சுந்தரன்
அரிஞ்சயனுக்கு அடுத்தபடி யாரென்று கேட்டால், சின்னக்குழந்தையும் சொல்லும் -அது ‘சுந்தரசோழன்’ என்று.
காவியம் படைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற காப்பியத்தில், சோழ மன்னராக வரும் சுந்தரசோழச் சக்கரவர்த்தியை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ஆக, கல்கியின் ரேடாருக்குள் நாம் இப்பொழுது நுழைய இருக்கிறோம். அந்த பயம் ஒன்று.
மேலும், பொன்னியின் செல்வனைப் படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், சுந்தரசோழனை நாம் சித்தரிப்பது கண்டு கோபம் கொள்ளுவார்களோ என்ற பயம் வேறு.
கல்கியின் கற்பனையில், சுந்தரசோழர் – அந்த நாள் சினிமாவில் நாகையா போல படுத்தபடுக்கையில் இருந்துப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தனது ஃபிளாஷ்பேக்கில் ‘சிங்களத்து சின்னக்குயிலே’ என்று மந்தாகினியுடன் டூயட் பாடியிருப்பார். கல்கியின் கற்பனையோ கடலளவு- நமது கற்பனையோ கைம்மண் அளவு! கல்கி ஐந்து பாகங்களில் எழுதிக் கலக்கிய சமாச்சாரங்களை ஒரே அத்தியாயத்தில் சொல்வது பொன்னியாற்று வெள்ளத்தை சங்குக்குள்ளே அடக்குவது போலத்தான். ஆனால் சங்குக்குள்ளே இருந்தாலும் அது காவிரி நீரன்றோ? இந்த முத்தாய்ப்புடன் இனி நீங்கள் படிக்கலாம்.
அவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன் மகளான பேரழகி கல்யாணிக்குப் பிறந்தவன். பராந்தகன் என்றே பெயர் வைத்தனர். அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை பராந்தக மன்னனின் செல்லப்பேரனாயிற்று. அவனை ‘சுந்தரா’ என்று அழைத்தான். நாமும் சரித்திரத்தில் பல பேரழகிகளைப் பற்றி விலாவாரியாகச் சிலாகித்து எழுதி வருகிறோம். ஆனால் எந்த நாயகனையாவது அழகன் என்று ஒருமுறை கூட சிலாகித்து எழுதவில்லை. அந்த விஷயத்தில் இது ஒரு முதல். அழகின் காரணமாக மக்கள் அவனுக்கு இட்ட பெயர் சுந்தரன்- அதுவே சரித்திரத்திலும் நிலைத்தது.
சுந்தரசோழன், சிறுவனாக இருந்த போதே ஈழத்துப் போரில் கலந்து கொண்டான். ஈழம் சென்று சோழர்கள் தோல்வியடைந்து திரும்பினார்கள். சுந்தரன் மட்டும் திரும்பவில்லை. சுந்தரனைப் பற்றிய செய்திகள் தஞ்சைக்கு கிடைக்காமல் போக, அனைவரும் கவலை அடைந்திருந்தனர். அப்போது ஈழத்தில், சோழவீரர்கள் சுந்தர சோழனை ஒரு தீவில் கண்டுபிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள். இறக்கும் தருவாயில் இருந்த பராந்தக சோழர் சுந்தர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவும் கண்டராதித்தரிடம் கூறிவிட்டு சிவபதம் அடைந்தார். கண்டராதித்தரும் ராஜாங்க விசயங்களை வெறுத்தபடியால் ஒப்புக் கொண்டார். தான் அரசனானபின்னும், அரிஞ்சய சோழனிடமும், அவர் மகன் சுந்தரசோழனிடமும் ராஜாங்க காரியங்களைக் கண்டராதித்த சோழர் ஒப்படைத்தார். இதில் பல விஷயங்கள் நாம் கேட்ட பழைய கதை.
957: அரிஞ்சயன் மரணமடைந்தான். ஏற்கனவே திட்டமிட்டபடி, சுந்தரசோழன் பட்டமேற்றான். அவனது மூத்த மைந்தன் ஆதித்த கரிகாலனுக்கு அன்று வயது வயது 15. மீசை முளைக்கத் துவங்கிய பருவம். உடலோ கடும் போர்ப்பயிற்சியை மேற்கொண்டதால் தேக்கு மரம் போல உறுதியான உடல். சுந்தரசோழன் பட்டமேற்கொண்ட அன்று மாலை ஆதித்தன் கேட்டது: “அப்பா, வீரபாண்டியனிடம் நாம் தோற்றது என் மனதில் ஆறாத வடுவாக உள்ளது. அந்தப் போரில், நம் அரசகுல இளவரசன் தலையை அவன் வெட்டிப் பந்தாடிய நிகழ்ச்சி இன்றும் என் இரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது. அவன் தலையைக் கொய்யாமல் இருப்பது என் தூக்கத்தைக் கெடுக்கிறது. தந்தையே! என்று நமது பாண்டிய நாட்டுப் படையெடுப்பு?”
