அலெக்ஸா வழக்கம்போல 5.30க்கு க்கு அலாரம் அடித்து அவரை எழுப்பியது.
“அலெக்ஸா ஸ்டாப்” என்று அதை நிறுத்தி விட்டு சுந்தர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். கைகளைத் தேய்த்துக்கொண்டு உள்ளங்களைப் பார்த்து
கராக்ரே வஸதே லக்ஷ்மி
கரமத்யே ஸரஸ்வதி
கரமூலே ஸ்திதா கௌரி
மங்கலம் கர தர்ஸனம்
என்று சொல்லி முகத்தை இரு கைகளால் அழுந்த வருடிக்கொண்டு எழுந்தார்.
அடுத்த அரை மணியில் கிடுகிடுவென்று அவருடைய காலை ரொட்டீன்கள் நடந்தன. தூங்கும் ராகேஷும் சுகன்யாவும்எழுந்துவிடக்கூடாதே என்பதற்காகவே சப்தமில்லாமல் டிகாஷன் போட்டு பால் காய்ச்சி காபி குடித்து சாமி விளக்கையும் ஏற்றினார்.
சாமி முன்னாடி நிற்கும் போது ஒரு நிமிடம் நளினியின் நினைவு எழுந்து அடங்குவதை தடுக்க முடியவில்லை. இருபது வருடங்களுக்கு முன் அவசரமாய் போய் சேர்ந்த மகராசி. பெருமூச்சுடன் மனைவி நினைவைப் பின்தள்ளி ஷார்ட்ஸ், டீ ஷர்ட் அணிந்து வாக்கிங் கிளம்பினார். தலை வார கண்ணாடியைப் பார்க்கும் போது தோன்றியது.
“சுந்தர் நீ தனி தாண்டா. இதுதான் வாழ்க்கை. ரியாலிடி. அன்பு, வார்த்தைன்னு ஏங்காதே ! சியர் அப்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வாக்கிங் கிளம்ப கான்வாஸ் ஷுவை மாட்டும் முன் சமையலறைக்கு சென்று நியாபகமாக கொஞ்சம் குட்டே பிஸ்கேட் கையில் எடுத்துக்கொண்டார். வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு இறங்கும் போது அவர் நினைத்தாற் போலவே கேட்டிற்கு வெளியே வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது அந்த கறுப்புக் கலர் நாய்.
கையிலிருந்த பிஸ்கேட்டை அதற்குப் போட்டபடி “இதுக்குத்தானே வெயிட் பண்ணே ! சாப்டுட்டு போயிடணும். கூட வந்து தொந்தரவு பண்ணக்கூடாது”
ரிடையர் ஆகி ஆறுமாதம் ஆகிவிட்டாலும் இன்னும் ஆபீசர் தோரணை போகாத சுந்தர் மிரட்டியதை அந்த நாய் கண்டு கொள்ளவே இல்லை.
இரண்டு தெரு தள்ளியிருக்கும் பார்க்கிற்கு செல்லும் சுந்தரை கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தது.
அறுபதைக் கடந்த சுந்தர் இப்போதுதான் ரிடையர் ஆனார். அவர் வேலை பார்த்த ஆயில் கம்பெனி, ரிடையர்மெண்ட் வயதைத் தாண்டியும் அவருக்கு கொஞ்சம் எக்டென்ஷன் கொடுத்திருந்தது. மார்க்கெட்டிங் பிரிவில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த சுந்தர் கம்பெனிக்கு பெரிய சொத்து. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைத்தார். காலேஜ் படித்து முடிந்ததும் முதலில் கிடைத்த வேலை. கடைசி வரை அதே கம்பெனிக்குத்தான் உழைத்தார். 26 வயதில் நளினியைக் கைப்பிடித்தவர். மகேஷ், ராகேஷ் இரண்டு பேரும் பிறந்ததும் அடுத்தடுத்து பிரமோஷன்கள் கிடைத்து வேகமாக உயர்ந்தார்.
நளினி வீட்டுப் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டு பார்த்தது மட்டுமல்ல, சுந்தரையும் ஒரு குழந்தையைப் போல்தான் பார்த்துக் கொண்டாள்.
பெரம்பலூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். பாசம் காட்ட மட்டுமே தெரிந்தவள். வெள்ளந்தியான பெண். குடும்பத்தை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாள். சுந்தருக்கே அந்த அன்பு தேனில் நனைத்த பலாச்சுளையாய் இனித்தது. நல்லூஸ், நல்லூஸ் என்று அவளையே சுற்றி வருவார்.
