் பற்றி் எழுதியவர்கள் என்று எல்லோரின் அனுபவங்களையும் கேட்ட பிறகு, அந்த வேட்கை எனக்குள் ஊறி வளர்ந்து விட்டது. இப்போது அவரைப் பார்க்க எல்லோரையும் அனுமதிக்கிறார்களில்லையா ?மகனே ,நீ அதற்குமுயற்சிப்பாயா ?”
என்னால் மறுக்க முடியுமென்று தோன்றவில்லை. அப்பாவின் ஆசை, மகனாக நிறைவேற்ற வேண்டுமே.
“சரி, நான் உங்களுக்கு பாஸ்போர்ட் வாங்க ஏற்பாடு செய்கிறேன்.”
விசா, டிக்கெட் என்று எல்லாவற்றிற்கும் ரஷ்யத் தூதரகம் மிக வேகமாக அனுமதி தந்து விட்டது. அப்பா மிக உற்சாகமாகத் காணப்பட்டார்..
“இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு, ஏற்படும் சிறிது தாமதம் கூட நாங்கள் லெனினைப் பார்ப்பதை தடுத்துவிடும். புதையல் சடங்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் அவருடைய தாயின் கல்லறை அருகேயுள்ள வால்கோவ் மயானத்திலா அல்லது கிரிம்லின் வாலிலா என்று இப்போது அதற்கான இடம் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது .பிரதமர் விளாதிமிர் புதின் புதையல் சடங்கை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்தாலும், போரிஸ் எல்ஸ்டீன் மிக விரைவிலேயே அதை முடிக்க விரும்புகிறார். ரஷ்ய மரபு வழி தேவாலயமும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. இவை எதுவும் நடப்பதற்கு முன்னால் நான் அவரை ஒரு தடவை பார்த்து விட வேண்டும். இப்போது அதுதான் நான் ஆசைப்படுவது.”
அப்பாவிற்குத் தெரியாதது என்பது எதுவுமில்லை. முன்னாள் பள்ளி ஆசிரியர், சொற்களிலும், செயல்களி லும் மிகத் துல்லியமாக இருப்பார், அவரது பத்திரிகையாளரான மகனை அவரோடு இன்றும் கூட ஒப்பிட முடியாது.
லெனின் உடலைச் சிதைவிலிருந்து பாதுகாக்கும் செயல்முறைகள் பற்றி இல்லினா விளக்கிக் கொண்டிருந்தாள். செக்கோஸ்லேவாக்யாவைச் சேர்ந்த அவள் வெறும் மொழி பெயர்ப்பாளர் மட்டுமில்லை பயிற்சியுள்ள ,நல்ல சுற்றுலா வழிகாட்டியும் கூட. கிரிம்லின் சதுக்கத்தின் முன்னால் உள்ள காத்திருப்பு வரிசை லெனின் கல்லறைக்கு வழிகாட்டுவதாக இருந்தது
நாங்கள் வரிசையின் கடைசியில் இணைந்தோம்.
“லெனினுக்கு அன்றாடம் ஊசி போடப்பட்டது. ஒவ்வொரு பதினெட்டு மாதங்களுக்கும் அவர் உடல் ரசாயன நீரால் நீராட்டப்பட்டது.அந்த ரசாயன நீர் பொட்டாசியம் அசிடேட் ,மது, கிளிசரோல், கொய்னா, பதப்படுத்தப்பட்ட தண்ணீர் ஆகியவற்றின் சேர்க்கையாகும்.இந்தக் கூறுகளின் சேர்க்கை கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அறியப்படாததாக இருந்தது. இப்போது எல்லாம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. இணையதளத்தில் விரிவான அறிக்கையுமிருக்கிறது.லெனின் உடலிலுள்ள கருப்பு புள்ளிகளுக்கும், சுருக்கங்களுக்கும் கூட சிகிச்சை தரப்பட்டது. உண்மையில் இவை எல்லாம் மிகுந்த விலையுள்ளவை. தொடக்கத்தில் அரசாங்கம் இந்த செலவுகளை ஏற்றிருந்தது. இப்போது, நிதி நிறையக் கிடைப்பதால், அமைப்புகள் லெனினைப் பாதுகாக்கின்றன.”
தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் இல்லினா சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் விளக்கம் மிக அருமையாக இருந்ததெனினும் ஒரு வழிகாட்டிக்கு உரிய செயற்கைத் தன்மை அவ்வப்போது வெளிப்பட்டது.
