(தேவகியின் எட்டாம் பிள்ளையால் கம்சனுக்கு மரணம் என்று அசரீரி அறிவித்தது.
பிறக்கும் குழந்தைகளை ஒப்படைப்பதாக வசுதேவன் வாக்களிக்கவே தேவகியைக் கொல்லாமல் விடுகிறான்.
எட்டாம் குழந்தை பிறக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்/ கொல்லலாம் என்று இருக்கும் கம்சனைக் காண வருகிறான் நாரதன்.
எந்தக் குழந்தையாகவும் நாராயணன் வரக் கூடும் என்று அவனை எச்சரித்துச் செல்கிறான்)
நாரதன் வருகை
முக்காலம் அறிந்திடுவான்,மூவுலகும் திரிந்திடுவான்,
தக்காரும், தகவிலரும் தாள்பணியும் தவமுடையான்,
சிக்காமல் இருப்பவரைச் சிக்கவைக்கும் நாரதனும்
அக்காலம் அக்கம்சன் அரண்மனையை அடைந்தானே!
கம்சன் வரவேற்றல்
யாதுமே அறிந்த ஞானி
என்மனை வந்தாய் போற்றி!
நாதமே ஆனாய் போற்றி!
நயம்பட உரைப்பாய் போற்றி!
தீதிலா நன்மை யாகத்
திகழ்ந்திடும் வருகை போற்றி!
பாதமே பணிந்தேன் என்று
பன்மலர் தூவிச் சொன்னான்
நாரதன் கூற்று
“மேவிடும் உன்றன் அன்பை
மெச்சினேன் .ஆத லாலே
ஆவது பற்றிச் சொல்லும்
ஆவலே கொண்டேன். நீயும்
சாவது தங்கைப் பிள்ளை
தன்கையால் என்ற றிந்தும்
பூவதன் மென்மை போன்று
பொறுமையாய் இருப்பது தேனோ?
உயிரினுக் கிறுதி என்றால்
ஒருசிறு புழுவும் தாக்கும்
எயிலமை கோட்டை வாழ்ந்தும்
ஏனுனக்(கு) அமைதிப் போக்கு?
துயிலெனும் மாயம் செய்வோன்
தொடர்ந்திடும் சூழ்ச்சி யாலே
மயலினை அடைந்தாய் போலும்,
மனத்தினில் தயக்கம் ஏனோ?
(மயல்– மதி மயக்கம்/குழப்பம்)
( எயில் — அரண்/ மதில்)
வந்து பிறக்கும் பிள்ளைகளில்
வருவான் எட்டாம் எண்ணென்று,
முந்தி நீயும் நம்பிவிட்டாய்,
முகிலின் நிறத்து மாயவனும்
எந்த எண்ணும் வரக்கூடும்
இறுதி உனக்குத் தரக்கூடும்
உந்து மதம்கொள் களிறனையாய்
உடனே தகுந்த செயல்புரிவாய்
கோவலர்கள்,யாதவர்கள்,மற்றும் உள்ளோர்
கொண்டிருக்கும் தெய்வாம்சம் அறிந்து கொள்வாய்
காவலனாய் அவர்தம்மைக் காப்ப தற்கும்
# காலநேமி யாயிருந்த உன்னைக் கொல்லும்
ஆவலினால் பாற்கடலோன் வருவான் நீயும்
அதைத்தடுக்கப் பிள்ளைகளைக் கொல்ல வேண்டும்”–
தேவமுனி பிள்ளையினைக் கிள்ளி விட்டுச்
சிரிப்புடனே தொட்டிலையும் ஆட்டிச் சென்றான்.
( # முற்பிறவியில் கம்சன் காலநேமி என்ற அசுரனாய் இருந்தான்)
கம்சன் கொடுஞ்செயல்
கொதித்தான் குதித்தான் கொடுங்கம்சன்
குமுறும் எரியின் மலையெனவே,
உதைத்தான், அறைந்தான் நிலத்தினையே
உற்ற சினத்தின் நிலையிதுவே
மதித்தான் இல்லை தந்தையினை
வருத்தி வாட்டிச் சிறையிட்டான்
விதித்த ஆணை ஒன்றால்,தான்
வேந்தன் என்றே அறிவித்தான்
பிறந்த குழந்தைகள் அறுவரைக் கொல்லுதல்
அரக்கரும், கொடுமை செய்யும்
அரசரும் துணையாய்க் கொண்டான்.
இரக்கமே இன்றித் தங்கை
ஈன்ற அறுவர் கொன்றான்
செருக்குடன், சினமும் அச்சம்
சேரவே கள்ளும் மாந்திச்
சுருக்கெனத் தேளும் கொட்டித்
துள்ளிடும் குரங்காய் ஆனான்.
( மாந்தி– குடித்து)
வசுதேவன்- தேவகியைச் சிறையில் அடைத்தல்
மாதவனாம் வசுதேவன் மற்றும் அன்பு
மங்கையவள் தேவகியும் சிறையில் தள்ளிச்
சூதுமிகு வீரர்கள் காவ லாகச்
சூழ்ந்திருக்கச் செய்தனனே கொடிய கம்சன்
யாதவர்கள் வருந்திடவே துன்பம் தந்தான்
ஏதுமறி யாதவர்கள் விதியை நொந்து
மோதுபெரும் அச்சத்தால் நாட்டை விட்டு
மூதூர்கள் பலசென்று குடிபு குந்தார்
சிறையில் இருவர் நிலை
சிறையினில் வாடும் போதும்
சிந்தையில் இறையை நாடும்
முறையினை அறிந்த வர்க்கு
மூண்டிடும் இன்னல் உண்டோ?
குறைமதிக் கொடியோன் கொன்ற
குழந்தைகள் அறுவர் எண்ணி
நிறையவே வருந்தி னாலும்
நேர்வதைப் பொறுத்துக் கொண்டார்
( தொடரும்)
அருமை கண்ணனின் கதையமது எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் திகட்டாத தேனமுது
LikeLike