பல வகையான “வரும் முன் காப்போம்” முறைகளைத் தனது ஊழியர்களிடையே பரப்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்று. புகைபிடித்தல் பற்றிப் பரிந்துரை செய்து வர்க்ஷாப் நடத்தினேன். அதே நிறுவனத்தில், வாரத்தில் இருமுறை நங்கு மணி நேரம் அங்கே தனிநபர்களுக்கு நான் மனநல ஆலோசனை செய்வதுண்டு.
அந்த வர்க்ஷாப்பில பங்குகொண்ட ஜார்ஜ் என்னை அணுகினான். இளம் வயது. மிக மெலிந்த உடல்வாகு, இருபத்தி ஐந்து வயதுள்ளவன், குமாஸ்தா வேலை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன்.
அந்த வர்க்ஷாப்பில் பங்கேற்ற பிறகு, புகைபிடிப்பதை ஒரேயடியாக விட்டு விடலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது என்றான். ஆனால் விட்டு விடுவதின் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்று அஞ்சினான். முதலில் காலேஜ் நண்பர்களுடன் புகை பிடிக்க ஆரம்பித்தபோது, வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும் என்று இருந்தது. வேலை கிடைத்ததும், அது தினமும், நாள் முழுவதும் என்று ஆகிவிட்டது. இப்போது வலுக் கட்டாயமாகப் புகைபிடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டால், உடலில் என்னென்ன உபாதை நேரிடுமோ என அஞ்சினான்.
மேலும், புகைபிடிப்பதினால் உடல் மெலிந்து இருப்பதாகத் தகவல் ஏதோ படித்திருந்தான், விட்டால் பருமனாகி விடுவோமோ என்ற கவலை வேறு. விடுவதா, வேண்டாமா என்ற இந்த சிக்கலில் அகப்பட்டு அதிகமான அளவில் புகைபிடிக்கிறானாம். புகைபிடிப்பதால் தனக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் கூறினான். தற்போது சட்டங்கள் அதிக பட்சம் புகைபிடிப்பதைத் தடை செய்வதால் தவிப்பு. மனைவியிடம் பழக்கத்தை மறைக்க முயன்று, பிடி பட்டு, பெரிய அளவில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இவற்றினால் தான் என்னை அணுகியதாகக் கூறினான்.
வர்க்ஷாப்பில தெளிவாக நான் ஸைக்காரிக் ஸோஷியல் வர்கர், எங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு முறைகள் உண்டு என்பதை வலியுறுத்தி இருந்தேன். அலுவலகத்தில் பார்ப்பதன் போதிலும் இங்குப் பகிருவதை வேறு யாரிடமும் பகிர மாட்டேன் என்று உறுதியளித்தேன். ஆனால் அதனால் க்ளையண்டிற்கோ, வேலைக்கோ, அலுவலகத்துக்கோ ஆபத்து என்றால் பகிர நேரிடும் என்பதையும் விளக்கினேன்.
ஜார்ஜ் புகைபிடிப்பதை அறவே விட்டு விடவேண்டும் என்றால், அதன் மூல காரணங்களையும், ஆரம்பத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் வலம் வரும் மனப்பான்மை, சுற்றம் சூழலைக் கண்டு கொண்டு புரிந்தால் தேவையான மாற்றங்கள் கொண்டு வர முடியும். அறிவதே விடுவதற்கான முதல் படிக்கட்டாகும்.
ஜார்ஜ் தன் தந்தையும் தன்னைப் போலவே குமாஸ்தா வேலையில் இருந்ததாகக் கூறினான். அவருடைய சம்பளம் வீட்டுச் செலவுக்கு போதும்-போதாது என்ற இழுபறி, அம்மா எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதில் தருவார் அப்பா. ஏதேதோ வேலை செய்து பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய ஐந்தாவது வகுப்பு வரை இப்படித் தான். அதன் பிறகு அம்மா சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்து, வீட்டில் சின்ன மெஸ் ஆரம்பித்து ஓரளவிற்கு குடும்பச் செலவைச் சமாளித்துக் கொண்டாள். பிற்காலத்தில் எப்போதும் அவள் ஜார்ஜிடம் சொல்வது “நீ குழந்தையா இருக்கறச்ச உன்னை கவனிச்சுக்க முடியல” என்று.