முன்பிருந்தது மாதிரி கிரிம்லின் சதுக்கத்தில் அவ்வளவு கூட்டமில்லை. இருப்பினும் , மிகச் சிறந்த புரட்சிவாதியைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து பயண நிறுவனம் எங்களை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே, இல்லினாவிற்கு அப்பாவைப் பற்றிய கவலையும்
“மிகப் பெரிய காத்திருப்பு வரிசை ! சார்,நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா?”
அப்பா சிரித்தார். “ இல்லை பெண்ணே, என் மண்ணில் நான் வேலை செய்யாமல் இருக்கும் தருணங்களில் மட்டுமே சோர்வடைவேன். இங்கு நன்றாகவே இருக்கிறேன். உனக்குச் சோர்வாக இருந்தால் நிழலில் சிறிது நேரம் இருந்து விட்டு வா. இந்தச் சோம்பேறிப் பையனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.”
“பாதுகாவலருக்கு சிறிது பணம் கொடுத்தால் அவர் நம்மை உள்ளே விட்டு விடுவார். வரிசையில் நிற்க வேண்டியதில்லை.”
அப்பா அவளை வெறித்தார்.” லஞ்சம் கொடுத்து தோழரைப் பார்க்க போகலாம் என்கிறாயா! இல்லை! ஒரு போதும் கூடாது.ஒரு பைசா கூட அதற்காகச் செலவிடக் கூடாது/ நாம் இங்கேயே காத்திருக்கலாம்.”
“நாம் அத்தனை சுலபமாக உள்ளே போய் விடமுடியாது. தாமதமாக வரும் ஜனங்கள் பணம் கொடுத்து விட்டு,நம்மைக் கடந்து போய் விடுவார்கள்.
அப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.”
அப்பா சோர்வான முகத்துடன் வரிசையில் நின்றிருந்தார். பாவம் இல்லினா, நீண்ட காலமாக ,கண்டிப்பாக இருந்து வரும் ஒரு கம்யூனிஸ்டின் உறுதியான மனநிலை அவளுக்கு எப்படிப் புரியும்!
முதல்நாள் மாஸ்கோ நகருக்கு எங்களை அழைத்துப் போகும் போதும் அதே மாதிரியான ஒரு தவறைச் செய்தாள். சுற்றுலாப் பயணிகள் என்று வந்தவர்களை அழைத்துச் செல்லும் எல்லா இ்டங்களுக்கும் அப்பாவைக் கூட்டிக் கொண்டு போனாள்.டிஸ்கோத்தே நடக்குமிடம், சூதாடுமிடம் என்று எல்லா தெருக்களிலும் அப்பாவுடன் நடந்தாள்.அப்பா வேண்டாம் என்று சொல்லும் வரை அங்கு சுற்றிக் கொண்டிருந்தோம்.
“போதும்! நாம் திரும்பிப் போய் விடலாம்,எனக்கு இங்கு எதையும் பார்க்க விருப்பமில்லை.”
“டூர் நிகழ்ச்சியின்படி இன்னும் போவதற்கு சில இடங்களிருக்கின்றன, ”
இல்லினா லேசான எரிச்சலோடு சொன்னாள்.
அப்பா கோபத்தோடு திரும்பினார். எனக்கு ராகவன் மாஸ்டரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.“ நொறுங்கிப் போன கனவுகளின் கல்லறைகள்! இந்த வயதில் அவரால் அவற்றையெல்லாம் ஜீரணிக்க இயலுமா? பயணம் பற்றி முடிவு செய்வதற்கு முன்னால் நீ யோசித்துப் பார்க்க வேண்டும்.”
அப்பாவிற்கு யோசிக்க எதுவுமில்லை.அவர் விரும்புவதெல்லாம் கடைசியாக ஒரு முறை தன் தோழரோடு இருக்க வேண்டியதுதான்.
லெனின் கல்லறைக்கு முன்னால் இல்லினா எங்களை பல புகைப் படங்கள் எடுத்தாள்.
“மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் இடமாக இது இருந்தது.அதனால் தான் ’ரெட் ஸ்கொயர்’ என்ற பெயர் .” இல்லினா விளக்கினாள்.
