
நரையின்றி வாழ….
தெருவில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியைக் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தேன்…. “ஏ பெரிசு, பாத்துப் போ.. அங்க ஒரு எலெக்ட்ரிக் ஒயரு அறுந்து வுழுந்து கெடக்குது” என்ற அபாயக் குரல் கேட்டு சுற்று முற்றும் பெரிசைத் தேடினேன்… ‘அட, என்னைத்தான் ..’ நமக்கு வயதாகிவிட்டதை, சில சமயங்களில் பிறர் சொல்லித்தான் நமக்குத் தெரிகிறது! தலையில் வழுக்கை, நரை, முகத்தின் சுருக்கங்கள் போன்றவை ஒருவரின் வயதைக் காட்டிவிடக்கூடும்!
‘Ageing gracefully’ – அழகாக, பச்சை இலை நிறம் மாறி பழுப்பாவதைப்போல – முதுமையை எதிர்கொள்வது ஒரு கலை. நரைதிரை என்பது ஒருவரின் வாழ்வானுபவத்தையும், முதிர்ச்சியையும் காட்டும் மாற்றங்கள்தானே!
புறநானூறு – சாலமன் பாப்பையா அவர்களின் புதிய வரிசை வகையைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கவலையின்மைக்குக் காரணங்கள் சிலவற்றைக் கூறும் பிசிராந்தையார் பாடல் ஒன்று – கோப்பெருஞ்சோழனுடன் பெருகிய நட்பினை ஒரு தவமாகப் போற்றி வாழ்ந்த அதே பிசிராந்தையார்தான் – கண்ணில் பட்டது. பழுத்த புலவர், நன்னெறி உணர்த்திய சீலர். அன்பே வடிவானவர். அதனால், முதுமையிலும் இளமை குன்றாமல் நரையின்றி வாழ்ந்தவர் பிசிராந்தையார்! அதற்கென்ன காரணம்? அவரே கூறும் பாடலைப் பார்க்கும் முன், நரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
தலை முடி நரைப்பது – வெள்ளை அல்லது வெள்ளி நிறத்தில் மாறுவது – பொதுவாக வயதானவர்களுக்கு வருவது. முப்பது வயதிற்கு மேல் நரை தோன்றுவது இயற்கையே; வயது ஏற ஏற, வெள்ளை முடிகளும் அதிகமாகும். எல்லா உறுப்புகளையும் போல், முடிக்காலில் உள்ள ‘மெலனோசைட்’ களும் – முடிக்குக் கறுப்பு நிறமளிக்கும் நிறமிகளைத் தயாரிக்கும் செல்கள் – முதுமையில் தங்கள் செயல்பாடுகளில் குறைந்து விடுவதால், கறுப்பு நிறம் குறைந்து, முடிகள் நரைத்து விடுகின்றன. நரை முடி ஒருவரின் வயதை மட்டுமன்றி, அவரின் அனுபவ ஞானத்தையும் காட்டுவதாக அமைகின்றது. இளமையாகக் காட்டிக்கொள்ள, தலையில் கருப்புச் சாயம் பூசிக்கொள்வது தேவையில்லாதது மட்டுமல்ல, சில நேரங்களில் அபாயமானதும் கூட.
‘இளநரை’ – சிலருக்கு இளம் வயதிலேயே, முப்பது வயதுக்கும் முன்னமேயே தோன்றும் நரை பெரும்பாலும் மரபணு சார்ந்து, குடும்பங்களில் வருவது. சில நேரங்களில் உணவில் சத்துக் குறைபாடுகளினால் – வைட்டமின் B12, B6, D, E, A மற்றும் தாதுப் பொருட்கள் (minerals) Zinc, Iron, Magnesium, Selenium, Copper – நரை தோன்றக்கூடும். தைராய்டு சுரப்பியின் குறைபாடுகள், ஆட்டோ இம்யூன் எனப்படும் அழற்சி வகை வியாதிகள் இவற்றில் நரை தோன்றக்கூடும்.
ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. 2020 ல் சில எலிகளுக்கு ஸ்ட்ரெஸ் கொடுத்து (எப்படி செய்திருப்பார்கள்?) சோதித்தபோது, அவற்றின் முடிகள் நரைப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது மனிதர்களுக்கும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனாலும் ஸ்ட்ரெஸ், முடி நரைப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு, அவர்களது மன அழுத்தத்தினால், விரைவில் நரை தோன்றுவதைப் பார்க்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாதவர்களுக்கு ஏற்படும் நரைக்கு, குடும்ப பாரம்பரியத்தைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டியதிருக்கிறது. இருபத்தைந்து வயதிலேயே நரைத்து விட்ட தலையைக் காட்டி, “இது என் அப்பா வழிச் சொத்து” என்று சொல்லும் என் உறவினர் ஒருவரின் நகைச்சுவையில் விஞ்ஞானபூர்வமான உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை!