எங்குப் போனாலும் பஸ், இரயில் தான். வீட்டில் சைக்கிள், ஸ்கூட்டர் எல்லாம் கிடையாது. நண்பர்கள் எல்லாம் இவனை “நடை ராஜா” என அழைக்க, வெட்கத்தில் பதில் பேச மாட்டான். அவன் தம்பி ஜான் கூட அண்ணன் இப்படித் தலைகுனிந்து போவதைப் பார்த்து ஏசுவான். இதையெல்லாம் தன்னுடைய துரதிர்ஷ்டமாக நினைப்பான் ஜார்ஜ். மொத்தத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவமானம் என ஏற்றுக்கொண்டான்.
நண்பர்கள் கேலி செய்யும் போது நகத்தைக் கடித்துக் கொள்வான். வீட்டில் பெற்றோர் மனஸ்தாபம் வந்து சண்டை போடும் போதும் அதே தான். இதைப் போன்ற நிலைமைகள் பல பல.
இப்படிக் கடந்த காலத்திலும் தற்போதும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உணர்ந்ததை, செய்வதை நினைவு படுத்தி, கவனித்து, எடுத்து ஆராய்ந்து புரிந்து கொள்ள ஜார்ஜிடம் பரிந்துரைத்தேன். செய்ய ஆரம்பித்தோம். தற்சமயம் தான் நகத்தைக் கடிக்கும் நேரங்களைக் கவனித்துக் குறித்து வைத்து, நிகழும் பொழுது, அதை எதை எதிர்த்து அல்ல தவிர்க்க முயற்சி என்பதை நினைவு படுத்தி அதைப் பற்றி உரையாடினோம். மேலும் ஒரு வாரத்திற்கு இதைத் தொடர்ந்து செய்து வந்தான்.
ஸெஷன்களில் இதைச் சிறுசிறுதாகப் பிரித்துப் பார்க்க, ஆராய, ஜார்ஜ் ஒன்றை ஒப்புக்கொண்டான், தான் இக்கட்டான சூழ்நிலையில் என்ன சொல்வதென்று, செய்வதென்று தவிக்கும் நிலையில் நகத்தைக் கடிக்கின்றான் என்று. அதாவது தான் உதவியற்ற நிலையிலோ, தனக்கு ஆதரவு ஏதுமில்லை என்ற நினைப்பிலோ உடனடியாக விரல் வாயிற்குப் போய்விடுகிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையை உறுதியாகக் கொண்டிருந்தான். இதன் மூல காரணத்தை அறிய மேலும் ஆராய்ந்தோம். ஜார்ஜ் தன் வெவ்வேறு வாழ்க்கை தருணங்களை நினைவூட்டிப் பேசினான். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது, தன் வீட்டு நிலமையைச் சிறுவயதிலிருந்தே தான் அவமானமாக நினைத்தோம் என்று. இதனால் தன்னைப் பற்றியும் அப்படியே நினைத்தான்.
படிப்பிலும் மதிப்பெண் தடுமாறிக் கிடைக்க, ஆசிரியர் கொடுத்த தண்டனையினால் நண்பர்கள் மத்தியில் மதிப்பீடு பாதிக்கப் பட்டது. ஏன் அப்படி? பொதுவாக நண்பர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லையே?. மேலும் யோசிக்கச் செய்தேன். பலன் கிட்டியது. தன் நண்பர்கள் தனக்கு நேர்ந்த தண்டனையைப் பற்றி, படிப்புப் புரியாததைப் பற்றிக் கேட்டாலும், ஜார்ஜ் பதில் அளிப்பதில்லை. அத்தனை கூச்சம்! நண்பர்கள் ஊக்குவிக்கும் வகையில் பேசினாலும் கூட, தன் குறைபாடுகளின் மேல் கவனம் செலுத்துகிறார்கள், குத்திக் காட்டுகிறார்கள், என நினைப்பான். கோபத்தை அடக்கி, காலுக்கு அகப்படும் கல்லை மிதித்து, அதை எட்டி உதைப்பான். இந்த நடத்தையைப் பரிசீலனை செய்து தற்போதைய புகைபிடிக்கும் பழக்கத்துக்கு இணைத்தோம். ஜார்ஜ் எப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கமுடியவில்லை என்றாலும் அப்போது நகத்தை, விரலைச் சூப்புவதைச் செய்வான். இவற்றின் இடத்தில் இப்போது சிகரெட்.
