கில்காமேஷின் கதையைக் கேட்டபிறகு உத்தானபிஷ்டிமுக்கு அவன்பால் இரக்கம் உண்டாயிற்று.
அவன் தோள் மீது கையை வைத்து, ” நீ என் பதில் இல்லாமல் போகமாட்டாய் என்பது தெரிகிறது. ஆகவே உனக்கு ஒரு மர்மத்தை விளக்குகிறேன். கடவுள்கள் ரகசியமாக வைத்திருக்கும் அந்த விஷயத்தை உனக்குத் தெளிவு படுத்துகிறேன்” என்று கூறி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
” யூபிரடீஸ் நதிக்கரையில் உள்ள விர்ரூபக் நகரம் உனக்குத் தெரியுமல்லவா கில்காமேஷ் ? அதன் தேவர்களையும் உனக்குத் தெரியும். அனு என்பவர்தான் நகரத்தின் தந்தை . என்லில் அவரது வலதுகரம் போர்த்தேவன். நினுர்த்தா, என்னுகி ,ஈயா , இஷ்டார் போன்ற தேவர்கள் அவருக்குத் துணையாக இருந்து வந்தார்கள்.
அப்போது பூமியின் பாரம் அதிகமாகிவிட்டது என்பதை அனைத்துக் கடவுள்களும் உணர்ந்தார்கள். உலக மக்கள் செய்கிற அநியாயங்களும் , அக்கிரமங்களும் , கூக்குரலும் அதிகமாகிவிட்டது. அதனால் மனித குலத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைத்துத் தேவர்களும் உணர்ந்தார்கள். அதற்காக மிகப் பயங்கரமான ஆயுதமான பிரளயத்தை ஏவலாம் என்றும் முடிவு கட்டினார்கள். அதைச் செய்துமுடிக்குமாறு என்லில்க்கு உத்தரவிட்டார்கள்.
அந்தக் கடவுளர் கூட்டத்தில் இருந்த ஈயா என் உயிர்த்தோழன். யாருக்கும் தெரியாமல் என்னிடம் வந்து அந்த ரகசியத்தைக் கூறினான்.
” உத்தானபிஷ்டிம் ! உலக மக்களில் நீ மிகவும் நல்லவன். அதனால் உனக்கு மட்டும் அந்தப் பிரளயம் வரப்போகிற ரகசியத்தைக் கூறினேன். அதுமட்டுமல்ல மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டியது என் கடமை. அதனால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் அழிக்கவேண்டும் என்ற சக்திவாய்ந்த என்லில்தேவனின் கட்டளையை மீறி இதைச் செய்கிறேன்.
நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்! உன் வீட்டை அழித்துவிட்டு மரங்களைக் கொண்டு பெரிய படகை நிர்மாணம் செய்! மழைத்தண்ணீர் உள்ளே வராத மாதிரி நெருக்கமான கூரையினால் அதை மூடு. மக்களை அண்டி வாழும் மிருகங்கள் பட்சிகள் அனைத்திலும் ஒரு ஜோடி – ஆண் பெண்ணாக உன் படகில் ஏற்றிக்கொள் ! உன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள் ! மற்ற சொத்துக்களைப் பற்றிக் கவலைப்படாதே! உன் உயிரைக் காப்பாற்ற வேண்டியதைச் செய்”
எனக்கு அதன் தாக்கம் புரிய சற்று நேரம் ஆனது. புரிந்ததும், ” ஈயாதேவனே ! உனக்குக் கோடான கோடி நன்றி! நீ சொன்னபடி நான் செய்கிறேன். ஊரில் உள்ளவர்களிடம் நான் என்ன சொல்வது?” என்று கேட்டேன்.
அப்போது ஈசா , ” நல்ல கேள்வி! என்லில் உன்மீது கோபம் கொண்டிருப்பதால் அவருக்குப் பயந்து ஈசா கடவுள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன் என்று அனைவரையும் நம்ப வைத்துவிட்டுப் புறப்படு. ” என்று வழியையும் கூறினார்.
அப்போதே படகு நிர்மாணிக்கத் துவங்கினேன். ஐந்து நாட்களில் படகு ஒரு வடிவத்திற்கு வந்தது. அடித்தளம் ஒரு ஏக்கரா அளவு என்று அமைத்து மேல்தளத்துக்கு 120 முழத்திற்கு 120 என்று அமைத்தேன். மேல் தளத்திற்குக் கீழே ஆறு மாடிகளும் தயார் செய்தேன். படகில் நீர் கசியாமலிருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். ஜோடி ஜோடியாக பறவைகள் மிருகங்கள் ஜந்துக்கள் போன்றவைகளுக்கு தடுப்பு அறைகள் அமைத்தேன். உணவு மற்றும் தேவையான சாமான்களையும் பத்திரப்படுத்தினேன். வேலை செய்தவர்களுக்கு உணவும் மதுவும் வழங்கினேன்.
என் குடும்பம் மற்றும் சில உறவினர்கள் படகு கட்ட உதவியவர்கள் அனைவரையும் படகில் ஏற்றி மிகுந்த சிரமத்துடன் அதை ஆற்று நீரில் மிதக்க வைத்து ஈசாவின் உத்தரவுக்காகக் காத்திருந்தேன்.
