“ சிறந்த தோட்டக்கலை நிபுணர் விருதினைப் பெறுபவர் ஆர்.புவனா. விருதோடு முதல் பரிசு தொகை பத்தாயிரம் ரூபாயும் புவனாவுக்கு அளிக்கப்படும்” என்ற அறிவிப்பு ஒலி பெருக்கியில் அறிவித்தவுடன் கூட்டத்தில் ஒரே கலகலப்பு. 500 பேர் குழுமியிருந்த அந்த அரங்கில் கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று.
அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த போட்டியாளர்களில் புவனாவும் ஒருத்தி. 20 வயது இளம்பெண். கல்லூரியில் தாவரவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி
அங்கு வந்திருந்த போட்டியாளர்கள் அனைவருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள். புவனா ஒருத்திதான் வயதில் எல்லோரையும் விட இளையவள். அவளால் அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.
அறிவிப்பாளர் புவனா புவனா என்று மூன்று முறை கூறிய பிறகுதான் அவர் தன்னைத்தான் கூப்பிடுகிறார் என்ற சுய நினைவுக்கு வந்து உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்றாள். அங்கே அறிவிப்பாளர் புவனாவின் சாதனையை விவரித்துக் கொண்டிருந்தார்.
“எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன், கல்லூரியில் இளங்கலை தாவரவியல் இறுதியாண்டு படிக்கும் இந்த இளம் கல்லூரி மாணவி ஆர். புவனாதான் இந்த வருடத்திற்கான சிறப்பு தோட்டக்கலை நிபுணர் விருதினை மட்டுமல்லாமல் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசும் பெறுகிறார்” என்று கூறிக்கொண்டே புவனாவின் சாதனையை மேலும் எடுத்துரைத்தார்.
“இந்த சின்ன வயதில் முள்ளில்லா மூங்கிலை விவசாயிகளிடம் எடுத்துச் சென்று அதன் பயன்பாடுகளை அறியச் செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் இருந்தாலும் சுமார் 20 வகையான முள்ளில்லா மூங்கில்களில் பதினோரு வகைகளை நம் தமிழ்நாட்டிற்கு உகந்தவை என்று எடுத்துரைத்து சுகாதாரக் கேட்டிற்கு தீர்வாகும் இந்த மூங்கில் வளர்ப்பு என்று அறிய வைத்தார். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவு நீரிலும், ஏன் சாயப்பட்டறையிலுமிருந்து வெளிவரும் கழிவு நீரிலும் இந்த மூங்கிலை விவசாயம் செய்ய பயன்படுத்தலாம். தற்போது சாயக்கழிவு நீரை முற்றிலும் இந்த மூங்கில் பயிர் எடுத்துக்கொண்டு நிலத்தடிக்கு போகாதவாறு உபயோகப்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். செலவும் குறைவு. விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றெல்லாம் விவசாயிகளை அறியச் செய்தவர் இந்த புவனா” என்று விரிவாக சொல்லி முடித்தார் அறிவிப்பாளர்.
அரங்கில் கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. பரிசுத்தொகை, சால்வை, விருது பட்டயம் அனைத்தையும் பெற்றுக் கொண்டாள். புவனா. பளிச் பளிச்சென கேமராவின் ஃப்ளாஷ் அவள் மீது விழுந்தன. அவளுக்கு பெருமை பிடிபடவில்லை.
இதற்காகத்தானே இந்த மூன்று வருடங்களும் கல்லூரி படிப்போடு, ஆராய்ச்சியும் செய்து ஒரு சாதனை படைத்தேன் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி தன் இருக்கைக்கு வருவதற்கு முன் பல்வேறு பத்திரிகை நிருபர்கள் உற்சாகத்துடன் அவளை அணுகி அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்
விழா முடிந்து அனைவரும் கலைய ஆரம்பித்தனர். புவனாவும் ஒவ்வொருவரிடமும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களிலும் செய்திகளுடன் தன் ஃபோட்டோ வருமே, அந்த நினைப்பே ஒரு மயக்கத்தை தந்தது அவளுக்கு. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார் ? புவனாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
போட்டி முடிந்தவுடன் அரங்கை விட்டு வெளியே வந்து பார்க்கிங் இடத்தில் சென்று தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் புவனா. ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. ஓங்கி ஒரு உதை விட்டு அதை ஸ்டார்ட் செய்தாள்.
“ராட்சசி, ஏண்டி, மணி ஏழாச்சு, இப்படி படுக்கையிலிருந்து உதைவிட்டு பக்கத்துல இருக்கிற டைம்பீஸ கீழ தள்ளி ராத்திரியில குடிச்ச காபி மக்கையும் கீழே தள்ளி ஒடச்சு…. உன்னோட பெரிய ரோதனையா போச்சு !” என்று கத்திக்கொண்டே புவனாவை தன் பலம் கொண்ட மட்டும் உலுக்கி எழுப்பப் பார்த்தாள் அவள் அம்மா சாரதா.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த புவனா, “அட, சே , நான் கண்டது அத்தனையும் கனவா !” என்று கண்ணை கசக்கிக்கொண்டு டைம்பீஸைத் தேடினாள். அவள் விட்ட உதையில் அது கீழே விழுந்து வாயைப் பிளந்து பேட்டரி ஒரு மூலையில் தெறித்து விழுந்திருந்தது. இந்தப்பக்கம் காலை வைக்கலாம் என்று கீழே பார்த்தால், காபி மக் சில்லு சில்லாக உடைந்து அவள் காலை பதம் பார்த்தது.
சலிப்புடன் எழுந்து பல் தேய்க்கப் போனாள். அவள் அம்மா கிச்சனில் இருந்து இரைந்து கத்திக் கொண்டிருந்தாள்.
“பாட்டனி படிக்கிறாளாம், மாடில தொட்டியில இருக்கிற துளசிச் செடியைக் கூட தண்ணி ஊத்தி உரம் போட்டு வளக்கத் துப்பில்ல, காலை வேள அவசரத்துல, சமையலையும் பாத்து இந்த துளசிக் செடியையும் பார்க்கணும். இருக்கிறதே ஒரு செடி, அதக் கூட பாக்காம அப்படி என்ன தூக்கம், சோம்பேறித்தனம்,? வயசு இருபது ஆச்சு பொறுப்பே இல்ல”. என பொரிந்து தள்ளினாள் அவள் அம்மா சாரதா.
அம்மா புலம்புவது அனைத்தும் அவள் காதில் விழுந்தது. கண்ணாடியின் முன் நிதானமாக பல் தேய்த்துக் கொண்டிருந்தவள், அவள் அம்மா சொன்னதையும் தன் கனவில் நடந்த நிகழ்ச்சியையும் ஒருசேர நினைத்துப் பார்த்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அந்த சிரிப்புத்தான் அவள் கண்ட கனவைப் பின்னாளில் நனவாக்கியது !!