அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி
அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க, பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச, மணம்கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.
தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்!
நோக்கம்:
‘இராம’ நாமத்தின் மகிமை
பொருள்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தினம் தினம் எல்லாவித நல்லதும், உங்கள் தேவைக்கான செல்வங்களும் கொடுக்கவல்லது இராம நாமம்!
(தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே)
தின்மை என்பது தீயசெயல் ஆகும். நன்மை என்பதின் நேரடி எதிர்பதமே தின்மை! பாவம் என்பது தீயவினை. தீயசெயல் என்பதும், தீவினை என்பதும் வெவ்வேறு. தீயசெயல் எப்போதுமே இந்த பிறவியில் நீங்கள் செய்யும் தீய நன்மையற்ற செயல்கள் ஆகும், பாவம் என்பது பெரும்பாலும் இந்த பிறவியில் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்கள், அந்த கஷ்டங்கள் முற்பிறவியில் நீங்க செய்த தின்மைகளினால் நேர்ந்தது! அதனால் திண்மை எப்போதும் தற்கால பிறவியின் தீ செயல்கள், பாவம் நீங்கள் முற்கால பிறவியில் செய்த தீசெயல்களின் சம்பளம் அவ்வளவு தான்! எது எப்படியோ இராம நாமம் இது எல்லாத்தையும் சிதைத்து விடும், அது இந்த பிறவியோ இல்லை ஆயிரம் பிறவிகளின் தாக்கமோ கவலையே இல்லை, இராம நாமம் இராம பானம் போல துளைத்து சிதைத்துவிடும்!
(சென்மமும் மரணமும் இன்றித் தீருமே)
சென்மம் என்பது பிறப்பு. பிறப்பும், மரணமும் இல்லது அந்த சுழற்சி இல்லாமல் போயி விடும் இராம நாமம் ஜெபித்தால்!
(இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்)
‘ராம’ நாமம் என்னும் இரண்டு எழுத்து மந்திரத்தினால் இந்த பிறவியிலேயே உங்களுக்கு இந்த அனைத்து மகிமைகளும் நிகழும்!