” ஏய், மச மசன்னு டீவி பெட்டிய பாத்துட்டு நிக்காத”
“எங்க அக்கா அவ பசங்கள அழைச்சு கிட்டு வரா.. எதனா… அதிரசம் முறுக்கு பண்ணு” என்றார் கணேசன் தன் மனைவி பாருவிடம்.
பாரு உடனே எழுந்து கிச்சனுக்கு போய் விட்டாள்.
“அப்பா ,ஏம்பா அம்மாவை விரட்டற. இந்த ஒரு சீரியல் தான் அம்மா டீவில பாக்குறாங்க” என்றாள் ராஜி.
” ஆமா , சமையல் பொரகராம் பாக்கறேன்னு பாதி நேரம் ரிமோட்டை எடுத்துக்குவா… அதில் நீ அவளுக்கு சப்போர்ட்”
பாரு ஒரு தட்டில் இனிப்பு துண்டுகளை வைத்து கொண்டு வந்தாள்.
” கொண்டைக்கடலை பர்பி”
நன்றாகத் தான் இருந்தது.
காரத்துக்கு தினை மிளகு தட்டை.
அப்பா பாராட்டி பேசவில்லை. ஆனால் ருசித்து சாப்பிட்டார்
” அப்பா , ரொம்ப நல்லா இருக்குல்ல “
” ஹ்ம்.. எங்கம்மா கைப்பக்குவம் வராது”
” போப்பா, எங்கம்மா கைப்பக்குவம் வராது” என்று ராஜி கோபமாக சொல்ல…
” ராஜி , இங்க வா ,” என்று உள்ளே அழைத்தாள் பாரு.
” அப்பா என்ன புதுசாவா என்ன குறை சொல்லுறாங்க , எப்பவும் நடக்கிறது தானே”
பாரு தன் வேலைகளை ஞானி போல பார்த்துக்கொண்டு இருந்தாள்.
” அம்மா , முறுக்கு ஆரம்பிக்கிறயா? சரி போய் ஒரு நல்ல புடவையா உடுத்திக்கொண்டு வந்து செய்யேன்”
” அழுக்காயிடும்”
ராஜி ரொம்ப வற்புறுத்தியதால் கொஞ்சம் பெட்டரான காட்டன் சாரி கட்டிக் கொண்டாள்.
“எப்படி செய்வதுன்னு எனக்கு சொல்லேன்.”
ராஜி கையில் அவள் போன்.
“ராஜி போட்டோ எடுக்கப் போறியா ? அதுக்கு தான் நல்ல புடவை கட்டச் சொன்னயா “
“ஆமாம் , கொஞ்சம் முகத்தையும் சரி பண்ணிக்கோ”
வெட்கப்பட்டாள் பாரு.
” அதெல்லாம் ஒன்னும் வேணாம் போட்டோ எடுக்காத”
” நான் முடிவு பண்ணிட்டேன். நல்லா கோ ஆப்பரேட் பண்ணினா , அழகா வரும்”
பாருவும் ராஜி சொன்னபடி முகத்தை வைத்து , முறுக்கு எப்படி செய்ய வேண்டும், என்ன பொருட்கள் , அளவு , பக்குவம் என அழகாக சொன்னாள்.
ராஜி அப்படியே வீடியோ எடுத்து யூ ட்யூபில் போட்டு மற்ற தளங்களிலும் ஷேர் செய்தாள்.
ஏகப்பட்ட லைக்குகள் , கமென்ட்
வேற தின்பண்டங்கள் செய்ய சொல்லி ரிக்வெஸ்ட்.
உருவாகியது ” ரானு கிச்சன்ஸ்” சேனல் , வெப் பேஜ் …
” நீ கமெண்ட் தரயாப்பா ” என ராஜி ஒரு நாள் கேட்க , ரொம்ப நாளாக தன்னையும் டீமில் சேர்த்து கொள்ள மாட்டார்களா என்று ஏங்கி கொண்டு இருந்த கணேசன் உடனடியாக சரண்டர் ஆனார்.
” பானு சூப்பர் . சமைக்கும் போது மணக்கும். சாப்பிடும் போது ருசிக்கும். சாப்பிட்ட பிறகும் கவரும் ” என்று பன்ச் டயலாக்கை அள்ளி விட்டார் கணேசன்.