நிமிர்ந்து பார்க்கையில் கடிகாரம் ஒன்பது மணி என்று காட்டியது. வழக்கத்தைவிட அதிக நேரமாகிவிட்டது இன்று. சுலபா காலையிலேயே முணுமுணுத்தாள்- வாரத்திற்கு இரு முறைகளாவது இவள் எட்டு மணிக்குள் வருவதில்லை என்று. அதிகப் பணம் கொடுக்கிறாள், அதிக சலுகைகளையும் கொடுக்கிறாள், ஆனால், சுலபாவால் சண்டைபோடாமல் இருக்க முடியாது. தான் ஏன் இன்னமும் இவர்களையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்கிறோமென்று தன்னிரக்கத்தில் மனம் ஒரு கணம் தடுமாறியது.
ஆனால். சுலபா அவளுக்குத் தேவையானவள்; கடுகடுத்தாலும் நிஷாவைப் பார்த்துக் கொள்பவள்; நிஷாவிற்கு உணவூட்டி, விளையாடி, தூங்கவைத்து, மருந்து கொடுத்து அரவணைப்பவள். குழந்தையைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதவள்; குழந்தையா.. நிஷா இன்னமும் குழந்தையா? சுலபா சொன்னாளே- “மீரா, இது உக்காந்துடும் கொஞ்ச நாள்ல; என்ன செய்யப் போறோமோ?” ஒருமாதிரி அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. வேண்டாம், நிஷாவிற்கு இது வேண்டாம், எல்லாவிதத்திலும் வஞ்சனை செய்த கடவுள் இதிலாவது தனக்கு நல்லது செய்யட்டும்.
இத்தனை எண்ணங்கள் பின்ன அவள் கணினியை மூடி சுற்றிவரப் பார்த்தாள்; அலுவலகத்தில் எவரும் தென்படவில்லை. வேலை மும்முரத்தில் இன்று வெள்ளிக் கிழமை என்பதையே அவள் மறந்திருக்கிறாள். கைப்பையை எடுத்துக் கொண்டு அவள் தன் அறை விளைக்கை அணைக்கப் போகையில் உதவிப் பொது மேலாளரிடமிருந்து இன்டர்காம் அழைப்பு வந்தது. அவளுக்கு முதலில் வியப்பாக இருந்தது;
அவரைவிட மூன்று படி நிலைகள் கீழே உள்ள ஒரு நிதித் தொழில் நுட்ப மேலாளர் அவள். நேரடியாகப் பேசுவதற்கு இருவரிடமும் ஒன்றுமில்லை. தவிர்த்து விடலாமென நினைத்தவள் ரஸாக் இருப்பதைப் பார்த்ததும் அந்த அழைப்பை எடுத்துப் பேசினாள். உதவிப் பொது மேலாளர் அறைக்குச் செல்கையில் ரஸாக் புன்னகைத்தான்.
“மிஸஸ். மீரா, இந்த நேரத்தில் உங்களை அழைத்ததற்கு மன்னிக்கவும். ஹெச் ஓவிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.” என்றவன் பஸ்ஸரை அழுத்தி ‘ரஸாக், அந்த விக்னேஷ் ஹவுஸிங் ஃபைல எடுத்துக் கொடு. வெளில வெய்ட் பண்ணு’ என்றான். இந்த நேரத்தில் எதற்கு அந்த ஃபைல் என்று நினைத்தாலும் அவள் பேசாமலிருந்தாள். தனியார் வங்கியில் தோற்றம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்ற எண்ணம் தான் அவளுக்கு முதலில் வந்தது.
