நடுப்பக்கம் – ராமன் எத்தனை ராமனடி – சந்திரமோகன்

 பிரம்மாண்ட ஆலயம்

இராமாவதாரம்- பாமரனின் பார்வையில்

கவிச்சக்கர வர்த்தி கம்பர், தான் எழுதிய ராம காதையை திருவரங்கம் அரங்க நாதன் முன்னர் அறங்கேற்றிய பொழுது இராம அவதாரம் என்றே குறிப்பிடுகிறாராம். வால்மீகியின் இராமாயணம் உலகப் புகழ் பெற்று இருந்ததால் பின் நாட்களில் கம்பரின் இராம காதை கம்ப இராமயணம் என்று அழைக்கப் பட்டதாம்.

பெரும்பாலும் என் வயதொத்தவர்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது கம்ப இராமாயணம் முழுதும் படிக்க வேண்டும் என்ற ஆவலை மனதின் ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்தே வாழ்வை கடந்து விடுகிறார்கள். புண்ணியம் செய்த சிலருக்கு ஆசை கை கூடுகிறது. சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பகுதிகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இராம கதையை முழுதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென என் மனதில் விதைக்கப் பட்ட ஆசையொன்று இச்சமயம் முளை விட்டதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

எதில் ஆரம்பிப்பது, எங்கு ஆரம்பிப்பது! தேடினேன். வால்மீகியை படிக்க தேவ பாஷையான சமஸ்கிருதம் தெரியாது. கம்பனை படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு தமிழில் ஞானம் கிடையாது. மீண்டும் தேடினேன்.

கம்பனைக் கேட்டால்” தேவ பாஷையில் இக்கதை செய்தவர் மூவரானவர்” என்கிறார். சமஸ்கிருதத்தில் மூவர் எழுதி உள்ளார்களாமே அவர்கள் யாரென்று பார்த்தால் நம் அகத்தியர்,வியாசர், வால்மீகி ஆகிய மூவராம். மக்கள் மனதில் வேரூன்றி நிலைத்தது என்னவோ வால்மீகி இராமாயணம்தான்.

வால்மீகி தான் வாழ்ந்த காலத்தில் வடநாட்டில் வழங்கி வந்த இராம சரிதத்தை அக்கால வாழ்வியலை முன் வைத்து தன் கவி நயத்தால் பேரிதிகாசமாக வழங்கினார். அவர் இராம சரிதத்தின் ஒரு குறிப்பிட்ட படியை சித்தரித்தார். ஆனால் இராமாயணம் கதையின் அம்சங்களில் வளர்ந்து கொண்டே வந்துள்ளது. காவிய நாயகன் இராமனும் உத்தம மனிதன் என்ற நிலையிலிருந்து இறைவன் என்ற நிலைக்கு உயர்த்தப் பட்டான்.

வைதீக மதப் பிரிவான வைணவம் இராம காவியத்தை பக்தி இலக்கியமாக போற்றியது. அகத்தியர் இயற்றிய அத்யாத்ய இராமாயணம் பக்தி சுவை நிறைந்து கலைச் சுவையற்று இருந்ததால் மக்கள் மனதில் நிற்க வில்லையாம். இந்தியில் துளசிதாசர் எழுதியதும் இவ்வகையே.
அதேசமயம் தங்கள் பங்கிற்கு சமணமும் பௌத்தமும் இராமனை தம் மத நாயகனாக காட்டின.

பௌத்த இராமாயணத்தில் அம்மத கொள்கைகளே விரிவாக கூறப்படுகிறதாம். அதில் வினோதமான ஒரு தகவல் , புத்தர் சார்ந்த சாக்கிய மரபில் உடன் பிறந்த ஆணும் பெண்ணும் மணந்து கொள்ளுதல் வழக்கமாம். அவ்வழக்கின் படி சீதையும் இராமனும் உடன் பிறந்தவர்களென்று பௌத்த இராமாயணம் கூறுகிறது.

ஜைன இராம சரிதையிலும் மத நோக்கமே மேம்பட்டு நின்றதாம்.ஜைன இராம சரிதையில் தசரதன் காசிக்கு அரசன் பின்னர் அயோத்திக்கு அரசனாகிறான். இதைத் தழுவி ஜைன இராம சரிதை கன்னடத்திலும் தமிழிலும எழுதப்பட்டன. தான் வளர்த்த யாகத்திற்கு இராமனை அனுப்பக் கோரி ஜனகர் தசரதனை வேண்டுகிறார். அங்கு சென்ற இராமன் சீதையை மணந்தார். தம்பதியை காசியில் வசிக்கச் செய்தார் தசரதன்.

