குவிகத்தில் இந்த வருடம் கல்யாணத்தில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிக்கப் போகிறேன். இது ஹேமாவுடைய பிள்ளைக் கல்யாணம். கூத்துதான்.
ஹேமா பி ஹெச் டி தீஸிஸ் எழுதிக் கொண்டிருந்ததால் அவளுடைய கல்யாணம் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கோயம்புத்தூரிலி ருந்து வந்த வரனுடன் நிச்சயம் ஆயிற்று. நிச்சயதார்த்தம் பிள்ளை வீட்டில் கோயம்புத்தூரில் நடக்க வேண்டும். ஆனால் ஹேமாவின் அப்பாவால் அவ்வளவு தூரம் டிராவல் பண்ண முடியாததால் சென்னையில் வைத்துக்கொள்ள ஹேமா அம்மா கேட்டாள். சிறிது யோசித்து சரி என்ற மாமியார் கனகம் ‘ஆனால் போக்குவரத்து செலவு கொடுத்து விட வேண்டும்’ என்றாள் கறாராக. இங்கே தான் ஆரம்பம். ஹேமா அம்மா இதற்கு தயங்கியதால் நிச்சயதார்த்தம் தனியாக நடக்கவில்லை. அதற்குப் பிறகு வரதட்சணை, இரட்டைத் தேங்காய், மண்டபத்தில் புதிய சொம்பு என்று கனகத்தின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. எல்லோரும் ஹேமாவைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர். மாமியார் கொடுமை இப்பவே தொடங்கியாகி விட்டது என்று கவலைப் பட்டனர். ஆனால் வீட்டிற்கு வந்த பெண்ணை கனகம் அன்போடு கவனித்ததில் ஹேமா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைந்தது.
ஹேமாவிற்கு ஒரு பெண், ஒரு பிள்ளை. பிள்ளை கார்த்திக் ஆர்மியில் சேர்ந்து விட்டான். அங்கே டான்ஸ் ஆடும்போது கூட ஆடிய ஒரு பெண்ணைப் பிடித்துப் போக, வீட்டில் சொல்ல, பிராமின் என்ற காரணத்தால் எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை. ஆனால் பெண் வீட்டில் பாஷை தெரியாத நிலையில், தூரம் உள்ள இடத்திற்கு அனுப்பத் தயங்கினர். எவ்வளவு எதிர்க்க முடியுமோ அவ்வளவு பயமூர்த்தினர். ‘அவங்க அம்மா தமிழில் உன்னை அடிக்கச் சொன்னால் கூட உனக்குப் புரியாது, ஆகையால் இந்தப் பையனை விட்டு விடு, நாங்கள் இங்கேயே ஒரு நல்ல பையனைப் பார்க்கிறோம்’ என்றனர். ஆனால் சமந்தா புத்திசாலி, கார்த்திக்கை நன்கு புரிந்து வைத்துள்ளதால் இதற்கு மசியவில்லை. ஆனால் இப்போது சமந்தா வீட்டில் உள்ளவர்களும் கார்த்திக்கையும், ஹேமாவையும் பார்த்த பிறகு இதை விட நல்ல சம்பந்தம் என்பது ஒன்று கிடையாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டனர்.
சமந்தா வடக்கு, சங்கர் தெற்கு. கல்யாணம் பெண் வீட்டில்தான் நடக்கும் என்பதால் டெல்லிதாண்டி முராதாபாதில் கல்யாணம். தன் பெண் கல்யாணம் முடித்துவிட்டு, ஹேமா, கணவர், கார்த்திக் மூவரும் முராதாபாத் சென்றனர். டெல்லியிலிருந்து ஒரு டாக்ஸியில் முராதாபாத் பயணப் பட்டனர். குண்டும் குழியுமான ரோடைப் பார்த்து விட்டு இனி இந்தப் பக்கம் தலை வைத்து கூடப் படுக்கக் கூடாது என்று முடிவு கட்டினர்.
இப்போது அந்த ரோடு சரி செய்யப்பட்டுவிட்டது அது வேறு விஷயம்.
