மகாநதி
அதிர்ச்சி அனுபவப் பயணம்
எஸ் வி வேணுகோபாலன்
சுஜாதாவின் கவிதை ஒன்று, கணையாழியில் எழுபதுகளின் கடைசியில் வந்தது என்று நினைவு. வேண்டாம் என்பது தலைப்பு. பதினாறு சீர் கழி நெடிலடி விருத்தம் என்று போட்டு எழுதி இருந்தார். அதன் முதல் வரி தான் இங்கே மேற்கோள் காட்டப்போவது: ‘காலையிலே எழுந்திருந்தால் செய்தித்தாளில் கற்பழிப்பு செய்திகளைப் படிக்க வேண்டாம்’. எல்லாவற்றிலும் இருந்து விலகி தப்பித்து வாழ்வது பற்றிய பகடி அது. காலையில் சில செய்திகளை வாசிக்க, ஏன் தலைப்புச் செய்திகளைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். சிலபோது வரிசையாக யாராவது கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால், அதைக் கேட்கப் பொறுக்காமல், தலையைப் பிடித்துக் கொண்டு, போதும்..போதும் என்று சொல்வோர் உண்டு. சில படங்களைத் திரும்பப் பார்க்கலாமா என்றால் நிஜ வாழ்க்கையின் அதிர்ச்சியான விஷயங்களை அது காட்சிப்படுத்தும் கனத்தைத் தாங்க முடியாமல் மறுத்துக் கொள்வோர் உண்டு. மகாநதி அப்படியான ஒரு படம் தான்.
ஓபியம் (OPM) என்பது தான் கதையின் ஒற்றை வரி. எனது சொந்தப பணம் என்பதற்கும், அடுத்தவர் காசு என்பதற்கும் ஒரே குறியீடு இந்த ஆங்கில மூவெழுத்துகள். பணம் எத்தனை ஈவிரக்கமற்றது என்பதை, எத்தனையோ கவிஞர்கள் பாடி இருக்கின்றனர். எங்கே தேடுவேன் என்று பாடினார் என் எஸ் கிருஷ்ணன். காசே தான் கடவுளடா என்பது மற்றொரு பாட்டு. பணத்தை முன்னிலைப்படுத்தும் சமூக அமைப்பில் எல்லா உறவுகளும் கொச்சைப்படுத்தப்படும், எல்லாம் பண்டமாகப் பார்க்கப்படும். வர்த்தகமயம் ஆக உலகம் மாறி நிற்கும் என்பதை மிகுந்த கவிநயமிக்க வாசகங்களில் நீங்கள் படிக்க விரும்பினால் 1848ம் ஆண்டில் வெளியாகி உலகைக் குலுக்கிய நூலுக்குள் செல்லவேண்டும். அதற்குப் பிறகு வருவோம்.
மனைவியை இழந்த நல்ல மனிதர், இரண்டு குழந்தைகள், மூத்தவள் அப்போதுதான் பருவமெய்தும் வயதில், மாமியார் உடன் இருக்க எங்கோ கும்பகோணம் அருகே வெளியுலகம் அறியாமல் நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கும் விவசாய வாழ்க்கை, கொஞ்சம் கூட காசு பண்ணலாம், பெரிய கஷ்டம் இல்லாமல் என்று போடப்படும் தூண்டிலில் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிப் போவது தான் படம். படத்தின் கதையல்ல, காட்சிப்படுத்தல், நடிப்பு, வசனம், இசை இவை தான் நிறைய பேசப்படுவது.
மத்திய சிறைச்சாலையில் இருந்து தான் படம் பின்னோக்கிப் போய் கதை சொல்கிறது. சிறைச்சாலையை நேரடியாகக் கண் முன் நிறுத்தும் படம், கடைசி கட்டங்களில், சிவப்பு விளக்குப் பகுதியைக் காட்சிப்படுத்தும். பரிதாப உணர்ச்சியைத் தூண்டவோ, கிளுகிளுப்பை ஏற்றவோ அல்ல, இரண்டுமே பார்வையாளரைப் புரட்டி எடுக்கும் என்பது தான் முக்கியமாகச் சொல்லவேண்டியது. உண்மைக்கு எத்தனை நெருக்கமாக நின்று ஒரு கதையைப் பார்வையாளருக்குச் சொல்ல முடியுமோ காட்சி மொழியில் அது ஒரு திரைப்படத்தின் தனித்துவமான அம்சமாக அமைகிறது.