வனத்தில் ஓய்வெடுக்க இராமன், இலக்குவன், சீதை சித்திர கூடம் செல்கிறார்கள். அங்கு வந்த நாரதரை மதியாததால் , இராவணனிடம் சீதையின் பேரழகை நாரதர் கூறுகிறார். இராவணன் மாரீசன் உடன் சென்று சீதையை கவர்ந்து செல்கிறான். அனுமான் சீதையை கண்டு வந்து இராமனிடம் தெரிவிக்கிறான். நடந்த போரில் இராவணன் இலக்குவனால் கொல்லப் படுகிறான். இலக்குவன் தவிர அனைவரும் சொர்க்கம் செல்கின்றனர். இலக்குவன் கொன்ற பாவத்திற்காக நரகம் செல்கிறான். இந்திரனும் அனுமனும் ஜைன துறவிகளாகிறார்கள். இராமன் கேவல ஞானம் பெற்று நிர்வாணம் அடைந்தான். இராமனுக்கு பதினாயிரம் மனைவியராம். மத நோக்கம் மேற் பட்டதால் கலையுணர்ச்சியும் கவிதையுணர்ச்சியும் முற்றும் மறைந்து ஜைன இராம சரிதை விரைவில் அழிந்தது.

இராமாயணம் உலகில் வழங்கும் சரிதைகளில் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இராக் காலங்களில் மக்கள் திரளாய் கூடும் இடத்தில் இராம சரிதையை கதையாக, பாட்டாக கூறும் பழக்கம் வெகு நாட்களாக நடந்து வந்துள்ளது. அதுவே பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வாதாராமாகவும் இருந்து வந்துள்ளது. கதை கூறுபவர் தாம் கற்ற வித்தையை காட்டவும், மக்களை கவரவும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை புகுத்தி வால்மீகியை விட்டு சற்று விலகிச் சென்றனர். உப கதைகள் பல சேர்த்தும் பக்தியை மிகைப்படுத்தியும் இராம சரிதத்தை ஒரு பக்தி இலக்கியமாக மாற்றினர் பலர். சிலர் தங்கள் கற்பனை வளத்தை காட்டி இலக்கிய உணர்வை கெடுத்தனர். அவைகளையொட்டி வந்த இராம காதைகள் எவையும் நிலைக்க வில்லை. நிலைத்து நின்றது வால்மீகியின் இராமாயணமும், அதை மூலமாக வைத்து, காலத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் ஏற்ப சிறிய மாற்றங்களுடன் படைக்கப் பட்ட கம்ப இராமாயணமுமே.

கலிங்கத்து பரணி பாடிய ஜெயங் கொண்டார், ஒட்டக் கூத்தர், கம்பர் ஆகிய மூவரை மட்டுமே தமிழுலகம் கவிச்சக்கர வர்த்தி என அழைத்தது. முதல் இருவரும் சோழ அரசர்களின் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்கள் புகழ் பாடியவர்கள். அவர்கள் பட்டம் நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை.

கம்பனுக்கு அரச தொடர்பு ஒன்றுமில்லை. மாறாக கம்பன் அரசரது கோபத்திற்கு ஆளாகி, வேற்று இடங்களுக்கு சென்று மறைந்து வாழும்படி நேரிட்டது. இறுதியில் கம்பன் ஓர் அரசனால் மரணம் அடைந்தான் என்றும் சரித்திரம் கூறுகிறது.

இருப்பினும் கவிச்சக்ரவர்த்தி என்றால் கம்பன் எனும் புகழே அவன் இயற்றிய இராமாயணத்தின் சிறப்புக்குச்சான்று.

கம்ப இராமாயணம் சொல் வளம், செய்யுள் வளம், உவமை, வருணனை, பாத்திரங்களை சிறப்பிக்கும் வளம் நிறைந்து விளங்குவதால் தமிழ் அறிந்த அனைவரும் பெருமையுடன் படிக்க வேண்டிய காவியமாக இயற்றி சுமார் 850 ஆண்டுகளுக்கு பின்னரும் நம் கைகளிலும் செவிகளிலும் தவழ்ந்து வருகிறது.