மண்டபம் அங்கே ஒன்றுதான் உள்ளது. அங்கே கல்யாணம் ஒரு வேளைதான் நடப்பதால் மண்டபத்தில் தங்கும் ரூம் அதிகம் இருப்பதில்லை. மாப்பிள்ளை பெண்ணுக்கென்று இரண்டு ரூம் தான் உள்ளது. பாட்டிக்கென்று சிறிது தலை சாய்க்க ஒரு ரூம் கூட கிடையாது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் உடனேயே மண்டபம் புக் செய்யச் சொன்னால் ‘ஒரு ப்ராப்ளம் கிடையாது. மண்டபம் இங்கே எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். அப்படி இல்லா விட்டாலும் ஏதாவது ஒரு காலி இடத்தில் ஷாமியானா போட்டு கல்யாணம் செய்து விடுவோம்’ என்று ஈஸியாகச் சொன்னார் சமந்தாவின் அப்பா. ஹேமாவிற்கு அந்த நிமிடத்திலிருந்து தெரிந்து விட்டது வடக்கில் எப்படி எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று. அதே மாதிரி எப்போதும் பாட்டும் டான்ஸும் தான். சிறியவர்கள் முதல் பெரிய பாட்டிமார்கள் வரை டான்ஸ் ஆடுவதும், நீண்ட லோலாக்கு அணிவதும் யார் வேணா எந்த மாதிரி வேணா. தெற்கு மாதிரி யாரும் யாரையும் தூக்கிய புருவத்தில் பார்ப்பதில்லை.
ஹேமா தன் அக்காமார்களிடம் இந்தக் கல்யாணத்தைப் பற்றி முதலில் பிரஸ்தாப்பிதபோது அங்கே ஆரம்பித்தது முதல் முரண்பாடு. ‘ஓ நல்ல விஷயம்தான். ஆனால் டிசம்பரில் அங்கே குளிர் அதிகம். நாம் போட்டுக் கொள்ளப் போகும் சாரியின் அழகு, நிறம், ஜரிகை எதுவும் காமராவில் தெரியாது. மேலும் அங்கே பூவும் நன்றாக இருக்காது. எனவே சென்னையிலேயே வைத்துக் கொள்ளப் பாரேன்’ என்றனர். இப்போதுதான் பெண் கல்யாணத்தை முடித்த ஹேமா ‘இன்னொரு கல்யாணமும் நாமளே செய்ய வேண்டும், பிள்ளை வீட்டுத் தோரணையும் காட்ட முடியாது, மேலும் திரும்பவும் சமந்தா வீட்டில் பேச வேண்டும்’ என்று யோசித்து டெலிஃபோன் நம்பரை சுழற்றினாள். தயங்கித் தயங்கி கேட்டதிற்கு முதலில் மறுத்த அவள் அப்பா பின் ‘சரி, ஆனால் எங்களுக்கு சென்னையும் தெரியாது, அங்கே யாரையும் தெரியாதே’ என்று கை விரித்தார். ஹேமா தன் தலையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
இது கடைசி நிமிடத்தில் முடிவானதால் மண்டபம் தேடும் படலம் ஆரம்பித்தது. மண்டபம் எங்கே கிடைக்கும்! கடைசியில் ஒரு சுமாரான மண்டபம் கிடைத்தது. தரை அங்கங்கே விரிசல்களுடன் இருந்ததால் மண்டபம் பூராவும் கீழே அலங்கார ஷீட் மூன்று நாட்களும் விரிக்க ஏற்பாடானது. மறுபடியும் ஹேமா பெண் கல்யாணத்திற்கு செய்தது போலவே பூ அலங்காரம், வாத்தியம், சமையல் என்று எல்லா ஏற்பாடும் செய்தாள் மூச்சு விட நேரம் இல்லாமல். ஒரு குறையும் இருக்கக் கூடாது என்று பார்த்துப் பார்த்து செய்தாள்.
சமந்தா வீட்டார் ரயிலில் கிளம்பி விட்டனர். டிசம்பரில் அங்கே நல்ல குளிர் ஆதலால் அந்த நினைவுடன் எல்லா ஸ்வெட்டர், குல்லாக்களுடன் கிளம்பினர். சென்னை வர வர சூட்டினால் ஒவ்வொன்றாக கழட்டினர். இதுதான் வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறதோ! இன்றும் அவர்களால் நம்ப முடியவில்லை சென்னையில் கடும் குளிர் என்பது கிடையாது என்று.
ஆயிற்று. வந்து இறங்கியாச்சு. ஹேமா புத்திசாலி. எப்போதும் டீ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு பண்ணியிருந்தாள். பெண் வீட்டார் தமது சாமான்களுடன் ஒரு டோலக்கும் கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் டிரைன்லேயே பாட்டுப் பாடிக் கொண்டு வந்தார்களாம். சமந்தா அம்மா மஞ்சு டீயிலேயே குளிப்பவள்.
டான்ஸும் பாட்டும் மண்டபத்தின் முதல் மாடியில். ஹேமா மாடியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்றால் மங்கலம் என்று அவளையும் டான்ஸ் ஆடச் சொல்ல யாரும் பார்க்கிறார்களாவென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையைக் காலை ஆட்டினாள். அவளுக்கு வீட்டில் எல்லாரையும் தன் சொல்லுக்கு ஆட வைத்துத் தான் பழக்கம்.