அன்நாளிலும் தன்னைப் பற்றி மிகத் தாழ்வாக நினைத்தான். இப்போதும் அதுவே தொடர்ந்தது.
பல சம்பவங்கள் விவரிக்க, அவைகளைப் புகைபிடிப்பதுடன் இணைத்து, அதில் சுயமரியாதைக்கு உள்ள பங்கைப் பற்றி ஆராயச் சொன்னேன். பெரிய பட்டியலைத் தீட்டினான். தான் எவ்வாறு ஒரு கணக்கைப் போடத் தடுமாறினாலும், அது தன் திறன்களை மீறியதாக எடுத்துக் கொண்டு முயற்சி செய்யாமல் நிறுத்தி விடுவான் என்று. உதவி கேட்டால் தன்னை மேலும் திறனற்றவன் என முடிவு செய்வார்களோ என அஞ்சி கேட்காமலே இருந்து விடுவானாம். வீட்டிலும் இவ்வாறே. ஸெஷன்களில் புரிந்தது, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று. தெரியவில்லை, புரியவில்லை என்றால் உதவி கேட்க வேண்டும்.
அதற்கு ஒரு யுக்தி எடுத்துக் கொண்டோம். வரும் வாரத்தில் நாளுக்கு ஒரே ஒரு முறை, தெரியாத ஒன்றுக்கு யாரிடமேனும் உதவி கேட்க வேண்டும். முதல் வாரம் கேட்காமலிருந்தான் ஜார்ஜ். சந்தர்ப்பத்தை, அதில் ஏற்பட்ட தயக்கத்தை எடுத்துச் சொன்னான். எவ்வாறு கையாண்ட முடிந்திருக்கும் என நடித்துக் காட்டச் சொன்னேன். முதலில் வெட்கத்தில், கோபத்தில் தடுமாறிக் கொண்டே செய்தான். செய்ய முடியும், முடிகிறது என்று நான் நினைவூட்டிக் கொண்டே இருக்க, தைரியம் தொத்திக் கொண்டது. மறு வாரம் முயன்றதாகச் சொன்னான். தேவையுள்ள இடங்களில் அதிகரிக்கச் சொன்னேன். ருசி கண்ட பூனைபோலச் செய்தான்.
வீட்டுக்குள்ளேயும் துவக்கி, செய்து வந்தான். தன்னை குறைவாக எடை போட்டிருந்தது நாளடைவில் மறைந்தது.
இப்போது அவன் எத்தனை புகைபிடிக்கிறான் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். ஒரு வாரம் கவனித்து வரச் சொன்னேன். வந்ததும் ஜார்ஜ் சந்தோஷம் ததும்ப, குறைந்திருந்தது என்றான். இருந்தும் கை போகிறது சிகரெட் பக்கத்தில்.
ஜார்ஜ் இன்னும் சிகரெட் மட்டுமே தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதாக எண்ணினான். யாரோ எப்போதோ இதைச் சொன்னதால் பிடிப்பதை விடவில்லையாம். இதைப் பற்றி அறிவியல், ஆராய்ச்சி வடிவத்தில் வந்த பல கட்டுரைகள், தகவல்களைப் படிக்கத் தந்தேன். தவறான எண்ணம் மாறியது.