இந்த அறைக்கு அவள் வந்ததில்லை, வரவும் தேவையில்லை. சுவரில் வங்கியின் விவரங்கள் அடங்கிய அழகிய பெரிய படம் நடு நாயகமாக இருந்தது. அதைச் சுற்றி சிறிய தொங்கும் தொட்டிச் செடிகள், இடது புறத்தில் புரியக்கூடாதென்றே வரையப்பட்ட ஓவியம், கால் பதியும் காஷ்மீரக் கம்பளம், மேஜையில் பீங்கான் கிண்ணங்களில் 3டி ஓவியங்கள், சிறிய பிரம்புத் தொட்டில்கள் போலிருந்த மர ஊசலில் பல வண்ணங்களில் பேனாக்கள், பென்சில்கள், நிகு நிகுவென்று இரு கணினிகள், பூனை வடிவ தொலைபேசி ஒன்று, தேக்கு மரத்தில் மேஜை, ரோஸ்வுட் நாற்காலிகள், வருகையாளர் அமர்வதர்க்கென்றே கார்னர் சோஃபாக்கள், உயர்ந்த சிம்மாசனம் போன்ற அவனது இருக்கை, எதிரே நாலு நாற்காலிகள், அழகு, தூய்மை, மெல்லிய நறுமணம், செவ்விசை கசியும் ஸ்பீக்கர்ஸ்.. ஆம், ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவளும் இம்மாதிரி அறையில் நல்ல அந்தஸ்துடன் அமர்வாள்.
அவன் ஃபைலிலிருந்து தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பிறகு மிகக் கறாராக அந்த கடன் விண்ணப்பத்தில் அவள் எழுப்பியிருந்த கேள்விகளைப் பரிசீலிக்கத் தொடங்கினான். ‘எவ்வளவு பேத்தலான அனாலிசஸ். இம்ப்ராக்டிகல் கண்டிஷன்ஸ். உங்களுக்கென்ன, எப்படியும் சம்பளம் வரப் போகிறது- வங்கியின் பிசினஸ் பற்றி என்ன கவலை உங்களுக்கு?’
“அந்த பிசினஸ் பற்றிய கருத்து இருப்பதால் தான் இப்படி நோட் எழுதியிருக்கிறேன். ஒரு புறம் வங்கி கடனை 720 சீனியர்களுக்கான வீடுகள் கட்ட அந்தக் கம்பெனிக்குக் கொடுக்கிறது- ஒவ்வொரு பேஸாக, புக் ஆக புக் ஆக கடன் கொடுக்கலாம்தான்; ஆனால், கம்பெனி, உரிமையாளர்களின் விற்பனை உரிமையில் கை வைக்கும் ஷரத்தைச் சேர்த்திருக்கிறது. இது சட்ட பூர்வமாகச் செல்லுபடியாகாது. சொத்துக்கள், வாரிசுதாரர்களின் இயல்பான சட்ட பூர்வ உரிமை. அதைக்கூட இந்தக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்து பின்னர் அதன் அனுமதியின் பேரில் தான் அந்த வாரிசுதாரர்கள் விற்கவோ, வாடகைக்கு விடவோ முடியும் என்பது அராஜகம். வளமான சீனியர்களுக்கான அனைத்து வசதிகளும் சேர்ந்த குடியிருப்பு என்பதால் பெரும்பாலும் வங்கிக் கடன் இல்லாமல் அவர்கள் வாங்குவார்கள். கட்டடம் எழும்பும் ‘ஸ்டேஜசி’ற்கு உண்டான பணத்தை கம்பெனியிடம் அவர்கள் தரக் கூடாது, மாறாக அந்தத் தொகை ‘எஸ்க்ரோ’ கணக்கில் வர வேண்டும். அதற்காகக் கட்டாயம். ‘ட்ரைபார்ட்டைட் அக்ரிமென்ட்’ வேண்டும். கம்பெனி ‘ப்ரோச்சரே’ இதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் ‘போர்ட்டில்’ ‘ஸ்பெஷல் ரெஸல்யூஷன்’ போட்டு அதைப் பதிவு செய்ய வேண்டும். அந்த நிலமிருக்குமிடம் பூமி அதிர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளற்றது என்ற சான்றிதழ் வேண்டும்.”