“குவிந்த முகட்டுடனான அந்த ஆலயத்தைப் பார்த்தீர்களா? அதுதான் புனித பேசில் ஆலயம், மாஸ்கோவின் மைல்கல். லெனின் இறந்த பிறகு அவருடைய உடலைப் பாதுகாத்து வைத்திருக்கும்படி கேட்டு ஆயிரக் கணக்கான தந்திகள் வந்தன.அவருடைய மனைவியும், குழந்தைகளும் இதை எதிர்த்தார்கள்.ஆட்சிக் குழு நாற்பது நாட்கள் வைத்திருக்க முடிவு செய்தது. நோயியல் நிபுணரான அப்ராகோசவ் உடலைப் பதனம் செய்து வைத்திருந்தார் .நாற்பது நாட்களுக்குப் பிறகும் லெனினைப் பார்க்க வரும் ஜன வெள்ளம் பெருகிக்கொண்டேயிருந்தது. தொடர்ந்து இது நடந்து கொண்டே போக ,அடக்கம் நடக்கவேயில்லை.”
தனி மனிதர்களை வழிபடும் நிலை கம்யூனிசத்திற்குள் ஊடுருவியது.
லெனின் உடலைப் பாதுக்காக்க ஸ்டாலின் முடிவெடுத்ததும் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமானது. கம்யூனிசம் மதங்களுக்கும், மத போதகர்களுக்கும் எதி்ரானது. ஆனால் லெனினின் உடலைப் பாதுகாத்து வைக்க என்ன காரணம்?அது யூதர்— கிறித்தவ நம்பிக்கைகளின் தாக்கமாகி விடாதா ?விடை கிடைக்காத இம்மாதிரியான கேள்விகள் இருக்கின்றன. இந்தக் கணம் முழுக்க முழுக்க அப்பாவின் வாழ்வில் மனநிறைவைத் தந்த கணம்.எந்தப் பாதிப்பு சிந்தனையையும் அவர் மனதில் நான் நினைவுபடுத்தி விடக்கூடாது.
நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி அப்பாவை அணுகி ஏதோ கேட்டாள். இல்லினா அவளைத் திட்டி அனுப்பினாள். கல்லறை மாடத்தின் முன்னால் ஜனங்கள் ஏராளமாய்த் திரண்டிருந்தனர். இல்லினா நேற்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.“பயண அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளருக்கும், வழிகாட்டிக்கும் நீங்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறீர்கள். எந்த அதிகப் பயன்பாட்டிற்கும் நான் நேரடியாகப் பணம் பெறமுடியும். இங்கு தங்க, , விளக்கங்கள் பெற நிறைய செலவாகும்.”
“இது என் அப்பாவின் யாத்திரை. எந்த விதத்திலும் அதன் புனிதத்தை நான் தொந்தரவுக்குள்ளாக்க மாட்டேன். அப்பாவிற்கு மகன் தரும் வெகுமதியாக இருக்கட்டும். இந்தக் கணத்தில் வேறெதுவும் அவசியமில்லை. “
பகல் பொழுதில் தனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை மறக்க விரும்புவது போல நள்ளிரவு வரை அப்பா புரட்சிப்பாடல்களை மெதுவாக முணு முணுத்தும், சிறிது சத்தமாகப் பாடிக் கொண்டுமிருந்தார்.
இல்லினா தாளம் போட்டுக் கொண்டே பாடினாள்.
“இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது,
பிளாஸ்டிக் மனிதர்களுக்கு அதைக் காணக் கண்ணில்லை.
மணங்கள் எவ்வளவு மயக்கம் தருபவை
பிளாஸ்டிக் மனிதர்கள் பார்க்கத் தவறுகின்றனர்.
கவர்ந்திழுக்கும் ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்தையும்
பிளாஸ்டிக் மனிதர்களால் பார்க்க முடியாமல் போகிறது.”
அவளுடைய பாட்டிற்கேற்றபடி அப்பா தாளம் போட்டார்.
“இந்தப் பாடல் என் சகோதரனால் பாடப்பட்டது.’ உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்’ என்ற இசைக்குழுவை மிலன் ஹல்வசா என்ற முரசடிக்கும் நண்பனோடு சேர்ந்து உருவாக்கியவன். சார்,உங்களுக்கு அவர்களது புரட்சிகர செயல்பாடுகள் குறித்துத் தெரியுமா ?”