இப்போது சிகரெட்டிற்குப் பதிலாக வேறொரு ஆரோக்கியமான வழிமுறை என்ன அமைப்பது என்று யோசிக்கச் சொன்னேன்.. ஜார்ஜ் தனக்குப் பிடித்த ஒரு விளையாட்டைத் தினம் ஆட வேண்டும் என்று முடிவானது. உடற்பயிற்சியாக மிதிவண்டி (cycling) தேர்ந்தெடுத்தான். இது மன உளைச்சல் போக்க ஆயுதமாகவும் அமைந்தது. எடை ஏறவில்லை. எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உணவு, மனச் சாந்தி, பயிற்சி எல்லாம் கைகொடுக்க, புகை பிடிப்பது மெதுவாகக் குறைந்து கொண்டே வந்தது.
விட்டால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விடுவானாம் ஜார்ஜ். சிறுவயதில் அடுத்த உணவு எப்போது வரும், போதுமான அளவு கிடைக்குமா எனத் தெரியாததால். இன்னும் அப்படி அள்ளிச் சாப்பிட்டு விடுவோம் என அஞ்சி, அதைத் தடுப்பதுக்கு சிகரெட்டை உபயோகிக்கப் பழகியிருந்தான்.
உளவியலில் சிகரெட் பிடிப்பவர்கள் உணவு ஆசை, வாய் ருசியைப் பூர்த்தி செய்ய முயலுவார்கள். அந்த வகைதான் ஜார்ஜ் நகத்தைக் கடிப்பதும். அந்த நகத்தைக் கடிக்கும் பழக்கத்தையும் விட முயல வேண்டும் என ஊக்குவித்தேன். ஜார்ஜ் தன் ஐந்து வயதில் கட்டைவிரலைச் சூப்புவது நின்றது என்று சொன்னான். அப்போது நகம் கடிக்கும் பழக்கம் ஆரம்பமானது என்றான். இந்தப் பழக்கம், புகைபிடித்தலின் முன்னோடி என்பது உளவியலில் ஃப்ராயிட் (Freud) என்பவரின் தியரீ. ஜார்ஜ் வாழ்வில் இதற்கு மற்றொரு காரணி, அவனுடைய அம்மாவின் அரவணைப்புக் குறைவு. வீட்டிற்குச் சம்பாத்தியம் உயர்த்தி வரப் பாடுபட்டதில், குழந்தையின் மேல் கவனம் சரிந்தது. அவளும் இப்படி ஆகும் என நினைக்கவில்லை.
அம்மாவிற்கு ஏக்கம் நகத்தைத் தேடச் செய்கிறது எனப் புரிந்து கொண்டான். ஏக்கம் வரும்போது பிடித்த பாட்டை முணுமுணுத்து, பல நாட்களாக அழைக்காத நண்பரை அழைத்து விசாரிப்பது, எனப் பட்டியல் போட்டுச் செய்வது ஒரு பக்கம் துவங்கியது.
மற்றொன்றும் ஸெஷன்களில் துவக்கினேன், அம்மாவிடம் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றி நினைவு கூறுதல். இதைத் துவங்கியதும், தந்தையையும் சேர்த்துக் கொள்வது அவசியம் என்று உணர்ந்தான். அவர் முதலில் சிடுசிடுவென இருந்தவர் நாளடைவில் பாசமாக மாறினார். பணக்கஷ்டம் எந்த அளவுக்கு அவருடைய மனதை வருடியது என்றதை அவர் பகிர, ஜார்ஜ் அவர் மேல் கொண்டிருந்த கோபம் உருகியது. மனம் விட்டுப் பேசினாலே பிரச்சினை தீரும்.
போட்டுக் கொள்ளும் உடையில் சிகரெட் வாடை ஒட்டுமொத்தமாக மறைந்தது. பற்களைப் பல் மருத்துவர் மூலம் முழுதாகச் சுத்தம் செய்தது மேலும் ஊக்குவித்தது. ஜார்ஜின் தைரியமும் வளர்ந்தது. அவனுடைய மேனேஜர் என்னிடம் ஜார்ஜ் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றதைச் சந்தோஷமாகப் பகிர்ந்தார்.