புத்தாண்டு வரவைக் கொண்ட்டாட நண்பர்கள் மூவர் குடும்பத்தோடு ஒரு நண்பன் வீட்டில் கூடியிருந்தோம்.
மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
டின்னர் சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்துக் கொண்டி- ருந்தோம்.
சின்னத்திரை ஒரு சானலில் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகள் நேரலையாக வந்து கொண்டிருந்தது.
மணி பன்னிரண்டு. ‘ஹாப்பி நியூ இயர்’ என்று சின்னத் திரை முழங்கியது. ஒவ்வொரு சீரியல் நடிகர்களும். நடிகைகளும் முன்னே வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்மா.. ஆவி வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லித்து’ என்று சொன்னது ஒரு குழந்தை சத்தமாக. எங்கள் எல்லோர் பார்வையும் டி.வி. பக்கம் திரும்பியது.
வாழ்த்து சொல்லி விட்டு. ஒரு பக்கமாகச் சென்று நின்ற அந்த நடிகையைக் காட்டி, ‘ அம்மா அந்த ஆன்டி இன்னிக்கு ராத்திரி சீரியல்லே ரோடு ஆக்ஸிடன்டாகி செத்துப் போயிட்டாங்க.. இப்போ அவங்க ஆவி வந்து ஹாப்பி நியூ இயர் சொல்லுது’ என்றாளே பார்க்கலாம்..
அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் விக்கித்துப் போய் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லக் கூட மறந்து போய் நின்றோம்.