அப்பா தலையாட்டினார்.“வில்லிஸ் புரட்சி என்பது செக்கோஸ்லோ வேக்யர்களால் வெல்வெட் புரட்சி என்று குறிப்பிடப்பட்டது.என் சகோதரனின் பங்கு அதிலிருக்கிறது என்று தெரிந்து கொண்ட அதிர்ச்சியில் என் அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். ”
“சுதந்திர விழிப்புணர்வை தன் சகாப்தத்தில் கொண்டு வந்த அலக்சாண்டர் டப்செக்கின் காலத்தில் வாழ்ந்த போதும் உன் அப்பாவால் வெல்வெட் புரட்சியைத் தாங்க முடியவில்லையா ?”இல்லினாவை நோக்கிக் கேட்கப்பட்ட என் கேள்விக்கு அப்பா பதில் சொன்னார்.
“சித்தாந்ததை நோக்கிய மொத்த செயல்பாடுதான்—உண்மை கம்யூனிஸ்டின் சாரம். அது குறித்த எந்த இடையூறும் அவனை அழித்து விடும்.”
அப்பா இன்னமும் ஒரு கம்யூனிஸ்டாகவே வாழ்கிறார். அவர் தன் சைக்கிளை விற்கவுமில்லை, எங்கள் வீட்டைப் புதுப்பிக்கவுமில்லை.
’கண்காட்சி பொருள்’ என்றேகேலி செய்யப்படுவார். ஐந்து நட்சத்திர கம்யூனிஸ்டுகள் நடுவே காலாவதியான மனிதராகவே இருந்தார்.
நேரம் ஏறிகொண்டேயிருந்தது. வெயில் எங்கும் பரவியது. அப்பா தளர்ச்சியாகத் தெரிந்தாலும் , அசையாமல் நின்றார். ஆனால் வரிசை மட்டும் அப்படியேயிருந்தது.“லெனின் மூல கல்லறை மாடம் மரத்தால் கட்டப்பட்டது.1929 ல் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
ஸ்டாலினின் உடலும் அங்கு நீண்ட காலம் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அது நீக்கப்பட்டது.லெனினின் உடலும் சிறிது காலம் நீக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது நாசிஸ்ட் பயம் காரணமாக லெனின் டைமனுக்கு கொண்டு செல்லப் பட்டார். போர் முடிந்த பிறகுதான் திரும்ப வந்தார்.”
“என்ன அச்சுறுத்தும் தலையெழுத்து ! ”
என் பதில் எதிர்பாராமல் இருந்தது . அப்பா என்னைப் பார்த்தார்.
மனித உடலின் பரிதாபகரமான விதி! போரின் போது எடுத்துச் செல்லப் பட்டு, பின் போர் முடிந்ததும் கொண்டு வரப்பட்டது.காட்சிப் பொருள் போல பல நூறாண்டுகள் வைக்கப்பட்டது.தொடக்கத்தில் ஜனங்கள் அன்பிலும், மரியாதையிலும் அதைக் காண திரண்டது உண்மைதான்.
இன்னமும், பல காலங்களுக்குப் பிறகும் புதைக்கலாமா அல்லது வேண்டாமா என்ற வாக்குமுடிவிற்காக ஒரு மனித உடல் காத்திருப்பது. . .
மனிதாபிமான சுதந்திரத்திற்காக ஏங்கிய மனம் அந்த உடலில் சிறைப்பட்டு இருக்கிறது. லெனின் மேலிருக்கிற பயபக்தியிலும், அன்போடும் கிரிம்லின் சதுக்கத்திற்கு வருகிற என் அப்பாவைப் போன்ற யாத்ரீகர்கள் இப்போது குறைந்து விட்டனர். பலருக்கு அது மாஸ்கோவிலிருக்கிற இன்னொரு சுற்றுலா ஸ்தலம்தான்.
