சங்கராபரணம் என்ற ஒரு திரைப்படம், திரைப்பட இரசிகர்களையும், கர்னாடக இசைப் பிரியர்களையும் இரசிக்க வைத்த ஒரு வெற்றிப் படம். ஹிந்தோள இராகத்தில் அமைந்த ‘சாமஜ வர கமனா’ என்ற தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனையை சங்கர சாஸ்திரிகளின் பெண் பாடும் போது ஸ்வரம் தவறிப் போக அவர் சீற்றம் கொள்வது பலருக்கும் நினைவிலிருக்கலாம். வசந்தா என்றொரு இராகத்தையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உடனே எனக்கு நினைவில் வருவது ‘ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள்வாயம்மா’ என்ற பாடல். இவ்விரு இராகங்களிலும் பல பாடல்கள் தென்னிந்திய திரை இசையிலும், வட இந்திய திரைப் பாடல்களிலும் வந்திருக்கின்றன.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல பரிசோதனைகளை இராகங்களில் செய்து பார்த்தவர். அனேகமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அந்தந்த இடங்களின் இசையின் நுட்பங்களை அறிந்து தன் கீர்த்தனைகளில் அமைத்தவர். மேலே குறிப்பிட்ட இரு இராகங்களான ஹிந்தோளத்தையும், வசந்தாவையும் இணைத்து அவர் இயற்றிய கீர்த்தனை ‘சந்தான ராம்ஸ்வாமி’ என்ற ஒன்று. அந்தப் பாடலில் சொற்களையும், இராகத்தையும் அவர் பிணைத்துப் பிணைத்து அமைத்திருப்பது அற்புதமாக இருக்கும்.
சந்தான இராமர் சகுண, நிர்க்குண வடிவத்தில் இருக்கிறார் என்று பல்லவியைத் தொடங்குகிறார் அவர். அந்தக் கீர்த்தனையின் அனுபல்லவி இப்படி வரும்
‘ஸந்ததம் யமுனான்பாபுரி நிவசந்தம் நத சந்தம் ஹிந்தோள வசந்தம் சந்த மாதவம், ஜானகி தவம் சச்சிதானந்த வைபவம் சிவம்.’இராகத்தின் பெயரான ஹிந்தோள வசந்தம் வந்துள்ளது. அது மட்டும் அழகில்லை; புரி நி வசந்தம் என்று வரும் வசந்தம், சந்தம், சந்த மாதவம் என்று சந்தத்தில் இராக பாவனைகளோடு இலக்கிய சந்தத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இதைப் பாடகர்கள் திரும்பத் திரும்பப் பாடுகையில் சந்தம், வசந்தம், புரி நி வசந்தம், ஸந்தத வசந்தம், ஹிந்தோள வசந்தம், சந்த மாதவ வசந்தம், வசந்த ஜானகி தவம், சச்சிதானந்த ஜானகி வசந்தம், சச்சிதானந்த ஹிந்தோள வசந்தம் என்றெல்லாம் பாடுகையில் அதன் இலக்கியச் சுவை நம்மை அதில் மொத்தமாக அமிழ்த்திவிடும். நமக்கு இராகம் தெரிய வேண்டாம், ஆனால், பாவம் புரிந்து விடும். அது நம் மனதில் உள்ளே புகுந்து கொண்டு அந்த மொழி அமைப்பில், அது இராகத்துடன் பொருந்திப் போகும் அந்த அழகில் பரவசப்படுத்தி ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்தப் பாடலின் அர்த்தத்தை சுருக்கமாகப் பார்ப்போம். பாடல் இவ்வாறு தொடங்குகிறது.
சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே
குணங்கள் உள்ளவனாக நமக்குத் தோன்றும் ஸ்ரீராமனே குணங்களற்றவனாக இருக்கிறான். இது பர தத்துவத்தைக் குறிக்கிறது. உருவ வழிபாட்டில் தொடங்கி அருவமான இறையைக் குறிப்பிடுகிறார் தீக்ஷிதர்.
அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்
(ஹிந்தோள வசந்தத்தால் வணங்கப்படும் இவர் எப்போதுமே, யமுனாம்பாபுரி என்று சொல்லப்படும் நீடாமங்கலத்தில் இருப்பவர். சத்யம், ஞானம், ஆனந்தமான நிரந்தரனும் இவரே.)
தீக்ஷதரின் பாடல்கள் இடத்தைப் பற்றியும் குறிப்புகள் கொடுக்கும் ஆவணங்கள். நீடாமங்கலத்தில் கோயில் கொண்டுள்ள குழந்தை வரம் அருளும் சந்தான ராமனை இதில் காட்டுகிறார்.
சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்
(அனைத்து வளங்களையும் அருள்பவர். துறவிகளின் இதயத்தில் தன் தாமரைப் பாதங்களைக் காட்டுபவர். அழகும், அபூர்வவுமான
சிந்தாமணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரது கண்கள் ஆதவனும், நிலவுமாகத் தோற்றமளிக்கின்றன. துக்கமற்ற ஆனந்த ஞான உருவான இராமரை குருகுஹனாகிய நான் வணங்குகிறேன்.)
சிந்தாமணி என்றுமே கவிஞர்களை ஈர்த்திருக்கிறது. அபூர்வமான அது, கடவுளை அலங்கரிப்பதாக அவர்கள் பாடல்களில் அமைக்கிறார்கள். இராமரின் கண்கள் தீயவர்களை தண்டிப்பதில் சூரியனைப் போலவும், சாதுக்களுக்கு நிலவைப் போல குளிர்ச்சி தருவதாகவும் சொல்வதில் தீக்ஷதரின் ஞானம் ஒளிர்கிறது.
மனிதர்கள் விரும்புவது மழலைச் செல்வங்களை. அதைத் தரும் சந்தானராமன் ஹிந்தோள வசந்தமாய் நம்மை வசீகரிக்கிறான்