”யாருக்கு வாக்கு?”
வெள்ளந்தியாகக் கேட்ட சரோஜாவை புன் சிரிப்போடு பார்த்தார் இசக்கியாப் பிள்ளை. அறுபத்தைந்து வயதிருக்கும். மாநிறத்துக்கும் குறைவான நிறம்.. தலை வழுக்கை.. அதில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைக் கம்பிகள்.. ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய பழுப்பு ஏறிய வேட்டி. அதை விட பழுப்பேறிய முண்டா பனியன்,, இன்ன நிறம் என்று சொல்ல முடியாத துண்டு தோளில்..
“என்ன அவசரம்? ஒரு கட்சி தானே வந்திருக்கானுங்க.. ரெண்டாயிரம்னு பேசியிருக்கானுங்க.. இன்னொரு கட்சியும் வரட்டும்.. அவுங்க என்ன சொல்றாங்கன்னு பாப்போம்”
சரோஜா கன்னத்தில் கை வைத்தாள்.
“இன்னாங்க இது.. ஏதோ வியாவாரம் மாதிரிலே இருக்குது” இசக்கியாப் பிள்ளை அவள் சொல்வதை ஆமோதித்துத் தலையசைத்தார். அவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
“என்ன பண்ண? அப்படி ஆக்கிட்டானுங்களே.. அவங்க பேரத்தை ஒப்புக்கலைன்னா நமக்குத் தான் நட்டம்”
தாமிரபரணியை தொட்ட அந்த கிராமத்தில் மொத்தம் ஐம்பது அறுபது குடும்பங்கள்.. முன்னூறு ஓட்டு தேறும்.. இசக்கியாப் பிள்ளை தான் அவர்களுக்கெல்லாம் தலைவர் மாதிரி.. அவர் பேச்சை எதிலும் மீற மாட்டார்கள்.. கிராமத்தில் நல்லது கெட்டது எல்லாமே இசக்கியாப் பிள்ளையின் அறிவுறைப் படி தான் நடக்கும்..
வழக்கமாக எந்தத் தேர்தல் நடந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்னால் இசக்கியாப் பிள்ளை ஊரைக் கூட்டி ஆலோசனை நடத்துவார்.. கிராமத்தில் அத்தனை வாக்கும் அவர் காட்டும் நபருக்குத் தான் விழும். கிட்டத்தட்ட ஊர் கட்டுப் பாடு மாதிரி தான் செயல் படுவார்கள்.
இந்த முறை கிராமத்தில் பலருக்கு மன வருத்தம் இருந்தது.
“தலைவரே.. ஊருக்குள்ள இப்ப ஒரே ஒரு பஸ்ஸு தான் வருது.. அதுவும் எப்பவாச்சும்.. நாம டவுனுக்குப் போய் வர எவ்வளவு பாடா இருக்குது.. இந்தப் பக்கமா வர போற பஸ்ஸுலாம் நம்ம கிராமத்துக் குள்ளாரயும் வரணும்னு ஒவ்வொரு தேர்தல் போதும் கோரிக்கை வெக்கறோம்.. சரின்னு தலையாட்டிட்டுப் போறானுங்க.. ஆனா தேர்தல்ல ஜெயிச்ச பொறவு அதை மறந்துடறானுங்க”
“ஊருக்குள்ள குழாத் தண்ணி வரணும்னு நாமும் சொல்லிட்டிருக்கோம்.. யாரும் கண்டுக்க மாட்டேங்கறானுங்களே”
“ஒரு சின்ன ஆஸ்பத்ரியாவது வேணும் தலைவரே.. வண்டி பிடிச்சு டவுன் ஆஸ்பத்ரி போறதுகுள்ளார உசிரே போயிடுது”
இத்தனைக்கும் நடுவில் தான் அரசியல் கட்சிகளின் பேரங்களும் நடந்துக் கொண்டிருந்தன..
“ஹாய்.. கிராண்பா.. தாமிரை இஸ் சூப்பர்”
பட்டணத்திலிருந்து வந்திருந்த இசக்கியாப் பிள்ளையின் பேரன் ஆதிமூலம் என்ற ஆதி சந்தோஷமாக வந்தான். அவன் தாமிரை என்று சொன்னது தாமிரைபரணி ஆறை. பட்டணத்தில் தண்ணித் தட்டுப் பாட்டில் சிக்கனமாகக் குளித்துப் பழகியவனுக்கு தாமிரைபரணியின் ஓட்டத்தில் கட்டுப்பாடில்லாமல் குளிப்பது பேரானந்த்தைத் தந்ததில் வியப்பில்லை தான்..
“எலே.. சீக்கிரம் ஈரத்தைக் களைஞ்சிட்டு வா.. சளி பிடிக்கப் போவுது” சரோஜா கரிசனத்துடன் சொல்ல..
“ஓக்கே கிராண்மா” என்று விருட்டென்று அறைக்கு விரைந்தான் ஆதி.
பட்டணத்தில் ஏதோ பெரிய படிப்பு படிக்கிறான். வருடம் ஒரு முறை தாத்தா பாட்டியைப் பார்க்க கிராமம் வந்து குறைந்தது ஒரு மாதமாவது தங்கி விட்டுப் போவான்..
