(தாகூர்- கீதாஞ்சலி-பாடல் 2)
தாங்கள் பாட்டிசைக்கும்படி எனக்கு உத்தரவிடும்போது எனது இதயம் பெருமையில் பூரித்து வெடித்துவிடும் போலுள்ளது; தங்கள் முகத்தை நோக்கும் எனது கண்களில் கண்ணீர் ததும்புகிறது.
எனது வாழ்விலுள்ள கொடூரமான முரண்பாடுகள் இனிமையானதொரு இன்னிசையில் கரைந்தோடுகின்றன – ஒரு பறவை ஆனந்தமாகத் தனது சிறகுகளை விரித்துக்கொண்டு கடலைக் கடந்து பறப்பது போன்று எனது ஆராதனையும் தனது சிறகுகளை விரித்தெழுகின்றது.
தாங்கள் எனது பாடலைக்கேட்டு மகிழ்கின்றீர்கள் என நானறிவேன். தங்கள் முன்னிலையில் ஒரு பாடகனாக மட்டுமே நான் வர இயலும் எனவும் அறிவேன்.
என்னால் அடைவதற்கு இயலாத தங்கள் அடிகளை (பாதங்களை) எனது இசையின் பரந்த சிறகுகளின் நுனியினால் தொடுகிறேன்.
அந்த இசையினைப் பாடும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்புண்டு என்னையும் மறந்து, தங்களை, எனது கடவுளை, நான் ‘எனது நண்பனே’ என அழைக்கின்றேன். (தாகூர்- கீதாஞ்சலி-பாடல் 2)
———————————————————————–
எல்லா இசையும், நமது சாஸ்திரீய சங்கீதம் முதற்கொண்டு, திரை இசை, நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்திலும் ஒரு தெய்வத்தன்மை ஊடுருவி நிற்கின்றதென்பது மறுக்க இயலாத உண்மை. ஒரு பாடலையோ இசையையோ படைக்கும் / இசைக்கும் கலைஞனுக்குள் இறைமை நிறைந்து நின்று தன்னை அப்பாடலாகவோ இசையாகவோ வெளிப்படுத்திக் கொள்கின்றதென்பதும் மற்றுமொரு பேருண்மை. இதனைத்தான் வள்ளலார் நாதாந்தம் என்கிறார். அந்த இறைவனையும் நாதாந்த தெய்வம் என அழைத்து மகிழ்கிறார்.
————————————————————————-
1983ல் மோட்ஸார்ட் எனும் மேற்கத்திய இசைமேதையைப் பற்றிய அற்புதமானவொரு திரைப்படம் ‘AMADEUS’ எனும் பெயரில் வெளிவந்தது. மோட்ஸார்ட் பிறவி இசைமேதை. ஆனால் அவனுடைய மேதைத்தனமும், விளையாட்டுப் பிள்ளைத்தனமும் சக கலைஞர்களிடையேயும் அவனை ஆதரித்த அரசவைப் பெருமக்களிடமும் சினத்தையும் பொறாமையையும் தான் வளர்த்தன. ஆகவே எத்தனை அருமையான (அவனுடைய இறப்பிற்குப்பின் தான் அவன் படைப்புகள் பிரபலமாயின) படைப்புகளைப் படைத்திருந்தும் அவை பெரியமனிதர்களின் ஆதரவைப் பெறவில்லை. திரைக்கதையின்படி, மிகவும் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு அவன் மரணமடைகிறான். தன் இறுதி நாட்களில் ‘இறந்தவர்களுக்கான இசை வழிபாடு’ (Requiem Mass) ஒன்றை இயற்ற முயன்று அதனை முடிக்காமலே இறக்கிறான். கையில் பணமில்லாததனால் ஏழைகளுக்கு அளிக்கப்படும் மிக எளிய சவ அடக்கம் அவனுக்குச் செய்யப்படுகிறது.