சிறையறையைப் பகிர்ந்து கொள்வோரில் ஒருவர் பூர்ணம் விசுவநாதன், மற்றவர் கமல் ஹாசன். பூர்ணம் பேசும் ஒவ்வொரு வசனமும் படைப்பூக்கத்தோடு சிறை வாழ்க்கையை எடுத்து வைக்கிறது. இரவு படுத்துக் கொண்டிருக்கையில், இது தான் கடைசி ரயில். இத்தோட காலம்பற நாலரைக்குத் தான் முதல் வண்டி என்பார். பார்க் ரயில் நிலையம் அருகே மத்திய சிறையில் குடியிருக்கும் உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்துவது மட்டுமல்ல, ஒரு சிறைவாசியின் அன்றாடம் என்னவாக இருக்கும், அவரது சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் போகும் என்பதை வெளிப்படுத்துகிறது படம். கைதிகளுக்கு உணவு வழங்குமிடத்தைத் தான் அதிகம் பார்த்திருக்கிறோம், படங்களில், மகாநதி சமையல் செய்யுமிடத்தைக் காட்டுவது கதைக் களனுக்கும் அவசியமானது. கைதிகளுக்கு பீடி வாங்கிக் கொடுப்பதற்கு சிறைக் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு உதவி செய்வது பற்றிக் கதைகளில் வந்ததுண்டு. ஆனால், அதன் உள்ளரசியல் இன்னும் குளோஸ் அப் கொண்டுபோய்ப் பேசுகிறது மகாநதி.
பெண் குழந்தைகளைச் சிதைத்து சிவப்பு விளக்குப் பகுதிக்கு சப்ளை செய்பவன் குரூர முகம், வெட்டுத் தழும்பு, வில்லன் சிரிப்பு இதெல்லாம் கொண்டிருப்பது இல்லை. அழகான முகம், சபாரி உடை, தொடக்க நிகழ்வுகளில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து முதலீடு செய்யத் துடிப்பவர், சமூகத்தின் கண்ணியமிக்க மனிதர். அவரது ஏஜெண்டுகளும் அத்தனை எளிதில் கொடியவர்களாக அடையாளப்படுத்த முடியாத நடவடிக்கைகளில் கரைந்திருந்து, பிரச்சனை வெடிக்கும்போது மட்டுமே சொந்த உருவத்தில் வெளிப்படுபவர்கள்.
அம்மா இல்லாத பெண் குழந்தை, தகப்பனும் சிறையிலடைபட்டுக் கிடக்கும் ஒரு துரதிருஷ்ட நேரத்தில் மலர்கிறாள், அதை அந்தத் தந்தை அறியவரும் காட்சி, எப்பேற்பட்ட கல் நெஞ்சையும் உருக்கிப்போடும். படத்தின் திரைக்கதைக்கு முக்கியமான இந்தக் காட்சி, அந்தப் பெண் குழந்தையின் அறியாமை கலந்த அந்த மலர்ந்த முகம், பின்னர் எப்படியாக மாற இருக்கிறது என்பது பார்வையாளரை எப்போதும் பதறவைக்கும் விஷயமாகும்.
தனது மகளைத் தேடி கல்கத்தா போகும் காட்சியில், டாக்சி டிரைவர் கேட்கிறான், மாமனாரும் மருமகனும் ஒன்றாக அந்தப் பகுதிக்குப் போகும் விநோதத்தை இப்போது தான் பார்க்கிறேன் என்று. அதுவரை அது என்னமாதிரியான இடம் என்று இந்த இரண்டு பேருக்குமே தெரியாது என்பது கதையோட்டம் வழங்கும் அதிர்ச்சிகளில் முக்கியமான இடம். சொந்த மகளை ஒரு தகப்பன் விலைமாதர் விடுதியில் கண்டெடுத்து, அவளை அங்கிருந்து மீட்டெடுக்கும் இடம் இதயத்தை அறுத்துப் போடுவதாகும். அந்த புரோக்கர்களிடம் காணப்படாத மனிதநேயம், அதே தந்தை தனது மகனைப் பராமரித்து வரும் ஒரு கழைக்கூத்தாடியிடம் கண்டு நெகிழ்வதைப் படம் பேசுமிடம் படத்தில் ரணத்தை ஆற்றும் மிகச் சில இடங்களில் ஒன்று. இரண்டு காட்சிகளிலுமே மாமனார் உடனிருக்கிறார் என்பது முக்கியம்.