உடை மாற்றிக் கொண்டு வந்த ஆதி மொபைலை நோண்டியபடி தாத்தாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்..
“ஐயா இருகாருங்களா?”
குரல் கேட்டு வாசலை எட்டிப் பார்த்தார் இசக்கியாப் பிள்ளை.
“யாரு?”
“நான் தான்.. முருகைய்யன்..”
இரண்டாவது கட்சியும் வந்து விட்டது.
“உள்ள வா முகைய்யா.. எப்படி இருக்கே?”
இசக்கியாப் பிள்ளை குரல் கொடுத்தவுடன் சற்று பவ்யத்துடன் உள்ளே வந்தான் முருகைய்யன். ஒரு காலத்தில் இசக்கியாப் பிள்ளையின் மாவு மில்லில் வேலை பார்த்தவன்.. வேலை பார்க்கும் போதே அரசியல் நாட்டம் அவனிடத்தில் அதிகமுண்டு என்பதை இசைக்கியாப் பிள்ளை கவனித்திருக்கிறார். அவர் நினைத்தது போலவே ஒரு அரசியல் புள்ளியைப் பிடித்து அவரோடு ஒட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று அந்தக் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து விட்டான். தேர்தலில் வெற்றி பெற்றால் ஜாதி அடிப்படையில் மந்திரி ஆகும் வாய்ப்பு கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்..
இவ்வளவு வளர்ந்தும் இசக்கியாப் பிள்ளையிடம் அவனுக்கு இருந்த மரியாதை மட்டும் குறையவே இல்லை..
“ஐயா.. அந்தக் கட்சிக் காரங்க வந்திருந்ததாக் கேள்விப் பட்டேன்.. ரெண்டாயிரம்னு சொன்னாங்களாம்.. வேண்டாங்க.. நாங்க மூவாயிரம் தரோம்.. மொத்தம் முன்னூறு ஓட்டு.. ரொக்கமா ஒம்பது லட்சம் கொண்டாந்திருக்கேன்..”
என்று திரும்பிப் பார்க்க அவனுடன் வந்த ஒரு நபர் பெரிய சூட்கேஸைக் கொண்டு வந்து வைத்தார். திறந்தால் உள்ளே கட்டுக் கட்டாக நோட்டு..
“என்னப்பா.. இப்படி வெளிப்படையாக் கொண்டு வந்திருக்கே.. அதிகாரிங்க யாராவது பார்த்துரப் போறாங்க.. பொறவு பிரச்சனையாயிரப் போவுது”
“அதெல்லாம் கவலையேப் படாதீங்க ஐயா.. இது நம்ம ஊரு.. நம்மள மீறி எந்த அதிகாரியும் எதுவும் பண்ணிர முடியாது”
கொஞ்சம் அதிகாரத் துள்ளலோடு சொன்னான்..
“சரி.. கிராமத்து சனங்க விடுத்த கோரிக்கைங்க.. கிராமத்துல பஸ், ஆஸ்பத்திரி, குழாய்த் தண்ணி..”
“கவலையேப் படாதீங்க ஐயா.. நான் ஜெயிச்சா.. மொத சோலியே இந்தக் கிராமத்துப் பிரச்சனைகளை தீர்க்கறது தான்.. இது நிச்சயம்”
தீர்மானமாகச் சொன்னான் முருகைய்யன்.
இசக்கியாப் பிள்ளையின் சொல்லை மீறாமல் முன்னூறு ஓட்டும் முருகைய்யனுக்கே விழுந்தது.. முருகைய்யன் தான் ஜெயிப்பான் என்று இசக்கியாப் பிள்ளை ஏற்கனவே கணித்து வைத்திருந்தார்..
தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற முருகைய்யன் வந்தான்..
ஊர் ஜனங்களுக்கு முன்னால் இசக்கியாப் பிள்ளையின் காலில் விழுந்தான்..
“நன்றி.. நன்றி.. உங்க இந்த முன்னூறு ஓட்டு நான் ஜெயிக்க ரொம்ப முக்கியமாப் போச்சு”
வழக்கமாக எல்லாப் பகுதிகளிலும் சொன்ன அதே வசனத்தை இங்கேயும் கக்கினான் முருகைய்யன்..
“அதெல்லாம் சரி முருகைய்யா.. எப்பச் சோலிய ஆரம்பிக்கறே?”
இசக்கியாப் பிள்ளை கேட்டது முருகைய்யனுக்குப் புரியவில்லை.
“என்ன.. என்ன சோலி?”
“அதான் சொன்னியே.. ஜெயிச்ச உடனே முதல் சோலியா.. இந்த கிராமத்துக்கு பஸ், குழாய் தண்ணி, ஆஸ்பத்ரி..”
“வந்து..”
“இப்ப ஜெயிச்சு வந்திட்டே.. சொல்லு எப்ப சோலியை ஆரம்பிக்கப் போறே? தேவையான எல்லா ஒத்துழைப்பையும் தர நாங்க தயாரா இருக்கோம்.. என்னப்பா?”