திரைக்கதையில் அவனைப் பொறாமையால் மிகவும் வெறுத்த, ஆனால் பெரிதும் வியந்த ஒரு இசைக்கலைஞரால் (சாலியேரி (Salieri) எனும் பெயர்கொண்ட அவர் புத்தி சுவாதீனமிழந்து ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார்) மோட்ஸார்ட்டின் இசையின் மேன்மை இவ்வாறு விவரிக்கப்படுகின்றது:
“இசை எல்லாம் அவனுடைய மூளையில் அப்படியப்படியே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது போலும்! ஒரு ஸ்வரம், அது வெகு பொருத்தமான இடத்தில் வந்து அமரும் அழகு; இசைத் தொடர்கள், அவற்றின் அமைப்பு எப்படிப் பொருந்தி நிற்கும்! பிஷப்பின் மாளிகையிலும் அரசர்களின் அவையிலும் ஒலித்த அந்த சங்கீதம் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல! அது நிச்சயமாகக் கடவுளின் குரலேதான்! அந்த இசையின் சொல்லமுடியாத அழகை (இனிமையை) நான் கேட்டேன். அதில் திளைத்தேன்….” என இவ்வாறு சக கலைஞன் ஒருவனால் விவரிக்கப்படும் மோட்ஸார்ட்டின் இசை நிச்சயமாக தெய்வத்தன்மை வாய்ந்தது. கடவுளே அந்த இசையில் குடியிருந்தாலொழிய, அந்த இசையாக உருவெடுத்திருந்தாலொழிய அப்படிப்பட்டதொரு இசையை உருவாக்க யாராலும் முடியாது.
எல்லாரையும் போல நானும் மேற்கத்திய இசையின் பல இசை அமைப்புகளையும் ஆபராக்களையும் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பெர்லின் நகரில் ஒரு சின்னஞ்சிறிய தேவாலயத்தில் ஒரு குளிர்கால மாலையில் மோட்ஸார்ட்டின் இந்த ‘இறந்தவர்களுக்கான இசை வழிபாடு’ இசைக்கப்படப்போவதாக அறிவிப்பு வந்திருந்தது. நம்ப மாட்டாத வகைக்கு சாரிசாரியாக மக்கள் கூட்டம் சர்ச்சை நோக்கிச் சென்றதில் அங்குள்ள சிறிய ஹால் நிரம்பி வழிந்தது. நாங்கள் பலர் குறுகலான படிவழியாக மேலேறி ஆர்கன் எனும் இசைக்கருவி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர இடமின்றி நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம்.
இங்கு குளிர் இன்னுமே அதிகமாக இருந்தது. உட்காரவும் இடமில்லை. எல்லாரும் குளிரில் நடுங்கியபடி, கோட்டுகளையும், கம்பளிக் கையுறைகளையும் கூடக் கழற்றாமல் நின்றவண்ணமே இருந்தோம். இது எல்லாம் இசை ஆரம்பிக்கும்வரை தான். பின் இசைதான் எங்கள் சிந்தையை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டது.
‘கடவுளே, இவர்களுக்கு, நிரந்தரமான, அமைதியான ஓய்வைத் தந்தருள் (Requiem aeternam),’ என்ற பொருள்பட ஆரம்பித்த வழிபாட்டில் உள்ளம் ஒருமைப் பட்டது.
இந்த இசை வழிபாட்டில், அதாவது, ‘மாஸ்’-ல் (Mass) நான்கு அல்லது ஐந்து பகுதிகள் உண்டு. முதல் பகுதி, ‘கடவுளே என் மீது கருணை காட்டும் (Kyrie eleison),’ எனப் பாடுவது. வயலின், புல்லாங்குழல் இவை இசைக்கப்படுவதைத் தொடர்ந்து ‘ஸொப்ரானோ’ (Soprano) பாடகி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது உடல் எல்லாம் புல்லரிக்கும். பின் படிப்படியாக மற்ற குரல்களுடன் சேர்ந்தும் தனியாகவும் பாடும்போது, பொருள் விளங்காவிடினும் (பெரும்பான்மையாக இவை இலத்தீன் மொழியில் இருக்கும்) ‘இது ஒரு இசை வழிபாடு – இசையே பிரதானம்,’ என்ற உணர்வில் தவறாமல் கண்ணீர் பெருகிவிடும். ‘கடவுளே, எத்தனை விதமான இசைமரபுகள், அத்தனையும் சத்தியமான அழகுபொங்கும் இறைவடிவங்கள் அல்லவோ,’ என்று மயிர்க் கூச்செடுக்கும்.
