அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பவானி தன் மகள் தாரிணி கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு மாறி மாறி சேனல்களை மாற்றுவதை பார்த்தாள்.
“என்ன தாரிணி, இன்னிக்கு சீக்கிரமே காலேஜ் முடிஞ்சுதா ? வழக்கமா 6 மணிக்குத்தானே வருவ ? இன்னிக்கு அஞ்சரை மணிக்கே வந்துட்ட போல இருக்கே ?”
“ஆமாம் அம்மா…. இன்னிக்கு லாஸ்ட் அவர் செமினார் சீக்கிரம் முடிஞ்சது…. அதனால உடனே புறப்பட்டு வந்துட்டேன் ….. ஒரு டென்னிஸ் மேட்ச் பாக்கணும் அதான்…” என்று இழுத்தாள்.
“சரி சரி நான் போயிட்டு வரேன்..’ என்று உள்ளே கிச்சனுக்குள் நுழைந்தாள் பவானி.
தாரணி ஒரு ஸ்போர்ட்ஸ் பைத்தியம். கல்லூரியில் எல்லா விளையாட்டுகளிலும் அவள் பங்கெடுத்து கப்பும் வாங்கி வருவாள். இப்போது அவள் கவனம் முழுக்க டென்னிஸ்தான். காலை மாலை என எப்போதும் ப்ராக்டீஸ்தான். அவள் கணவரும் அவளை ஒரு டென்னிஸ் அகாடமியில் சேர்த்துவிட்டு அவளை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்.
பவானியின் மாமியார் அந்தக் கால மனுஷி….இதெல்லாம் பெண் குழந்தைக்குத் தேவையா…. என அவ்வப்போது பவானிடம் புலம்பித் தள்ளுவாள்.
பவானியின் கவனம் தன் இளமைக் காலத்துக்குச் சென்றது. அவள் ஐந்தாவது படிக்கும் போது கணக்கில் ஐம்பதுக்கு ஐந்து மார்க் வாங்கியிருந்தாள். அதை வீட்டில் காண்பித்தபோது ஏக ரகளை. அப்போதெல்லாம் ஜாயின்ட் ஃபேமிலி. அவள் அப்பா பெரியப்பா சித்தப்பா எல்லோரும் சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு கொலை செய்துவிட்டு வந்தது போல அவளை நார் நாராகக் கிழித்தனர்.
அவளுக்கு இப்போதும் அவர்கள் பேசியது காதில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.. “நல்லா இருக்கு நம்ம ஃபேமிலில?… எல்லாரும் கணக்குல புலி…. நம்ம வீட்ல அத்தன பசங்களும் கணக்குல நூத்துக்கு நூறு மார்க்கு தான் எடுப்பாங்க… ஏன் பவானியோட அக்கா சங்கீதா எப்பவும் நூத்துக்கு நூறு தான்… 99 வாங்கினா கூட ஒரு மார்க் போய்டுச்சேன்னு ஓன்னு அழுவா..
“இது என்னடான்னா 5 மார்க் வாங்கிட்டு வந்து திருட்டு முழி முழிக்குது… கல்லு குண்டா நிக்கறா பாரு…. ஏதாச்சும் வாய தொறந்து சொல்றாளா பாரு…. என்று ஆளாளுக்கு வசனம் வேறு.. இவளுக்கு இப்போதும் அதை நினைத்தால் உடம்பு நடுங்குகிறது.
அவள் ஒன்றும் முட்டாள் இல்லை.. எல்லா சப்ஜெக்ட்லயும் 90 க்கு மேல தான் மார்க் வாங்கினா.. ஆனா இந்த கணக்கு தான் ஒண்ணுமே புரியல.. அவளுக்கு. அதுவும் அந்த அல்ஜீப்ராவும், கால்குலஸும் அவள் பிளஸ் டூ படிக்கும்போது அப்பப்பா….. ஒண்ணுமே புரியல…
அவள் வீட்டில் அவள் அக்கா அவளை விட 8 வயது பெரியவள். கணக்கில் புலி. எப்போது பார்த்தாலும் நூற்றுக்கு நூறு மார்க். அதனால் இவள் பத்தாம் வகுப்பில் கணக்கில் குறைந்த மார்க் வாங்கியும் வலுக்கட்டாயமா ப்ளஸ் டூவில் கணிதம், பொருளாதாரம், வணிகவியல் காம்பினேஷனில் அவளை சேர்த்துவிட்டு, நான் சொல்லித் தரேன் எப்படி கணக்கு வராம போய்டும் என்று சவால் வேறு விட்டாள்.