என்று மற்றவர்களைப் பார்க்க அவர்களும் “ஆமாம்” என்று குரலெழுப்பி ஆமோதித்தனர்..
முருகைய்யன் சற்று சுதாரித்துக் கொண்டான்.
“ஐயா.. இப்பத் தானே ஜெயிச்சிருக்கேன்.. இன்னும் பதவி ஏற்கலை.. ஆகட்டும்.. பொறவு பார்க்கலாம்”
இசக்கியாப் பிள்ளை அவனை விடுவதாக இல்லை.
“முருகைய்யா.. இதை நாங்க நிறைய கேட்டுட்டோம். ஆனா இதுவரை எதுவும் நடக்கலை.. இந்தத் தடவை நாங்க விடறதா இல்லை.. ஊர் ஜனங்க முன்னால சொல்லு.. எப்பச் சோலியை ஆரம்பிக்கறே?”
“ஐயா.. இப்படியெல்லாம் அவசரப் படுத்தக் கூடாது.. தேர்தலுக்கு முன்னால நாங்க ஆயிரம் சொல்லுவோம்..”
“அப்படிங்களா? சரி முருகைய்யா.. நாங்க பார்த்துக்கறோம்”
இசக்கியாப் பிள்ளை இதைச் சொன்னதும் முருகைய்யனுக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரம் வந்தால் புத்தி தடுமாறுவது இயல்பு. வார்த்தைகள் எல்லையை மீறுவதும் நிதர்சனம். அது தான் நடந்தது..
“என்ன பார்த்துப்பீங்க? நான் ஜெயிச்சு வந்தாச்சு.. இனிமே உங்களால எதுவும் பு……. முடியாது”
என்று அவன் சொல்லி முடிக்கும் முன் இசக்கியாப் பிள்ளை அவனை மடக்கினார்..
“முடியும் முருகைய்யா.. இந்தத் தடவை நாங்க முழிச்சுக் கிட்டோம்.. நாங்க நினைச்சா உன்னோட இந்த வெற்றியை தோல்வியா மாத்த முடியும்”
முருகைய்யன் அவரைப் புதிரோடு பார்த்தான்.
இசக்கியாப் பிள்ளை திரும்பி யாரையோத் தேடினார்.
“இதோ இருக்கேன் கிராண்பா..”
என்றபடி ஆதி கையில் லேப்டாப்புடன் வந்தான்.
லேப்டாப்பை உயிர்ப்பித்து ஒரு பட்டனைத் தட்ட..
திரையில் முருகைய்யன்..
“ஐயா.. அந்தக் கட்சிக் காரங்க வந்திருந்ததாக் கேள்விப் பட்டேன்.. ரெண்டாயிரம்னு சொன்னாங்களாம்.. வேண்டாங்க.. நாங்க மூவாயிரம் தரோம்.. மொத்தம் முன்னூறு ஓட்டு.. ரொக்கமா ஒம்பது லட்சம் கொண்டாந்திருக்கேன்..”
குளோஸ் அப்பில் முருகைய்யனின் ஆள் கொண்டு வந்த சூட் கேஸில் கட்டுக் கட்டாகப் பணம்..
அடுத்து இசக்கியாப் பிள்ளையின் குரல்..
“என்னப்பா.. இப்படி வெளிப்படையாக் கொண்டு வந்திருக்கே.. அதிகாரிங்க யாராவது பார்த்துரப் போறாங்க.. பொறவு பிரச்சனையாயிரப் போவுது”
உடனே முருகைய்யன்..
“அதெல்லாம் கவலையேப் படாதீங்க ஐயா.. இது நம்ம ஊரு.. நம்மள மீறி எந்த அதிகாரியும் எதுவும் பண்ணிர முடியாது”
இதைப் பார்த்து முருகைய்யனின் முகம் கருத்தது.
“என்ன பார்க்கறே? நீ வந்த போது என் பேராண்டி செல் போன் வெச்சுக்கிட்டு சும்மாவா உட்கார்ந்திருந்தான்? நீ பேசினதை எல்லாம் படம் பிடிச்சிட்டானே.. நீ கொடுத்த பெட்டி பணமும் அப்படியே இருக்கு.. சாட்சியா.. இது மட்டுமில்லை.. இன்னும் நிறைய இருக்கு.. எப்ப சோலியை ஆரம்பிக்கறேன்னு நீ உடனே சொல்லலைன்னா.. இந்தப் பெட்டில ஒரு பட்டனைத் தட்டினா தேர்தல் ஆணையர்லேர்ந்து ஆரம்பிச்சு.. எதிர்கட்சிக் காரங்க வரை எல்லாருக்கும் இந்தப் படம் போயிரும்.. அப்பறம் என்ன நடக்கும்னு உனக்கேத் தெரியும்”
முருகைய்யனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..
இசக்கியாப் பிள்ளை நிதானமாக அவனைப் பார்த்தார்.
”ஜனங்க முழிச்சுக்கிட்டாங்க முருகைய்யா.. இனிமே இப்படித் தான்.. சனங்களுக்கு நல்லது பண்ணாம ஏமாத்த முடியாது”