(கம்சனைக் காண வந்த நாரதன்,எட்டாம் குழந்தை என்றில்லாமல் எந்தக் குழந்தையாகவும் நாராயணன் வரக் கூடும் என்று கூறிச் செல்கிறான்.
நாரதனின் எச்சரிக்கையால் அச்சமும், ஆத்திரமும் கொண்ட கம்சன், வசுதேவன், தேவகியைச் சிறையில் தள்ளி, அவர்களது முதல் ஆறு குழந்தைகளைக் கொல்கிறான்.)
தேவகி ஏழாம்முறை கருவுறுதல்
ஆலய மணிகள் காற்றில்
அன்புடன் ஓம்ஓம் சொல்ல,
பாலையும் பசுக்கள் தாமே
பாங்குடன் நனிசு ரக்க,
வேலைநீர் பொங்க லைகள்
மென்மையாய்த் தவழ்ந்து செல்ல,
சோலைவாழ் மயிலே அன்னாள்
சுடர்க்கரு மீண்டும் உற்றாள்
( வேலை- கடல்)
திருமால் மாயைக்கு இட்ட கட்டளை
ஆவதுவும், ஆனதுவும் வருங்கா லத்தில்
ஆவதற்குக் காத்திருக்கும் அனைத்த றிந்தான்,
மாவடிகள் மூவடியால் விண்ணும் மண்ணும்
மாவலியின் முடித்தலையும் அன்ற ளந்தான்,
சேவடியின் புகழ்போற்றி முனிவர், தேவர்
செப்பிநிதம் மகிழ்கின்ற முகில்நி றத்தான்
ஏவிலினால் இயங்குகின்ற மாயை வந்தாள்
மாலவனின் மலரடியை வணங்கி நின்றாள்.
“வடமதுரை வன்சிறையில் மங்கை நல்லாள்
வயிற்றினிலே எழுகருவாய் அனந்தன் உள்ளான்
திடமுடனே வளர்கருவை அகற்றி நீயும்
சிந்தாமல் சிதறாமல் ஏந்திச் செல்வாய்
அடர்பொழில்சூழ் கோகுலத்தில் நந்த கோபன்
அரண்மனைவாழ் ரோகிணியின் வயிற்றில் சேர்ப்பாய்
மடமயிலாள் யசோதையவள் கருவி லேநீ
வளர்ந்தொருபெண் குழந்தையெனப் பிறத்தல் வேண்டும்”
( எழுகரு – எழுகின்ற/ உருவாகும் கரு)
(எழுகரு – ஏழாவது கரு)
( அனந்தன் – ஆதிசேஷன்)
மாயை, தேவகியின் ஏழாவது கருவை ரோகிணிக்கு மாற்றுதல்
மகிழ்ந்தாள் மாயை, பாற்கடலின்
மாயன் உரைத்த மொழிகேட்டு
நெகிழ்ந்தாள், பணிந்தாள் திருவடியை.
நேரே மதுரை சிறைநுழைந்து
முகிழ்ந்த மொட்டாம் கருவகற்றி
முடுகி நந்தன் மனையின்கண்
திகழ்ந்த சீரார் ரோகிணியின்
திருவ யிற்றில் சேர்த்தாளே!
( முகிழ்ந்த – தோன்றிய)
(முடுகி – விரைந்து)
மாயை யசோதை வயிற்றில் கருவாதல்
ஓயாப் பிறவி கடல்கடக்க
உதவும் ஒருவன், முல்லைநிலக்
காயா மலரின் வண்ணத்துக்
கடவுள் வகுத்த வழியினிலே
சேயாய் நிலத்தில் பிறப்பெடுக்கச்
சிந்தை கொண்டு மாயையவள்
தாயாம் யசோதை மணிவயிற்றில்
தானோர் கருவாய் உருவானாள்!
ஏழாம் கரு கலைந்தது என்று அனைவரும் நினைத்தல்
தேவகி கருவும் மாறிச்
சென்றதை அறிந்தார் இல்லை
காவலின் கொடுமை யாலே
கலங்கியே கலைந்தது என்றே
யாவரும் எண்ணி உள்ளம்
ஏங்கியே வருந்த லானார்.
பாவியாம் கொடியோன் கம்சன்
படுவனே துன்பம் என்றார்
தேவகி எட்டாம் முறை கருவுறுதல்
எட்டாம் முறையாய்க் கருவுற்றாள்
எழிலார் மங்கை தேவகியாள்
மட்டார் மாலை மாலவனும்
வந்து புகுந்தான் மணிவயிற்றில்
கிட்டாப் பேறும் கிட்டியதே
கேடில் செல்வம் எட்டியதே
முட்டாச் சிறப்பின் முழுமுதல்வன்
மூண்ட கருவின் உள்ளுற்றான்
(முட்டாச் சிறப்பு — குறைவுபடாத தலைமை)
செய்தி அறிந்த கம்சன் நிலை
செய்தி கேட்ட கொடுங்கம்சன்
சிந்தை கலங்கி நிலைகுலைந்தான்
மெய்தி கழ்ந்த பேரழகை,
மேனி சுமந்த பொன்னெழிலை,
எய்தி நின்ற பூரிப்பை,
இருகண் கூசும் ஒளிப்பொலிவை
மைதி கழ்ந்த மாமாயன்
வரவின் குறிப்பாய் ஐயுற்றான்.
கொல்ல நினைத்தான், கொன்றுவிட்டால்
கூடும் கொடிய பழிநினைத்தான்.
நல்ல தங்கை கருசுமந்தாள்
நமனாய் மாறி உயிர்பறித்தால்
சொல்ல முடியாப் பெரும்பாவம்
சூழும் நிலையை மிகவுணர்ந்தான்
மெல்ல முள்மேல் ஆடையினை
விலக்க எண்ணி முடிவெடுத்தான்.
ஆத்திரத்தால் அறிவிழந்தான் கம்சன், ஆனால்
அவப்பெயரை அஞ்சியதால் பொறுத்தி ருந்தான்;
காத்திருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டான்;
காலையிலும், மாலையிலும்,நிலவு வானில்
பூத்திருக்கும் வேளையிலும் எண்ணம் எல்லாம்
பொன்னாழி, புரிசங்க ஆழி யான்பால்
கோத்திருந்தான். நாரணன்பேர் உள்ளம் எங்கும்
குடியிருக்கச் சேர்த்திருந்தான் செயல் மறந்தான்.
( தொடரும்)
என்றும் எப்பொழுதும் பிரமாதம்
LikeLike
தேவகி, கம்சனுடன் கண்ணன் வரவுக்காக அடுத்த இதழுக்கு ஆவலுடன்
காத்திருக்கிறேன்
LikeLike
Thank you for sharing this. Arputham Anna.
LikeLike