புகை பிடித்தல் விரைவாக நரை வருவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
உணவுச்சத்து குறைபாடுகள் தவிர்த்து, மற்ற நரைகளுக்குத் தீர்வு இல்லை என்பது வருத்தமான செய்தி. தலைக்குச் சாயம் பூசுவது ஓரளவுக்குத் தோற்றத்தை மாற்றும். சினிமாக்களில் வயதானவர்கள் தங்கள் இளமைக்கால ஃப்ளாஷ்பாக் காட்சிகளில் கருப்பு ‘விக்’ வைத்து வரும்போது நகைப்புக்கிடமாகிவிடும் – வாழ்க்கையில் இதைத் தவிர்ப்பது நல்லது!
80% முடி நரைத்து விட்டால், தலைக்குச் சாயம் பூசுவதை நிறுத்திவிடலாம் என்கிறது ஒரு மருத்துவக் குறிப்பு.
தினசரிகளில் வரும் விளம்பரங்களையும், அதிக செலவில் செய்யப்படும் சிகிச்சை முறைகளையும் தவிர்ப்பது நல்லது. அவற்றால் நரை முடி குறைகிறதோ இல்லையோ, முடிகள் வலுவிழந்து, வழுக்கை விழும் வாய்ப்புகள் ‘பளிச்’ சென்று தெரிகின்றன!
கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என சிலவற்றைச் செய்து பார்க்கலாம் – மன அழுத்தம் அதிகமில்லாத, அமைதியான வாழ்க்கை, நல்ல சத்துள்ள உணவு, புகை பிடித்தலைத் தவிர்த்தல், தலையலங்காரத்திற்கென ப்ளீச்சிங், முடிகளை நேராக்குதல் (Hair straitening) போன்றவற்றைத் தவிர்த்தல், உணவில் கரும்பு ஜீஸ், நெல்லிக்காய், இஞ்சி (முடி கருப்பாகி, முகம் மாறினால் கம்பெனி பொறுப்பல்ல!) போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை உதவக்கூடும்.
முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருவேப்பிலை, அஷ்வகந்தா (Indian ginseng) போன்றவையும் உதவக்கூடும். இரவில் தலைக்குத் தேங்காய் எண்ணைய் தேய்த்துக்கொள்வது, நரை தோன்றுவதைத் தள்ளிப்போட உதவும் – முடிகளின் புரதம் பாதுகாக்கப் படுகிறது.
கை வைத்தியமாகப் பல மூலிகைகள், பூக்கள், இலைகள் எல்லாம் சேர்த்து தயாரிக்கப் படும் எண்ணைகளினால் முடி கறுப்பாகிறதோ இல்லையோ, அவற்றின் வாசம் பலரை பத்தடி வரைத் தள்ளி நிறுத்தி வைக்கும்!
இப்போது பிசிராந்தையார் சொல்லும் பாடலைப் பார்க்கலாம்.
“யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
(திணை: பொதுவியல் துறை; பொருண்மொழிக் காஞ்சி. புலவர்: பிசிராந்தையார் – புறம் 191)
வயதான போதிலும் முடி நரைக்காமைக்குக் காரணங்களாக பிசிராந்தையார் சொல்வது:
மனைவியும், மக்களும் மேன்மையான குணங்களை உடையவர்களாகத் திகழ வேண்டும். வீட்டில் பணி செய்வோர் (இளையர்) நாம் நினைப்பதையே அவர்களும் விரும்பிச் செய்ய வேண்டும். அரசும் (மன்னனும்) தவறானவற்றைச் செய்யாமல் மக்களைக் காக்க வேண்டும். ஊரில் நல்ல குணங்களால் நிறைந்து, பணிய வேண்டிய மேன் மக்களிடம் பணிந்து, ஐம்புலன்களும் தீய வழி செல்லாமல் அடங்கிய சான்றோர் பலர் வாழ் வேண்டும். இவையெல்லாம் எனக்கிருப்பதால் எனக்கு வயதானாலும் நரை இல்லை என்கிறார் புலவர். “கவலையின்மைதான் காரணம்” என்று தெளிவாகச் சொல்கிறார்.
எல்லாம் சரி, நம்ம ஊரில் இப்போது நிறைய பேருக்கு நரை முடியிருக்கிறதே ( சாயப்பூச்சைத் தவிர்த்து!) என்பவர்கள், பிசிராந்தையார் கூறியுள்ள காரணங்களில் எவையெல்லாம் இன்று நம்மிடையே இல்லை என்று ஆராயலாம். முடிவில் முடியைப் பிய்த்துக்கொண்டு வழுக்கையானால் என்னையோ, பிசிராந்தையாரையோ கடிந்து கொள்ளாதீர்கள்! வழுக்கையாகிவிட்டால், நரை பற்றிய கவலை இல்லைதானே!
(Ref: 1. தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் – தொகு: இரா. மோகன். சாகித்திய அகாதமி.
2. புறநானூறு – புதிய வரிசை வகை – சாலமன் பாப்பையா. கவிதா பப்ளிகேஷன் சென்னை. 600017.)