‘நிறுத்து, நிறுத்து, சும்மா பேசிண்டே போற. சி எம் சொன்னாரு- அது திமிர் புடிச்ச பொம்பளன்னு. தெரியாமத்தான் கேக்கறேன் உன் வேலை ‘ஃபன்ட் அனாலிசஸ்’, ‘ஸ்வாட்’, ‘ஃப்ளோ இம்பேரபிலிடி’, ‘ஆர்ஒஐ’ ‘ஆர்ஒஎ’ தானே? நீ ஏன் சட்டத்தைப் பத்திப் பேசற? சட்டப் பொது மேலாளர் ‘வெட்’ செஞ்ச பொறகுதான் உங்கிட்ட இது வந்திருக்கு. உன் எல்லைக்குள்ள நில்லு’
“சாரி, சார் இதுவும் என் ‘ஏரியா’தான். ஒரு ‘ப்ராஜெக்ட’ சாவித் துவாரம் வழியா பாக்க முடியாது. முக்கியமா ‘எஸ்க்ரோ’வும், ‘அக்ரிமென்ட்டும்’ இல்லேன்னா, இது வாராக்கடனாயிடும். அதப் போல சொத்துரிமைச் சட்டத்தை கம்பெனி வளைக்கறத்துக்கு அனுமதிக்கக் கூடாது.”
‘முடிவா என்ன சொல்லவர?’
“ஏற்கெனவே ‘நோட்ஸ்ல’ சொன்னதைத்தான்.”
‘அத மாத்தி எழுதுன்னு சொன்னா..?’
“செய்ய மாட்டேன். என் ‘நோட்ஸ்’ஐ ‘ரிஜெக்ட்’ செஞ்சு என் மேலதிகாரிகள் பதிவு செய்யலாமே?”
‘இது இன்சபார்டினேஷன்’
“இல்லை என் கடமை எனக்குக் கொடுத்திருக்கும் உரிமை”
‘என்ன ஒரு கர்வம் உனக்கு?’
“தேங்க்யூ, நான் கிளம்பலாமா?”
‘இதுக்கு ஒரு வழி சொல்லிட்டுப் போ. இந்தப் பாரு, நல்ல பிசினஸ் வரச்சே விட்டுடக் கூடாது. உனக்கு ஏதாவது கமிஷன் வேணுமா நா சொல்லி வாங்கித் தரேன். உன் பொண்ணுக்குக் கூட ஏதோ ‘ஆடிஸமும் டிஸ்லெக்சியா’வுமாமே? பாவம், செலவுக்கு வச்சுக்கோ.’
“என் சம்பாத்தியமே போதும். இந்தக் கமிஷனெல்லாம் உங்களோட வச்சுக்குங்க. நான் வேற மாரி நோட்ஸ் எழுத மாட்டேன். எனக்கு மேல ரண்டு பேரு இருக்காங்கல்ல, அவங்கள எழுத்துப் பூர்வமா இத ‘டீல்’ பண்ணச் சொல்லுங்க.”
அவன் இருக்கையை விட்டு எழுந்து நடந்து கொண்டே பேசினான்.
‘இப்படி டஃப் ஃபைட் கொடுக்கறது எனக்குப் பிடிச்சிருக்கு. யூ ஆர் யுனிக். கூல், மீரா, கூல். இதப் பத்தி அப்றமா பேசலாம். இராத்திரி நேரம், நல்ல தனிமை இல்ல இப்ப என்ன நெனக்கற நீ’
பேச்சு திசை மாறியதில் அவள் திகைத்து எழப் போனாள்.
‘மிஸஸ். மீரா நாகராஜ் ஓ சாரி, மிஸஸ். மீரா முகுந்தன், இந்த நேரத்தில் அழைத்ததற்கு மீண்டும் மன்னிக்க வேண்டும், இந்தப் பேச்சிற்காகவும். ப்ளீஸ் உக்காருங்கள். இது லெமன் ஜூஸ் தான்- எடுத்துக் கொள்ளுங்கள்.’
“மிக்க நன்றி சார். நான் குளிர் பானங்கள் இரவில் எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு நேரமாகிறது, நான் போக வேண்டும்.”
‘ஓ, ஐ சீ, அப்போ ஹாட் ட்ரிங்க்ஸ், ஓ சாரி, சில்லியாகக் கேட்டுவிட்டேன்.’