விரதம் ஆரம்பம் ஆயிற்று. சமந்தா அப்பா இந்தப் பக்க கல்யாணத்தில் இத்தனை சடங்குகள் இருப்பது தெரியாமல் கனபாடிகளிடம் தங்கள் வழக்கத்தையும் கல்யாணத்தில் சேர்க்கச் சொல்ல ‘அது குழப்பத்தை ஏற்படுத்தி விடும். வேண்டும் என்றால் விரத காலத்தை நீங்கள் உபயோகப் படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டார். அவர்கள் அதை மஞ்சள் பூசுவதாகக் கொண்டாடினார்கள்.
இங்கே விரதம் செய்யும்போது அங்கே சங்கு ஊதும் சத்தம் கேட்டு எல்லோரும் மிரண்டனர். அப்புறம்தான் தெரிந்தது அவர்களுக்கு அது மங்கல வாத்தியம் என்று. வந்திருந்த எல்லா பிள்ளை வீட்டு உறவினர்களும் பெண் வீட்டுப் பக்கம் சாய்ந்து விட்டனர் இது புதிதாக இருக்கே வென்று. விரதம் முடிந்து சாப்பிட உட்கார்ந்தால் வடக்கில் எப்போதும் பஃபே முறைதான் என்பதால் பெரிய பெரிய வாழை இலையைப் பார்த்து ரசித்தனர். பாயசத்தை எப்படி இலையில் சாப்பிடுவது என்று இங்கும் அங்கும் பார்த்தனர். எல்லோருக்கும் எல்லா நேரமும் அப்பளம் போட்டது மிகவும் பிடித்திருந்தது. கேட்டுக் கேட்டு சாப்பிட்டனர்.
மறு நாள் கல்யாணம். முதலிலேயே முடி குட்டையானதால் குஞ்சலம் எல்லாம் வைத்துப் பின்ன வேண்டும் அதனால் 4 மணிக்கெல்லாம் பெண் அலங்காரத்திற்கு வந்து விட வேண்டும் என்று ஹேமா முன்னமேயே சொல்லியிருந்தும் அவர்கள் அதை உணராமல் ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தனர். ஹேமா கையைப் பிசைந்து பிசைந்து கைதான் தேய்ந்தது. ஒரு வழியாக பெண்ணை 5 மணிக்கு அனுப்பினர். குட்டை முடியானதால் இரண்டு சவரி வைத்து குஞ்சலம் வைத்து பின்னப் பட்டது. எல்லா அலங்காரமும் முடிந்தவுடன் மஞ்சு சமந்தாவின் மூக்கில் தங்கள் வழக்கப்படி நத்து போடலாமாவென்று பர்மிஷன் கேட்டாள். வரும் பொன்னை யாராவது வேண்டாம் என்பார்களா!
ஆனால் ஊஞ்சலில் பாலும் பழமும் கொடுக்கும்போது அவள் நத்தை தூக்கி பாலைக் குடித்தது எல்லோருக்கும் வேடிக்கையாய் இருந்தது. ஹேமா வேலைகளில் மூழ்கியிருந்ததால் பெண் வீட்டாரின் சில வேடிக்கைகளை பார்க்கவில்லை. இல்லாவிட்டால் இந்தக் கதை இன்னும் நீண்டிருக்கும்.
அடுத்தது நலங்கு. அப்பளத்தை ஒருவர் மேல் ஒருவர் உடைத்தபோது சமந்தாவின் சித்திக்கு அப்பளம் வீணாகப் போவது வருத்தமாக இருந்தது. சமந்தாவின் அப்பாவும் அம்மாவும் அழுதுகொண்டே பெண்ணை விட்டுச்சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது. இது வடக்குக்கும் தெற்குக்கும் பொதுதான் போல இருக்கு!
ஹேமாவின் அம்மா ஒரு தீர்க்கதர்சி போலும். தன் குழந்தைகள் எல்லோருக்கும் ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அதிலும் ஹேமா ஹிந்தியில் நன்றாக பேசுவதைப் பார்த்தால் அவளது தாய்மொழி ஹிந்தி போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. அன்று புரியாமல் அழுத மஞ்சு இன்று சங்கரையும் ஹேமாவையும் பார்த்து இதை விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைத்திருக்காது என்று சந்தோஷப்படுகிறாள்.
இது இதயங்களின் சங்கமம். ஹிந்தி தமிழின் கலக்கல். இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களின் புணர்ச்சி. இந்த பந்தத்தை கடவுளைத் தவிர யாரோ அறிவர்!