கடவுளர்கள் விதித்த அந்தப் பிரளய காலம் அன்றிரவு வரப்போகிறது என்ற தகவல் வந்ததும் நாங்கள் ஆற்று வெள்ளத்தில் படகைச் செலுத்திக் கொண்டு புறப்பட்டோம்.
நாங்கள் படகை மிகுந்த சிரமத்துடன் துடுப்பைப் போட்டு சென்று கொண்டிருந்தோம். படகு ஆற்றைக் கடந்து ஆழ்ந்த கடலுக்குள் சென்று கொண்டிருந்தது.
படகுக்கு வெளியே புயல்தேவன் தன் காட்டுக் குதிரையில் சவாரி செய்தான். பாதாளத்தின் தேவன் அணைகள் அனைத்தையும் உடைத்து உலகத்தை வெள்ளத்தில் ஆழ்த்தினான். போர்த் தேவனின் தளபதிகள் ஆறு குளங்கள் எல்லாவற்றிலும் நீரை நிரப்பி பூமியைத் தெரியாதபடி செய்தார்கள். மழைத்தேவன் தொடர் மழையைப் பொழியவைத்து உலகையே தண்ணீர்க் காடாக மாற்றினான். பெருங்காற்று வீசியது. மின்னல் கோரதாண்டவம் செய்தது. மண்பானையை உடைப்பதுபோல் தேவர்கள் பூமியை உருத் தெரியாமல் செய்துவிட்டார்கள். உலகம் முழுதும் இருட்டில் ஆழ்ந்தது. மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் ஜந்துக்கள் அனைத்தும் வெள்ளத்தில் கொல்லப்பட்டன. பிரளயத்தை ஏற்படுத்திய கடவுள்களால் கூட அதன் கொடுமையைக் காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டனர். பூமியிலிருந்து வானத்துக்குச் சென்று ஒளிந்து கொண்டனர்.
காதல் தேவதையான இஷ்டார் அந்தக் கோரத்தைக் கண்டு அழுது புலம்பினாள்.
” உலகில் என் காரியங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. காதலால் பிறந்த மக்கள் பூண்டேயில்லாமல் அழிகிறார்களே ! இப்படிப் புயலை அனுப்பக் கடவுள்கள் தீர்மானித்தபோது நான் ஏன் சம்மதித்தேன்? இவர்கள் என்னால் உண்டானவர்கள்! என் அன்பு மக்கள்! செத்த மீன்கள் நதியின் வெள்ளத்தில் மிதப்பதுபோல இவர்கள் இந்தப் பிரளய வெள்ளத்தில் மிதக்கிறார்கள்! இவர்கள் எல்லாரும் மடிய நானும் ஒரு காரணமாகி விட்டேனே! ” என்று புலம்பினாள்.
மற்ற தேவர்களும் தேவதைகளும் மனிதர்கள் இப்படிச் சாவது பற்றி வாயைக் கையால் பொத்திக் கொண்டு அழுதார்கள்.
இப்படி ஆறு நாட்கள் தொடர்ந்து பிரளயம் நீடித்தது. நாங்கள் மட்டும் பத்திரமாக அந்தப் படகுக்குள் இருந்தோம். ஏழாவது நாள் கடல் அமைதியுற்றது. இடியும் புயலும் இருந்த இடம் தெரியாமல் போயின. உலகத்தைப் பார்த்தேன். எங்கும் மௌனம். மனித நடமாட்டமே இல்லை. இந்தப் பிரளயத்தைத் தாண்டி யார் உயிருடன் இருக்க முடியும்? படகின் கூரைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சூரியனின் ஒளி என் கண்ணில் பட்டது. வாய் விட்டு அழுதேன்.
பூமி எங்காவது தென்பட்டால் அங்கு படகை நிறுத்த எண்ணினேன். எங்கும் தரை தென்படவில்லை. படகு காற்று அடிக்கும் திசையில் சென்றது. பல காதங்கள் போன பிறகு நிசிற என்ற ஒரு மலை தென்பட்டது. அதன் உச்சியில் என் படகு ஒட்டிக்கொண்டது.
வெளியே செல்ல எனக்குப் பயமாக இருந்தது. நாலைந்து நாட்கள் அந்த மலையருகே நின்றுய் கொண்டிருந்தேன். ஒரு புராவை வெளியே அனுப்பினேன். அது சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் படக்குக்கே வந்துவிட்டது. பிறகு ஒரு சிட்டுக்குருவியைப் பறக்க விட்டேன். அதுவும் தங்க இடம் கிடைக்காமல் திரும்பப் படகுக்கே வந்துவிட்டது. பின்னர் காகத்தை அனுப்பினேன். அதற்கு உணவும் தங்க இடமும் கிடைத்தது . அது திரும்ப வரவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் படகின் அனைத்து கதவுகளையும் திறந்து எல்லாவற்றையும் வெளியே விட்டேன்
பின்னர் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் அந்த மலை உச்சியில் இறங்கினோம்.
அங்கே ..
(தொடரும்)