உணர்ச்சியும், வாழ்வில் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்ட மேதையான ஒரு இளம் இசைக்கலைஞன், தனக்காகவே எழுதிக்கொண்ட இறுதி இசை வழிபாடு, ஆரம்பித்த உடன் எல்லாரையும் ஒரு அழுத்தமான துயரவலையில் மூடிப்பொதிந்து கொண்டது. ஒரு பகுதி முடிந்து இன்னொரு பகுதி ஆரம்பிப்பதற்குமான இடைப்பட்ட சிறு நொடிகளில் கூட ஒரு சப்தமுமில்லை. ஒரு மோனத்தில் மூழ்கிய வண்ணம் அனைவரும் மோட்ஸார்ட்டிற்கு மானசீகமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 50 நிமிஷங்களின் பின் இசை முற்றுப்பெற்றதும் இதயங்கள் கனத்து இருந்ததால் ஒரு கைதட்டல் ஒலியும் இல்லை. இது இலவச நிகழ்ச்சியாதலால், உண்டியல் ஒன்றை ‘சர்ச்’சைச் சேர்ந்த சிலர் கொண்டு வர, எல்லாரும் அதில் தங்களால் இயன்றதைப் போட்டோம். பத்தும், இருபதுமாகத்தான்! மோட்ஸார்ட் இறந்தபோது இப்படிச் செய்திருந்தால் அந்த மேதைக் கலைஞனுக்குரிய கடைசி மரியாதையை நன்றாகச் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் அப்பொழுது ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
————————————————————————
ஹிந்துஸ்தானி இசை – இதில் ஈடிணையற்றதொரு அற்புதம் ஒளிந்திருப்பது அதனை ஆழ்ந்து கேட்கத் தொடங்கியபோதுதான் மனதில் உறைத்தது. இதில் துருபத் இசை (Dhrupad) என ஒரு வகை – மிக மிகப் பழமையானது. இதன் விளக்கத்தைக் கேட்டபோது புல்லரித்தது. இந்துக்களின் வழிபாட்டிற்கெனவே சாமவேதத்திலிருந்து பிறந்த இந்த இசை வகை ஏற்படுத்தப்பட்டது. இந்துக்களால் பாடப்பெற்ற இந்த துருபத் பாணி இசையானது, பின்பு இஸ்லாமியர்களான டகர் (Dagar) குடும்பத்தோரால் கிட்டத்தட்ட 20 தலைமுறைகளாகப் பாடப்பட்டு வருகிறது. இங்கு இந்த இசையைப் பற்றி விளக்கப் போவதில்லை. இந்த இசை என்னுள் ஏற்படுத்திய அற்புதமான அனுபவத்தை மட்டுமே விளக்க முயல்கிறேன்.
டகர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இசைவல்லுனரான உஸ்தாத் நஸீர் அமினுத்தின் டகரின் ஒரு இசைப்பதிவை முதன்முதலில் கேட்டதும் சிந்தையும் மனமும் அப்படியே இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்துவிட்டது. பாடலும், காலை நேரத்திற்கேயான ‘பைரவ்’ எனும் ராகமும் (பாடல் வரிகள், சொற்களுக்கு ஹிந்துஸ்தானி இசையில் பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை என்பார்கள்; ராகம், ஆலாபனை, பாடும் முறையே பிரதானம்) ‘சிவே ஆதி மத அந்த’ எனும் சிலவேயான சொற்களும் அருமையிலும் அருமை. முழுமுதற் கடவுளான சிவன் ஆதியும் அந்தமும் ஆனவன் எனவும் பொருள் கொள்ளலாம். துருபத் முறை இசையில் ஒவ்வொரு ஸ்வரமாக ராகத்தை விஸ்தரித்துக் கொண்டுபோகும் விதம் தனித்தன்மை வாய்ந்தது. பைரவ் எனப்படும் ராகமே முதலில் சிவபெருமானால் புனையப்பட்டது எனவும் கூறுவார்கள். சிந்தையை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை துருபதின் ஆலாபனை நுட்பங்கள். அதிகாலையில் இந்தப் பதிவைக் கேட்டால் உடலெல்லாம் சிலிர்க்கும். புளகாங்கிதம் நிறையும். யூ ட்யூபில் உள்ளது இந்த பதிவு. ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். அந்த நாட்களில் இந்த இசைப்பதிவை யாரிடமிருந்தோ பெற்றுப் பதிவு செய்து வைத்துக்கொண்டு காஸட் தேயும்வரை திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு.
இப்போதும்கூட இதை எழுதுவதற்காகவே அதனை கேட்கின்றேன். ஆனால் எழுத்து நின்று விட்டது. வேறு வேலை ஒன்றும் செய்ய இயலாதவொரு மோனநிலையில் என்னை ஆழ்த்திவிட்டது இவ்விசை.
தெள்ளத்தெளிவாக ஒரு கருத்து துலங்குகிறது: ஒரு இசைஞன் இசையை இசைப்பதில்லை. ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்து எழும் இசையாகவே அவன் மாறிவிடுகின்றான்; எப்போது மாறிவிடுகிறானோ அப்போதே அவனுக்கு முக்தி சித்திக்கின்றது. பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் பீம்ஸேன் ஜோஷி, பண்டிட் குமார் காந்தர்வா, இன்னும் பலரின் இசையைக் கேட்டால் இது எவ்வளவு பெரிய தவம் என்று புரியும்.