ஆதித்தனின் ஆவேசம், சுந்தரசோழனை ஒரு கணம் கதி கலங்க வைத்தாலும், அவன் வீரம் அவனுக்குள்ளும் ஒரு உத்வேகத்தைக் கிளப்பியது.
“நன்று மகனே. நன்றே சொன்னாய்! ஆனால்- இன்னும் சில வருடம் பொறுக்கவேண்டும் மகனே. ஐந்து வருடத்துக்குள் நடக்கும். அதற்குள், நமது படையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் அதை நடத்திச் செல்ல நமக்கு ஒரு இருபது வயதான தலைவன் தேவை” என்றான். அரசனின் கண்கள் ஆதித்தனை ஊடுருவின. ஆதித்தனும் புரிந்து கொண்டான் – அந்த இருபது வயது தளபதி தான் தான் என்று. ஆதித்த கரிகாலனுக்கு அந்த ஐந்து வருடங்கள் மெதுவாக நகர்வது போலத் தோன்றியது.
சுந்தர சோழன் ஆட்சி ஏறும்போது தெற்கில் பாண்டியர்களும் , வடக்கில் இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கியிருந்தனர். சோழ நாட்டின் எல்லை சுருங்கிப் போயிருந்தது.
962 – சேவூர்ப் போர்: சொன்னதைச் செய்தான் சுந்தரசோழன். பட்டம் பெற்று தன் ஐந்தாம் ஆண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்துவந்த வீரபாண்டியன் மீது படையெடுத்தான். அந்தக்களம், முன்பு சோழர் தோற்ற அதே சேவூர்ப் போர்க்களம். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் இந்த இரண்டாம் சேவூர்ப்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன. ஆதித்த கரிகாலன் போரில் கலந்து கொண்டான், வீரபாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது. பாண்டியனுக்கு சிங்கள மன்னன் நான்காம் மகிந்தன் படையுதவி செய்திருந்தான். சோழப்படையில் நின்று போரிட்ட கொடும்பாளுர் சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ பாண்டிய நாட்டிற்குள் படையோடு சென்று பாண்டியனைக் காட்டில் புகுமாறு விரட்டினான்; சுந்தரசோழன், ‘பாண்டியனை சுரம் இறக்கிய பெருமாள்’ என்று பெயர் கொண்டான்.
முதலில் இதைப்படிக்கும் போது .. (உங்களைப்போலவே) ‘ சுந்தரசோழன் எதற்காக வீரபாண்டியனின் காய்ச்சலை குணமாக்கினார்?’ என்று யோசித்தேன். பிறகு ஆராய்ச்சி செய்து, சுரம் என்பது கரிசல் காடு என்றறிந்தேன்! பொதுவாக, கரிந்த மரங்களைக் கொண்ட காடு ‘சுரம்’ எனப்படும். வீரபாண்டியன் சுரம் புகுந்தான்.
‘பராந்தக சிறிய வேளார்’, வீர பாண்டியனுக்குத் துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும் சென்றான்;
965 – ‘பாண்டியனை அடியோடு அழிக்க வேண்டுமானால் – அவனுக்கு உதவி செய்து வரும் ஈழத்தை வெல்ல வேண்டும்’ என்று எண்ணிய சுந்தரசோழன் ஈழநாடு மீது படையெடுப்பு நடத்தினான். ஈழ நாட்டு தளபதி சேனன், சோழப்படைகளுடன் போரிட்டான். சோழர்கள் தோல்வியடைந்தனர். கொடும்பாளூர் சிறிய வேளாண் கடும்போர் செய்து, போர்க்களத்தில் இறந்தான். சோழர்கள் ஈழத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து பின் வாங்கினர்.
வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அவருள் ஒருவன் முற்கூறிய வேளார். மற்றொருவன் -‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச் சிற்றரசன். சோழ மன்னர் கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும், பெற்றும் வந்தனர். ஈழத்தை வெல்லாமல் போனாலும், பாண்டியரை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று. பின், பராந்தகன் ஆண்ட காலத்தில் இழந்த தொண்டை மண்டலத்தை மீட்பது ஒரு குறிக்கோள் ஆனது.
சுந்தரசோழன் தொண்டை நாட்டைக் கைப்படுத்த முயன்றான். சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் குறைந்து காணப்படுவதையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக் கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது. இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது.
966 – ‘ஈழத்திடம் தோற்று, சோழர்கள் தொண்டை மண்டலத்தில் முனைப்பாகப் போர் புரிந்தது’, – வீரபாண்டியனுக்கு தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது. மீண்டும் சோழ-பாண்டிய யுத்தம். இந்த யுத்தத்தில், வீரபாண்டியன் -ஆதித்தன் இருவரும் நேருக்கு நேர் போரிட்டனர். சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல் ஆதித்தன் பாண்டியருடன் போரிட்டான். இறுதியில், வீரபாண்டியன் வீழ்ந்தான். வீரபாண்டியன் தலை வெட்டப்பட்டது. ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையை, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான். ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்’ என்ற பெயர் – ஆதித்த கரிகாலனுக்குக் கிடைத்தது. சுந்தரன் ஆதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். ஆதித்த கரிகாலன் சோழநாட்டுக்குப் பட்டம் பெற்று ஆளாவிட்டாலும். தொண்டை மண்டலத்துக்கு ராஜாவாக இருந்தான். தன் பெயரில் கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். தந்தைக்கு ஆட்சியில் உதவியாக இருந்தனன்; அதனாலோ அவன் தன்னைப் பரகேசரியாகக் குறித்தான் போலும்.