“சார், என்னாலும் கேவலமாகப் பேச முடியும் என்னைப் பொறுத்தவரை ஆஃபீஸ் கூட கோயில்தான். எனக்கு சற்று அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும்.’ என்று சொன்னவாறே எழுந்தவளை அவன் கைகளால் சைகை செய்து மீண்டும் அமரச் சொன்னான். ஒரு மிடறு ஜூஸ் குடித்துவிட்டு, ‘சோ லைஃப் எப்படிப் போகிறது?’ என்றான்.
அவளுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. அவன் பதவி உயர்வு பெற்று இந்த அலுவலகம் வந்தே இரு வாரங்கள் தானாகிறது. அதற்குள் தன் பெயரை இறந்து போன முன்னாள் கணவருடன் இணைத்து, பின்னர் தவறாகச் சொன்னது போல் நடித்து… இன்னும் என்னவெல்லாம் தெரியும் இவனுக்கு, இன்னும் என்ன கேட்கப் போகிறான் இவன்?
‘மன்னிக்க வேண்டும். அலுவல் விஷயமானால் பேசலாம், அது கூட நாளைக் காலையில் தான். அதற்குக்கூட அவசியமில்லை. எனக்கு இரு மேலதிகாரிகள் இருக்கின்றனரே; நான் உங்களுடன் அலுவல் விஷயங்கள் கூட டிஸ்கஸ் செய்ய வேண்டாமே.’ அதற்குள் அவன் அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் வந்து நின்றுவிட்டான். அவள் சேரைத் தள்ளி எழுந்திருந்தால் மோத வேண்டி வரும்; அவன் மூச்சுக்காற்று கழுத்தின் பின்புறம் படியும் அளவில் நெருங்கி நிற்கிறான்.
“பயப்படாதே, மீரா. நான் ஒன்றும் செய்ய மாட்டேன். உன் வாழ்க்கை நன்றாக இல்லையே, கணவர்களுமில்லையே- ஐ மீன் உன்னுடன் இப்போது இல்லையே.. அதனால் தான்.. உனக்கும் ஏக்கங்கள், ஆசைகள் இருக்கும்.. உடல் சிலவற்றிற்குக் கெஞ்சும்.. திருட்டுத் தனமாகவாவது ருசிக்கச் சொல்லும்.. நீ அப்படி அழகி ஒன்றுமில்லை.. ஆனால், உன்…. .. எல்லோருக்கும் கிடைக்காது. இல்லயில்லை.. இது என் கண்கள் ஊகிக்கும் ஒன்று.. மூடியிருந்தாலும் எனக்குத் தென்பட்டுவிடும்.’
இந்த முப்பத்தி நான்கு வயதில் அவள் கேட்கும் மிக நேரடியான வர்ணனை இது. கூச வைத்தாலும், அதன் உண்மை அவளுக்குள் சிறு சலனத்தை ஏற்படுத்தியது .தன் உணர்வுகளை அடையாளம் காண முடியாமல் அவள் தவித்தாள். நாகராஜனுடன் அவள் வாழ்ந்தது மூன்றே மாதங்கள் தான்; அவனுக்கு இரசனை என்ற ஒன்றே கிடையாது. எதிலும் ஓட்டம், எல்லாவற்றிலும் அவசரம், அதே அவசரத்தில் விபத்தில் இறந்தும் போனான். முகுந்தன் அவனுடைய நண்பன். அவள் துணையின்றி நின்ற பரிதாபத்தில் இரக்கப்பட்டு அவளை மணந்து கொண்டதாகச் சொன்னவன். இந்த இரண்டாம் கல்யாணத்திற்கு மறு வாரம் நிஷா பிறந்தாள். அவளைத் தன் பெண்ணெனக் கொண்டாடினான் முகுந்தன். நிஷா அவனை ஏனோ நெருங்க விடவில்லை.
இவன், இந்த ஜோஷி, ஆண்மைத்தனமாக இருக்கிறான். இவனது அருகாமை, இவனது வாசம், அந்த வரம்பு மீறும் வசீகரத்தின் வசியம், இரவு நேரம், ஆம் இரவு… நிஷா என்றால் இரவுமல்லவா?
