கைகள் ஒன்றோடொன்று உறவாடி, கண்கள் ஒன்றையொன்று நோக்குகின்றன. நமது இதயத்தின் பதிவுகள் இவ்வாறே தொடங்குகின்றன.
இது வசந்தகாலத்தின் நிலவு பொழியும் இரவு; மருதாணியின் இனிய வாசம் காற்றில் பரவுகின்றது; எனது புல்லாங்குழல் இசைக்கப்படாமலும், நீ தொடுக்கும் மலர்மாலை முடிக்கப்படாமலும் தரையில் கிடக்கின்றன.
குங்குமப்பூ நிறத்திலான உனது முகத்திரை எனது கண்களை போதையிலாழ்த்துகிறது.
நீ எனக்காகத் தொடுத்த மல்லிகைமாலை எனது இதயத்தைப் புகழ்ச்சியில் திளைக்கவைக்கிறது.
இது கொடுப்பதும் கொடுக்காததுமான விளையாட்டு; காட்டியும், வெளியிட்டும் விளையாடுவது; சில புன்னகைகள், சில சிறிய நாணங்கள்; சில பயனற்ற தடுமாற்றங்கள்.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
***
நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை. முடியாததை அடைய முயலுவதில்லை! இனிமையின் பின் நிழல்களில்லை; இருளில் ஆழத் துழாவுவதில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
***
சொற்களற்ற அமைதிக்குள் சென்று நாம் தடுமாறுவதில்லை; நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதொரு வெளியில் நாம் கைகளை உயர்த்தித் தேடுவதில்லை.
நாம் கொடுப்பதும் பெறுவதும் நமக்குப் போதும்.
நாம் வலியின் மதுவை அருந்துவதற்காக மகிழ்ச்சியை எல்லையில்லாமல் கசக்கிப் பிழியவில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
(தாகூர்- தோட்டக்காரன்- கவிதை 16)
———————————-
காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு. தாகூரின் இந்தப் பாடல்கள் அந்த இனிமையான காதலைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.
எவ்வளவு உண்மை என்று ஏதாவது ஒரு நிகழ்வுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பளிச்சென்று புரியும்.
இது காதலர் தினம் தொடர்பான கட்டுரை / கதை! எனக்கு நினைவுதெரிந்து நான் அறிந்துகொண்ட நிறைவேறாத காதல்கள் சில, ஆண்டுதோறும் இந்ததினத்தில் நினைவுக்கு வந்து மனத்தை வருத்துவதுண்டு. தாகூரின் இந்தக்கவிதை விசாலத்தையும் சுந்தரேசனையும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைக்கு!
கேரளாவில் எங்கள் பெரியப்பா வாழ்ந்த ஏதோ ஒரு சிற்றூர். அங்கு விசாலம் மிகவும் ஏழைக் குடும்பத்துப்பெண். பெரிய அழகியாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காந்த அழகு இருந்தது அவளிடம். இந்த மாதிரிக் குடும்பங்களில் தகப்பனார் இல்லாமல் இருப்பதுதானே வழக்கம்? இங்கும் அதுவே நிஜம்! ஊரின் சின்னக் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விளக்குக்கு எண்ணெய் போடுவதிலும், வேண்டும் வீடுகளுக்குச் சென்று சமையலில் ஒத்தாசை செய்வதிலும், மாலைப் பொழுதுகளில் ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி மகிழ்வதிலும் அவள் நாட்கள் கழிந்தன. ஏதோ இருந்த அற்ப சொத்தை வைத்துக்கொண்டு காலட்சேபம் நடந்தது.
டாக்டர் சுந்தரேசன் அந்தச் சின்ன ஊருக்கு டாக்டர். உடன் சாதுவான அம்மாவும், ஹைஸ்கூல் வாத்தியாராக இருந்து ரிடையரான அப்பாவும் இருந்தார்கள். எப்போதோ ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாத அம்மாவைக் கூட்டிக்கொண்டுவந்த விசாலத்திடம் சுந்தரேசனுக்கு ஈடுபாடு உண்டாயிற்று. நாளாக ஆக அவளுக்கும் அது புரிந்தது. ஆனால் அது எங்கும் போய் முடியப்போவதில்லை என்று இருவருக்கும் தெரியும். சாதுவான, வெகுளியான, அன்பான, கலகலப்பான அந்தப் பெண்ணிடம் பரிவாகத் தொடங்கிய ஈர்ப்பு காதலாக வளர்ந்தது. அந்த ஊரைப் பொறுத்தவரை காதல் கெட்டவார்த்தை! அதுவும் விசாலம் காதலில் விழலாமா?
ஒருநாள் ஆற்றங்கரையில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தவன், “விசாலீ, எத்தனை நாள் பேசாமல் இருப்பது? உங்கள் அம்மாவிடம் வந்து பேச என் அப்பா அம்மாவை அனுப்பட்டுமா?” என்று கேட்டான்.
“நடக்காத விஷயம் டாக்டர். யாரும் நம் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை,” விசாலம் உறுதியாகச் சொன்னாள். கோவிலுக்குக் கொண்டுபோவதற்காக தொடுத்துக்கொண்டிருந்த மாலை பாதியில் நின்று விட்டிருந்தது.
“சர்வ நிச்சயமா எப்படிச் சொல்லுகிறாய் விசாலம்? நாம் திருமணம் செய்து கொள்வதில் உனக்கு விருப்பமில்லையா?”
மெல்ல விரியும் பூப்போல அவள் முகத்தில் லேசான புன்னகை. “நான் அப்படிச் சொல்லலையே! எப்படி முடியும் டாக்டர்? நீங்களே யோசித்துப் பாருங்கோ! ஏதோ ஒரு சமயத்தில் இரண்டுபேரும் இஷ்டப்பட்டுட்டோம். தப்புத்தண்டா ஒண்ணும் நடக்கலையே! அதுவரைக்கும் நிம்மதி!” மலையாளம் கலந்த தமிழில் அவள் பேசுவதே ஒரு அழகு.
“நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறப்போ எங்களுக்கு கீட்ஸோட ‘ஓட் ஆன் அ க்ரீஷியன் அர்ன்’ (Ode on a Grecian Urn) பாடமா இருந்துது. அதில அழகா ரெண்டு வரி இருக்கும் பாருங்கோ! கேட்ட ராகங்கள் இனிமையானவை; ஆனால் கேட்காத ராகங்கள் இன்னுமே அழகானவை, இனிமையானவை, என்பான் கீட்ஸ். (Heard melodies are sweet, but those unheard are sweeter than those) அதுமாதிரித்தான் இது,” என்றாள் விசாலம். அந்த வறுமையிலேயும் இன்டர் படித்து முடித்திருந்தாள் அவள். பேச்சில் புத்திசாலித்தனம், பெரிய மனுஷித்தனம் எல்லாம் பளிச்சிட்டது.
அவளையே பார்த்தான் சுந்தரேசன். சொன்ன வரிகளின் உள்ளர்த்தம் புரிந்தது அவனுக்கு.
“குளிர் காலம் வந்தால் வசந்தகாலம் இன்னும் ரொம்பத் தொலைவில்லையே என்று நீ படித்ததில்லையா?” (For if winter comes, can spring be far behind?)
“எனக்கு பதில் சொல்லத் தெரியலை டாக்டர்,” என்றாள் விசாலி.
விசாலியும் சுந்தரேசனும் கடைசிவரை ஒருவரை ஒருவரோ வேறு எவரையுமோ திருமணம் செய்துகொள்ளவேயில்லை. நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஊரும் வாய்க்கு வந்தபடி பேசி ஓய்ந்தும் போயிற்று.
விசாலி காலமானபோது சுந்தரேசன் தான் அந்திமக்கிரியைகள் செய்தாராம்.
எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஒருமுறை ஊருக்குப் போனபோது சுந்தரேசன் மாமாவே இதைச் சொன்னார்.
வயதும், அறிவு முதிர்ச்சியும், உரிமையும் தந்த தைரியத்தில் அவரைக் கேட்டேன்: “ஏன் மாமா நீங்கள் அவாளைக் கல்யாணம் செய்துக்கலே? என்ன தயக்கம் உங்களுக்கிடையிலே?”
“பாஸ்கர்! உனக்கு இப்போப் புரியும். விசாலம் ஒரு பால்ய விதவை. விவரம் புரியாத எட்டு வயசிலே கல்யாணம் பண்ணிவைத்து, அவள் பெரியவளாகி காதல், வாழ்க்கை எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாலேயே அவன் புருஷன் பெரிய வியாதிவந்து போயிட்டான். இவளுக்கு மேலே படிக்கவும் வழியில்லே. நாங்கள் மட்டும் விருப்பப்பட்டு என்ன பிரயோசனம்? அந்தமாதிரி கல்யாணங்களை யாரும் அந்தக் காலத்தில் ஒத்துக் கொண்டதேயில்லை. நண்பர்களாகவே இருந்து விட்டோம். என்னால முடிஞ்சது அவளை நல்லபடியா வழியனுப்பி வைக்கிறதுதான். அதனைத் தடுக்க என் அப்பா அம்மாவோ, அவளோட அம்மாவோ இருக்கலை அல்லவா? ஊர் பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சு. இதொண்ணுதான் மிச்சம். யாரைப் பற்றியும் கவலைப்படற நிலையை நானும் தாண்டியாயிற்று,” என்று சிரித்தார் மாமா. கண்களின் ஓரம் இரு நீர்த்துளிகளைப் பார்த்தேனோ?
தாகூரின் கவிதையின் சில வரிகளை இங்கு திரும்ப ஒரு உயிர் அனுபவமாக உணர்ந்தேன். இதயம் கனத்து வழிந்தது. சுந்தரேசன் மாமா விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார். நான் மெல்ல எழுந்து வெளியே வந்தேன். அந்த வீட்டின் மகிழமரத்தடியே நின்று அந்த வரிகளை அசைபோட்டுச் சிலிர்த்தேன்.
ஒரு வாழ்க்கை கவிதையாயிற்றா? அல்லது கவிதைகள் தான் வாழ்க்கையை உணர்த்துகின்றனவா?
நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை.
இயலாததை அடைய நாம் முயலுவதில்லை!
இனிமையின் பின் நிழல்களில்லை;
இருளில் ஆழத் துழாவுவதில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.