மகேஷுக்கு 14 வயசு இருக்கும் போது ஒரு முறை நளினிக்கு விடாமல் ஜுரம் அடித்தது. மனைவியை டாக்டரிடம் அழைத்துப் போகக்கூட நேரமில்லாமல் சுந்தர் பிசியாக இருந்தான். உள்ளூரில் இருந்த அக்காதான் நளினியைக் கவனித்துகொண்டாள். ஒரு நாள் டாக்டர் அவசரமாக வரச்சொன்னதால் அரை நாள் லீவு போட்டுவிட்டு சென்ற சுந்தரிடம் அந்த குண்டைத் தூக்கிப்போட்டார் அவர் . நளினிக்கு லூகேமியா என்றும் ரத்தப் புற்றுநோய் வந்திருக்கிறது என்னும் உண்மையை ஜீரணிப்பதற்குள் சுந்தருக்கு மயக்கமே வந்துவிட்டது. வெள்ளை அணு, சிவப்பு அணு, கதிர்வீச்சு என்று என்னென்னமோ டாக்டர் சொன்னது எதையும் புரிந்து கொள்ளும், ஒப்புக்கொள்ளும் மனநிலையில் சுந்தர் இல்லை என்பதுதான் உண்மை.
அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில் மிக கவனமாக சிகிச்சை அளித்தும், சுந்தர் அலுவலகத்தில் நீண்ட விடுப்பு எடுத்துகொண்டு கவனித்துக் கொண்டும் பிரயோசனமேயில்லாமல் எட்டு மாதங்களில் குழந்தைகளையும் சுந்தரையும் தவிக்கவிட்டு இறந்து போனாள் நளினி.
அப்போது ராகேஷ் ஐந்தாம் வகுப்பிலும் மகேஷ் பத்தாம் வகுப்பிலும் இருந்தனர். நளினியின் இடத்தில் இருந்து குடும்பத்தை அவள் ஆசைப்படி பார்த்துக் கொள்ள முடிவு செய்தான்.
இரண்டு குழந்தைகளுக்கும் தாயுமானவனாக மாறினான் சுந்தர். குழந்தைகளையும் கண்ணாகப் பாதுகாத்தான். ஆபீஸ், வீட்டுவேலை, குழந்தைகள் படிப்பு என்று இயந்திரமாக மாறி உழைத்தான். மகேஷும், ராகேஷும் அப்பாவின் வளர்ப்பில் நன்றாகப் படித்து ஊர் மெச்சும் பிள்ளைகளாக உயர்ந்தனர்.
மகேஷ் விஷவல் கம்யூனிகேஷன் படித்து லண்டனுக்கு வேலைக்குப் போனான். அங்கே அவனுக்கு கிடைத்த நட்பு ஸோரா. லண்டனிலேயே பிறந்து வளர்ந்த ஆங்கிலேயப் பெண். லண்டனுக்கே சென்று மகேஷுன் திருமணத்தை நடத்தி வைத்தார் சுந்தர்.
நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்தது ராகேஷுன் திருமணம். நளினி வழியில் சொந்தம் சுகன்யா. அடாமிக் சயன்ஸில் ரிசர்ச் ஸ்காலர், நல்லபெண். அதிகம் பேசமாட்டாள். அவள் வந்த பிறகுதான் வீட்டில் பெண்வாசம் அடிக்க ஆரம்பித்தது. சமையலில் இருந்து வீட்டை கவனிப்பது வரை சுகன்யா பார்த்து கொள்ள, வீட்டுப் பொறுப்பில் இருந்து ரிடையர் ஆனார் சுந்தர்.
நளினி இல்லை என்பதை தவிர அவருக்கு எந்தக்குறையும் இல்லை. வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வேலையிலிருந்து ரிடையர் ஆனதும் சுந்தர் தான் தனிமைப்பட்டதாக உணர ஆரம்பித்தார். பிள்ளைகளும் பாசமானவர்கள் தான். வாட்ஸ்அப்பில் அப்பாவுடன் ஒரு காண்டாக்டில் இருக்கும் மகேஷும் சரி, அப்பா மேல் தள்ளியிருந்து ஒரு கண் வைத்துக் கொள்ளும் ரகேஷும் சரி சுந்தருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. சுகன்யா மாமனாருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை விரல் நுனியில் கற்று வைத்திருக்கும் புத்திசாலி. அவர் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, பேஸ்ட் போன்றவைகளை சரியாக வாங்கி வைப்பதில் இருந்து மாமாவுக்கு புல்கா புடிக்கும், வெள்ளரிக்காய் பச்சடி பிடிக்கும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும் என்று சமைப்பதில் இருந்து, மாதம் ஒரு முறை ராகேஷுடம் சொல்லி சுந்தரை டாக்டரிடம் செக்கப் செய்வதில் இருந்து சுந்தருக்கு மகளாய் வந்த வரம் தான் சுகன்யா.