ஆனால் பவானியும் எல்லா சப்ஜெக்ட்லயும் முதல் மார்க் வாங்கினாள் கணக்கைத் தவிர. கணக்கில் இருநூறுக்கு 70 மார்க் வாங்குவதற்குள் அவள் முழி பிதுங்கி விட்டது.
இப்போது ஐம்பது வயது ஆகிவிட்டது ஆனாலும் தினமும் கணக்கு பரீட்சை எழுதுவது போலவும் அவள் ஃபெயில் ஆகி விடுவது போலவும் கனவு தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. நிறைய நாட்கள் நடுநிசியில் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்து தன்னை சுதாரித்துக் கொள்வாள் பவானி. அவளும் பொருளாதாரம் படித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலையில் சேர்ந்து திருமணமும் ஆகி இப்போ இதோ 17 வயது பெண்ணுக்குத் தாய்.
தன் மகளாவது அவளுக்குப் பிடித்ததைப் படிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அவள் அதிர்ஷ்டம் அவள் கணவன் சந்திரனும் அவளை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் அவளுக்கு வாழ்க்கை சந்தோஷமாகவே அமைந்துவிட்டது. பால் பொங்கி விடவே சட்டென்று நினைவிற்கு வந்தாள்.
தனக்கும், தாரிணிக்கும் டீ போட்டு தன் மகள் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டு டீயை நிதானமாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தாள் பவானி. எல்லாவற்றையும் தன் மகளிடம் பகிர்ந்து கொள்வாள். தாரிணியும் மிகவும் பொறுப்பான பெண். படிப்பு விளையாட்டு இரண்டையும் யாரும் சொல்லாமலேயே அழகாக பேலன்ஸ் பண்ணுவாள். அதில் பவானிக்கு கொஞ்சம் பெருமையும் கூட. வரும் போட்டியில் அவள் கல்லூரியில் முதல் பரிசு வாங்கி விட்டால் அவளுக்கு அடுத்த லெவல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக தாரிணி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பவானியும் சந்திரனும் அவளை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் டென்ஷன் இல்லாமல் தாரிணியால் விளையாட முடிகிறது .டிவியில் டென்னிஸ் மாட்ச் பார்த்து விட்டு தன் ரூமிற்கு சென்று விட்டாள் தாரிணி.
பவானியும் வழக்கம் போல தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அவளுக்கு அவள் அக்கா சங்கீதாவிடமிருந்து ஃபோன் வந்தது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். அடுத்த வாரம் மதுரை சென்று அம்மாவை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் அண்ணா வேறு ஃபோன் செய்து அம்மா உடல்நலம் சரியில்லை நீ வந்து பார்த்து விட்டு போ என்று சொன்னதிலிருந்து அதே நினைப்பு அவளுக்கு.
அவள் அக்கா மதுரையிலேயே இருப்பதால் அடிக்கடி போய் அம்மாவைப் பார்த்து வருகிறாள். இவளும் சந்திரன் வந்தவுடன் டிக்கெட் புக் பண்ணி ஒரு வாரம் ஆபீசுக்கு லீவு போட்டு மதுரை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இரவு 8 மணிக்கு சந்திரன் வீடு திரும்பவே பவானியும் அதை நினைவு படுத்தினாள்.
“பவானி நாளைக்கு நீயே ஆஃபிசிலிருந்து வரும்போது அப்படியே எக்மோரில் இறங்கி டிக்கெட் புக் செய்து விடு…. எனக்கு கொஞ்சம் வேல அதிகம்…. டிரெயின்ல தானே வர… அப்படியே இறங்கி டிக்கெட் வாங்கிவிட்டு அடுத்த ட்ரெயின புடிச்சு வீட்டுக்கு வா ப்ளீஸ்…” என்றான் சந்திரன்.
“ஓகே.. ஓகே… அதுவும் சரிதான்…. நானே வாங்கிட்டு வரேன்” என்று சொன்னாள்.
அடுத்த நாள் வழக்கம்போல காலை நேர அவசரத்தில் எல்லோரும் பிசி. பவானி 9 மணிக்கே கிளம்பி தன் ஸ்கூட்டரை மாம்பலம் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு ட்ரெயினுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். வண்டியும் உடனே வந்து விட வேகமாக பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினாள். அவள் அம்மா படுத்த படுக்கையாகி விட்டதாக அண்ணா சொன்னதிலிருந்து அவளுக்கு எப்போது மதுரை சென்று அம்மாவைப் பார்ப்போம் என்றிருந்தது.