கம்பன் இயற்றிய இராமாவதாரம் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டு வால்மீகி இராமாயணத்தோடு ஒத்த பெருமையும், கவித்துவமும் காணப்படுகின்றன என்பார்கள். கம்பன் தான் ஒரு வைணவன் என்றோ அல்லது இது ஒரு பக்தி இலக்கியம் என்றே எங்கும் காட்ட வில்லை.
தன் இராம சரிதையில் ஒவ்வொரு பாத்திரத்தையம் மனதில் நிற்குமளவிற்கு பெருமைப் படுத்துகிறார். இராமனுக்கு நிகராக இராவணன் படைக்கப் பட்டுள்ளான். அவனது அந்த க்ஷன நேரப் பித்தமே அவன் அழிவுக்கு காரணமானது. அதுபோலவேதான் கூனியும் கைகேயியும். இராமனின் சிறுவயதில் உண்டி வில்லால் அடிவாங்கிய கூனியின் கோபமும், கூனியின் பேச்சால் மயங்கிய கைகேயி தன் வசமிழந்த தருனம் மட்டுமே அவர்கள் கெட்டவரகளாக தோன்றினர்.

இராமனை திரும்ப அழைத்து வர சென்ற பரதனுடன் கிளம்பி முன் வரிசையில் உடன் நடந்தவர்கள் அந்த இருவருமே.

இராமனின் ஒழுக்கம், சீதையின் கற்பு நெறி, அனுமனின் கம்பீரம், இலக்குவன் , பரதன், கும்பகர்ணன் ஆகியோரின் சகோதர பாசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அக்காவியத்தை ஒரு தடவையாவது படித்து அனுபவிக்க வேண்டும்.
படிக்க வாய்ப்பு இல்லாவிடின் சிங்கப்பூரிலிருந்து காணொளி  மூலமாக திரு. அ.கி. வரதராஜன் ஐயா அவர்கள் எடுக்கும் வகுப்பை கேட்களாம். கம்ப ராமாயணத்தின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காட்டி அழகான விளக்கங்களுடன் அவரது வகுப்பை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். சுந்தர காண்டம் மட்டும் வாரம் ஒரு வகுப்பாக 80 வாரங்கள் தாண்டியுள்ளன. ஒரு வகுப்பு சுமார் ஒன்றரை மணி நேரம். வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள் கேட்கலாம்.

வீடியோ பார்க்க கேட்க நேரமில்லை என்றால் அழகு தமிழில் டாக்டர் ரா. சீனிவாசன் அவர்கள் எழுதிய உரை நடையை (கீழே) முன்னர் படித்து பின்னர் கம்பரை படிக்க முயலளாம்.

கம்பர் பிறந்த மண்ணில் பிறந்து கம்பனின் கவிதையை படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நாம் பல பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை.

இன்னும் கொஞ்சம் தகவல் இணையத்திலிருந்து திரட்டியவை – நன்றி விஜயபாரதம் 

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

துளசிதாசர் அருளிய ராம சரித மானஸ் -காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீர் – ‘ராமாவதார சரிதை’ – காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத் – பிரேமானந்த ஸ்வாமி – துளசி கிருத ராமாயணம் 

மகாராஷ்ட்ரா – ஏக்நாத் – பவர்த்த ராமாயண – காலம் 16 ஆம் நூற்றாண்டு 

அஸ்ஸாம் – மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் – 15 ஆம் நூற்றாண்டு 

வங்காளம் – கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட கிரித்திவாசி ராமாயணம் – 15 ஆம் நூற்றாண்டு 

ஒதிஷா – பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் – காலம்  16 ஆம் நூற்றாண்டு 

ஆந்திரப் பிரதேசம்  – புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு 

கர்நாடகா –  13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்),  16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா  முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாடு –  கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’. – 12 ஆம் நூற்றாண்டு 

கேரளா – –  துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு – 16 ஆம் நூற்றாண்டில்.

நேபாளம் – 19 ஆம் நூற்றாண்டில் பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.

கோவா –  15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு .

உத்தரப் பிரதேசம் – உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத்
திகழ்கின்றன.

அயல்நாடுகளிலும் ராமகதை இன்றளவும் சொல்லப்பட்டு வருவது அதன் பெருமைக்குச் சான்று.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)
ஆக, இப்படி ஏராளமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.