யாரையும் பழி வாங்கவோ, தனது வாழ்க்கை நாசமானதற்கு வேறு யாரையும் பொறுப்பாக்கவோ நாயகன் அலைவது இல்லை. ஆனால், இரவின் மடியில் ஒரு சிறுமி உறக்கத்தில் கூட வாடிக்கையாளர்கள் தன்னுடலைப் படுத்தும் பாட்டை முணுமுணுத்துக் கடக்கும் இடத்தில் உடைந்து நொறுங்கிப் போகிறான் தந்தை. இப்படியாக விற்கப்படும் அனைத்துக் குழந்தைகளது தகப்பன்மார்களில் ஒரு பிரதிநிதியாகத் தான் அவன் பிள்ளைக்கறி கேட்கும் கயவனைத் தேடித் போகிறான். தண்டிக்கிறான்.அதுவும் அவனடையும் துன்பம் தான். ஆனால் அதைக் கடக்கவேண்டியவன் ஆகிறான்.
சீட்டுக் கம்பெனி மோசடிகள் பற்றிய பதிவு, வேறு ஒரு முனையில் இருந்து அணுகப்படும் கதையில், பணம் பண்டமாக மாறாமல் பணமாகவே பரிவர்த்தனைக்கு உள்ளாகும் சந்தையின் விந்தையில் கருகும் எளிய மக்கள் வாழ்க்கை பற்றியும் இலேசாக அடையாளப்படுத்துகிறது. பணத்தை வைத்து மேலும் பணம் பண்ணும் வர்த்தகத்தில் பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்பதும் தவிர்க்க முடியாத விதியாக மாறுகிறது. மனித உறவுகளுக்கோ, நேயத்திற்கோ, நியாயத்திற்கோ இடம் இருக்க முடியாது போகிறது. சந்தையின் பலிபீடத்தில் அறம் என்பது நேரெதிரான வரையறை கொள்ளப்படுகிறது. படத்தின் ஆகப்பெரிய விஷயம் இது தான். ஆனால் அதை நேரடியாகக் கண்ணுற முடியாது. கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் இருவரும் இந்த உலகுக்கு அளித்துச் சென்றுள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை இதை அத்தனை விரிவாகப் பேசுகிறது.
படத்தின் இரு முக்கிய மனிதர்கள் கமல் ஹாசன், ரா கி ரங்கராஜன். படத்தைக் கிட்டத்தட்ட பெருமளவு சுமக்கவேண்டிய கதையமைப்புக்கான பாத்திரத்தை, கமல் அசத்தலாக செய்திருப்பார். இந்தப் படத்திற்கான உணர்வுகளை, உணர்ச்சிகளைப் பார்வையாளருக்கு ஏற்படுத்தும் வண்ணம் திரைக்கதைக்கேற்ற முறையில் வசனத்தைத் தனித்துவத் தெறிப்பாக எழுதி இருக்கிறார் ரா கி ரங்கராஜன்.
எஸ் என் லட்சுமி எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார், இதில் வாழ்ந்திருக்கிறார். தன்னை அம்மா என்றே விளிக்கும் கமலிடம், அவர், “நான் அம்மாவா இல்ல மாப்பிள, மாமியாராத் தான் இருந்துட்டேன்” என்கிற இடம் படத்தின் உருக்கமான காட்சிகளில் முக்கியமானது. குழந்தைகள் அப்படி நடித்திருப்பார்கள்.