பொன்னியின் செல்வனைப்பற்றி சில சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும்.
வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் நண்பன்- காஞ்சியிருந்து தஞ்சாவூர் வந்து, சோழ அரசியலில் சிக்கிக் கொள்கிறான். குந்தவையின் காதல் வலையிலும் தான்.
ஈழத்துக்கு தூது சென்று அருண்மொழியை சந்தித்து நண்பனாகிறான். சதிகள், துரோகம், காதல், அன்பு என்று பல உணர்ச்சிகள் பொங்கும் பல பாத்திரங்கள். சோழ குலத்தை முழுமையாக அழிக்க நடக்கும் சதி முறியடிக்கப்படுகிறது- ஒன்றைத்தவிர. ஆதித்தன் மட்டும் கொலை செய்யப்படுகிறான். பழுவேட்டர், சம்புவரையர் – மதுராந்தகனை மன்னனாக்க முயல்கின்றனர். அருண்மொழி மன்னனாக மக்கள் விழைய, அருண்மொழி அரசுரிமையைத் தியாகம் செய்து மதுராந்தகனை மன்னனாக்குகிறான். இது பொன்னியின் செல்வனெனும் காவிரியை ஒரு சங்குக்குள் எடுத்திருக்கிறோம்.
969 -சுந்தரசோழன் உயிருடன் இருந்த பொழுதே ஆதித்தன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை வழக்கைப்பற்றிப் பலர் ஆய்ந்து வரும் நேரத்தில் நாமும் குட்டையைக் குழப்புவானேன்? ஆனாலும் அதைப் பேசிப்பார்ப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வம் அதை எழுதத் தூண்டுகிறது.
‘விண்ணுலகைப்பார்க்கும் ஆசையில் ஆதித்தன் மறைந்தான்’ -என்கிறது சரித்திரம். இதற்குக் காரணம் என்ன? இதை கல்கி கிளப்பிவிட, பல சரித்திர நூலாசிரியர்கள் பல கதைகளைப் புனைந்தனர்.
சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதாச கிரமவித்தன் என்ற நான்கு சகோதரர்கள் இந்தக் கொலை செய்தனர் என்பதை சரித்திர ஆதாரம் காட்டுகிறது. ஆனால் இவர்கள் அம்புகளானால், எய்தவர் யார்?
முதல் குற்றவாளி: கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால், சிற்றப்பனான அரிஞ்சயன் நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான சுந்தரசோழன் அரசன் ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன். அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் என்பது இயலாதென்பதை அறிந்த மதுராந்தகன் ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொலை செய்துவிட்டான்- என்று சிலர் கூறுகின்றனர்..
அடுத்த கோணம்: அருண்மொழி-குந்தவை கூட்டு சேர்ந்து இந்தக் குற்றத்தை செய்தனர் என்று சொல்லி நாம் அனைவரது எதிர்ப்புக்கும் ஆளாகலாம். அந்தக் கூற்றின்படி: ஆதித்தன் வடக்கில் இராட்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்தியுதடன், போரில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொன்னால் காஞ்சியில் ஒரு மாளிகையை அமைத்தான். போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட தஞ்சைக்குக் அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக் கூறப்படுகிறது, இதனால் சிற்றரசர்களின் ஒரு பிரிவினர் அவன்மேல் அதிருப்தியடைந்தனர். சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற குந்தவை ஆதித்தனின் இந்த செயலை விரும்பவில்லை. குந்தவை தன் இளைய தம்பி ராசராசனின் மூலமே சோழப் பேரரசு உயர்ந்த நிலையை எட்டும் என நம்பினாள். இப்படி ஒரு மோடிவ் .
இன்னொரு கூற்று: பாண்டியன் ஆபத்துதவிகள், வீரபாண்டியனின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடித்தவர்களின் கூட்டு முயற்சி.
எப்படியோ, நாமும் நமது பங்கைச் செய்துவிட்டோம்.
சோழக்குடிமக்கள் ஆதித்தனுக்குத் தம்பியான அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச்செயலைச் செய்தான்.
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். ‘பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது.
சுந்தரசோழன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த பொன்னாலான மாளிகையில் நோயுற்று கி.பி 973 ல் காலமானான். அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான். சுந்தரசோழன் மலையமான்களின் பரம்பரையைச் சேர்ந்த வானவன் மாதேவி என்ற இவர் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள்.. வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவை என்னும் மக்கள் மூவர் இருந்தனர்.
குந்தவையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார். .தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியதில், நாமும் பெருமை கொள்வோம். சோழ நாட்டின் சரித்திரத்தை இனியும் பேசுவோம்.