இருந்தாலும் சுந்தரின் மனது அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்க ஆரம்பித்தது. தனக்கென்று தன்னிடம் அரவணைப்பாய், பாசமாய் கிட்டே வர யாரும் இல்லையே என்று மனது தவித்தது. இதுதான் வாழ்க்கை, நிதர்சனம் என்பது புரிந்தாலும் அன்பைத் தேடும் மனதின் சண்டித்தனத்தில் தவித்தார் சுந்தர் என்பதுதான் உண்மை.
அங்கு வாக்கிங் வரும் முக்கால் வாசிப்பேர் அருகம்பூல் ஜூஸ் கொஞ்ச நேரம் அரட்டை என்றெல்லாம் செட்டில் ஆவது வழக்கம். சுந்தர் தெரிந்தவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்போடு சரி. மற்றபடி அவர் வேலைதான் அவருக்கு.
வாக்கிங், ஜாகிங், எட்டுப்போடுவது எல்லாம் முடித்து வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வேலைக்காரி ஜெயா வாசலில் அழகாக கோலம் போட்டிருந்ததை ரசித்தபடி கேட்டைத் திறந்தவருக்கு இடுக்கில் புகுந்து உள்ளே நுழைந்தது அந்தக் கறுப்புநாய். இவரை உரசி உரசி வாலை ஆட்டியது.
“யேய் சூ…..சூ….போ…. போ வெளியே” அவசரமாய் நாயைத் துரத்தினார்.”
“என்னங்கய்யா நாயி ரொம்ப ப்ரெண்டாயிடுச்சு போல !”
போர்ட்டிகோவில் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஜெயா அவரைக் கிண்டலடித்தாள்.
அங்கேயிருந்த பிரம்புச்சேரில் அப்பாடா என்று அமர்ந்தவர் காலடியில் வந்து அமர்ந்தது அந்த நாய்.
“சே ரெண்டு நாள் பிஸ்கேட் போட்டா இப்படி வீட்டுக்குள்ளே வந்திடிச்சே. இதை முதல்ல துரத்துங்க ஜெயாம்மா”.
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு கண்களில் ஏதோ சொல்ல வந்தது போல் ஏக்கமான தொனியோடு வாலை ஆட்டிக் கொண்டே இருந்தத்கு அந்த நாய். அதன் அருகில் வந்து மெதுவாக அதை தடவிக்கொடுத்தாள் ஜெயா.
“பாவம் சாரு இது. ஏதோ அன்புக்கு ஏங்குது. நீங்க பிஸ்கேட் போட்டதும். இதோ பார்டா நம்ம மேல அன்பா இருக்க ஒருத்தர் கிடைச்சிட்டாருன்னு உங்க காலண்ட வந்து கிடக்குது. மனுசனைவிட பாசம் காட்டறதும், பாசத்துக்கு ஏங்கறதும் நாய்ங்கதான் சாரு.”
அடுத்த வீட்டு வேலைக்கு நேரமாகி விட்ட பரபரப்பில் கிளம்பினாள் ஜெயா.
பேச்சு வாக்கில் சுந்தரின் கண்களைத் திறந்து விட்ட ஜெயா சுந்தருக்கு புத்தராகவே தெரிந்தாள்.
அன்பையும் பாசத்தையும் தேடினேனே ! ஏங்கினேனே! இதோ என் காலடியில் கிடக்கே! எத்தனை ஆசையாக இந்த நாய் என்னிடம் வருகிறது. ஜெயா சொன்னாற் போல் அதுவும் என்னை மாதிரி அன்பைத் தேடுகிறதோ?
மனம் பரபரக்க அந்தக் கறுப்பு நாயின் முதுகில் மெதுவாக சுந்தர் வருடியதும் துள்ளிக் குதித்து எழுந்து வாலை ஆட்டி பரபரத்தது அந்தக் கறுப்புநாய். “வாடா வாடா என் செல்லக்குட்டி” என்று மெதுவாக அதை எடுத்து தன் மடிமேல் வைத்துக்கொண்ட சுந்தரின் மனது லேசானது.