‘சுவாமி நம்பிக்கை இருந்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டே’ என்று சிறையில் சொல்லும் பூர்ணம், தன்னை கமல் உற்றுப்பார்ப்பது அறிந்தவுடன் ஆத்திகனாகவே இருந்தும் தான் ஏன் உள்ளே வந்தேன் என்று சொல்லித் தேம்பும் இடமாகட்டும், வம்புக்குப் போகாதே என்று சிறையில் கமலைத் தடுப்பரண் அமைத்துக் காப்பாற்ற முனைவதிலாகட்டும், இறுதிக்கட்ட காட்சிகளில் அவரோடு பயணிக்கும் இடங்களில் ஆகட்டும் அருமையாகச் செய்திருப்பார். அவருடைய மகளாக வரும் சுகன்யாவுக்கு அளவான பாத்திரம், அதற்கேற்ப வெளிப்படுகிறார். சிறைக் காவலராக வரும் சங்கர் அனாயாசமாக செய்திருப்பார், அவருக்கு முதல் படம் இது. தவறான திசை காட்டும் பாத்திரத்தில், கொச்சி ஹனீபா மிகச் சிறந்த முறையில் நிறைவாக செய்திருப்பார். ராஜேஷுக்கும் அளவான பாத்திரம்.
படத்தின் முக்கிய கதாபாத்திரம், இளையராஜாவின் இசை. ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்’ பாடலும், ‘தை பொங்கலோ பொங்கல்’ பாடலும், ‘பேய்களை நம்பாதே’ பாடலும் மட்டுமல்ல பின்னணி இசை படத்தின் உயிரான அம்சங்களில் முக்கியமானது. கல்கத்தா படகோட்டியின் வங்காளிப் பாடலில் இளையராஜாவின் குரல் சென்று கலந்து தொடரும் பாடல் அபாரமானது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் பாராட்டுக்குரிய விஷயங்கள்.
தனித்தனி செய்திகள் படிக்கிறோம் நாளேட்டில், வெறுத்துப் போகிறோம். இங்கே அங்கே கேள்விப்படுகிறோம் சலிப்படைகிறோம். நமக்கே ஏதேனும் நிகழும்போது அதிர்ச்சி கொள்கிறோம். கண்ணுக்குப் புலனாகாத இழையோட்டத்தில் இந்த சமூக அமைப்பு இவற்றையெல்லாம் இப்படித்தான் வடிவமைத்திருக்கிறது என்று உணர சில நேரம் தூக்கிவாரிப் போடவைக்கும் கலை இலக்கிய அனுபவங்களுக்குள் பயணம் செய்தாக வேண்டி இருக்கிறது.
மகாநதி அப்படியான ஒரு திரையனுபவம்.
மகாநதி தமிழின் உணர்ச்சி மிகு திரைப்படங்களில் ஒன்று. படம் பார்ப்பவர் நெஞ்சை உருக வைக்கும். கண்ணீர் மல்கும். அந்தக் காலத்தில் பாசமலர் படத்தின் கடைசிக் காட்சியில் அரங்கில் இருக்கும் பலரும் கண்ணீர் வடிப்பதைக் காணலாம். அதைவிடவும் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் படம் மகாநதி. மகாநதி படத்தின் மற்றுமொரு சிறப்பு குடும்ப உறவுகளில் இதுவரை சித்தரிக்கப்படாத மாமியார் – மரு,மகன் உறவை மிகவும் நேர்த்தியாகச் சித்தரித்தப் படம். தன் மனைவியை இழந்த நாயகன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார். ஒரு காட்சியில் மாமியார் அவரின் பண்பைக் கண்டு பூரித்துப்போவார். ‘நீங்கள் என் மகனாக இருந்திருந்தால் இன்னேரம் இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பேன். நான் உங்களை இன்னும் மகனாகப் பாவிக்கவில்லையே” என்று சொல்லி வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்பார். பல வகைகளிலும் மகாநதி ஒரு உன்னதமான படம். பாலியல் தொழிலின் கொடூரத்தை தமிழில் சித்தரித்த முதல் திரைப்படம் என்று சொல்லலாம். சிறைக் காட்சிகளும் மிகவும் யதார்த்தத்துடன் காட்டப்பட்டிருக்கும். இந்தியச் சிறைகளில் இன்னும் எவ்வளவு சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்தும் படம். கலையின் வெற்றி சமூக மாற்றங்களை முன்மொழிவதில் தானே உள்ளது. எஸ்.வி.வேணுகோபால் படத்தின் அனைத்து நல்ல அம்சங்கள் குறித்து எழுதியுள்ளது பாராட்டத்தக்கது.
LikeLike