“பட்டம் விடலாமா பாமா பட்டம் விடலாமா
ஆகாயத்தில் அழகாய்ப் பறக்கும் பட்டம் விடலாமா …..
ஆடிக்காற்று அடிக்குது பாரு பட்டம் விடலாமா ……
உயர உயர உயரப் போகும் பட்டம் விடலாமா’
குவிக்கத்தில் எழுதியுள்ள ஜி பி சதுர்புஜன் அவர்களின் பாட்டு மனத்தில் ரீங்காரித்துக் கொண்டிருந்த போது நான் வாசலில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
குழந்தைகளின் விளையாட்டு எத்தனை எத்தனை! வீட்டிற்குள்ளே, வெளியே என்று! அலுப்பதேயில்லை, எனர்ஜியும் குறைவதில்லை. ஆனாலும் பட்டத்தின் மீதுள்ள மோகம் மட்டும் குறைவதில்லை. எத்தனை எத்தனை நிறங்கள், எத்தனை எத்தனை வடிவங்கள், அதுவும் மொட்டை மாடியில் அல்லது திறந்த வெளியில் காற்றில் அது பறக்கும்போது அவர்களது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நம் மனதும் சந்தோஷத்தில் துள்ளுகிறது. இதை யாரால் மறுக்க முடியும்!
பக்கத்து வீட்டில் ஒரு சிறிய குடும்பம். ஆண்டவன் அந்தக் குடும்பத்தை மிகவும் அளவாக செய்வதற்காக தாயைப் பிரித்துவிட்டான். பாவம் தாயில்லாப் பிள்ளைகள். அதனால் அவர்களது பாட்டி அம்புஜம் பெண் சரசுவையும், பையன் ஆனந்தையும் பார்த்துக் கொள்வதற்காக கிராமத்திலிருந்து வந்துள்ளாள். அடுப்புப் புகையா இல்லை தன் பெண்ணை நினைத்தா இல்லை தாயில்லாத இந்தக் குழந்தைகளை நினைத்தா என்று தெரியவில்லை கண்ணைக் கசக்கிக்கொண்டே சமையல் செய்வாள். சின்ன சின்னக் கதைகளைச் சொல்லி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாள். சரசு எப்போதும் அம்மா எங்கே, அம்மா எங்கே என்று கேட்டுக் கொண்டேயிருப்பாள். அன்றும் நிலாக் கதையைச் சொல்லி சோறு ஊட்டி விட்டு முத்தாய்ப்பாக கடைசியில் ‘அந்த நிலவிலிருந்து அம்மா உங்களையேப் பார்த்துக் கொண்டிருப்பாள் ஆதலால் நீங்கள் சமர்த்தாகச் சாப்பிட வேண்டும்’ என்று முடித்தாள். உடனே சரசு ‘அம்மாவிடம் செல்ல முடியுமா’ என்று ஆசையாக வினவினாள். ‘நிலவு மிகவும் தூரத்தில் இருக்கிறது. அது முடியாதே, நீங்கள் போய் விளையாடுங்கள்’ என்று பதில் அளித்தாலும் அம்புஜத்தால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
விளையாடி விட்டு வந்த சரசுவும், ஆனந்தும் வீட்டிற்குள் நுழையும்போதே சிரிக்கும் குரல் கேட்டு ‘ஆஹா, நம் சுந்தரம் மாமா வந்துள்ளார்’ என்று குதூகலப்பட்டனர். உள்ளே வந்த அவர்கள் இருவரையும் கட்டி அணைத்து இனிப்புகளை வழங்கினார் சுந்தரம். அவர் கொண்டு வந்த விளையாட்டு சாமான்களையும், புத்தகங்களையும் பார்த்து இருவரும் ஆவலுடன் அவற்றை ஆராயத் தொடங்கினர்.
‘பாட்டி, மாமா எப்படி டில்லியிலிருந்து வந்தார்’ என்று சரசு ஆவலுடன் வினவினாள். அதற்கு அம்புஜம் ‘உங்களுக்கு லீவு வருகிறதே, எங்கேயாவது இவர்களை அழைத்துக் கொண்டு போ’ என்று நான்தான் லெட்டர் எழுதி இவரை வரவழைத்தேன்’ என்றாள் அம்புஜம். ‘ஓ அப்படியா, மாமா நாங்கள் பட்டம் விடுகிறோம், பார்க்க வாருங்கள். என்றனர். ‘ஆஹா பட்டமா, நான் வெகு தூரம் வானத்தில் பறக்க விடுவேன்’ என்று கூறி மேலும் ‘நான் விடும் பட்டம் நிலவைக் கூட தொட்டு விடும்’ என்று அட்டகாசமாகச் சிரித்தார். சரசுவும் ஆனந்தும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே ‘நிஜமாகவா மாமா எங்களுக்கும் அப்படி பட்டம் விட சொல்லித் தாருங்கள், எங்களுடைய பட்டமும் நிலவைத் தொடுமா ,நிஜமாகவா, இருங்கள் நாங்கள் போய் பட்டத்தை எடுத்து வருகிறோம்’ என்று குதித்துக் கொண்டே உள்ளே சென்றனர்.
சரசுவும் ஆனந்தும் ஒரு பெரிய பட்டத்தைத் தூக்கி வந்தனர். அதில் ஒரு சிறிய பேப்பரும் ஒட்டி இருந்ததைக் கவனித்த சுந்தரமும், அம்புஜமும் அது என்னவென்று ஆவலுடன் பார்த்தனர். அதில் ‘அம்மா எங்களைப் பார்க்க கீழே இறங்கி வருவாயா’ என்று எழுதி இருந்தது.
நிலவில் அம்மா இருக்கிறாள் என்று அம்புஜம் சொன்னதையும், லெட்டர் எழுதி டில்லியிலுள்ள மாமாவை பாட்டி வரவழைத்ததையும், தான் விடும் பட்டம் நிலவைத் தொடும் என்று சுந்தரம் சொன்னதையும் இணைத்த குழந்தைகள் அறிவிலிகள் அல்ல; அறிவு ஜீவிகள் என்பதில் சந்தேகமில்லை!