அவள் குரலில் சிரிப்பையும், கொஞ்சலையும் வரவழைத்துக் கொண்டே சொன்னாள் “நான் முகுந்தனை விவாகரத்து செய்து விடுகிறேன்; நீங்களும் உங்கள் மனைவியை விலக்கி விடுங்கள். அதுவரை என்னிடம் வர முடியாது ஜோஷி.”
‘என்ன சொல்கிறாய், என் மனைவி யார் தெரியுமா? ….. மா நிலத்தின் கவர்னரின் மகள். உன்னைப் போல் இரட்டை ஆடு மேய்ந்த நிலமில்லை அவள். என்னைப் பேர் சொல்லி அழைக்கிறாய். உன்னை…..உன்னை என்ன செய்கிறேன் பார்.’
மீரா நாற்காலியைச் சடாரென்று தள்ளி எழுந்தாள். அவன் நிலைகுலைந்து விழ அவள் பஸ்ஸரை அழுத்தினாள். ரஸாக் அவள் நின்ற நிலையையும், அவன் கிடந்தெழுந்த நிலையையும் பார்த்தான். ஜோஷியின் கோப்பையில் ஒரு பானம் ஊற்றிக் கொடுத்துவிட்டு நின்றான்.
ஏற்கெனவே சிவந்திருந்த அவன் முகம் ரஸாக்கிடம் கோபத்தைக் கக்கியது. ‘வெளியே போ’ என்று கத்தினான். இது நல்ல சமயம் என்று போகப்போன அவள் சற்று நிதானித்தாள்.
தான் ஏன் இன்னமும் இங்கிருந்து நகரவில்லை எனப் புரியவில்லை. இவன் ஆபத்தானவன், வேகமாக வெளியே போவதுதான் இவனுக்குச் சரியான அவமரியாதை என்றது ஒரு மனம். இன்னொன்று, அவனைக் கீழே விழ வைத்தது போதாது, தன்னைக் கிட்டத்தட்ட வேசி என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அவனைப் பழி வாங்க வேண்டும். எப்படிச் செய்வது, அதுவும் இப்போதே என்ன செய்ய முடியும்?
“ஜோஷி, உன் பேர் அதுதானே, ஆஃபீஸ்ல ஆபாசமாப் பேசற உனக்கெல்லாம் என்ன மரியாத வேண்டிக் கிடக்கு. அத விடு, உனக்குத் தினவுன்னா, முகுந்தன் போபால்லதான் இருக்கான். அவன் ஒரு ஹோமோசெக்சுவல். உனக்கு ஏத்தவன். எம்பொண்ணுக்கு ஆடிசமுமிருக்கு, டிஸ்லெக்சியாவும் இருக்கு. ஆனா, அம்மாவ, ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி ஏமாத்தினவன்னு அவளுக்கு எப்படியோ புரிஞ்சிருக்கு. அவனக் கண்டாலே கத்தி ஆர்ப்பாட்டம் செய்வோ. அவ நிஷாதான்டா பாவி; ஆனா, எனக்கு நிஷாகாந்தி.”
‘நான் நெனச்சா..’
“நெனையேன்டா, என்ன செய்வ? பொய்யா சார்ஜ்ஷீட் கொடுப்ப, இன்சபார்டினேஷன்ன்னு மெமோ கொடுப்ப, ஏதேதோ சொல்லி சஸ்பென்ட் பண்ணுவ, தொலைவில இருக்கற இடத்துக்கு மாத்துவ. ஆனா, நா ஸ்பெலிஸ்ட் ஆஃபீஸர். என்ன நகரப் பகுதிக்குத்தான் மாத்த முடியும்; அங்க என் நிஷாவுக்கு வைத்யம் தொடர முடியும்.”
அவள் நிதானமாக நடந்து வெளியே வந்தாள். ரஸாக் மீண்டும் புன்னகைத்தான்.
பானுமதி.ந