திடீரென நினைவுகள் ஒளிர்ந்தன. இப்போது எப்படி லெனின் புதையல் நிகழ்வு நடக்கும்? கம்யூனிச சகாப்தத்தின் உச்சத்தில் வாழ்ந்து ,இறந்தவர்
லெனின். உலகளாவிய புகழின் உச்சத்தில் சோவியத் யூனியன் இருந்த போது புதையல் நிகழ்வு நடந்திருந்தால் உலகமே தலைவணங்கி நின்றிருக்கும். வருந்தும் குடும்பத்தினரோடு மனதைத் தொடும் வகையில் விடையளிக்கும் நிகழ்வு நடந்திருக்கும். இப்போது, உலகின் வெவ்வேறு கோடிகளில் இருக்கும் அப்பாவைப் போல மிகச் சிலர் லெனினுக்கு விடை தருவார்கள்.தமது தோழருக்காக நெஞ்சில் ’இன்குலாப்’ நிறைந்திருக்கும். வரிசை கல்லறையை அடைந்தது. அப்பா மௌனமாக இருந்தார் ,ஆனால் மனதின் கொந்தளிப்பை அவர் முகம் காட்டியது.கல்லறை இளஞ்சிவப்பான கிரானைட் கல்லில் கட்டப்பட்டிருந்தது. கருப்பு மற்றும் பச்சைப் பலகையில் சிவப்பு எழுத்துகளால் லெனினின் பெயர் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருந்தது.
கருப்பு சூட் அணிந்திருந்த லெனின் தரைக்கு இணையான ஒரு கண்ணாடிப் பேழையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.நான் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணிமைக்காமல் அவர் லெனினையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவர் நிற்கும் விதத்தைப் பார்த்த இல்லினா ,என்னைப் பார்த்தாள்.
நான் அவளிடம் சொல்ல விரும்பினேன் :
“என் நாட்டின் ஒரு தலைமுறை தங்கள் அஞ்சலியை என் அப்பாவின் மூலமாகத் தெரிவிக்கிறார்கள். அவர்களின் கனவுகள், ஆசைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தூண்டி வளர்த்தவர், இங்கே படுத்துக் கிடக்கும் மனிதர். ஒரு நாட்டின் வணக்கம் இது.”
பாதுகாவலர் அருகே வந்து நேரமாகி விட்டது என சைகை காட்டினார்.
திடீரென அப்பா தன் கை முஷ்டியைத் தூக்கிப் பெருங்குரலில் “ செவ் வணக்கம் தோழரே ,செவ்வணக்கம் !” என்றார்.
கல்லறையின் பெரும் அமைதியை விலக்குவதாக அப்பாவின் இடி போன்ற குரல் வெளிப்பட்டது. பாதுகாவலர் அப்பாவைப் பிடிக்க வேகமாக
வந்தார். ஆனால் இல்லினா அவரை அமைதிப் படுத்தும் வகையில் ரஷ்ய மொழியில் ஏதோ சொன்னாள். நான் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வரும் பாதைக்கு வந்தேன்.அப்பா திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தார்.
வெளியே வந்ததும் அப்பா என் கையை அழுத்தி “நன்றி மகனே !” என்று சொன்னார்.
“அப்பா, எதற்கு நன்றி எல்லாம்?”
“தெரியவில்லை. நேற்றிலிருந்து….”அவரால் முடிக்க முடியவில்லை.
“ஓ..போகட்டும், நீங்கள் இல்லியானாவிடம் அந்தப் பெட்டி எங்கே இருக்கிறதுதென்று கேளுங்கள்.”
“பெட்டி ? எந்தப் பெட்டி?”
“லெனினின் புதையல் குறித்து வாக்களிக்க வேண்டிய பெட்டி பற்றி.”
“இனிமேல் அதுபற்றி என்ன?”
“நாம் ஒட்டளிப்போம். அதை முடித்த பிறகுதான் நாம் புறப்படுகிறோம்.”
“அப்பா, நீங்கள் எதற்கு ஓட்டளிப்பீர்கள் ?”
“உனக்கு ஏன் அது தெரிய வேண்டும்? பெட்டி எங்கேயிருக்கிறது என்று மட்டும் விசாரி.”
அப்பாவிற்காக நான் இல்லினாவோடு அந்த பெட்டியை தேடிக் கொண்டு போனேன்.அங்கே லெனின் தூங்கியவாறு தன் விதியை எதிர்நோக்கி இன்னொரு பெட்டியில் காத்திருந்தார்.
————————————————————————-
கே.ஏ. பீனா பயண இலக்கியம், சிறுகதைகள், சிறுவர் நாவல்கள், இதழியல்
தொடர்பான புத்தகங்கள் என்று 28 க்கும் மேற்பட்ட புத்தகங்களை
எழுதியவர்.மாத்ருபூமியில் சில காலம் பணியாற்றியவர்.