————————————————————————–
இனி நமது தென்னிந்திய இசைக்கு வரலாம் – தியாகராஜ சுவாமிகள் பாடிவைத்தபடி எத்தனையோ மஹான்கள்; அமிர்ததாரையாகப் பொழியும் பாடல்கள், ராகங்கள், பாடகர்கள். அன்றிலிருந்து இன்றுவரை இசைவானில் ஜ்வலிக்கும் தாரகைகள்- யாரைப் பற்றி எழுதி முடியும்?
ஒரேயொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தியாகராஜ ஆராதனை என்று ஆண்டுதோறும் திருவையாற்றில் நடக்கும். அதில் பங்கேற்று, பஞ்சரத்னம் பாடுவது ஒரு தனியான தேவானுபவம்.
‘தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்’ எனும் வள்ளலாரின் கூற்றுக்கிணங்க, பாடும் எவரும் பெரிய இசை வல்லுனராகவே இருக்கத் தேவையில்லை. ‘ஜகதானந்தகாரகா,’ என நாட்டை ராகத்தில் சீனியர் வித்வான்கள் தொடங்கிவைக்க, ஆயிரம் ஆயிரம் குரல்கள் இணைந்து அஞ்சலி செலுத்தும் அந்த நேரத்தில் உடலில் ஒரு புது சக்தி புகுந்து கொள்ளும்.
பந்தலுக்கு வெளியே நின்றுகொண்டு பாடினாலும், ஒரு மஹானுக்கு அஞ்சலி செலுத்தும் பேரார்வத்தில் ‘நாம்’ என்பதே மறந்தும் போகும். ஸ்வரங்களும் சாஹித்யங்களுமாக அந்த இறைமை நம்மைச் சூழ்ந்து அரவணைக்கும். கண்ணீர் ஆறாகப் பெருகியோடக் குரல் தழதழக்கும். நாம் பிறவி எடுத்ததே இந்த அனுபவத்திற்குத்தானே என ஒரு எண்ணம் தோன்றும். நாமே பஞ்சரத்தினங்களாக மாறி உடல், குரல், நேரம், காலம் எனும் பிரக்ஞை துளிக்கூட இன்றி மாறிவிடலாம்.
இந்த அசாத்தியமான நிகழ்வு- ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்ட தினத்தில், நேரத்தில் கூடிப் பாடி ஒரு மஹானுக்கு அஞ்சலி செலுத்துவதென்பது உலகிலேயே இங்குதான் நிகழ்கிறது.
——————————————————————
தாகூரின் கவிதையைப் படித்து ரசித்தபோது இவையெல்லாம் சிந்தையில் காட்சிகளாக கருத்துக்களாக எழுந்தன. இந்தக் கவிதையின் சாராம்சத்தை ஒவ்வொரு நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தாலும் அருமையாக உள்ளது.
என்ன ஆச்சரியம்! இது நமது சென்னையில் சங்கீதத்திற்கென்றே ஒதுக்கப்பட்ட காலகட்டம்!
ஜனவரியில் பகுளபஞ்சமியன்று தியாகராஜ ஆராதனையும் திருவையாற்றில் நடைபெறும்.
வாசகர்களுடன் என் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
———————————————————————
திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களுடைய
மேற்கண்ட படைப்பு / பகிர்வு அவர்களுடைய
ஆழ்ந்து இரசிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதுடன், நம்மிடமும் அதே தன்மையை நாம் அறியாமலே உருவாக்க வல்லதாக அமையப்பெற்றுள்ளதை, நான் மிகவும் பாராட்டி மகிழ்கிறேன்.
LikeLike
அன்புக்கு உரிய எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அவர்களுக்கு
குவிகம் ஜனவரி மின்னிதழில் நாதாந்தம்..
என்ன ஓர் எழுத்து நடை அது….ஆஹா, செவியில் நுழைந்து இதயம் நனைந்து உயிரில் கலந்த உறவாக இசையை அனுபவித்துத் தாம் இன்புற்றது உலகு இன்புற எழுதுகிறீர்கள்..
நாத இன்பம், நாத வடிவில் இறையை தரிசித்தல், காதலாகிக் கசிந்து தாரை தாரையாகக் கண்ணீர் மல்கி நிற்றல் என்ற ஒரு மரபில் வார்த்துள்ள கட்டுரை. வாழ்த்தும் அன்பும்!
இறை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டும் உருகி வாசிக்க வைக்கும் அபார எழுத்து! குவிகம் ஆசிரியர் குழு அன்பர்களுக்கு வணக்கங்களும் நன்றியும்.
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike