வீசாவும் வினய ஆஞ்சனேயரும்!
திரேதா யுகத்திலேயே வானில் பறந்தவர் ஆஞ்சனேயர் – பாஸ்போர்ட், வீசா ஏதுமின்றி இலங்கைக்குள் வான் வழி சென்றவர்!
நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் புஷ்பக விமானம் இராமாயணத்தில் பேசப்படுகிறது – தேவ தச்சரான விஸ்வகர்மாவினால் செயப்பட்டது. குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை, இராவணன் அபகரித்ததாகவும், அதில்தான் சீதையை மண்ணோடு பெயர்த்துக் கவர்ந்து சென்றதாகவும் புராணம் சொல்கிறது! இராவண வதத்திற்குப் பிறகு, விபீஷணன் புஷ்பக விமானம் பற்றி இராமனிடம், “வெள்ளை நிற மேகத்தின் நிறமுடையதும், சூரிய ஒளியில் மின்னுவதும், பாதுகாப்பானதும், அதி விரைவாகச் செல்லக்கூடியதும் (இலங்கையிலிருந்து ஒரே நாளில் அயோத்தியில் சேர்த்துவிடுமாம்!), நினைத்த மாத்திரத்தில் பறக்கக் கூடியதுமானது” என்று சொல்கிறான் என்று வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இன்றைய அதிவிரைவான விமானங்களுடன் ஒத்துப் போகின்ற விவரணைகள் நம்மை வியக்கத்தான் வைக்கின்றன! இராவணன் கடத்திய அதே விமானத்தில், சீதாதேவியை மீட்டு அழைத்து வருகிறார் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி!
எல்லாம் சரி, பாஸ்போர்ட் விசா பிரச்சனைகள் இல்லாத தெய்வப் பிறவிகளா நாம்? சமீபத்தில் கனடா செல்ல விசா கிடைப்பதில் சிறிய சிக்கல் – ஒருவரின் பாஸ்போர்ட் காலாவதியாவதுடன் (expiry க்கு சரியான தமிழ்தானே?), அவரது கனடா விசாவும் முடங்கிவிடுகிறது – மீண்டும் முதலிலிருந்து விண்ணப்பிக்க வேண்டும்! யூ எஸ் போன்ற நாடுகளின் விசா, பாஸ்போர்ட் ஆயுளையும் தாண்டி, அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்!
என் பாஸ்போர்ட் புதுப்பித்த போது, கனடா விசாவுக்கு விண்ணப்பித்தேன் – ‘பயோமெட்ரிக்ஸ்’ என்னும் கைரேகைப் பதிவுக்கும் சென்று வந்தேன். இனி அவர்கள் என் பாஸ்போர்ட்டை வரவழைத்து, அதில் கனடா விசாவுக்கான ஸ்டாம்ப் (முத்திரை) பதிக்க வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறேன் ……
இதற்குள், கொரோனா பேண்டமிக் எல்லாவற்றையும் போல் கனடா இமிக்ரேஷனையும் முடக்கி வைத்தது – எனக்கு விசா எப்போது வரும் என்று தெரியவில்லை! அதற்குள், குடும்ப சுழல் காரணமாக எனக்கு யூஎஸ் மற்றும் கனடா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட… ஈமெயில், போன் கால்கள், கடிதங்கள், விசாரிப்புகள் எல்லாம் கிணற்றிலிட்ட கல்!
பூவிருந்தவல்லி தாண்டி, பெரிய ‘மோட்டல்’ எதிரே வடக்கே திருப்பதி நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டு கிமீ பயணித்தால் வருவது திருமேழிசை. ஊரைப்பற்றியும், திருமேழிசை ஆழ்வார் பற்றியும், அமர்ந்த கோலத்தில் உள்ள ஜெகன்னாத பெருமாள் தல வரலாறு பற்றியும், அவரது கட்டை விரலில் உள்ள ‘கண்’ பற்றியும் பேச ஆரம்பித்தால், கனடாவிற்கு நடந்தே போனால் ஆகும் நேரமாகிவிடும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன் (மற்றொரு வியாசத்தில் முயற்சிக்கலாம்!).
‘மஹீசார க்ஷேத்ரம்’ – துவாபர யுகத்தில் பூலோகம் முழுவதையும் ஒரு பக்கத்திலும், மறு பக்கத்தில் திருமேழிசையையும் வைத்தால், திருமேழிசை ஒரு நெல்மணி அளவு (? 1 கிராம்) எடை கூடுதலாக இருக்கும் பெருமை உடையதாம்! ஒரு சமயம் பிரம்மாவுக்கு, திருப்பதி வேங்கடேசப் பெருமாள், இந்த ஊரில் உட்கார்ந்த கோலத்தில் தரிசனம் கொடுத்ததாக ஒரு புராண வரலாறு கூறுகிறது, பெரும்பாலும் மஹா விஷ்ணு நின்ற கோலத்திலும் (திருப்பதி), கிடந்த கோலத்திலும் (ஶ்ரீரங்கம்) அருள்பாலிப்பது வழக்கம். ஶ்ரீதேவி, பூதேவி இருபுறமும் இருக்க, உட்கார்ந்திருக்கும் கோலத்தில் மூலவர் இருக்கும் இந்தக் கோயில் (ஜெகன்னாத பெருமாள் கோயில் அல்ல) ஶ்ரீவீற்றிருந்த பெருமாள் தெவஸ்தானத்தைச் சேர்ந்தது. கிரீடத்தில் நான்கு லட்சுமிகளையும் சேர்த்து, அஷ்ட லட்சுமிகளுடன் அருள்பாலிக்கும் பெருமாள் “வீற்றிருந்த பெருமாள்” – தூய்மையாகவும், அமைதியாகவும், ஆளுயர உண்டிகளில்லாமலும் உள்ள இந்தக் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப் படுகிறது – ஶ்ரீசெண்பகவல்லித் தாயார், ஆண்டாள், லக்ஷ்மி நரசிம்மர், வரதராஜப் பெருமாள், ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள முனிகள், திருமேழிசை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார் சன்னதிகளும் உண்டு – இவர்களுடன் ஶ்ரீ வினய ஆஞ்சனேய ஸ்வாமி – விசா ஆஞ்சனேயர் – சன்னதியும் இருக்கிறது!
ஶ்ரீவினய ஆஞ்சனேயர் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்; வராஹமுக ஆஞ்சனேயர்; வரப்ரசாதி; புதிதாகக் கட்டப்பட்டுள்ள சன்னதியில் அருள் பாலிக்கும் இவர் கடன் தொல்லைகளையும், விஷ ஜுரம், ஜுர ரோஹம் போன்றவைகளையும் தீர்த்து வைப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது – “வைத்தியருக்கெல்லாம் வைத்தியர்” என்றும் போற்றப் படுகிறார்! திருமணமாகாத பெண்கள் ஆறுவாரம் பிரார்த்தனை செய்தால் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் உண்டு! இவரை வழிபட்டால், வெளி நாடுகளுக்கு வீசா கிடைப்பதில் உள்ள தடங்கல்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது – வீசா ஆஞ்சனேயர்!
மூன்று முறை மறுத்த யூஎஸ் விசா என் நெருங்கிய உறவினருக்கு, இங்கு வந்து சென்றபின் உடனே கிடைத்தது என்பதையும், தூரத்து உறவினர் ஒருவருக்கு, இங்கு வந்து சென்றபின் ஆஸ்திரேலியா விசா எதிர்பாராமல் விரைவில் கிடைத்தது என்பதையும் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்!
என் கனடா வீசாவுக்காக திருமேழிசையும் சென்று வந்தேன். வீசா வேண்டாத போதும், வீற்றிருந்த பெருமாளையும், வினய ஆஞ்சனேயரையும் பல முறை சேவித்திருக்கிறேன் – டயமண்ட் கல்கண்டு, புளியோரை, துத்தியொன்னம்,அக்காரவடிசில் போன்ற பிரசாதங்கள் கிடைக்கும் – பிரசாதமாக, விற்பனைக்கல்ல! நம்மாலாகாத ஒரு காரியத்துக்கு, யாரையாவது நம்பித்தானே ஆகவேண்டும்!
முன்பே வாங்கியிருந்த யூஎஸ் விமான டிக்கட், மாற்ற முடியாத நிலையில் (மீண்டும் மாற்றினால் ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் மேல் இழக்க வேண்டி வரும்!), கனடா விசா வராத நிலையில் யூஎஸ் வந்துவிட்டேன்.
ஒரே குழப்பம் – விசா ஸ்டாம்ப் பதிக்க பாஸ்போர்ட்டை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது இங்கேயே யூ எஸ் ல் வாங்கிகொள்ளலாமா? நேரில் கனடா இமிக்ரேஷன் போக வேண்டுமா? இந்தியாவுக்குத் திரும்பி வந்து விசா வாங்க வேண்டுமா?
கடைசியாக, விசா கொடுக்க, கனடா என்பசியிலிருந்து அழைப்பு வந்துவிட்டது! இங்கேயே யூ எஸ் லேயே ஸ்டாம்ப் பதிக்கலாம் என்றும் வந்து விட்டது!
பாஸ்போர்ட் அனுப்பிவிட்டு, விசாவுடன் திரும்பி வரும்வரை, ஶ்ரீவினய ஆஞ்சனேயரை – விசா ஆஞ்சனேயரை – நினைத்துக்கொண்டு இருப்பது மட்டும்தான் செய்ய முடியும்!