மாலை வழக்கம்போல ட்ரெயின் ஏறி எக்மோரில் இறங்கி டிக்கெட் புக் செய்வதற்காக கியூவில் நின்றாள் பவானி. அப்போது அவளுக்கு முன் ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அசப்பில் அவள் கால்குலஸ் மேடம் சூசன் ஜேக்கப் மாதிரியே இருந்தாள். பவானிக்கு தூக்கிவாரிப் போட்டது. கால்குலஸில் ஃபெயில் ஆகி எத்தனை முறை இந்த சூசன் மேடத்திடம் திட்டு வாங்கியிருக்கிறாள்… அதே மேடம் இவள் மற்ற எல்லா பாடங்களிலும் முதல் மார்க் வாங்கியதை நம்ப முடியாமல் ஒருநாள் இவளிடம் பேசியது இப்போதும் பவானிக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
“பவானி டோன்ட் வொரி…. யு வில் டெஃபினிட்லி பாஸ் இன் கால்குலஸ்…. இட் இஸ் நாட் ஸோ டிஃபிகல்ட்….. யு கம் டு மை ஹௌஸ்…..ஐ வில் டீச் யூ… என்று சொன்னது.
சட்டென்று “எக்ஸ்க்யூஸ் மி மேடம்…. நீங்க சூசன் ஜேக்கப் மேடம் தானே ?’ என்றாள் பவானி.
“ஆமாம்… நீங்க?”
பவானிக்கு மகிழ்ச்சியாக இருந்தது அவர் முகம் மாறவே இல்லை. தலைமுடி அங்குமிங்கும் நரைத்திருப்பதைத் தவிர. மற்றபடி தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை.
“மேடம்…. நான் தான் பவானி உங்க ஓல்ட் ஸ்டூடண்ட்… நான் கூட உங்க சப்ஜெக்டில் ஃபெயிலாய்ட்டே இருப்பேன்…. உங்கள கண்டு ஓடி ஒளிஞ்சுப்பேன்… உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ…. ஆனா என் வாழ்க்கையில இந்த கணக்கு ஒரு சுனாமி போல இப்பவும் என் மனச தாக்கிக் கிட்டே தான் இருக்கு… இப்பவும் கணக்குல ஃபெயில் ஆற மாதிரி கனவு அடிக்கடி வருது…. நான் கூட என் கணவரோட சேர்ந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணினேன்… அவரும் எனக்கு டிரீட்மென்ட் கொடுத்து இப்ப நல்ல குணமாய்ட்டேன்….ஆனா உங்கள பாத்ததும் எனக்கு அந்த பயம், அதிர்ச்சி திரும்பி வர மாதிரி இருக்கு…. என படபடவென்று பேசி முடித்தாள்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு அவளை அன்பாக தோளில் தொட்டார்.
“மிஸ் பவானி கணக்குதான் வாழ்க்கை என்பது இல்ல… எத்தனையோ விஷயங்கள் நமக்கு பிடித்தவை இருக்கு… அதுல மனச செலுத்தி வாழ்க்கைலே ஒவ்வொருத்தரும் முன்னேறலாம்… நல்ல வேள… நீ இப்போ நல்ல நிலைமைல இருக்க… பாக்க சந்தோஷமா இருக்கு… நீ நல்லா இருக்கணும்….” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
க்யூ மிக நீளமாக இருந்ததால், வெயிட்டிங் நேரத்தில் இருவரும் மனசு விட்டுப் பேசினார்கள். அதற்குள் அவரின் டர்ன் வந்து விடவே அவர் டிக்கெட் வாங்கிக் கொண்டு அவளிடம் விடை பெற்று சென்று விட்டார்.
இவள் அப்படியே சிலையாக நின்றாள்.
“மேடம் பணத்தை சில்லறையா கொடுங்க….. நிறைய பேர் வெயிட் பண்றாங்க….”. என்று கவுண்டரில் இருந்தவர் சத்தமாகக் கூறவே பவானியும் டிக்கெட்டுக்கு பணத்தையும், ஃபார்மையும் கவுண்டரில் கொடுத்தாள்.
எப்போதும் இல்லாத அமைதி அவள் மனதில் நிலவியது.